Chapter 23

0Shares

ஒருமுறை என்மனதில் மலர்ந்த பூ…

மறுமுறை மலரச் சொன்னால் மலராது..

லலிதாவின் பார்வை வெறுப்பை உமிழ்ந்தது..

“மனுசனாடா.. நீ…?”

“சித்தி..!”

“உன்னையே நம்பியிருந்த பெண்ணிற்கு உன் பிரண்டை மாப்பிள்ளையாக்க.. உனக்கு எப்படிடா மனம் வந்தது..?”

மித்ரனின் முகம் பேயறைந்தது போல் வெளிறிப் போனது..

“சித்தி.. நீங்க என்ன சொல்கிறீங்க..? தேவிக்கும்.. விஸ்வத்திற்கும் என்ன சம்பந்தம்..? விஸ்வத்தின் முறைப் பெண் பெயர் காயத்ரி. சித்தி.. அது உங்களுக்குத் தெரியாதா..?”

லலிதாவின் பார்வையில் வெறுப்புப் போய்.. யோசனை வந்தது.

“மித்ரா.. தேவியை யாருன்னு நீ நினைத்துக் கொண்டிருக்கிற…?”

“தேவி.. தேவிதான் சித்தி..”

“கடவுளே.. உனக்கு எப்படி இதைப் புரிய வைப்பேன்.. டேய்.. இவள்தான் கந்தசாமி அண்ணன் பெற்ற மகள்டா.. உன் பிரண்டிற்கு கல்யாணம் பேசியது.. இவளைத்தான். இவளின் முழுப்பெயர் காயத்ரி தேவி..”

“சித்தி…”

மித்ரன் ஏறக்குறைய அலறினான்… அவன் மனதில் சூறாவளிக் காற்று சுழன்றடித்தது. அதில் தேவி தோன்றினாள். இடுப்பில் குடத்தோடு.. வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள். அவன் முன்னால்… பின்னலை மடியில் போட்டுக் கொண்டு.. பாரதியின் பாடலைப் பாடினாள்.. ‘என்னை வெறுமனே பார்க்க மட்டும்தான் வந்தாயா..’ என்று கண்கலங்கினாள். ஆற்று நீரில் மூழ்கி எழுந்தாள். அவன் உண்ணுவதற்காக பலகாரம் செய்து கொண்டு வந்து கொடுத்தாள். கடைசியாக கண்மூடி.. அவன் அணைப்பினில் அடங்கி.. மார்பில் முகம் புதைத்தாள்.

“அவளை தேவின்னு கூப்பிட்டிங்களே சித்தி.. அவன் காயத்ரின்னு சொன்னானே…”

“மித்ரா…”

லலிதா இரக்கத்துடன் தமக்கையின் மகனைப் பார்த்தாள் சிறுவயதிலிருந்து.. இடுப்பில் அவனை சுமந்து வளர்த்த பாசம் அவளை உலுக்கியது. ‘காதலில் தோற்று மித்ரன் நிற்பதா..? அதைப் பார்த்துக் கொண்டு கையாலாகாதவளாக நான் இருப்பதா..?’

“இந்த ஊரில் எல்லோரும் அவளை தேவின்னுதான் கூப்பிடுவோம்டா..”

“முடியாது சித்தி.. அவளை இழக்க என்னால் முடியாது..”

“கத்திப் பேசாதேடா.. உன் சித்தப்பாவிற்கு தெரிந்தால் அவ்வளவுதான்.. மெதுவாகப் பேசு.. இது கிராமம்டா.. பரிசம் போடுவது என்றால் பாதிக் கல்யாணம் முடிந்தது போல.. இன்றைக்கு ராத்திரி.. அவளுக்குப் பரிசம் போடப் போகிறாங்க.. அது மட்டும் நடந்து விட்டால் நீ தலை கீழாக நின்னாலும் தேவி உனக்கு கிடைக்க மாட்டாள்..”

“இதற்கு தேவி சம்மதிக்க மாட்டாள் சித்தி..”

“அவள் சம்மதத்தை அவள் வீட்டில் யாரும் கேட்க மாட்டாங்க. உனக்கு அவளுடைய அப்பாவைப் பற்றி ஒன்றுமே தெரியாது.. அவர் கோபக்காரர் இந்த ஊரில் அவரைமீறி எதுவும் செய்துவிட முடியாது..”

