Chapter 13
அழகான அகல்விளக்கின் ஒளி போல ரகுவரனின் மனதுக்கு இதத்தைத் கொடுத்துக் கொண்டிருந்தாள் பூர்ணிமா.. கைகளை உதறியவளின் கைவிரல்களைப் பிடித்து நெஞ்சோடு அணைத்து வீணையடி நீயெனக்கு, மேவும் விரல் நானுனக்கு என்று பாட வேண்டும் போல இருந்தது ரகுவரன்னுக்கு..
“காரையே பார்ட் பார்ட்டா கழட்டிப் போட்டு மாட்டறவங்க உங்க ஸ்கூட்டியை என்னன்னு ஒரு கை பார்த்திர மாட்டோமா..?” இலகுவாக சிரித்தான்..
“நான் அதுக்குச் சொல்லலை..”
“எதுக்கும் சொல்ல வேணாம்.. என்னை நம்புங்க.. போதும்..”
இந்த வார்த்தைகளை ஸ்கூட்டிக்காகச் சொன்னான் என்பதைப் பச்சைக் குழந்தைகூட நம்பாது என்று பரிவுடன் நினைத்துக் கொண்டான் பிரசன்னா.. மனம் கவர்ந்தவளிடம் தன் மனதை வெளிப்படுத்தும் நண்பனின் அணுகுமுறையில்..
‘சைக்கிள் கேப்பில சிந்து பாடிக் கடாசறான் பாரு..’ என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டான்..
ரகுவரனின் வார்த்தைகள் மயிலிறகாய் மனம்வருட சிலிர்த்துப் போனவளாக பார்வையை உயர்த்தினாள் பூர்ணிமா.. காத்திருந்த ரகுவரனின் பார்வை அவள் பார்வையுடன் கலந்தது.. ஒரு
சிறு பார்வைக்காக ஏங்கியிருந்தவளுக்கு ஆழ்ந்த பார்வை கிடைத்திருப்பதை நம்ப முடியாதவளாகத் திணறிப் போனாள் பூர்ணிமா..
‘உங்களை நம்பாமல் வேறு யாரை நம்புவேனாம்..?’
உரிமையுடன் மனதுக்குள் கேட்டுக் கொண்டவளால் வெளிப்படையாக பேச முடியவில்லை..
“என்ன ரிப்பேர்ன்னு பொறுமையா செக் பண்ணுலோகு..”
பொருள் பொதிந்த முதலாளியின் வார்த்தைகளுக்குக் கட்டுப் பட்ட லோகநாதன்.. டயர் பஞ்சர்தான்.. பத்தே நிமிசத்தில ஒட்டி முடிச்சிரலாம் என்று வாய் வரை வந்த வார்த்தைகளைத் தவிர்த்து விட்டு விஞ்ஞானி போல ஸ்கூட்டியை உற்றுப் பார்த்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கினான்..
‘சபாஷ்..’ லோகநாதனை விழிகளால் சமிக்ஞை செய்து நயனபாஷையில் பாராட்டினான் பிரசன்னா..
“அவன் பார்த்து முடிக்கிற வரைக்கும் வாசலிலேயே நிற்கனுமா..? உள்ளே வந்து சேரில் உட்கார்ந்து என்னை கௌரவப் படுத்தலாமே..”
பூர்ணிமாவின் தயக்கத்தை உடைத்தது ரகுவரனின் வார்த்தைகள்.. வலதுகாலை எடுத்து வைத்து அவனது ஆரோ மெக்கானிக் ஷெட்டிற்குள் பிரவேசித்தாள் பூர்ணிமா.. அவனது வீட்டிற்குள் அவள் கிரஹப்பிரவேசம் செய்து விட்டதைப் போல மனம் நிறைந்து போனான் ரகுவரன்..
அவளுக்காக அவன் இழுத்துப் போட்ட சேரில் உட்கார்ந்தவளுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.. மனதிலிருந்த காதலின் வேகத்தில் அவனது மெக்கானிக் ஷெட் வரை வந்து விட்டவளுக்கு அவனது அருகாமையில் அவனுடைய ஷெட்டிற்குள் உட்கார்ந்திருக்கிறோம் என்பதையே நம்ப முடியவில்லை.. பெரும் பிரமிப்பாக இருந்தது..
அவளையே பார்த்த வண்ணம் அவளுக்கு எதிரில் இருந்த சேரில் உட்கார்ந்த ரகுவரனின் மனம் நிறைந்து ததும்பியது.. பூர்ணிமாவின் வருகையினால் அவனது வாழ்வில் வெளிச்சம் நிறைந்து விட்டதைப் போல உணர்ந்தான் அவன்.. அவள் மௌனமாக இருந்தாள்..
‘காரிருள் போல அடர்ந்துள்ளது
உனது மௌனம்..
கலைப்பாயா கண்ணே..?
என்மன இருளையும்
உன் மௌனத்தையும்
ஒருசேரக் கலைப்பாயா கண்ணே..?
அகல் விளக்காய் உனது
பிரத்யேக வெளிச்சப் புன்னகையினைச் சிந்தி
என் தனிமையிலிருந்து மீட்சி கொடு..’
அவன் பார்வை இறைஞ்சியது.. பார்வையைத் தழைத்துக் கொள்ள முடியாத பரிதவிப்போடு அவன் பார்வையை எதிர் கொண்டாள் பூர்ணிமா.. சாய்ந்து கொள்ளத் தோள் கொடுப்பவனின் பார்வை சாய்ந்து கொள்ளத் தோள் கேட்கும் பார்வையாக இருந்ததில் சங்கடம் கொண்டாள்..
