Chapter 06
“என்ன சார் இது..? தென்ன மரத்தில தேள் கொட்டினா பனை மரத்தில நெறி கட்டும்ன்னு சொல்றதப் போல உங்ககிட்ட அந்தம்மா மன்னிப்புக் கேக்கறதைப் போலப் பேசினா நம்ம வாத்தியார் ஊடுசால் ஒட்டிக்கிட்டு வருத்தப் படாதேங்கிறாரு..?”
அன்பழகனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சிந்தனையுடன் நடந்தான் ஆனந்தன்.. அரசபட்டினத்தின் கடைத் தெருவை அவனுக்கு அறிமுகப் படுத்தினான் அன்பழகன்.. இரண்டு மளிகைக் கடைகளும் ஒரு கட்பீஸ் துணிக் கடையுமாக களை கட்டியது கடைத்தெரு.. மளிகைக் கடையிலேயே காய்கறிகள் இருந்தன.. கட்பீஸ் கடையை ஒட்டி ஒரு டெஸ்லர் கடை இருந்தது..
“இதான் சாரு அரச பட்டினத்தோட கடை வீதி… வேணும்ங்கிறதை வாங்கிக்கங்க..” தாராளமாக சொன்னான் அன்பழகன்..
ஆனந்தன் சமையலுக்குத் தேவையான அரிசி, பருப்பு, இத்யாதி இத்யாதிகளை சொல்லிக் கொண்டே வர மளிகைக் கடைக்காரர் பொட்டலம் கட்டி அடுக்கி வைத்தாள்..
“மொத்தமா சாக்குப் பைக்குள்ள போட்டுக் கட்டித் தாங்கண்ணே..”
அன்பழகன் கேட்டுக் கொண்டபடி கட்டப்பட்ட மூட்டையைத் தூக்கி சைக்கிளின் பின்பக்க கேரியரில் வைத்துக் கட்டினான்.. ஆனந்தன் பால் பாக்கெட் ஒன்றை வாங்கி கையில் பிடித்துக் கொண்டதைப் பார்த்தவன்..
“இங்கே கேன் பால்தான் வாங்குவாங்க சார்.. உங்களுக்கு வேணும்னா வீட்டில வந்து ஊத்தச் சொல்றேன்.. சுத்தமான பசு மாட்டுப் பால் சார்..” என்றான்..
“ஆகட்டும் அன்பு.. அப்படியே செய்.. இப்போதைக்கு பாக்கெட் பாலில காபி போட்டுக் குடிக்கலாம்..”
ஆனந்தனின் வார்த்தைகளில் காபி நிச்சயம் என்பது புரிந்து போக உற்சாகமாக சைக்கிளைத் தள்ளியபடி ஊர் நிலவரத்தைப் பேசிக் கொண்டு வந்தான் அன்பழகன்.. மெலிதான புன்னகையுடன் தலையசைத்தபடி வந்த ஆனந்தனின் மீது அவனுக்குள் நட்பு உண்டானது..
‘பரவாயில்ல.. போஸ்ட்மாஸ்டரு ஒன்னும் சிடு மூஞ்சியா இல்ல.. பழக்கத்துக்கு நல்லவருதான்..’
எதிரே வந்த பால்கேன் கட்டப்பட்ட சைக்கிளைக் கண்டதும்..
“இந்தா நம்ம பால்கார கோனாரே வந்துட்டாப்புல இல்ல..” என்று உற்சாகமானான்..
பால் வண்டி நின்றது.. பால் விற்கும் கோபாலிடம் ஆனந்தனை அறிமுகப் படுத்தி வைத்தான் அன்பழகன்..
“புதுசா வந்திருக்க போஸ்ட் மாஸ்டருண்ணே.. மத்தவகளப் போல காலையில பஸ்ஸில வந்தோம்.. பொழுது சாய பஸ்ஸைப் பிடிச்சு டவுனுப் பக்கம் ஓடிப் போனோம்ன்னு இல்லாம நம்ம ஊரிலேயே தங்கிப் புடனும்ங்கிற வைராக்கியத்தோட இருக்கிறாரு.. அந்த அசாத்திய மனோ தைரியத்தை பாராட்டியாவது குறைச்சு தண்ணி ஊத்தின பாலாப் பாத்து இவருக்கு ஊத்துண்ணே..”
“என்னா அன்பு இப்படிச் சொல்லிப்புட்ட..? எந்தக் காலத்தில பாலில நான் தண்ணிய ஊத்தினேன்.. கள்ளிச் சொட்டு போல கறந்த பால கேனில நிரப்பி விக்கிறவன் அன்பு..”
