Chapter 09
சுகுமாறனின் மனப்போராட்டத்தை அறிந்தும் அறியாதவன் போல சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தான் ஆனந்தன்..
வீட்டுக்கு காலடி பதித்த மறு நொடியிலிருந்து வெகு இயல்பாக அவன் வீட்டோடு ஒன்றிப் போய் செயல்பட ஆரம்பித்து விட்டதில் காண்டாகிப் போனான் சுகுமாறன்..
அவனும்தான் அந்த வீட்டுக்கு குடிவந்த நாள் முதலாக ஒன்ற முனைகிறான்.. இரண்டு வருடங்களாக அந்த வீடு பேயாட்டம் ஆடி அவனை ஒன்ற விடுவேனா என்று ஒருகை பார்த்துக் கொண்டிருக்கிறது..
ஆனந்தனை மட்டும் பயமுறுத்தாமல் ஆட்கொண்டிருக்கிறதே. அது எப்படி..?
இவன் இப்படிப் பயமின்றி கள்ளிச்சொட்டுக்காபி, சப்பாத்தி குருமா என்று ஆண்டு அனுபவிப்பதா என்ற பொறாமையுடன் ஆனந்தனுக்கு அந்த வீட்டைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான் சுகுமாறன்.. ஆனந்தனைப் பற்றித்தான் அவனுக்குத் தெரியுமே.. பேயிருந்தால் அதற்கும் ஒரு தம்ளர் காபி கொடுத்து விட்டால் போச்சு என்று கூட்டுச் சேர்த்துக் கொள்ளும் சூராதி சூரானாயிற்றே..
பேயைப் பற்றிக் கேள்விப்பட்டாலும் பயப்பட மாட்டான்தான். ஆனால் ஒரு நொடியாவது இந்த வீட்டில் வந்து மாட்டிக் கொண்டோமே என்று நினைக்க மாட்டானா என்ற அல்ப ஆசை சுகுமாறனுக்கு..
அவனுக்கு அது போதுமே..
“மாமாவுக்கு கொடுத்த வாக்குக்காகத்தான் நான் இந்த பேய் வீட்டில வந்து மாட்டிக்கிட்டு இருக்கேண்டா ஆனந்தா..”
சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்ன சுகுமாறனை நிமிர்ந்து பார்த்த ஆனந்தன் தன் காதில் விழுந்த வார்த்தைகளைத் தான் சரியாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறோமா என்று சந்தேகப் பட்டான்.. அவன் புருவங்கள் உயர்ந்தன..
“பேய் வீடா..?!!!…”
“ஆமாண்டா ஆனந்தா..” சுகுமாறன் மூக்கை உறிஞ்சினான்..
“போடா டேய்..” ஆனந்தன்..
“ஹா.. ஹா..” எனச் சிரிக்க ஆரம்பித்தான்..
“நிஜமாத்தாண்டா ஆனந்தா..”
“அடிதாண்டா வாங்கப் போற.. உனக்குப் பொண்ணு கொடுக்கப் போகிற மாமன் கட்டியிருக்கிற வீட்டுக்குப் ‘பேய் வீடு’ன்ன பேர் கட்டறயே.. இது உன் மாமன் காதில விழுந்தா என்னாகும்ன்னு நினைச்சுப் பார்த்தியா..? அதுக்கப்புறம் அவர் உனக்குப் பொண்ணைக் கட்டிக் கொடுப்பாரா..?” உருளைக் கிழங்கை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றியபடி கேட்டான் ஆனந்தன்..
‘இதில இப்படி ஒன்னு இருக்கா..?’ அரண்டு போய் விட்டான் சுகுமாறன்..
பேயை விட இது ஆபத்தான விவகாரமாச்சே..
விளக்கெண்ணையைக் குடித்தைப் போல மாறி விட்ட நண்பனின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தபடி கேஸ் ஸ்டவ்வைப் பற்ற வைத்து பாத்திரத்தை அடுப்பில் வைத்தான் ஆனந்தன்..
“என்னடா ஆனந்தா.. நீயே போய் சொல்லிக் கொடுத்துட்டு வந்துருவ போல இருக்கே..” அழ மாட்டாத குறையாய் சொன்னான் சுகுமாறன்..
“எனக்கேண்டா அந்த வேலை..? அப்படியெல்லாம் நான் செய்ய மாட்டேன்.. கவலையை விடு.. யாமிருக்க பயமேன்..?”
ஆனந்தனின் அபயமொழி சுகுமாறனின் காதுகளில் ‘யாமிருக்க பயமே..’ என்று விழுந்து தொலைக்க அவன் அலறிவிட்டான்..
“என்னடா நீ..? ‘யாமிருக்க பயமே..’ங்கிற பேய் சினிமாவோட பேரைச் சொல்ற..?”
