Chapter 17
‘உனக்கு என்னைப் பார்க்க வேண்டுமா..?’
மறைந்திருந்து அவனைப் பார்ப்பவளைப் பார்ப்பவனின் மனம் கனியும்.. அப்படி அவனிடம் என்ன அழகைக் கண்டாள் என்று கேட்க வேண்டும் போல இருக்கும்..
பூர்ணிமாவின் மனதை அறிவதற்கு முன்னால் அவன் மெக்கானிக் ஷெட்டிலேயும், ஆட்டோ மொபைல் ஷாப்பிலேயும் தான் பொழுதைக் கழிப்பான்.. அவ்வளவு சீக்கிரத்தில் கிளம்ப மாட்டான்.. பிரசன்னா தலையில் அடித்துக் கொண்டால்..
“எனக்காக எந்தப் பெண்டாட்டிடா காத்திருக்கா..?” என்பான்..
அந்த ரகுவரன் மணி ஆறடித்ததும் டாண் என்று வீட்டுக்குக் கிளம்ப ஆரம்பித்த போது..
“இப்போ எந்தப் பெண்டாட்டி உனக்காக காத்திருக் கிறாளாம்..?” என்று வம்பிழுத்தான் பிரசன்னா..
“டேய்ய்…”
அவனது கேலியை ரசித்து ரகுவரன் சிரித்த சிரிப்பு உண்மையாகவே அவனுக்காக ஒருத்தி காத்திருக்கிறாள் என்பதை பிரசன்னாவுக்கு உணர்த்தி விட்டது..
“டேய்ய்..?” பிரசன்னா ஆச்சரியமானான்..
தெருமுனையில் கார் திரும்பும்போதே வேகத்தைக் குறைத்து.. நகர்த்தியபடி பூர்ணிமாவின் வீட்டுப் பால்கனியைப் பார்ப்பான் ரகுவரன்.. இருளில் மறைந்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் பூர்ணிமாவின் உருவம் மெலிதான வெளிச்சத்தில் கோட்டோவியம் போல வடிவாகத் தெரியும்.. அவனுக்காக அவள் காத்திருக்கிறாள் என்பதில் அவனது ரத்த நாளங்கள் சூடேரும்.. உடலின் அனைத்துச் செல்களும் ஆர்ப்பரிக்கும்.. மெதுவாக நகர்ந்து வரும் கார் கேட்டை நெருங்கும் போது காரின் உள் விளக்குகளைப் போடுவான்.. அவனை அவள் நன்றாகப் பார்க்கும் வரை வாட்ச்மேனிடம் பேசிக் கொண்டிருப்பதைப் போல நேரத்தைக் கடத்துவான்.. நிமிடங்கள் கழிந்த பின் கேட்டைக் கடந்து காரை பார்க்கிங் பகுதியில் பார்க் செய்து விட்டு மின்னலாக படிகளைக் கடந்து அவனுடைய பிளாட்டுக்குள் புகுந்து மின்விளக்குகளை எரிய விடுவான்.. ஒளிரும் அவனது பிளாட்டின் ஒளி வெள்ளத்தில் பூர்ணிமாவின் மனம் ஒளிரும் என்பதை அவன் அறிந்து வைத்திருந்தான்.. ஏது மறியாதவனைப் போல பால்கனி விளக்கைப் போட்டு விட்டு பால்கனியில் வந்து நிற்பான்.. மறந்தும் பூர்ணிமா மறைந்து நிற்கும் திசையைப் பார்க்க மாட்டான்.. அவள் மறைந்திருந்து பார்ப்பதை அவன் அறிய மாட்டான் என்ற அவளது நிம்மதியைக் குலைக்க மாட்டான்.. அவளுக்கு விடுதலையுணர்வைத் தருவான்..
ரகுவரன் ஒரு கொடை வள்ளல்..!
அவனுடைய பிரியத்தை யாசித்த பூர்ணிமாவுக்கு அவள் கேட்ட பிரியத்தை அள்ளியள்ளி வழங்கினான்.. அதை அவளறியாமல் செய்தான்.. அவளுடைய காதலை அவன் உணர்ந்திருப்பதைக் காட்டிக் கொண்தேயில்லை..
“ஏண்டா..?” எனும் பிரசன்னாவின் ஆதங்கத்திற்கு..
“ம்ப்ச்.. அவ தேவதைடா.. அகல்விளக்கு..! எந்த வகையிலயும் நான் அவளை டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுடா..” என்பான்..
காதலிப்பவளிடம் காதலைக் காட்டுவது தொந்தரவு செய்வதாக ஆகிவிடுமா..?
பிரசன்னாவின் சிற்றறிவுக்கு விளங்கவேயில்லை..
“உன் காதலைச் சொல்லாம விட்டுட்டா அவ வேற யாருக்காவது கழுத்தை நீட்டிட்டுப் போயிருவாளேடா..”
பிரசன்னாவின் இந்தக் கேள்விக்கு ரகுவரன் பதில் சொல்லவேயில்லை.. அவன் அதைத்தான் விரும்புகிறானோ என்ற சந்தேகம் பிரசன்னாவுக்கு வந்து தொலைத்தது..
ரகுவரனிடம் அச்சந்தேகத்தை வெளிப்படுத்தியபோது ஆழ்ந்த அமைதியுடன்..
“காதலிக்காக காதலை தியாகம் செய்யலாம்.. தப்பில்லை..” என்றான்..
ரகுவரனுக்கும் அந்த ஆழ்ந்த அமைதியான பதிலுக்கும் சற்றுக்கூடப் பொருந்தவில்லையென்று பிரசன்னா எரிச்சல் பட்டான்..