“அது எனக்குத் தெரியாதா அண்ணே..? பசுமாடு தண்ணியக் குடிக்கிறதினாலதான கள்ளிச் சொட்டுப் பாலு தண்ணிப் பாலாகுது..? நீ என்ன வஞ்சனை பண்ற ஆளா..?”
“தெரிஞ்சாச் சரி.. போஸ்ட் மாஸ்டரு எந்த வீட்டில குடியிருக்காரு..? எத்தன லிட்டரு பால ஊத்தனும்..?”
“பத்து லிட்டரு பால ஊத்து.. என்னண்ணே நீ.. கல்யாணம் கட்டிக்காத கட்டப் பிரம்மச்சாரி எத்தன லிட்டரு பால வாங்கப் போறாரு..? கவர்ண்மெண்ட் சம்பளம் வாங்கறவங்க அகப்பட்டா ஒரு மாட்டுப் பால ஒருமிக்க ஊத்திப்புடனும்னு கிளம்பிருவியே..”
“ஏம்ப்பா யதார்த்தமா கேட்டா இப்புடியா சுளுவெடுப்ப..?”
வாக்குவாதம் தொடர.. ஆனந்தன் தலையிட்டு அவனிருக்கும் வீட்டையும் தேவையான பாலின் அளவையும் சொல்லி பால்காரரை அனுப்பி வைத்தான்..
“யாரு அகப்பட்டாலும் அவங்கள ஒரு வழி பண்ணிருவ போல..” அன்பழகனிடம் சிரித்தான்..
“இதெல்லாம் சும்மா சார்.. கிராமத்துக்காரங்க இப்படித்தான் எகனைக்கு மொகனையா பேசி சண்டை போட்டுக்குவோம்.. இதெல்லாம் செல்லச் சண்டை சார்..”
“அது எனக்குத் தெரியுமா..? நிஜச் சண்டையாயிருச்சுன்னா என்ன செய்யறதுன்னு பயந்துட்டேன்..”
“உங்களைப் பாத்தா பயப்படற ஆளை மாதிரியா தெரியுது..? பத்துப்பேரை பந்தாடற ஆளைப் போலயில்ல தெரியுது..”
மறுபடியும் ஆனந்தனின் தலைமீது ஐஸ்கட்டி ஏறி அமர்ந்தது.. புன்னகைத்துக் கொண்டான் அவன்..
“நீ இப்படிச் சொல்ற.. அந்தப் பொண்ணு என்னன்னா என்னைப் பார்த்து தோட்டக்காரனான்னு கேக்குது..”
“யாரு கேட்டது..? பண்ணையார் மகளா..?”
ஆச்சரியத்துடன் வினவினான் அன்பழகன்.. ஆமாமென்று தலையசைத்த ஆனந்தன்..
“அது பண்ணையாரோட மகளா..?” என்று விசாரித்தான்..
“ஆமாம் சார்.. அவங்க வீட்டிலதான் சுகுமாறன் வாத்தியாரு குடியிருக்காரு.. இவரு பண்ணையாருக்கு தூரத்து சொந்தமாம்..”
“கிட்டத்து சொந்தம் மாதிரியில்ல சொல்லிக்கிட்டான்..”
“யாரு..? இவரா..? கிட்டத்து சொந்தம்ன்னா ஊருக்காரங்களுக்குத் தெரியாம போயிருக்குமா..? இவரு வேலைக்கு வந்த ரெண்டு வருசமாத்தான் ஊருக்காரங்களுக்குத் தெரியும்.. அதுக்கு முன்னாடி தெரியாது..”
“பண்ணையாரோட சொந்த பந்தத்தைப் பத்தி மத்தவங்களுக்கு எப்படிப்பா தெரியும்..?”
“டவுனுப்பக்கம் வேணும்னா அப்படியிருக்கலாம்.. பட்டிக்காட்டில அப்படியில்லை.. வருசா வருசம் வர்ற அம்மன் கோவில் திருவிழாவுக்கு அரச பட்டினத்தோட ஒவ்வொரு வீட்டிலயும் சுத்துப்பட்டியில இருக்கிற அத்தனை சொந்த பந்தமும் வந்து ருமியும்.. சாதாரணப்பட்டவுக வீட்டிலயே இப்படிங்கிறப்போ பண்ணையாரு வீட்டில எப்படியிருக்கும்..? ஆளும் பேருமா வந்து இறங்கறவுக தங்கிப் போகிறதுக்காகவே ஒரு வீட்டைக் கட்டியிருந்தாரு.. அந்த வீட்டிலதான் சுகுமாறன் வாத்தியார் குடியிருக்காரு..”
“அப்படியா..?”
