Chapter 05

0Shares

“இதில இப்படி வேற இருக்கா..?”

“ம்ம்ம்.. நிறைய இருக்கு.. இத்தனை நாள் எப்படியோ.. இன்னைக்கு இவனை நான் அட்மைர் பண்றேன்டி.. வாட் எ கிரேட் மேன்..! உள்ளே போனதும் முதல் வேலையா அந்தப் பெண்ணை வெளியே அனுப்பிட்டான்.. அதுக்குப் பின்னாலதான் அந்த நாயைத் துவைச்சு எடுத்துத் தோரணம் கட்டிக்கிட்டிருக்கான்.. பாவம்டி அந்தப் பொண்ணு… நம்ம வீடுகள்ல வேலை செய்யறது பாதுகாப்புன்னு தானே வீட்டு வேலை செய்ய வருது..? வீடுகள்லயே அதுக்குப் பாதுகாப்பு கிடைக்கலேன்னா மத்த இடங்களில எப்படிடீ கிடைக்கும்..?”

பூர்ணிமாவின் கண்கள் கலங்கி விட்டன.. அடிபட்டவன் ரகுவரனுக்கு எதிராக போலிஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்க மறுத்து விட்டான் என்று சொன்னான்.. பூபாலன்..

“எப்படிக் கொடுப்பான்..?” என்று பாகிரதி பல்லைக் கடிக்க..

“கம்ப்ளெயிண்டும் கொடுக்கச் சொல்வீங்களா..?” என்று ஆனந்தி கணவனிடம் சண்டைக்குப் போனாள்..

“நான் கொடுக்கச் சொல்லலைடி.. என் பிரண்ட் கொடுக்கச் சொல்லியிருக்கான்..” பூபாலனின் குரல் இறங்கிவிட்டது..

“அது தப்புன்னு நீங்க எடுத்துச் சொல்லியிருக்கனும்..”

மனைவியின் குற்றச்சாட்டிற்கு மறுபேச்சைப் பேச பூபாலன் யத்தனிக்கவில்லை.. மாறாக..

“இனிச் சொல்லிடறேன்டி..” என்று ஆனந்தியைச் சமாதானம் செய்தான்..

“பாவம் அந்தப் பொண்ணு.. பச்சை மண்ணு.. அதுகிட்டப் போயி இந்த நாய் வாலை ஆட்டியிருக்குது.. ச்சே..”

“இந்த விசயத்தில அபார்ட்மெண்டில இருக்கிறவங்க அந்த ரௌடிக்குத்தான் சப்போர்ட் பண்றாங்க.. அடி வாங்கினவன் ஆஸ்பத்திரியில கிடக்கிறான்.. பழகினவங்க கூட அவன் என்ன ஆனான்னு பார்க்கப் போகலை.. என்ன ஆச்சுன்னு விசாரிக்கப் போன போலிஸ்கிட்ட மாடிப்படியில தடுக்கி விழுந்துட்டேன்னு கதை சொன்னானாம்.. லிப்ட் இருக்கிறப்ப ஏன் மாடிப்படியை யூஸ் பண்ணினீங்கன்னு போலிஸ் குடைஞ்சுச்சாம்… அது என்னோட இஷ்டம்ன்னு எரிஞ்சு விழுந்தானாம்..”

“கம்ப்ளெயிண்ட் கொடுக்கலைன்னா அடியோட போயிடும்.. கம்ப்ளெயிண்ட் கொடுத்தா தூக்கி உள்ளே போட்டிருவாங்கள்ல.. அந்த பயம்தான்..”

தான் போலிஸ் ஆபிசரின் மனைவியென்பதை நிரூபணம் செய்தாள் ஆனந்தி.. பெருமிதமாக சிரித்துக் கொண்டான் பூபாலன்.. அதற்குப் பின்னாலும் ரகுவரனிடமிருந்து மற்றவர்கள் தள்ளித்தான் நின்றார்கள்..

“நமக்கெதுக்கு வம்புன்னு கதவுக்குப் பின்னாலே ஒளிஞ்சுக்கிறவங்க மத்தியில எது வந்தாலும் எதிர்த்து நிக்கிறவன் வித்தியாசமாத்தான் தெரிவாண்டி.. இதுகளால அவன்கூட ஒட்ட முடியாது..” சுபா விளக்கம் சொன்னாள்..