‘இவன் மனமும் நோகுமா..?’ தவித்துப் போனாள்..
‘நோகின்ற நெஞ்சமென்றும்
நேசிக்கும் மெந்நெஞ்சமாகும்..’
என்றோ அவள் வரைந்த கவிதை காகித வடிவில் அவள் மனதில் படபடத்தது..
‘உன் மனம் நோகின்றதா..?
நைந்த உள்ளத்தைத் தேற்றிச்
செப்பனிட நானிருக்கிறேன்.. வா..
சாய்ந்து கொள்ள என் தோள் உண்டு..
இளைப்பாற என் மடியுண்டு.. வா..’
புதிய கவிதையை மனம் வரைந்தது..
மௌனப்படம் போல அவர்கள் விழிகள் பேசிக் கொள்ள அமர்ந்திருந்தார்கள்.. ஆராய்ச்சி செய்து, செய்து அலுத்துப் போன லோகநாதன் அதற்கு மேலும் ஆராய்ச்சி செய்ய இயலாதவனாக பிரசன்னாவைப் பார்த்தான்.. அவனோ..
‘இன்னும் கண்டினியூ பண்ணு..’ என்று சைகை காட்டினான்..
‘இன்னுமா..?’ அரண்டு போனான் லோகு எனப்படும் லோகநாதன்..
செதுக்கி வைத்த கிரேக்க சிற்பம் போல ரகுவரனும்.. ரவிவர்மாவின் ஓவியம் போல பூர்ணிமாவும்.. மனதோடு மனம் பேச அமர்ந்திருந்த காட்சியைப் பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை பிரசன்னாவிற்கு..
எல்லோருக்கும் நன்மையையே செய்யும் அவனுடைய நண்பனின் துயரம் மிகுந்த தனிமை வாழ்வை அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பவன் அவன்..
“கல்யாணத்தைப் பண்ணிக்கடா ரகு.. உனக்குன்னு ஒரு குடும்பம் உண்டாகும்டா..” என்று கெஞ்சி ஓய்ந்து போவான்..
“எனக்குன்னு ஒரு குடும்பமா..”
கேள்வி கேட்கும் ரகுவரனின் பார்வை ஹாலில் மிகப் பெரிதாக மாட்டப் பட்டிருக்கும் அவனது பெற்றோரின் புகைப்படத்தின் மீது துயரத்துடன் படியும்..
“ம்ப்ச்..”
ஒற்றைச் சூள் கொட்டலில் மறுத்து விடுவான்.. இப்படியே ஒற்றைப் பனைமரமாய் தன்னந்தனிமையிலே அவன் நின்று விடுவானோ என்று பிரசன்னாவின் மனம் பயம் கொள்ளும்.. வாரம் ஒரு பெண்ணைப் பின் தொடர்ந்து காதல் சொல்ல முயன்று தோற்றுப் போகும் கதைகளை நண்பன் முன்னால் கடை பரப்புவான்.. அதைக் கேட்டாவது அவன் மனம் மாறாதா என்று ஏக்கம் கொள்வான்.. பிரசன்னா கடை பரப்பும் காதல் கதைகளை வெகு சுவராஸ்யமாகக் கேட்கும் ரகுவரனின் மனதில் காதல் உணர்வுகள் துளிர்க்கவே இல்லை..
சொந்த இடத்தில் மெக்கானிக் ஷெட்டைக் கட்டி, ஆட்டோ மொபைல் ஸ்பேர்ஸ் பார்ட் கடையையும் ஆரம்பித்தவன் குடியிருந்த பழைய வீட்டை விற்று விட்டு புதிதாக ஒரு அபார்ட்மெண்ட் வாங்கிக் குடியேறியதன் அடிப்படை என்னவென்று பிரசன்னாவிற்குத்தான் தெரியும்..
தனித்த வீட்டைவிட அபார்ட்மெண்டில் மக்கள் புழக்கம் இருக்கும்.. அக்கம் பக்கத்து வீடுகளில் நட்பாகப் பேசாவிட்டாலும் சண்டையாகப் பேசலாம்.. மாதாமாதம் நடக்கும் அபார்ட்மெண்டின் மீட்டிங்குகளில் நானும் ஒரு அங்கத்தினன் என்று கலந்து கொள்ளலாம்.. பொதுப் பிரச்னைகளில் தலைக் கொடுக்கலாம்..
ஆக மொத்தம் அபார்ட்மெண்டின் ஒரு பிளாட்டில் வாழ்வதென்பது கூட்டுக் குடித்தனத்தில் வாழ்வதைப் போலவே இருக்கும்.. அந்த வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுத்தான் ரகுவரன் தனி வீட்டை வாங்கிக் குடி போகாமல் அபாட்மெண்டில் ஒரு பிளாட்டை வாங்கிக் குடி போனான்..
ரகுவரனைப் பார்க்க அடிக்கடி அவன் பிளாட்டிற்கு போய் வந்த தருணங்களில்தான் பிரசன்னா ரகுவரனின் மனதில் காதல் உணர்வுகள் துளிர்த்து விட்டதை அறிந்து கொண்டான்..
காலத்தை விரயம் செய்ய விரும்பாத ரகுவரன் எதற்காக மணிக் கணக்கில் பால்கனியில் நின்று வானத்தை வேடிக்கை பார்க்கிறான்..?
Reviews — Akalvizhku / அகல் விளக்கு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.