Chapter 21
இனியொரு ஜென்மத்தில் சேர்வோமென்று…
இந்த ஜென்மத்தில் உன்னைப் பிரிவதா…?
கந்தசாமி அவனைப் பார்க்க வீட்டுக்கு வந்து உட்கார்ந்து.. வழக்கம் போல ரம்பம் போட்டுக் கொண்டிருந்த போதுதான் – மித்ரன் அவருக்கு அந்த யோசனையைச் சொல்லிக் கொடுத்தான்.
“நான் ஒன்று சொல்கிறேன். அதன் படி செய்கிறீங்களா…”
“சொல்லுங்க தம்பி.. நீங்க படித்தவர். விவரமானவர். நீங்க சொல்லி நான் கேட்காமல் இருப்பேனா..?”
அண்ணன் என்னவோ.. மிகப் பெரிய தத்துவத்தைச் சொன்னதைப் போல.. தலையாட்டி அதை ஆமோதித்த ராமசாமி, சிவப்பிரகாசத்தைப் பார்க்க – அவரோ.. ‘இவன் என் மதினி மகன்..’ என்ற அர்த்தத்தில் கித்தாய்ப்பாய் பதில் பார்வை பார்த்து விட்டு மித்ரனை ஒட்டி.. உட்கார்ந்து கொண்டார்.
“நீங்க பெண் பார்க்க வான்னு சொன்னால்.. விஸ்வம்.. வரமாட்டான்..”
“அதுதானே தம்பி.. எனக்கு வருத்தமாக இருக்கு..”
“விஸ்வம் குடும்பமும் உங்க குடும்பமும் பொதுவாக சந்திக்கிறது போல ஏதாவது ஒரு விசேசம் வருதா…?”
“வருதே.. அடுத்தவாரம்.. கும்பகோணத்தில் என் மாமனார் வீட்டில் ஒரு கல்யாணம் நடக்கப் போகுது. அதுக்கு என் மச்சினன் குடும்பத்தோடு சென்னையில் இருந்து வருகிறார்…”
“நீங்க உங்க பெண்ணைக் கூப்பிட்டுக் கொண்டு போவீங்கதானே…?”
“வயசுக்கு வந்த பெண்ணை அப்படியெல்லாம் நாலு பேர் கூடுகிற இடத்துக்கு கூப்பிட்டுக் கொண்டு போகும் வழக்கம்.. என் குடும்பத்தில் இல்லைங்க…”
“அந்த வழக்கத்தை இப்போது மாத்திக்கங்க..”
“எதுக்கு தம்பி…?”
“என்ன சார் புரியாமல் பேசுகிறீங்க.. உங்க பெண் அழகாக இருப்பாங்களா.. மாட்டாங்களா…?”
“இந்த சுத்துவட்டாரத்திலேயே.. என் பொண்ணுதான் அழகுன்னு ஊருக்குள் பேசிக்குவாங்க தம்பி..”
‘என் தேவியை விடவா.. உங்கள் பெண் அழகு..?’
தன் காதலியைப் பெற்றவரிடம்.. அவளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் விவரம் அறியாதவனாக தன் காதலியை விஸ்வத்திற்கு மணம் முடித்து வைக்க.. திட்டம் தீட்டி கொடுத்துக் கொண்டிருந்தான் மித்ரன்..
“அப்போ.. அவங்களை விஸ்வத்தின் கண்ணில் காட்டினால்தானே இந்தக் கல்யாணம் நடக்கும்…?”
அதுவரை வாயைத் திறக்காமல் அண்ணனின் வாயைப் பார்த்துக் கொண்டிருந்த ராமசாமி.. முதன் முதலாக வாய்திறந்து பேசி.. மித்ரனை.. அதிசயப்பட வைத்தார்.
“தம்பி சொல்வதும் சரிதான் அண்ணே.. எனக்கும் அதுதான் மனதிற்குப் பட்டது. மாப்பிள்ளைதான் நம்ம ஊருக்கு வரமாட்டேன்னு பிடிவாதமாக இருக்கிறார். நாமும் நம் கௌரவத்தை விட்டு.. சென்னைக்குப் போக முடியாது. நாம் மாப்பிள்ளை வீட்டிற்குத் தானே போகக்கூடாது.. மாப்பிள்ளை வரும் கல்யாணத்திற்குப் பெண்ணோடு போகலாமில்லையா…?”
‘இந்த மனிதனுக்கு இவ்வளவு நீளமாய் பேசவருமா..?’