பூர்ணிமாவின் மனதில் இனம் விளங்காத ஒட்டுதல் உருவானது.. ரகுவரன் யாரோ எவரோ என்று நினைக்கத் தோன்றாமல் ஒரு பற்றுதல் ஏற்பட்டது.. சுபாவைப் பார்க்கப் போகும் தருணங்களில் அவன் எதிர்பட வேண்டுமே என்ற வேண்டுதல் வந்தது.. வேண்டுதல் நிறைவேறி அவனை எதிரே பார்த்து விட்டால் பதட்டப்பட்டுப் போவாள் பூர்ணிமா.. மனதின் எதிர்பார்ப்புக்கும் உடலின் பதட்டத்திற்கும் இடையில் உள்ள மாறுபாட்டைக் குறித்து நிறைய முறை யோசனை செய்து விட்டாள்.. எதற்காக அந்த எதிர்பார்ப்பு, எதற்காக அந்தப் பதட்டம் என்று இரண்டிற்குமான காரணம் விளங்கவேயில்லை.. அவனைக் கண்டு விட்டால் மட்டும் மனம் குறுகுறுக்கும்..

இவள் பதட்டப்பட்டு பார்த்தபடி கடந்து போவாள்.. இவளை மென்மையாகப் பார்த்தபடி அவன் கடந்து போவான்.. நின்று பேச மாட்டான்.. பிரத்யேகமாக பார்க்க மாட்டான்.. ஆனால் இவளைப் பார்த்து விட்டால் அந்த நொடியில் அவன் பார்வையில் ஓர் லயிப்பு வரும்.. பூ மலரும்.. மென்மை விரியும்.. நேர் கொண்ட பார்வை இமைக்கவே இமைக்காது.. வைத்த பார்வையை விலக்காமல் அவளையே பார்த்தபடி போய் விடுவான்..

அவன் கடந்து போகும் வரை இருக்கும் பரபரப்பு அவன் கடந்து போனதும் மறைந்து போக ஓர்விதமான வெறுமையுணர்வு பூர்ணிமாவின் மனதை ஆக்ரமிக்கும்.. உலகமே பிளாக் அண்ட் வொயிட் படம் போல வண்ணமில்லாமல் தோன்றி வைக்கும்.. சுபாவைப் பார்க்கப் போவதாக பெயர் பண்ணிப் போனவள் அவளைப் பார்க்காமலே திரும்பி விடுவாள்..

“இப்பத்தானே போன..?” என்று பாகீரதி ஆச்சரியப்பட்டால்..

“சுபா வீட்டில் இல்லைம்மா..” என்று சொல்லி விடுவாள்..

“அப்படியா..?” என்று பாகீரதி தலையாட்டும் போது..

“இப்பத்தானே அவளைப் பார்த்தேன்..? அயர்ன் பண்ணின டிரஸ்ஸை வாங்கிக்கிட்டுப் போனாளே..” என்று ஆனந்தி மாட்டி விட்ட சமயங்களும் வாய்த்திருக்கின்றன..

“நான் போனப்ப இல்லையே.. என்னவா இருக்கும்..?” என்று எதிர்கேள்வி கேட்டு அந்தச் சமயங்களைக் கடந்து விடுவாள் பூர்ணிமா..

இப்படி ஆபத்பாந்தவன், அனாதைரட்சகன் என்று அவள் மனதில் பூப்போட்டு கொண்டாடிக் கொண்டிருந்த ரகுவரனின் ஈரமனதை அவள் அறியும் நாள் ஒன்று வந்து நின்றது.

கொட்டும் மழையிலும் குடை பிடித்து சுபாவைப் பார்க்க அவள் போன ஓர் மழை நாளுக்கு ‘கம்பைன் ஸ்டடி..’ என்று அவள் வீட்டில் பெயர் சூட்டப் பட்டிருந்தது.. அடாது மழை பெய்தாலும் விடாது ரகுவரனைப் பார்த்தே தீர வேண்டுமென்று பூர்ணிமாவின் மனது அடம் பிடித்ததுதான் காரணம் என்று அவளது மனதுக்கு மட்டும்தான் தெரியும்..

மழைச்சாரல் குடை நனைத்து தெறித்து அவள் உடல் நனைக்க.. அபார்ட்மெண்டின் வாசலை அவள் கடந்தபோது ரகுவரன் வாட்ச் மேனைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டிருந்தான்..

‘இன்னைக்கு வாட்ச்மேனா..? ஆனா வாட்ச்மேன் அண்ணா நல்லவராச்சே.. தப்புத் தண்டா பண்ணமாட்டாரே..’ குழப்பத்துடன் நின்று விட்டாள் பூர்ணிமா..

அவளைப் பார்த்தவனின் விழிகளில் வழக்கமான பூ மலர்ந்தது.. அவளைப் பார்த்து..

“கார்க் கதவைத் திறந்து விடுங்க.. இவரை பின்சீட்டில் படுக்க வைக்கணும்..” என்றான் அவன்..