“அது பேய் சினிமா இல்லை.. பேயைப் பத்தின சினிமா.. ‘யாமிருக்க பயமேன்..’ங்கிறது முருகனோட அருள் வாக்கு.. இதையும் மத்ததையும் முடிச்சுப் போட்டேன்னு வைய்யி.. நண்பன்னு கூடப் பார்க்க மாட்டேன்..”
வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியென்று எடுத்துக் கழுவி தட்டில் பரப்பிக் கத்தியால் அவற்றைப் பொடிப்பொடியாக நறுக்கியபடி எச்சரித்தான் ஆனந்தன்..
பேச்சு பேச்சாக இருக்கக் காரியத்தில் கண்ணாக இருந்தவனைப் பார்த்து பற்றிக் கொண்டு வந்தது சுகுமாரனுக்கு..
மாமா வீட்டில் காபி குடிப்பேன்.. மாமா வீட்டில் சாப்பிட்டுருவேன் என்று ஊர் முழுக்க அவன் பரப்பும் செய்தியெல்லாம் சும்மா.. நீலகண்டனின் வீட்டிற்கு உணவு
நேரத்தில் உறவினர்கள் போய் விட்டால் சாப்பிட வைத்துத்தான் அனுப்புவார்.. அது போன்ற தருணங்களில் கிடைக்கும் சாப்பாட்டைத்தான் அனைத்து நேரங்களிலும் கிடைக்கும் சாப்பாட்டைப் போல சுகுமாறன் பீற்றிக் கொண்டிருக்கிறான்.. அவன் போகும் நேரங்களெல்லாம் உணவு உண்ணும் நேரமாக இருப்பதில்லையே..
‘மகராசன் வீட்டில் நினைச்ச நேரத்தில சாப்பிட்டுத் தொலைக்குதுகளே..’
முதல்நாள் இரவு எட்டு மணிக்கு உணவு கிடைத்ததால் மறுநாளும் அதே போல ஆஜராவான் சுகுமாறன்.. இப்போதுதான் சாப்பிட்டு முடித்தோம் என்று பாத்திரத்தைக் கழுவ போட்டிருப்பாள் நீலகண்டனின் சகதர்மிணியான பார்வதி…
‘வடை போச்சே..’ என்ற ரீதியில் பரிதவித்துப் போகும் சுகுமாறன் அரசபட்டினத்து டீக்கடையின் இரவு நேரத்து காய்ந்து போன புரோட்டாவை உள்ளே தள்ளி விட்டு மறுநாள் மாலையில் ஏழு மணிக்கெல்லாம் நீலகண்டனின் வீட்டிற்குப் போய் விடுவான்.. அவர்கள் வீட்டில் பேசுவார்கள், பேசுவார்கள், பேசிக் கொண்டே இருப்பார்கள்.. பத்து மணியானாலும் பந்தி போடும் நினைவில்லாமல் பேசிக் கொண்டிருப்பவர்களிடம் அதற்கு மேலும் கொலைபட்டினியாக பேசிச் சிரிக்கும் திராணியின்றி டீக்கடையின் புரோட்டாவைத் தேடிப் போவான் சுகுமாறன்.. அங்கே காய்ந்து போன புரோட்டாவுக்கும் தட்டுப்பாடு வந்து காலியாகி இருக்கும்.. டீக்கடைக்காரன் பன்னை பிய்த்துக் கொடுப்பான்.. மாமன்
வீட்டில் ஏழு மணிக்கே சாப்பிட்ட சாப்பாடு செரித்துப் போனதாக புளுகி விட்டு வரட்டியைப் போன்ற பண்ணைப் பிய்த்து தண்ணிப் பாலில் நனைத்து உள்ளே தள்ளி விட்டு இரவு முழுவதும் பசிக்கும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு தவிப்பான் சுகுமாறன்.. இதில் டீக்கடைக்காரனிடம் பொய் வேறு சொல்ல வேண்டும்..
“ராத்திரி பன்னெண்டு மணியானாலும் பசிக்குதுன்னு எங்க மாமா வீட்டில போய் நின்னாப் போதும்.. நடுராத்திரின்னு கூடப் பாக்காம எங்கத்தை அடுப்பங்கரைக்குப் போயி எதையாவது ஆக்கிக் கொண்டாந்து குமிச்சுருவாங்க.. அப்படிச் செஞ்சா நல்லவா இருக்கும்..?”
இதுபோன்ற கொடுமைகளைத் தவிர்க்க மரியாதையாக நேரா நேரத்திற்கு மெஸ்ஸில் மொக்கி விடுவான்.. ஏதேனும் ஒர் நாளில் இசகுபிசகாக நீலகண்டனின் குடும்பம் சாப்பாட்டுத்தட்டில் கை வைத்திருக்கும் நேரத்தில் இவன் போய் நின்று விட்டால் இவனுக்கும் ஒரு பிடி உணவு ஈயப்படும்.. அதை முழுநாளும் கிடைக்கும் உணவைப் போல இவன் ஊர் முழுக்கப் பரப்பிக் கொண்டிருப்பான்..
