Chapter 21

0Shares

“நாளைக்கு என்னைப் பெண் பார்க்க வர்றாங்களாம்..”

ரகுவரனின் முகத்தைப் பார்க்கும் துணிவின்றி கடலைப் பார்த்தபடி சொன்னாள் பூர்ணிமா.. அவள் எதிர்பார்த்தபடியே..

“என்னது..?” என்று உறுமினான் ரகுவரன்.

நடுநடுங்கினாள் பூர்ணிமா.. சோர்ந்திருந்த அவளது தோற்றத்தில் தன்னை நிதானப்படுத்திக் கொண்ட ரகுவரன்.. அவளை உறுத்துப் பார்த்தபடி..

“உன் சம்மதத்தோடுதான் வர்றாங்களா..?” என்று கேட்டான்.

அடிபட்டவளாக அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் குற்றச்சாட்டும் மன்றாடலும் கலந்திருந்தன..

“நீங்களா இப்படிக் கேட்கறிங்க..? நான் சம்மதித்திருப்பேன்னு நினைக்கறிங்களா..?” அவளது உதடுகள் துடித்தன..

“நீ மாட்டேன்னு சொல்லியிருந்தா எப்படி அவங்க வருவாங்க…

“இன்னைக்குக் காலையிலேதான் எனக்கு விவரமே தெரியும்.. அம்மா சொன்னாங்க.. என்னிடம் சம்மதம் கேட்கலை.. தகவல் சொல்லியிருக்காங்க.. அவ்வளவுதான்.. இப்பத்தான் ஃபைனல் இயர் எக்ஸாமை எழுதி முடிச்சிருக்கேன்.. உடனே கல்யாணமா..? வேணாம்.. கொஞ்ச நாளாகட்டும்ன்னு சொன்னேன்.. நல்ல இடத்துச் சம்பந்தம்.. திடிர்ன்னு பெண் கேட்டு வரோம்ன்னு சொல்லிட்டாங்க.. அப்பாவும் வரச் சொல்லிட்டார்.. தடுத்து நிறுத்த முடியாதுங்கிறாங்க.. என்ன செய்யட்டும்..?”

“என்னிடம் கேட்கிறயா..? கெட்டிக்காரிதான்.. இதுக்கு நான் என்ன பதிலைச் சொல்வேன்னு நினைக்கிற..? மேக்-அப் பண்ணிக்கிட்டு எவன் முன்னாடியே ஷோ கேஸ் பொம்மைபோல நில்லுன்னு சொல்வேன்னு நினைக்கறியா..?”

ரகுவரனின் கடுமையில் துடித்துப் போய் விட்டாள் பூர்ணிமா.. வழி தெரியாமல் பரிதவித்த அவளது தவிப்பில் பல்லைக் கடித்தபடி யோசித்த ரகுவரன்..

“ஓகே.. நீ வீட்டுக்குப் போ..” என்றான் அழுத்தமாக..

“நாளைக்குப் பெண் பார்க்க வர்றாங்களே..” பூர்ணிமா தவித்தாள்..

“என்னிடம் சொல்லிட்டேல்ல.. நான் பார்த்துக்கிறேன்..”

தீர்மானமான அவனது குரலில் அவளுக்குத் தைரியம் வரவில்லை என்றாலும் அலைபாய்தல் குறைந்திருந்தது.. தளர்ந்த நடையுடன் நடந்தவளை யோசனையுடன் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான் ரகுவரன்.. அவள் காதலிக்கிறாள் என்பதை அவளது குடும்பத்தால் ஜீரணிக்க முடியாது என்ற நிதரிசனத்தில் அவன் மனம் உறைந்திருந்தது.. அவளைக் கேட்காமலே அவளுடைய திருமணத்தை அவர்கள் நிச்சயம் செய்வதற்கு இந்த நம்பிக்கைதான் காரணமாக இருந்திருக்க வேண்டும்.. நாளை உண்மை வெளிப்படும் போது பூர்ணிமாவின் நிலைமை என்னவாகும் என்று நினைத்தவனின் மனம் வருந்தியது..

அகல்விளக்கின் சுடர் போல அமைதி கொண்டவள்.. எதிர்த்துப் போராடுவாளா..? அந்த வலிமை அவளிடம் இருக்குமா..?

வெகுநேரம் சிந்தித்தபடி கடற்கரையிலேயே உட்கார்ந்திருந்தான் ரகுவரன்.. கடலைகளை வெறித்துக் கொண்டிருந்தவனின் மனம் சமனப்படவில்லை.. முரட்டுத்தனமான அவனது வாழ்க்கைமுறை அவளிடமிருந்து அவனைத் தள்ளி நிறுத்தும் என்பதில் எள்ளலளவும் அவனுக்குச் சந்தேகமில்லை..