அவளுடன் அவன் பேசியதில் ஆனந்தம் பொங்கியது.. பூர்ணிமாவுக்கு.. அவசரமாக கார்க்கதவை திறந்து விட்டவள் மழையைப் பார்த்தபடி..

“வாட்ச்மேன் அண்ணா என்ன பண்ணினார்..?” என்று கேட்டாள்..

“என்கிட்டக் கேட்கறிங்களா.. மழைகிட்டக் கேட்கறிங்களா..? ம்ம்ம்..?” அவன் புருவங்களை உயர்த்தினான்..

அந்த மழைநாளின் அந்தத் தருணத்தில்தான் மயங்கிப் போனாள் பூர்ணிமா.. அவன் புருவங்களை உயர்த்திய அழகில் சொக்கிப் போனாள்.. அந்த நொடிகளை மறக்க முடியாதென்று அவளுக்குத் தோன்றியது.. அவள் மனம் கவர்ந்தவன் அவளிடம் பேசிவிட்டான்.. அவளைப் பேச வைத்து விட்டான்.. அத்துடனும் நில்லாமல் கேலி பேசுகிறான்.. பாவனை செய்கிறான்..

மலர் சொரிந்த அந்த நொடிகளை சேகரித்து மனதுக்குள் பத்திரப் படுத்திக் கொண்டாள் பூர்ணிமா.. இவை அரிதானவை.. அடிக்கடி கிடைக்காதவை.. கிடைத்திருக்கும் நொடிகளைச் சிந்தாமல் சிதறாமல் மனப் பெட்டகத்தில் பூட்டி வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது..

“பதில் சொல்ல மாட்டிங்களா..?”

மலைத்து நின்றவளிடம் மறுபடியும் புருவங்களை உயர்த்தி வீழ்த்தினான் ரகுவரன்..

‘இப்படி அசத்தினால் எப்படிப் பதில் சொல்வதாம்..?’ பூர்ணிமா தவித்துப் போனாள்..

அவளது தவிப்பில் அவன் முகம் வியப்பைப் பூசியது.. அவளது தளிருடலின் நடுக்கத்தை கூர்ந்து பார்த்தவன் மென்மையாகச் சொன்னான்..

“இப்படி பயப்படறிங்களே.. பயம்கூட பெண்களுக்கு அழகுதான்ங்கிறதை உங்களைப் பார்த்த பின்னால்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.. அச்சம், மடம், நாணம், பயிர்ப்புன்னு நால்வகை குணங்களும் உங்ககிட்ட நிறைஞ்சிருக்கு..”

பூர்ணிமாவின் தொண்டை வறண்டு விட்டது.. இதுபோல எல்லாம் அவன் பேசக்கூடும் என்று அவள் நினைத்தும் பார்த்த தில்லை.. பழக்கமில்லாத பேச்சுக்களில் அவளுக்குள் சுகமான ஓர் நடுக்கம் உண்டானது..

“ஓகே.. நீங்க பேச வேணாம்.. கஷ்டப் பட்டுக்காதீங்க.. நீங்க திணறுகிறதைப் பார்க்க எனக்குத் தாங்கலை.. வாட்ச் மேன் என்ன பண்ணினார்ன்னு தானே கேட்டிங்க..? இவர் பாவம்.. அப்புரணி.. ஏதும் பண்ணலை.. காய்ச்சல்தான் இவரை ஒரு வழியாக்கிக்கிட்டு இருக்கு..”

அவள் முகத்தையே பார்த்தபடி ரகுவரன் சொன்னான்.. பூர்ணிமா பதறிப் போனாள்..

“அச்சச்சோ..! வாட்ச் மேன் அண்ணாவுக்கு காய்ச்சலா..?”

காரின் பின்சீட்டில் படுக்க வைக்கப் பட்டிருந்த வாட்ச்மேனின் நெற்றியில் கைவிரல்களை வைத்துப் பார்த்தாள்..

“கொதிக்குதே..” கவலையுடன் சொன்னாள்..

வாட்ச்மேன்தானே என்று கௌரவம் பார்க்காமல் தன் வீட்டு மனிதர்கள் போல நெற்றியில் விரல் வைத்துப் பார்த்த அவளது மனித நேயம் ரகுவரனை ஈர்த்தது..

“இந்த ஏரியாவில குடியிருக்கிறவங்கதான் நீங்கன்னு என்னால நம்ப முடியலைங்க..” என்றான்..

“ஏனாம்..?” என்றாள் அவள் குழந்தை போல..

அந்தக் குழந்தைத்தனத்தில் வசீகரிக்கப் பட்டவன் அவளை ஆழ்ந்து பார்த்தான்.. அந்தப் பார்வையில் தடுமாறியவளின் பெண்மை குணம் அவனை அசத்தியது..

