Chapter 09
பழுதடைந்திருந்த அந்தக் காரின் என்ஜினை அக்குவேறு ஆணி வேறாக பிரித்துப் போட்டுக் கொண்டிருந்தான் ரகுவரன்.. தள்ளி நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்த பிரசன்னா.. நொடிக் கொருமுறை சிரித்து வைத்தான்.. அரைக் கண்ணால் அவன் சிரிப்பை பார்த்துக் கொண்டிருந்த ரகுவரன்.. அவன் பேசி முடித்து வந்ததும்..
“போனில நல்லாக் கழுவிக் கழுவி ஊத்தினாங்க போல.. அந்த உயர்ந்த உள்ளம் யாருடா..?” என்று என்ஜினில் கண்ணைப் பதித்தபடி கேட்டு வைத்தான்..
அவனை இமைக்காமல் பார்த்து வைத்த பிரசன்னா அழ மாட்டாத குறையாக..
“எப்புடிடா..?” என்றான்..
“நீ சும்மா பேசியிருந்தா கண்டு பிடிச்சிருக்க மாட்டேன்.. செகண்டுக்கொருதரம் சிரிச்சு வைச்சியா.. சரிதான்.. அந்தப் பக்கம் நம்ம மச்சிக்கு செம மாத்துக் கொடுத்துக்கிட்டு இருக்காங்கன்னு கண்டு பிடிச்சுட்டேன்..”
சாவாதானமாக ரகுவரன் சொன்ன விதத்தை ஷெட்டில் இருந்த மற்ற மெக்கானிக்குள் ரசித்துச் சிரித்தார்கள்.. அதை பற்றற்ற துறவியைப் போல பார்த்து வைத்தான் பிரசன்னா..
“என்னடா இப்படி போஸ் கொடுக்கிற..?” ரகுவரன் ஆச்சரியமானான்..
“நான் புத்தனைப் போலவும், சித்தனைப் போலவும் இருக்கனும்னு நினைக்கறேண்டா..” துறவியைப் போல முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான் பிரசன்னா..
கார் டயரை உருட்டிக் கொண்டிருந்த கதிர் வேலன் சிரித்து விட்டான்.. அவன் சிரிப்பு காருக்கு அடியில் படுத்திருந்த லோகநாதனைத் தொற்றிக் கொண்டது.. ஒட்டுவாரொட்டி போல அந்தச் சிரிப்பு தொற்று நோயாகப் பறந்து காருக்குப் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த பலராமனின் முகத்தில் படர்ந்தது..
அவர்களது சிரிப்பை மேலும் அதிகப் படுத்துவதைப் போல..
“அதான் அந்தப் பக்கமிருந்து சோத்தில உப்பைப் போட்டுத் திங்கறியான்னு கேட்டாங்களா..?” என்று சிரிக்காமல் சொல்லி வைத்தான் ரகுவரன்..
“ஹா.. ஹா..” என்று மெக்கானிக் ஷெட்டில் எழுந்த சிரிப்பலையில் கடுப்பான பிரசன்னா..
“அடங்குங்கடா..” என்று சத்தம் போட்டு விட்டு..
“செல்போனை காதுக்குள்ள நுழைச்சுப் பேசினேனேடா.. அப்புறமும் எப்படிடா கேட்டுத் தொலைச்ச..?” என்று பரிதாபமாக ரகுவரனிடம் கேட்டான்..
“நீதான் அடக்கி வாசிச்ச.. எதிர் திசையில மத்தளம் போலயில்ல வாசிச்சாங்க.. எனக்கு மட்டும் கேட்கலைடா பிரசன்னா.. ஊருக்கே கேட்டுச்சு..” ரகுவரன் விளக்கியதில்..
‘இவனுகள்ளும் கேட்டிருப்பானுகளோ..’ என்று மற்ற மூவர் முகத்தையும் ஆராய்ந்தான் பிரசன்னா..
அவர்கள் சிரிப்பை அடக்கிக் கொண்டதில் ‘ஆம்’ என்ற உண்மை அப்பட்டமானதில் நொந்து போய் விட்டான்.. அதில் வேறு பலராமன் லோகநாதனிடம் சொல்வதைப் போல..