‘அதற்காக அவளை விட்டுக் கொடுத்து விட முடியுமா..?’

மனதுக்குள் கொந்தளித்தான்.. கடந்து வந்த காலத்தின் குருதிச் சுவடுகளை அவனால் மாற்றியமைத்து விட முடிந்தது.. சின்னஞ்சிறு வயதில் அவனை அநாதையாய் நிற்க வைத்த விதியை நினைத்து தொய்ந்து போகாமல் வாழ்க்கையை எதிர் கொண்டு போராடி ஜெயிக்க முடிந்தது.. அவன் நினைத்தால் பூர்ணிமாவின் வீடு புகுந்து தூக்கி வந்து அவள் கழுத்தில் தாலியைக் கட்டி வாழ்ந்து விட முடியும்..

அந்தச் சூறாவளிச் சுழலின் வேகத்தை அவளால் தாங்க முடியுமா..? தென்றல் காற்றின் சிறு வேகத்தைக் கூடத் தாங்க முடியாத அகல்விளக்கு அவள்.. அவளிடமா சூறாவளிக் காற்றின் வேகத்தைக் காட்டுவது..?

எது எப்படி இருந்தாலும் மறுநாள் மாலையில் பூர்ணிமாவைப் பெண் பார்க்க வருவதற்கு முன்னால் அவள் மனதில் ரகுவரன்தான் இருக்கிறான் என்பதை அவள் குடும்பத்தார்க்கு உணர்த்தி விட வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தான் ரகுவரன்..

அவள் அஞ்சும் தன்மையுடைய அகல் விளக்கின் சுடராக இருக்கலாம்.. அவன் சூறாவளி..! சுழன்றடிப்பான்.. அவனைக் காதலிப்பவளை விட்டுக் கொடுப்பதாக இருந்தாலும் அதைச் சொல்லி விட்டுத்தான் செய்வான்.

இரவில் பலத்த சிந்தனைகளுடன் இருந்த ரகுவரன் விடிந்ததும் குளித்து உடைமாற்றி எதிர் வீட்டுக்குக் கிளம்பி விட்டான்.. கையில் பழங்களும் பூவும் அடங்கிய வலைப்பை..!

பூர்ணிமாவின் வீட்டை அணுகும்போதே அவன் பார்வை உயர்ந்து பால்கனியைப் பார்த்தது.. அங்கே அவனது வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் பூர்ணிமா.. அவனுக்காக அவள் காத்திருந்ததில் மனம் நெகிழ்ந்தான்.. இரவில் உறங்கியிருப்பாளா என்று யோசித்தான்.. இல்லை என்பது தெளிவாக தெரிந்தது.. உறக்கமில்லாத இமைகள் வீங்கியிருப்பதைக் கண்டவனின் மனம் இரக்கம் பட்டது.

‘என்னால்தானே..’ வேதனை கொண்டான்..

கேட்டைத் திறந்து போர்டிகோவை நெருங்கியவனைத் தோட்டத்தில் நின்றிருந்த விஸ்வநாதன் புதிராக பார்த்தார்..

‘இவன் எதுக்காக இங்கே வந்திருக்கான்..?’ அவன் கையிலிருந்த வலைப்பையின் மீது அவர் பார்வை படிந்தது..

“வணக்கம்..” ரகுவரன் கரம் குவித்தான்.

பண்பாடு குறையாத விஸ்வநாதனால் பதிலுக்கு வணக்கம் சொல்லாமல் இருக்க முடியவில்லை..

“வணக்கம்.. என்ன விசயம்..?” நறுக்கென கேட்டார்..

எதற்காக என் வீட்டுப் பக்கம் வந்திருக்கிறாய் என்று கேட்காமல் கேட்ட அந்தக் கேள்வியைப் பொருட் படுத்தாமல்..

“உங்ககிட்டப் பேசனும்..” என்றான் ரகுவரன்..

என்ன பேச வேண்டும் என்ற கேள்வியை போர்டிகோவில் நிற்க வைத்துக் கேட்பது நாகரிகமில்லையென்று விஸ்வநாதனுக்குத் தோன்றியது..

“வாங்க..” என்றபடி வீட்டுப் படியேறினார்..

“ஈவினிங்குக்கு என்ன மெனுன்னு சொல்லிட்டிங்கன்னா ஹோட்டலில் இருந்து வரவழைச்சிரலாம்.. அம்மா பாவம்.. கெஸ்டுடன் உக்காந்து பேச முடியாம கிச்சனில சிரமப்பட வேண்டாமே..” என்று சொன்னபடி எதிரில் வந்த பூபாலன் ரகுவரனைக் கண்டதும் முகம் மாறினான்..