“ஏன்னா.. இந்த ஏரியா வைஹ கிளாஸ் சொசைட்டி மக்கள் வாழ்கிற ஏரியாவாச்சே.. இவங்கதான் மனிதாபிமானம்ன்னா கிலோ என்ன விலைன்னு கேட்கிறாங்களே..” கோபத்துடன் சொன்னான் ரகுவரன்..

“எல்லோரையும் அப்படிச் சொல்லிறக்கூடாது.. நல்லவங்க நிறையப்பேர் இருக்காங்க.. ஏன்.. நீங்ககூட இந்த ஏரியாவில இருக்கிறவர்தான்.. மனிதாபிமானம்ன்னா கிலோ என்ன விலைன்னா கேக்கறிங்க..?” ரோசத்துடன் கேட்டாள் பூர்ணிமா..

சாதுர்யமாக அவள் மடக்கி விட்டதில் மெச்சுதலாக புருவங்களை உயர்த்தி..

“பரவாயில்லையே… நெத்தியடியாய்த்தான் பதில் சொல்றிங்க..” என்று பாராட்டினான் ரகுவரன்..

“அதெல்லாம் இல்லை..” பூர்ணிமாவுக்கு வெட்கம் வந்து விட்டது..

வெட்கத்துடன் அவள் நிலம் பார்த்ததை ரசித்தான் ரகுவரன்.. பெண்மையின் மிளிர்வுடன் கூடிய அவளது அழகில் அவன் மனம் லயித்தது..

காய்ச்சல்கார வாட்ச்மேனை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் போனவனை நிறுத்தி வைத்து விட்டது போல குற்ற உணர்வு பூர்ணிமாவின் மனதில் எழுந்தது..

“காய்ச்சல்ன்னா இந்த அண்ணா லீவ் போட்டிருக்கலாமே..” மனம் தாங்காமல் சொன்னாள்..

“போட்டிருக்கலாம்தான்.. லீவ் போட்டா சம்பளம் பிடிப்பாங்களே.. ஒருநாள், ரெண்டு நாள் சம்பளம் குறைஞ்சா என்ன ஆகிறதுங்கிற பயமா இருக்கலாம்..”

“அட்லீஸ்ட் டேப்லெட்டாவது போட்டிருக்கலாம்..”

“டேப்லெட் போட்டு என்ன பண்ண..? ஒவ்வொரு காரா வருகிறப்ப ஓடிப் போய் கேட்டைத் திறந்து மூடிவிடனுமே.. அதைப்போல கார் வெளியே போறப்பவும் கேட்டைத் திறந்து மூடி விடனும்.. குடை பிடித்திருந்தாலும் மழைத்தண்ணியில கால் நனையாதா..? காய்ச்சல்கார உடம்புக்கு ஈரம் சரிப்படுமா..?”

வாட்மேனின் பணியில் இவ்வளவு இருக்கிறதா என்று அயர்ந்து போனாள் பூர்ணிமா..

‘இது தெரியாம கேட்டுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக் கிறவனுக்கு என்ன வேலைன்னு நினைச்சோமே..’

“ஓடி ஓடி கேட்டைத் திறந்து மூடி உழைச்சதில உடம்பும் டயர்டாகிருச்சு.. ஓய்வில்லாம மழையில நனைஞ்சதில காய்ச்சலும் அதிகமாகிருச்சு.. இப்ப உடனடியா ஹாஸ்பிடலில அட்மிட் பண்ணியாகனும்..”

ஏதோ சொந்தக்காரனுக்குக் காய்ச்சல் வந்து விட்டதைப் போலக் கவலைப்பட்டான் ரகுவரன்.. இந்த அக்கறை ஏன் மற்றவர்களுக்கு இல்லாமல் போனது என்று விசனப் பட்டாள்.. பூர்ணிமா.. மனித நேயத்திற்குப் பஞ்சம் வந்து விட்டால் எப்படித்தான் இவ்வுலகில் வாழ்வது..?

பூர்ணிமா நின்று கொண்டிருக்கிறாளே என்று ரகுவரனும் தயங்கி நின்றதில் பூர்ணிமா தலையை அசைத்தாள்.. அவள் விடை கொடுத்தபாணியில் ரகுவரனின் முகம் மலர்ந்து விட்டது..

“வரட்டுமா..?” என்ற கேள்வியுடன் அவன் காரைக் கிளப்பியதில் பூர்ணிமாவின் முகம் மலர்ந்து விட்டது.

0Shares

Reviews — Akalvizhku / அகல் விளக்கு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link