“நாதாரித்தனம் பண்ணினாலும் நாசுக்காப் பண்ணனும்டா மச்சி.. மாட்டிக்கக்கூடாது.. எதைச் செஞ்சாலும் தெளிவாப் பிளான் போட்டுச் செய்யனும்..” என்று சொல்லி வைத்ததில்..
‘என்னைத்தான் சொல்கிறானோ..’ என்ற சம்சயம் வந்து தொலைந்தது..
அப்படியாடா என்று கேட்டுத் தொலைக்கவும் முடியாது.. ஆமாம் என்று பலராமன் சொல்லி விட்டால் பிரசன்னா முகத்தை எங்கே வைத்துக் கொள்வது என்று யோசிக்க வேண்டியிருக்கும்.. கழற்றி மாட்ட அது ஒன்றும் ஹெல்மெட் இல்லையே.. முகமாயிற்றே..
அதனால் எதுவும் நடக்காததைப் போல முகத்தை வைத்துக் கொண்டு..
“அங்கே என்னடா அரட்டை வேண்டிக் கிடக்கு..? பேச்சை நிறுத்திட்டு வேலையைக் கவனிங்கடா..” என்று முதலாளியின் நண்பன் என்ற கெத்தைக் காண்பித்து அதட்டினான்..
“இம்புட்டுக் கலவரம் நடந்தும் எதுவுமே நடக்காததைப் போல பிலிம் காட்டற பாரு.. இங்கதான் நிக்கிற நீ..” என்றான் ரகுவரன்..
“முடியலைடா மச்சான்.. விட்டிரு.. இன்னைக்கு பலிகடா நான்தானா..? பொலி போடத் துடிக்கறயே..”
“நியாயமாய் பேசனும் பிரசன்னா.. நானாடா உன்னை பலி கடாவாக்கனும்னு ‘வா, வா’ன்னு அழைச்சேன்..? தானா வந்து நீ தலையைக் கொடுத்தா நான் என்னடா பண்ணுவேன்..? செல்லில பேசறவன் பச்சை, பச்சையாத் திட்டறது காதில விழுகுதில்ல.. எனக்குத் தெரியக் கூடாதுன்னு நினைக்கிறவன் ஷெட்டை விட்டு வெளியே ஓடியிருக்கனுமா இல்லையா..? அதை விட்டுட்டு எனக்குக் கேட்காதுன்னு நீயே நினைச்சுக்கிட்டு பல்லை ஈன்னு காட்டி ஆக்ட் கொடுத்தா இப்படித்தான் நடக்கும்..”
“அதுக்குன்னு ஒரு வரைமுறை இல்லையாடா ரகு..?”
“இதுக்கெல்லாம் வரைமுறையைப் பார்க்கக் கூடாது.. ஆடு தானா வந்து தலய கொடுக்கிறப்ப நான் வேணாம்ன்னு சொன்னா நல்லாயிருக்குமாடா..?”
“நல்லாயிருக்குடா உன் நியாயம்..”
“அஃது.. அவனே வெறி கொண்ட வேங்கiயாப் பேசப் போறான்னு தெரியுதில்ல.. அப்புறமும் ஏண்டா அவன் போனை அட்டெண்ட் பண்ணின..?”
“அவன் இல்லேடா மச்சி.. அவ..”
“அவளா..? என்னடா இது.. என் காதில ஆம்பளை பேசற மாதிரியில்ல கேட்டுச்சு..?”
“ஆரம்பிச்சது அவதாண்டா.. கண்டினியு பண்ணினதுதான் அவளோட அண்ணன்.. அவ போன் நம்பராச்சேன்னுதான் அட்டெண்ட் பண்ணினேன் மச்சி..”
“ஷெட்டுக்குள்ள எனக்கும் ஒரு கேர்ள் பிரண்ட் இருக்கான்னு பிலிம் காட்ட நினைச்சிருப்ப..”
