Chapter 07
முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி வள்ளல் பரம்பரையில் வந்தவன் பூர்ணிமா எனும் கிள்ளைக்குத் தோள் கொடுக்க மாட்டானா என்ன..?
ரகுவரன் வசித்து வந்த அடுக்கு மாடிக் குடியிருப்பு வாசிகளால் ரகுவரனை எதிர்த்து எதையும் செய்ய முடியவில்லை.. அதைப்பற்றிய சுபாவின் கருத்து யாதெனில்..
“இவனை எதுத்து இதுகளால ஒரு ஆணியையும் பிடுங்க முடியாதுடி..” என்பதாகும்..
ரகுவரனை எதிர்த்து ஒரு ஆணியையும் பெயர்க்க இயலாது என்பதில் பூர்ணிமா மனதுக்குள் மட்டற்ற சந்தேகம் அடைந்தாள்.. அதைத் தோழி அறியாதவாறு பச்சைப் பிள்ளை போல முகத்தை வைத்துக் கொள்ளவும் செய்தாள்..
“ஏண்டி..?”
அறியாப்பிள்ளை போன்ற அவளது வினாவிற்கு சுபா கொடுத்த விடையில் அவளது சந்தோசம் அதிகரித்தது..
“ஏன்னா இவன் பார்க்கிறதுக்கு பக்கா ரவுடியா இருந்தாலும் மனசளவில நல்லவனா இருந்து தொலைக்கிறாண்டி.. வேலைக்காரப் பெண் விசயத்தில ஆகட்டும்.. வாட்ச்மேன் விசயத்தில ஆகட்டும்.. இவன் தலையிடப் போய் நல்லது நடந்தது.. நியாயம் கிடைச்சது.. இல்லேன்னா என்ன ஆகியிருக்கும்..? சொல்லு.. நம்மளால
முடியாத நல்லதை இவன் செய்கிறானேங்கிற எண்ணம் இங்கே குடியிருக்கிற எல்லார் மனசிலயும் இருக்கு.. அதனாலதான் அவங்க வாய் திறக்காம இவன் ரௌடி.. எதுத்து எதையும் செய்ய முடியாதுன்னு சப்பைக் கட்டு கட்டிக்கிட்டு உள்ளூர இவனுக்குச் சப்போர்ட் பண்றாங்க..”
‘ஆஹா.. இதில இப்படியெல்லாம் பாயிண்ட்ஸ் இருக்கா..?’
மனதுக்குள் மட்டற்ற மகிழ்ச்சி கொண்ட பூர்ணிமா வெளியே அப்பாவி போல இமை கொட்டியபடி..
“எல்லோருமா சப்போர்ட் பண்ணறாங்க..? வேலைக்காரப் பெண் விசயத்தில அடி வாங்கி ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனவன் இருக்கான்.. அன்னைக்கு மழை பெய்தப்ப கேட்டை திறந்து மூடிவிட ஆள் இல்லேன்னு கோபப்பட்ட கார்க்காரங்க இருக்காங்க.. இவங்கள்ளாம் எதிர்க்கலையா..?” என்று விளக்கம் கேட்டாள்..
“நீ வேற.. அடி வாங்கினவனுக்குத்தானே அடி வாங்கின வலி தெரியும்..? திரும்பவும் இவன் அடி பின்னிட்டா கதை முடிஞ்சிரும்ன்னு வாயைத் திறக்காம இவனைக் கண்டாலே பத்தடி தூரத்துக்கு தள்ளி ஓடிக்கிட்டு இருக்கான்.. மழை பெய்த அன்னைக்கு கேட்டைத் திறந்து மூட வாட்ச்மேன் இல்லைதான்.. அதைக் காரணம் காட்டி வேலையை விட்டு நிப்பாட்டனும்னு மத்த கார்க்காரங்க குதிச்சாங்கதான்.. இவன்தான் புதுசா வர்ற வாட்ச்மேன் ஒழுங்கா வேலை செய்யலைன்னா உங்களைத்தான் ‘தட்டி’க் கேட்பேன்னு கறாராச் சொல்லிட்டானே.. இவன் ‘தட்டி’க் கேட்டாத் தாங்குவோமான்னு அதுகளுக்குள்ள உதறல் வந்து குளிரும் காய்ச்சலும் ஜோடி போட்டுக்கிட்டு வந்து சேர்ந்துருச்சே.. வேலைக்காரப் பெண் விசயத்தில அடி வாங்கினவன் பட்ட பாட்டைப் பார்த்த பின்னாலும் இவனைத் தட்டிக் கேட்க அலோவ் பண்ணுவாங்களா என்ன..?”
சிரிக்காமல் சுபா விளக்கம் சொன்னதில் பூர்ணிமா விழுந்து விழுந்து சிரித்து வைத்தாள்..