“அதற்காக.. தேவியை நான் விட்டுக் கொடுப்பதா..?”

“நீதானேடா.. அவளுடைய அப்பாவுக்கு வழி சொல்லி கொடுத்திருக்கிறாய்..? செய்வதையும் செய்து விட்டு.. இப்போ வந்து புலம்பு..”

“அவள் என் தேவின்னு எனக்கு அப்போது தெரியாதே சித்தி..?”

லலிதா நகம் கடித்தபடி யோசித்தாள்.. பின் நிமிர்ந்தாள்.

“இதில் தேவி என்ன நினைக்கிறாள்ன்னு நமக்குத் தெரியணும்டா மித்ரா.. அதற்குப் பின்னால்தான்.. மத்ததைப் பற்றி யோசிக்கணும்..”

“அவளிடம் எப்படிக் கேட்பது சித்தி.. நான் வேண்டுமானால் அவள் வீட்டுக்கு போய்.. அவளிடம் பேசிப் பார்க்கவா..?”

“வேறு வினையே வேண்டாம். இது கிராமம்ன்னு ஆயிரம் தடவை சொன்னாலும். உன் மண்டையில் ஏறாதா.. அது விசேச வீடு.. ஊர் ஜனமெல்லாம் இப்போது அங்கேதான் கூடி இருப்பாங்க..”

“என்னை.. என்னதான் செய்யச் சொல்கிறீங்க..?”

“உன் மனதிலிருக்கும் தவிப்பு அவள் மனதிலும் இருந்தால் அவள் கண்டிப்பாய் உன்னைத் தேடி வருவாள்.”

லலிதாவின் கணிப்பு சரியாக இருந்தது… சிவப்பிரகாசம் கடைக்குப் போய் விட.. தண்டாயுதபாணி. வயலைப் பார்க்க போய்விட.. கோதாவரி பக்கத்து வீட்டில் கதைபேசப் போய் விட.. லலிதா மித்ரனுடன் தனியாக அமர்ந்து கவலைப்பட்டுக் கொண்டிருந்த போது காயத்ரி தேவி புயலைப் போல் மித்ரனைத் தேடி அங்கு வந்தாள்.. அவள் கண்களில் கனல் இருந்தது.. மித்ரனை அது பொசுக்கியது..

“நீங்கள் யார்..?” என்று எடுத்த எடுப்பில் அவள் கேட்டாள்.

“நான் யார்ன்னு உனக்குத் தெரியாதா..?” மித்ரன் அவள் வழிகளை ஊடுருவிப் பார்த்தபடி சொன்னான்.

“இல்லை.. எனக்குத் தெரியாது… என் சித்தி சிவப்பிரகாச அண்ணன் வீட்டில் மாப்பிள்ளையின் 

பிரண்ட் வந்திருக்கிறாருன்னு முழுதாகச் சொல்லாமல்.. அரைகுறையாய் சொல்லிட்டு விட்டுட்டாங்க..”

லலிதாவிற்கு கணப்பொழுதில் எல்லாம் புரிந்து விட்டது.. காயத்ரி மித்ரனை.. விஸ்வம் என்று நினைத்து பழகி விட்டாள்.

“இவன் மித்ரன். என் அக்காள் மகன்.. உனக்குப் பார்த்திருந்த மாப்பிள்ளை இவனில்லை தேவி..”

‘ஸோ.. இவள் என்னை விஸ்வமென்று நினைத்து பழகியிருக்கிறாள். எனக்காக என்னைக் காதலிக்கவில்லை..’ மித்ரனின் பார்வை காயத்ரியைத் துளைத்தது.

“இதையேதான் என் வீட்டிலும் சொல்கிறாங்க அத்தை.. என் மனதை அவங்க புரிந்து கொள்ளவில்லை. இது பெண் மனம் அத்தை. இவர்தான் என் புருஷன்னு நினைத்துப் பழகிவிட்டு.. இன்னொருவன் கொடுக்கும் பரிசச் சேலையை வாங்கி நான் எப்படிக் கட்டிக் கொள்வேன் அத்தை…?”

லலிதா, நிம்மதிப் பெருமூச்சுடன் கண் மூடிக் கொண்டாள்.. மித்ரன் காதலில் தோற்கவில்லை. காயத்ரியினால் அவனை மறக்க முடியாது. 