மித்ரன் ‘ஆ’வென்று ராமசாமியின் வாய்பார்த்துவிட்டு.. கந்தசாமியிடம் தன் திட்டத்தை வலியுறுத்தினான்.
“நீங்க உங்க பெண்ணைக் கல்யாணத்திற்கு கூப்பிட்டுக் கொண்டு வரும் விசயத்தை விஸ்வத்தின் அப்பாம்மாகிட்ட சொல்லுங்க.. அதை விஸ்வத்திடம் சொல்லிவிட வேண்டாமென்று மறக்காமல் சொல்லி விடுங்க…”
“அது ஏன் தம்பி.. அப்படிச் சொல்லச் சொல்கிறீங்க..?” அப்பாவியாய் கந்தசாமி கேட்க…
‘யோவ்.. உன் பொண்ணு கல்யாணத்துக்கு வருகிறதுன்னா, அவன் கும்பகோணம் பக்கமே தலைவைத்துப் படுக்கமாட்டான்ய்யா..’ என்று மனதிற்குள் திட்டித்தீர்த்தான் மித்ரன்.
“தம்பியோட பிரண்டுக்கு இந்தக் கல்யாணத்தில் இஷ்டமில்லையோ.. என்னவோ..! தம்பி அதைச் சொல்லமாட்டாமல் மறைமுகமாய் சொல்கிறாரோ என்னவோ…!”
ராமசாமி இத்தனை புத்திசாலியாய் இருக்கக்கூடும் என்று மித்ரன் கொஞ்சம்கூட எதிர்பார்த்திருக்கவில்லை.
“அப்படியா தம்பி…?” கந்தசாமி பரிதவிப்புடன் மித்ரனைப் பார்த்தார்.
“நீங்க உங்க மகளை அவன் கண்ணில் ஒரு தடவை காட்டுங்க சார். மற்றதை அப்புறம் பேசிக்கலாம்..”
அவர் யோசனையுடன் கிளம்பிப் போனார். அந்தச் சமயம் மட்டும் லலிதா வீட்டில் இருந்திருந்தால் – உண்மை நிலவரத்தைக் கண்டு கொண்டிருப்பாள். மித்ரனுக்கு தேவிதான் கந்தசாமியின் மகள் – விஸ்வத்தின் முறைப்பெண் என்பதைத் தெளிவு படுத்தியிருப்பாள். இன்னும் ஒருபடி மேலே போய்.. விஸ்வத்தின் கண்களில் தேவியைக் காட்டவிடாமல் செய்து.. மித்ரனுக்கு தேவியைப் பெண் கேட்டிருப்பாள்.
ஆனால்.. அன்று பார்த்து.. அவள் மாமியாருடன்.. அடுத்த தெருவில் இருந்த உறவினர் வீட்டுப் பெண்ணின் வளைகாப்பு நிகழ்ச்சிக்குப் போயிருந்தாள்.
அவள் வீடு வருமுன்னால், தேவியை விஸ்வத்திற்கு மணம் முடிக்க வேண்டிய வழிமுறைகளைக் கந்தசாமிக்கு சொல்லிக் கொடுத்து.. அனுப்பி வைத்து விட்டான்
மித்ரன்.
லலிதா வீட்டுக்கு வந்த போது.. சிவப்பிரகாசத்துடன் மித்ரன் கடைக்குப் போய் விட்டான். மாலையில் வீடு திரும்பியவன் ஆற்றங்கரைக்குப் போகும் அவசரத்தில் கந்தசாமி வந்து போன விவரத்தை லலிதாவிடம் சொல்ல மறந்துவிட்டான். ஆற்றங்கரைக்குப் போய் திரும்பி வந்தவனின் முகம் லேசாக வாடியிருக்க.. லலிதா காரணம் கேட்டாள்.
“ஏண்டா.. என்னவோ போல் இருக்கே..? அதுதான் நீ தனியாய் தேவியிடம் பேசட்டுமுன்னு இன்றைக்கு ஆற்றங்கரைக்கு நானும் உன்கூட வராமல் மட்டம் போட்டு விட்டேனே.. அப்புறமும் என்ன..? உனக்கும் அவளுக்கும் சண்டையா…?”
மித்ரன் தன் வாழ்வை மாற்றப்போகும் நிகழ்வை சாதாரணமாக சொன்னான்.
Reviews — Aatrangarai Arukinilze / ஆற்றங்கரை அருகினிலே..!
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.