“ரொம்பவும் விழுந்து விழுந்து சிரிக்காதேடி.. காயம் பட்டிறப் போகுது..”
தோழியை எச்சரித்து தற்காலிகமாக அவளது சிரிப்பை நிறுத்தச் செய்தாள் சுபா.. சிரித்துச் சிரித்துக் கண்களில் நீரே வந்து விட்டது பூர்ணிமாவுக்கு.. தோழியை உற்றுப் பார்த்தாள் சுபா..
“ஏண்டி புசாப் பார்க்கிறதைப் போலப் பார்க்கிற..?” அதற்கும் சிரித்தாள் பூர்ணிமா..
“நீ புதுசாத் தெரியற பூர்ணி.. அதான் பார்க்கிறேன்..” யோசனையுடன் சொன்னாள் சுபா..
“என்னத்தைப் புதுசாத் தெரியறேனாம்..” பூர்ணிமா சிணுங்கினாள்..
“இந்த ரௌடிமேல் உனக்கெதுக்குடி பேவரிசம்..?” தோழியை உன்னிப்பாகப் பார்த்தபடி கேட்டாள் சுபா..
“பேவரிசமா..?” தூக்கி வாரிப் போட்டது பூர்ணிமாவுக்கு அகப்பட்டுக் கொண்டவளாய் திருதிருத்த பூர்ணிமாவை இமைக்காமல் பார்த்து சோதித்து வைத்தாள் சுபா..
“சுபா..” திக்கித் திணறினாள் பூர்ணிமா..
“சொல்லு..” கண்டிப்புடன் அதட்டினாள் சுபா..
“அது.. வந்து..” பூர்ணிமாவின் கண்கள் கலங்கி விட்டன..
“எனக்கு உன்னைத் தெரியும்டி.. இன்றைக்கு, நேற்றா உன்னோடு பழகறேன்..? ஸ்கூல் டயத்தில இருந்தே நீயும், நானும் பிரண்ட்ஸ்.. உன்னாலே பொய் சொல்ல முடியாது பூர்ணிமா..”
“இல்லை சுபா.. என்னால எதையும் சொல்ல முடியல.. ரகுவரன் மேல எனக்கு மதிப்பும், மரியாதையும் கூடுதலா இருக்கு.. சினிமாக்களில பார்க்கிற ஹீரோவை நிஜத்தில பார்க்கிற மலைப்புதான் எனக்கு.. இதுக்கு வேற பெயர் வைத்துப் பார்க்கத் தெரியலைடி..”
“இது மதிப்பும் மரியாதையோட நின்னுட்டாப் பரவாயில்லை பூர்ணி.. அதுக்கு மேல போயிராம பார்த்துக்க.. டெபுடி சூப்பரிண்டென்ட் ஆஃப் போலிஸோட தங்கை ஒரு ரவுடியை லவ் பண்றதுங்கிறது சினிமாவுக்கு வேணும்னா ஷீட் ஆகலாம்.. நிஜத்தில வெர்க்அவுட் ஆகாது..”
ஏன் ஆகாது என்று கேட்காமல் உதட்டைக் கடித்தபடி மௌனம் சாதித்தாள் பூர்ணிமா.. அது போன்ற விதண்டா வாதங்களுக்கும் அவளுக்கும் ரொம்பத்தூரம்.. அவளது நன்மைக்காக அக்கறை காட்டும் தோழியின் தன்னலமில்லாத அறிவுரையை பூர்ணிமாவால் புறக்கணிக்க முடியவில்லை..
‘இனி ரகுவரனை நினைத்தும் பார்க்கக் கூடாது..’
அவளது மனது செய்த சங்கல்ப்பம் இரண்டு நாள்கள்கூட தாக்குப் பிடிக்க முடியாமல் எட்டுக்கால் பாய்ச்சலில் ஓடி விட்டது.. இவள் மாடி பால்கனியில் மறைந்து நின்று எதிர்த்த அபார்ட்மெண்டில் ரகுவரனின் பிளாட்டில் இருக்கும் பால்கனியைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள்..
அதுவரை அவள் அப்படிச் செய்ததில்லை.. ரகுவரனைப் பார்க்க வேண்டும் போல இருந்தால் சுபாவைச் சாக்கு வைத்து எதிர்த்த அபார்ட்மெண்டிற்குப் போய் விடுவாள்.. மனது முழுவதும் ரகுவரன் எதிர்பட வேண்டுமே என்று படபடப்பாக இருக்கும்.. அவனைப் பார்த்துவிட்டால் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப் பிடித்து விட்டதைப் போல மனது துள்ளும்.. பார்க்க முடியாவிட்டால் எதையோ இழந்து விட்டதைப் போல ஒரு துயரம் துரத்திக் கொண்டே இருக்கும்.. அது ஏனென்றும் தெரிந்து தொலைக்காது..