“நீயாடா இப்படிப் பேசற..? ஆசைப்பட்ட பெண்ணைத் தூக்கிட்டு வந்து தாலி கட்டற வீரன்டா நீ.. உன்மேல ஆசைப்படறான்னு தெரிஞ்சும் விட்டுக் கொடுத்துருவேன்னு சொல்றியே.. எப்படிடா..?” ஆத்திரத்துடன் சொன்னான்..
“அது அப்படித்தான்..”
பிரசன்னாவை நிமிர்ந்து பார்த்த ரகுவரனின் பார்வையில் ஏதோ இருந்தது.. அது என்னவென்றுதான் புரிபடவில்லை..
“என்னடா..?” ரகுவரனிடமே கேட்டான் பிரசன்னா..
“வேற ஒருத்தனுக்கு அவ கழுத்தை நீட்டுவான்னு எதை வைச்சு நீ சொல்ற..?”
“ரகு..?”
“பேசிப் பழகினாத்தான் காதலா..? அவ காதலோட லெவலே வேற.. உனக்குச் சொன்னாப் புரியாது..”
அதற்கு மேல் பூர்ணிமாவின் காதலைப் பற்றிய பேச்சை வளர்க்காமல் வேறு பேச்சிற்கு தாவிவிட்டான் ரகுவரன்.. பூர்ணிமாவின் காதலைப் பற்றி பிரண்ணாவிடம் அதிகம் பேச மாட்டான்.. பிரசன்னாவாகக் கேட்டாலும் பேச்சை மாற்றி விடுவான்.. பூர்ணிமாவின் உன்னதமான காதலை அவன் போற்றிப் பாதுகாத்தான்.. மனதுக்குள் வைத்து ஆராதித்தான்.. ஒருபோதும் அதை மற்றவர்கள் அறிய விட்டதில்லை.. யாரோ எவேரா என்று இருப்பான்..
அத்தகைய காதலை அவனுக்குள் விதைத்த பூர்ணிமா அவனைத் தேடி அவனுடைய மெக்கானிக் ஷெட்டிற்கே வந்து விட்டதில் அவனுடைய காதல் வெற்றிப் படிகளில் அடியெடுத்து வைத்தது..
‘பார்த்துக்க.. இதுதான் இவ..!’
பிரசன்னாவை வெற்றிப் பார்வை பார்த்தவனின் விழிகளில் கர்வம் ததும்பியது.. பூர்ணிமாவை காரில் ஏற்றிக் கொள்ள வழி செய்த நண்பனுக்கு விழிகளால் நன்றி சொல்லி விட்டு அவளை முன் சீட்டில் தனக்குப் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு காரை ஓட்ட ஆரம்பித்தவனுக்கு சாலை அவனுக்கு ரத்தினக் கம்பளம் விரித்திருப்பதைப் போல அழகு பெற்றுத் தோன்றியது..
அருகிலிருந்த பூர்ணிமாவை சொந்தத்துடன் பார்த்தான்.. பிரியம் ததும்பும் பார்வை.. அந்தப் பார்வையில் முகம் சிவந்தவளை அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது..
அவன் வீட்டிற்கு அவளை அழைத்துக் கொண்டு போய் விட்டால் என்ன என்ற வேகம் பிறந்தது..
“இந்த பூலோகத்தில்
யாரும் பார்க்கம் முன்னே
உன்னை அதிகாலை
அனுப்பி வைப்பேன்..”
மனதை நிரப்பிய பாடலைக் கேட்டபடி காரின் வேகத்தைக் குறைத்தான்.. எதையோ சொல்ல முயன்றவளாகத் தவித்தாள் பூர்ணிமா.. அவன் முகத்தைப் பார்ப்பதும் அவன் பார்த்து விட்டால் பதறிப் போய் கை விரல்களைப் பார்ப்பதுமாக நடுங்கினாள்..
‘என்ன சொல்ல விரும்புகிறாய்..?’ மனதுக்குள் கேட்டுக் கொண்டான் ரகுவான்..
எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல் என்று எப்படி அவளிடம் சொல்வான்..?
அவனுக்கு தயக்கமில்லைதான்.. அவள் தயங்குகிறாளே.. அந்தத் தயக்கத்தை உடைப்பது நாகரிகமாகுமா..?
அவனுடைய மெக்கானிக் ஷெட்டில் இருக்கும் வரை தயக்கமின்றி பேசியவள் காருக்குள் தனிமையில் இருக்கும் போது வாயடைத்துப் போனவளாக மௌனமாகி விட்டாளே..
அவளது மௌனத்திற்கு மதிப்புக் கொடுத்து தானும் மௌனமானான் ரகுவரன்.. பக்கத்தில் அவளிருப்பதே போதுமானதாக இருக்கும்போது பேச்சு தேவையற்றுப் போனது.. அழகான அந்தச் சூழலில் இருந்து விடுபட அவனுக்கு மனமில்லை.. அதைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பினான்..
“மயங்கினேன்.. சொல்லத் தயங்கினேன்..
உன்னை விரும்பினேன் உயிரே..!”
சிடியில் பாடல் மாறியதில் அதிர்வு தோன்றியவளாக சட்டென அவனைப் பார்த்தாள் பூர்ணிமா.. அவனும் அவளைப் பார்த்ததில் மயங்கிப் போனாள்.. அவள் விழிகளில் ததும்பிய மயக்கத்தில் கரைந்து போன ரகுவரன் காரை ஓரம் கட்டி நிறுத்தி விட்டான்..
Reviews — Akalvizhku / அகல் விளக்கு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.