அவன் மனதைக் கண்ணாடி போல பிரதிபலித்த ரகுவரனின் வார்த்தைகளில் அசடு வழிய..
“ஹி.. ஹி..” என்று சிரித்து வைத்தான் பிரசன்னா..
“சகிக்கலை..” என்றான் ரகுவரன்..
“டேய்.. இதைத்தாண்டா அன்னைக்கு அவளும் சொன்னா..”
“என்னத்தைச் சொன்னா..? எதுக்குச் சொன்னா..?”
“அடுத்த தெருவில இருக்கிற பொண்ணுடா இவ..”
“உன் தெருவில மன்மதன் அம்பை விட்டா வேலைக்கு ஆகாதுன்னு அடுத்த தெருவுக்கு படையெடுத்துட்டயாக்கும்..”
அப்படியே பக்கத்திலிருந்து பார்த்தவனைப் போல ரகுவரன் சொல்லி வைத்ததில்..
‘இப்படி உண்மையைத் தேங்காயைப் போட்டு உடைக்கிறதைப் போல உடைத்து வைக்கிறானே..’ என்று காய்ந்து போனான் பிரசன்னா..
ஷெட்டில் வேலை செய்யும் நால்வரில் பிரசன்னா மட்டும் ரகுவரனின் பள்ளித் தோழனாக இருந்து வைத்ததில் மற்ற மூவருடன் ஒன்றி வேலை செய்யாமல் மேற் பார்வையாளனாக மாறிப் போயிருந்தான்.. அதை ரகுவரனும் ஆதரித்ததில் அவனது ஆரவாரம் அதிகமாயிருந்தது.. அதை நினைத்து மனதுக்குள் புழுங்கும் மற்ற மூவரும் இது போன்ற வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வாய் விட்டுச் சிரித்து பிரசன்னாவின் இமேஜை டேமேஜாக்கி புளகாங்கிதப் பட்டுப் போவார்கள்..
அன்றும் அதுபோல அவர்கள் புளகாங்கிதம் கொள்ள பிரசன்னா பரிதாபமாக ரகுவரனைப் பார்த்து வைத்தான்..
“விடுடா.. விடுடா..” ரகுவரன் நண்பனைச் சமாதானம் செய்து விட்டு..
“அப்புறம்..?” என்று கதை கேட்க ஆரம்பித்தான்..
“அப்புறம் என்ன..? தினமும் தெரு முனையில நின்னு சிக்னல் கொடுத்துக்கிட்டே இருந்தேன்.. ஒருநாள் நான் தனியா நின்னேன்.. அவளும் தனியா வந்தா..”
“சஸ்பென்ஸ் தாங்கலைடா மச்சான்.. என்ன ஆச்சுன்னு சொல்லித் தொலை..”
“நான் சுவரில மணிரத்னம் பட ஹீரோ போல சாய்ஞ்சு நின்னுக்கிட்டு ‘காதலிக்கிறேன்..’னு ஒற்றை வார்த்தை சொன்னேன்..”
“அவ.. ‘சகிக்கலை’ன்னு ஒற்றை வார்த்தையில சொல்லிட்டு ஓடிப் போயிட்டாளா..?”
‘இதையும் பக்கத்தில இருந்து பார்த்ததைப்போல இம்புட்டுக் கரெக்டா சொல்றானே..’ கண்ணில தண்ணியை விட்டு விட்டான் பிரசன்னா..
“எப்புடிடா..?” அவன் நாத்தழுதழுக்க..
“சகிக்கலை.. ஏண்டா இப்படிப் பெர்பார்மன்ஸ் பண்ணிச் சாகடிக்கிற.. இப்ப நீதானேடா இதைத்தான் அன்னைக்கு அவ சொன்னான்னு சொல்லித் தொலைச்ச..” என்று எரிந்து விழுந்தான் ரகுவரன்..
‘விதி வலியது..’ காலத்தின் கோலத்தால் பல்ப் வாங்கி விட்ட பிரசன்னா நொந்து போனான்..
Reviews — Akalvizhku / அகல் விளக்கு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.