“இதை உன் வீட்டில் நீ சொன்னாயா தேவி..?”

“சொல்லவில்லை அத்தை…”

“ஏன்..?”

“சொன்னால் நான் வீட்டை விட்டு வெளியேற முடியாது.. இப்போது உங்கள் வீட்டிற்கு போகிறேன்னு சொன்னதும் சந்தோசமாய் போய்விட்டு வான்னு சொன்னாங்க.. சாயங்காலம் ஆற்றங்கரை அரசமரத்தடி பிள்ளையாருக்கு விளக்குப் போடப் போகணுமுன்னு சொன்னால்.. மறுப்பேயில்லாமல் அனுப்பி வைப்பாங்க. இதெல்லாம் – நான் என் மனதிலிருப்பதை வெளியில் சொன்னால் நடக்காமல் போய்விடும் அத்தை…

காயத்ரியின் வார்த்தையில் தொனித்த உள் பொருளை லலிதா புரிந்து கொண்டு விட்டாள். ஆனால் மித்ரனின் முகம் எந்த உணர்ச்சியையும் பிரதிபலிக்காமல் கல்லைப் போல இறுகியிருந்தது.

“மித்ரா.. தேவி சொல்ல வருவதை புரிந்து கொண்டாயா..?”

“இனிப் புரிந்து ஆகப்போவது ஒன்றுமில்லை சித்தி.. அவளைப் போக சொல்லுங்கள்..”

“மித்ரா…”

“இவள் என்னை மித்ரனாகப் பார்க்கவில்லை சித்தி.. விஸ்வமாகப்பார்த்திருக்கிறாள். இவள் எனக்கு வேண்டாம்..”

காயத்ரி அவன் முகத்தைப் பார்த்தாள். அவள் விழிகளில் மன்றாடல் இல்லை.. தெளிவு இருந்தது. அவள் வார்த்தைகளில் தீர்க்கமான தீர்மானமான முடிவு இருந்தது.

“நீங்கள் மட்டும் என்ன..? என்னைக் காதலித்துவிட்டு.. எனக்கே தெரியாமல் விஸ்வத்தை விட்டு என்னைப் பெண்பார்க்க வைக்கவில்லையா..? இதை நீங்கள் செய்யலாமா..?”

“ஏய்ய்.. அடித்துப் பல்லை உதிர்த்து விடுவேண்டி.. அவன்தான் உன் மாமா மகன்னு எனக்கு எப்படித் தெரியும் அவன் உன் பெயரை காயத்ரின்னு சொல்லித் தொலைத்தாண்டி..”

“அப்போ.. நீங்களும் என்னை.. தேவியாகத்தானே பார்த்தீங்க..? காயத்ரியாய் பார்க்கவில்லைதானே..? தெரியாமல் நீங்கள் தவறு செய்யலாம். அதற்கு விளக்கம் கொடுப்பீங்க. மன்னிப்பு கூடக் கேட்கமாட்டிங்க. ஏன்னா.. நீங்க ஆண்பிள்ளை.. அதே போல் நான் தவறு செய்தால் கொலைக் குற்றவாளி போல் என்னைப் பார்ப்பிங்களா..? ஆண்களுக்கு ஒரு நியாயம்.. பெண்களுக்கு ஒரு நியாயமா..?”

“பேசி உன் செயலை நியாயமாக்கப் பார்க்காதே..”

“எனக்கிருப்பது ஒரு மனது.. அதில் உங்களை என் புருஷனாக நினைத்துக் விட்டேன். இனி மாற்றி நினைக்க என்னால் முடியாது. சாயங்காலம் ஆற்றங்கரைக்கு வருகிறேன். மனமிருந்தால் என்னைக் கூப்பிட்டுக் கொண்டு போங்க. மனமில்லா விட்டால் நீங்க மட்டும் போங்க. நான் அந்த ஆற்றில் விழுந்து என் வாழ்வை முடித்துக் கொள்கிறேன்…”

லலிதா, தேவி சொன்னதைக் கேட்டு பதறிவிட்டாள்.

0Shares

Reviews — Aatrangarai Arukinilze / ஆற்றங்கரை அருகினிலே..!

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link