“என்னப்பா..?” விஸ்வநாதனிடம் அதட்டலாகக் கேட்டான்.

“ஏதோ பேசனும்னு சொல்றாரு பூபாலா.. என்னன்னு கேட்கலாம்ன்னுதான் உள்ளே வந்துக்கிட்டு இருக்கேன்..” என்றார் விஸ்வநாதன்..

“அதை வாசாலிலேயே கேட்டு வழியனுப்பி வைக்க வேண்டியதுதானே.. வீட்டுக்குள்ளே வரனுமா..?” கடுமையாகக் கேட்டான் பூபாலன்..

மாடிப்படிகளில் வேகமாக இறங்கிக் கொண்டிருந்த பூர்ணிமா அதிர்ந்து விட்டாள்.. அவளுடைய ரகுவரனுக்கு கிடைத்த மரியாதையான வரவேற்பில் அவளுக்கு அழுகையழுகையாய் வந்தது.. ஆஷாவுடன் ஹாலுக்கு வந்த ஆனந்தி அங்கே நிலவிய சூழலைக் கண்டதும் நிற்பதா, உள்ளே போவதா என்று தெரியாமல் திகைத்து நின்றாள்.. மகன் ‘மெனு’ கேட்கப் போனானே.. அதற்கு கணவர் என்ன பதிலைச் சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்வதற்காக ஹாலுக்கு வந்த பாகீரதி..

‘இங்கே என்னதான் நடக்குது..?’ என்று குழம்பிப்போனாள்..

“தப்பு பூபாலா.. அது நாகரிகமில்லை.. வீடு தேடி வந்தவர்கள வீட்டுக்குள்ள கூப்பிட்டு உட்கார வைத்துத்தான் பேசனும்..” மகனைக் கண்டித்து விட்டு ரகுவரனைப் பார்த்த விஸ்வநாதன்..

“உட்காருங்க..” என்றார்..

வலைப்பையில் வைத்திருந்த சில்வர் தாம்பாளத்தில் பழ வகைகளைப் பரத்தி ஹாலில் இருந்த டீப்பாயில் வைத்து விட்டுப் பொதுவாக கை கூப்பி விட்டு உட்கார்ந்தான் ரகுவரன்.. பூர்ணிமாவைத்தவிர மற்றவர்களின் முகங்கள் மாறின.. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்..

மற்றவர்களை விழி சமிக்ஞையால் கட்டுப் படுத்திய விஸ்வநாதன்..

“முதன் முதலா வீட்டுக்கு வர்றதினால பழங்களைக் கையில பிடிச்சுக்கிட்டு வந்திருக்கீங்க போல.. ஃபார்மாலிட்டி தெரிஞ்சிருக்கு..” என்று சொன்னார்..

“ஃபார்மாலிட்டிதாங்க.. வெறும் ஃபார்மாலிட்டியில்லை.. உங்க மகளைப் பெண் கேட்கனும்ங்கிறதுக்காக கொண்டு வந்திருக்கும் ஃபார்மாலிட்டி..” நிதானமாகச் சொன்னான் ரகுவரன்..

“என்னடா சொன்ன..?”

டீப்பாயை பூபாலன் ஓங்கி உதைத்த உதையில் பழத்தட்டு பறந்தது.. பழங்கள் ஹால் முழுவதும் சிதறி விழுந்தன.. பயந்து போன ஆஷா ஆனந்தியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அழுக ஆரம்பித்தாள்.. பாகீரதிக்கு மயக்கமே வந்து விட்டது..

“யார் வீட்டுப் பெண்ணை யார் பெண் கேட்கிறது..? போலிஸ் ஆபிசரோட தங்கையை ரௌடி பெண் கேட்கிறதா..? எவ்வளவு தைரியமிருந்தா என் தங்கையைப் பெண் கேட்டு வருவ..?”

பூபாலன் ரகுவரனின் மீது பாய்ந்து சட்டைக் காலரைக் கொத்தாகப் பிடித்து விட்டான்.. அவசரமாக ஊடே புகுந்து மகனை விலக்கி விட்ட விஸ்வநாதன் மாடிப்படியில் நின்றிருந்த பூர்ணிமாவைப் பார்த்தார்.. அவரது பார்வை அவளை ஊடுறுவியது.

பூர்ணிமாவின் மருண்ட விழிகளில் பயம் இருந்தது.. பதட்டம் இருந்தது.. தவிப்பு இருந்தது.. மன்றாடல் இருந்தது.. 

ஆனால் ரகுவரன் இப்படிப் பெண் கேட்டு விட்டானே என்ற அதிர்ச்சி மட்டும் இல்லை..

0Shares

Reviews — Akalvizhku / அகல் விளக்கு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link