இதைத்தான் வழக்கமாக வைத்திருந்தாள்.. பால்கனியில் ஒளிந்து நின்று அவன் பிளாட்டின் பால்கனியைப் பார்க்க யத்தனித்ததில்லை.. அந்தக் கள்ளத்தனமெல்லாம் அவளுக்கு வந்ததில்லை..
என்று சுபா அவள் மனதை இனம் கண்டு எச்சரித்தாளோ.. அன்றிலிருந்து சுபாவின் வீட்டிற்கு அடிக்கடி போகத்தயங்க.. ஆரம்பித்தாள் பூர்ணிமா.. சுபாவோ அவளுக்கும் மேல்
இருந்தாள்..
“வீடுன்னா இதுதான் வீடு ஆண்ட்டி.. தனி வீட்டிற்கு இருக்கிற அழகே தனிதான்.. ஆயிரம்தான் அபார்ட்மெண்ட் வசதியாக, ஸ்டைலாக இருந்தாலும் தனி வீட்டைப் போல என்ஜாய் பண்ண முடியாது ஆண்ட்டி.. தோட்டம், ஊஞ்சல்ன்னு உங்க வீடுதான் அசத்துது ஆண்ட்டி..”
பூர்ணிமாவின் வீட்டுக்கு வந்து பாகீரதியின் தலையில் ஐஸ் கட்டியைத் தூக்கி சுபா வைத்ததில் உருகிக் கரைந்து விட்டாள் பாகீரதி..
“அப்படியா சொல்கிற..?” என்று படு ஸ்ட்ராங்காக கள்ளிச் சொட்டுக் காபியைக் கலந்து கொடுத்தாள்..
வீடுன்னா இது வீடு.. என்று ஐஸ் வைத்த சுபா..
“காபின்னா இது காபி..” என்று அடுத்த ஐஸ் கட்டியைத் தூக்கி வைத்து விட்டு ஒரு சொட்டு விடாமல் காபியை உறிஞ்சிக் குடித்து விட்டு..
“எங்க பிளாட்டில மூச்சு முட்டுது ஆண்ட்டி.. இங்கே வந்தாத்தான் ரீலிஃப்பா இருக்கு..” என்று பெருமூச்சை விட்டாள்..
இத்தனை வருசமா மூச்சு முட்டாத அபார்ட்மெண்டின் பிளாட் இப்போது மட்டும் எப்படி மூச்சு முட்ட வைக்கிறது என்று பாகீரதி கேட்கவில்லை..
எப்படிக் கேட்பாள்..? அவள் வீட்டிற்கு வர சுபா காரணம் தேடுகிறாள் என்று நினைப்பதற்கு எந்த விதமான முகாந்திரமும் இல்லையே..
அவள் வீட்டில் கல்யாண வயதில் பூர்ணிமா மட்டும்தான் இருக்கிறாள்.. பூபாலனுக்குத்தான் திருமணமாகி ஆஷாவும் பிறந்து விட்டாளே..
அதனால் இதுவும் உன் வீடுதான் சுபா.. நீ நினைத்த போதெல்லாம் இங்கே வந்து விடு என்று தாய்மைப் பெருக்குடன் சொல்லி விட்டாள்..
அதற்காகத்தானே சுபா அத்தனை ஐஸ் கட்டிகளை வைத்தாள்..?
“தேங்க் யு ஆண்ட்டி..” என்று நன்றி சொன்னவள் பூர்ணிமாவைப் பார்த்து..
“இனி நோட்ஸ் காபி பண்ணணும்னா எனக்கு ஒரு கால் பண்ணு பூர்ணி.. என் நோட்ஸைத் தூக்கிக்கிட்டு நானே வந்து நிற்கிறேன்.. கம்பைன் ஸ்டடி பண்ணனும்னா என் பிளாட்டில நீ வந்து மாட்ட வேணாம்.. உன் வீட்டில நாம ஜாலியா கம்பைன் ஸ்டடி பண்ணலாம்.. ஹாலி டேஸில ஃபுல் டேயும் நான் இங்கேதான் கும்மியடிக்கப் போறேன்.. ஆண்ட்டியே பெர்மிசன் கொடுத்தாச்சு.. அப்புறம் என்ன..? சொல்லு..” என்று பூடகமாகச் சொன்னாள்..
அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று பூர்ணிமாவுக்குப் புரிந்து விட்டது.. அவளைப் பார்க்கும் சாக்கில் எதிர் அபார்ட்மெண்ட்டிற்கு பூர்ணிமா வரக் கூடாது என்கிறாள்..