“ஆமாம் சார்.. இவர அம்மன் கோவில் திருவிழாவிலயும் பார்த்ததில்ல.. பண்ணையார் வீட்டு விசேசங்களிலயும் பார்த்ததில்ல.. திடிர்ன்னு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி இந்த ஊரு பள்ளிக் கூடத்தில வாத்தியாரு வேலை கிடைச்சிருக்குன்னு வந்து இறங்கினாரு.. பண்ணையாரு வீட்டுக்கு உறவுன்னு சொல்லிக்கிட்டு புதுவீட்டில குடியேறினாரு..”
வீடு நெருங்கி விட்டதில் பேச்சை மாற்றினான் ஆனந்தன்.. சுகுமாறன் யாராய் இருந்தால் அவனுக்கென்ன..? குடியிருக்க இடம் தேடியவனுக்கு அடைக்கலம் கொடுத்துத் தன் வீட்டில் தங்க வைத்திருப்பவன் அவன்.. அதற்கு மேல் பேசுவதற்கு எதுவும் இல்லை..
காம்பவுண்டு கேட்டைத் திறக்கும் போதே அனிச்சையாக ஆனந்தனின் பார்வை எதிர்வீட்டை நோக்கியது..
என்ன ஒரு ஆச்சரியம்..! அவனது வரவை எதிர்பார்த்து காத்திருப்பவளைப் போல எதிர் வீட்டின் தோட்டத்திலே கீதா நின்றிருந்தாள்.. அவளது பார்வை ஆனந்தனின் மீது படிந்தது.. அவன் சிலிர்த்துப் போனான்.. அருகில் அன்பழகன் இருக்கும் உணர்வில் பார்வையை விலக்கிக் கொண்டு கேட்டை அகலமாக திறந்து விட்டான்.. சைக்கிளுடன் உள்ளே வந்த அன்பழகன் அதை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு மூட்டையை இறக்கினான்.. கேட்டை மூடியபடி எதிர்வீட்டைப் பார்த்தான் ஆனந்தன்.. அவள் அங்கு இல்லை..
‘வீட்டுக்குள் போயிருப்பாள்..’ அவன் மனது ஏமாற்றம் கொண்டது..
ஏனிந்த ஏமாற்றம் என்று மனதை கடிந்து கொண்டவனாக வீட்டுக்குள் போனான்.. மூட்டையுடன் அவனைத் தொடர்ந்தான் அன்பழகன்.. சமையலறை மேடையில் அவன் மூட்டையை இறக்கி வைக்க, ஆனந்தன் பால் பாக்கெட்டை உடைத்துப் பாத்திரத்தில் ஊற்றி ஸ்டவ்வை பற்ற வைத்துக் காய்ச்ச ஆரம்பித்தான்..
“காபி போடத் தெரியுமா சார்..?”
“உன்னை விட நல்லாவே தெரியும்.. நீ உட்காரு..”
காபி கலந்து அன்பழகனுக்குக் கொடுத்து விட்டுத் தானும் ஒரு தம்ளரில் ஊற்றிக் குடிக்க ஆரம்பித்தான் ஆனந்தன்..
“காபின்னா இது காபி சார்..” சிலாகித்தான் அன்பழகன்..
“அப்படியா..?” சிறு புன் சிரிப்புடன் அன்பழகனின் பாராட்டை அங்கீகரித்த ஆனந்தன்..
“தேங்க்ஸ் அன்பு..” என்றான்..
“எதுக்கு சார்..”
“உன்னோட ஹெல்ப்புக்குத்தான்..”
அன்பழகன் சிலிர்த்துப் போனான்.. இந்த ஒரு வார்த்தையைக் கேட்பதற்காகத்தானே அவன் ஓர்நாள் முழுவதும் காத்திருந்தான்.. அவன் எதிர்பார்த்த வார்த்தை தேனாக அவன் காதுகளில் பாய்ந்ததில் திக்கு முக்காடிப் போனான்..
“இது என் கடமை சார்..”
எம்ஜிஆரைப் போல மூன்றெழுத்தில் அவன் மூச்சிருக்கும் என்று சொல்லி விட்டு சைக்கிளில் ரஜினி போல தாவி ஏறி..
“ரெக்கை கட்டி பறக்குதடா..
அண்ணாமலை சைக்கிள்..”
என்று உச்சஸ்தாதியில் பாடியபடி சைக்கிளை மிதித்துப் பறந்து விட்டான் அன்பழகன்..
மளிகைஜாமான்களைப் பிரித்து டப்பாக்களில் கொட்டிக் கொண்டிருந்த ஆனந்தன் உள்ளுணர்வின் உந்துதலில் திரும்பிப் பார்த்தான்.. சமையலறை வாசலில் சுகுமாறன் நின்றிருந்தான்..
Reviews — Anantha Geetham / ஆனந்த கீதம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.