அப்படி உணவுக்காக அடுத்தவரின் கையை எதிர்பார்க்காமல் தன் கையே தனக்கு உதவி என்று உருளைக்கிழங்கு கூட்டைத் தயாரித்து இறக்கிய ஆனந்தனின் கை மணம் நாசியைத் துளைத்ததில் ஆற்றாற்றுப் போனான் சுகுமாறன்..
அடுத்து எண்ணைச்சட்டி அடுப்பில் ஏறியது.. பிசைந்து வைத்திருந்த மாவு சப்பாத்திக்கானது இல்லை.. பூரிக்கானது என்பதில் சுகுமாறனின் வயிறு பசித்தது.. நாவில் எச்சில் ஊறியது..
“பூரியாடா போடப் போற..?”
“ஆமாண்டா.. இன்னைக்கு உன் மாமா வீட்டு விருந்தைத் தியாகம் பண்ணிட்டு எனக்குக் கம்பெனி கொடு..”
சுகுமாறனுக்கும் பூரிகிழங்கு கிடைக்கும் என்பதை உறுதி படுத்தினான் ஆனந்தன்.. ஆஹா என்று மகிழ்ந்து போனான் சுகுமாறன்..
“இப்படி டேஸ்டான பூரி கிடைச்சா மாமன் வீட்டுப் பக்கம் தலை வைத்துக் கூடப் பாக்க மாட்டேனே..”
இவன் மூன்று வேளை உணவையும் உறுதிப் படுத்திக் கொள்ள முனைய..
“அதுக்கென்னடா.. நீ வெங்காயத்தை உரிச்சுக் காய் நறுக்கிக் கொடுத்தா நான் பூரிக்கு மாவு பிசைஞ்சுட்டுப் போறேன்.. நீ பூரி மாவை உருட்டிக் கொடுத்தா எண்ணையில போட்டு எடுத்துக் கொடுத்துட்டுப் போறேன்.. எனக்கும் சமையல் செய்ய ஒத்தாசைக்கு ஆள் கிடைக்கும்ல்ல..” என்று சமையல் வேலையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறிப்பாக சுட்டிக் காட்டி விட்டான் ஆனந்தன்.
“செய்துட்டாப் போச்சு..” உற்சாகமானான் சுகுமாறன்..
பூரிகளைப் போட்டு எடுத்து இரண்டு தட்டுகளிலும் நிரப்பி ஓரமாக உருளைக்கிழங்கு கூட்டைப் பரிமாறி அங்கே கிடந்த டைனிங் டேபிளில் வைத்து விட்டு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தான் ஆனந்தன்..
“வாடா சாப்பிடலாம்..”
“வந்துட்டாப் போச்சு..”
அதி வேகத்தில் நாற்காலியில் உட்கார்ந்த சுகுமாறன் அதைவிட வேகமாக பூரி கிழங்கை காலி செய்தான்..
‘செம பசியில இருந்திருக்கான்..’ ஆனந்தனின் மனம் இளகியது.. வீட்டைச் சுற்றிப் பார்வையைச் சுழல விட்டவன்..
“அழகான, வசதியான வீடு.. புதுசா ஒரு வீட்டுக்கு குடி வந்திருக்கிற ஃபீலிங்கே இல்லை.. கேசுவலா காபி, டிபன்னு வேலையை ஆரம்பிக்க முடியுது.. இதைப் போய் ‘பேய் வீடு’ன்னு பேர் கட்டறயே… உனக்கு மனச்சாட்சி இருக்கா..?” என்று சுகுமாறனை கடிந்து கொண்டான்..
“உனக்குத் தெரியாதுடா ஆனந்தா.. இந்த ஹாலில கட்டிலைப் போட்டுப் படுத்திருந்த பாட்டி ஒன்னு தூக்கத்திலேயே மண்டையைப் போட்டிருச்சாம்..”
“அதுக்கு..? பேய் உலாவற வீடுன்னு சொல்லுவியா..? பாவம்.. வயசானவங்க.. இயற்கையான முறையில உயிரை விட்டிருக்காங்க.. அவங்க சாமியோட சேர்த்திடா.. இனிமேலும் இப்படிப் பினாத்தாதே.. அது தப்பு..”
ஆனந்தனின் அதட்டலில் வாயை மூடிக் கொண்டான் சுகுமாறன்.. ஆனந்தனால் மட்டும் எப்படி இப்படித் தெளிவாக சிந்திக்க முடிகிறது என்ற ஆச்சரியம் அவனுக்குள் வந்தது.
Reviews — Anantha Geetham / ஆனந்த கீதம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.