பூர்ணிமாவுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.. என் பிளாட்டிற்கு வராதே என்பதைப் போல சுபா நடந்து கொண்ட விதம் அவள் மனதை பாதித்தது.. அதே சமயத்தில் அவள் மீதான அக்கறையில் சுபா பூர்ணிமாவின் வீட்டிற்கு வந்து போக நினைத்ததில் பெருமையாகவும் இருந்தது..
எது எப்படியோ.. முன்பு போல நினைத்த நேரத்திற்கு எதிர்த்த அபார்ட்மெண்டிற்கு போய் வந்து கொண்டிருந்த பூர்ணிமாவுக்கு தடைகல் போடப்பட்டு விட்டது.. அவளால் ரகுவரனைப் பார்க்கப் போய் வர முடியவில்லை..
என்ன செய்வது என்று ஏங்கிப் போன பூர்ணிமாவுக்கு யதேச்சையாகத்தான் அந்த வழி கிடைத்தது.. பால்கனியில் நின்று கொண்டிருந்தவள் இலக்கில்லாமல் எதிர்த்த அபார்ட்மெண்டை வெறித்துக் கொண்டிருந்தாள்.. அப்போதுதான் அவள் வீட்டிற்கு
நேர் எதிரே இருந்த பிளாட்டின் மாடி பால்கனிக்கு ரகுவரன் வந்து நின்றான்.. அவன் கையில் செல்போன் இருந்தது.. உரத்த குரலில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான்.. அவனது பேச்சுச் சப்தத்தில் கவனம் கலைந்த பூர்ணிமா சட்டென பால்கனியின் சுவர் ஓரமாக ஒன்றி மறைந்து கொண்டாள்..
‘இதுதான் இவன் பிளாட்டா..?’
அவளுக்கு அவனைப் பிடிக்கும்தான்.. அவனைப் பார்க்க வேண்டும் போன்ற ஆவல் அவள் மனதில் பொங்குகிறதுதான்.. அவனைப் பார்ப்பதற்காக சுபாவைப் பார்க்கக் காரணம் தேடி எதிர்த்த அபார்ட்மெண்டிற்கு அவள் ஓடுகிறாள்தான்..
இத்தனையிருந்தும் அவன் எதிர்த்த அபார்ட்மெண்டின் எந்தப் பிளாட்டில் குடியிருக்கிறான் என்று அவளுக்குத் தெரியாது..
அவள் வீட்டிற்கு நேர் எதிராக வரும் பிளாட்டில் தான் அவன் குடியிருக்கிறான் என்பதில் அவளுக்கு கொண்டாட்டம் மிகுந்தது.. அன்றிலிருந்து கண் மறைவாக ஒளிந்து நின்று
ரகுவரனின் பிளாட்டைப் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டாள் பூர்ணிமா..
இரவு வேளைகளில் இதில் இன்னொரு சாதகமும் இருந்தது.. அவனது பிளாட்டில் விளக்கு எரிந்தால் அவன் வந்து விட்டான் என்று அர்த்தம்.. விளக்கு எரியாவிட்டால் பால்கனியின் விளக்கை அணைத்து விட்டு சுவரில் சாய்ந்து அமர்ந்து முட்டிக்கால் போட்டு கைகளால் முழங்கால்களை வளைத்து அதில் முகாவயை பதித்து அவன் வரவுக்காக காத்திருப்பாள்.. ஆயிரம் கார் ஹார்ன் சப்தங்களில் அவனது காரின் ஹார்ன் சப்தத்தை எளிதாக கண்டு கொள்வாள்..
அந்த சப்தத்தில் அவளது விழிகள் மின்னும்.. உடலுக்குள் ஓர் உயிர்ப்பு வரும்.. ரத்த நாளங்கள் சூடாகும்.. அடி வயிற்றில் எதிர்பார்ப்பின் பரபரப்பு சுரக்கும்..
அவன் கார் வந்து கேட்டருகே நின்று நிதானிக்கும்.. காரின் உள் விளக்கைப் போடுபவனின் பார்வை பூர்ணிமாவின் வீட்டுப் பால்கனியின் இருளில் படிந்த மீளும்.. அவன் பார்த்து விடுவானோ என்ற பதட்டத்தில் சுவரோடு சுவராக பல்லி போல ஒட்டிக் கொள்வாள் பூர்ணிமா..
அவனது கார் கேட்டுக்குள் போனதும் பூர்ணிமா காத்திருப்பாள்.. அவனது பிளாட்டில் விளக்குகள் எரிய ஆரம்பிக்கும் போது இவள் மனது ததும்பும்..
ரகுவரன் பால்கனிக் கதவைத் திறந்து வந்து நிற்பான்.. அவளுக்காக அவன் வந்து நிற்பதைப் போல உணர்வாள் பூர்ணிமா..
Reviews — Akalvizhku / அகல் விளக்கு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.