Chapter 18

0Shares

“என்ன சார்.. கோவிலுக்கு கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கீங்க..?”

அலுவலகம் முடிந்தவுடன் வழக்கம் போல ஆனந்தனுடன் ஜோடி போட்டுக் கொண்டு சைக்கிளை உருட்டியபடி வீட்டுக்குச் சென்று.. பால்கார கோனார் வந்தவுடன் அவனுடன் கொஞ்சம் வம்பிழுத்து, வாய் வளர்த்து ஒருவழியாக அவனை ஓட வைத்து விட்டு ஆனந்தன் போட்டுக் கொடுத்த கள்ளிச்சொட்டுக் காபியை சொட்டு மீதமில்லாம காலி செய்து விட்டு தன் வீட்டுக்குக் கிளம்பப் போனவனை..

“இருப்பா.. மெதுவாப் போகலாம்..” என்று நிறுத்தி வைத்து விட்டுக் குளித்து உடை மாற்றி வந்தான் ஆனந்தன்..

வேட்டி சட்டையில் சாத்வீகமாக வந்தவனைப் பார்த்து அயர்ந்து போன அன்பழகன்..

“என்னாச்சு சார் உங்களுக்கு..” என்று கவலைப்பட்டுப் போனான்.. 

“ஒன்னும் ஆகலை.. வா.. போகலாம்..”

ஆனந்தன் வீட்டைப் பூட்டிக் கொண்டு தெருவில் இறங்கி நடந்ததும் எங்கேயோ ஊர் சுற்றத்தான் அழைத்துக் கொண்டு போகிறான் என்ற நினைவில் உடன்பிறப்பான சைக்கிளை உருட்டியபடி ஊர்க் கதைகளை அள்ளி விட்டபடி கூட நடந்த அன்பழகன் எங்கே போகிறோம் என்பதைக் கவனிக்கவில்லை..

“ஓம்.. நமச்சிவாய.. சிவாய.. நம ஓம்..”

பக்திப் பரவசமான ஒலிபெருக்கியின் உச்சரிப்பில் எங்கே வந்திருக்கிறோம் என்று நிமிர்ந்து பார்த்தால் எதிரே சிவன் கோவில் இருந்தது..

அன்பழகன் ஊர் சுற்ற என்றால் முதல் ஆளாக நிற்பான்.. கோவில் என்றால் ஒரு காத தூரத்திற்கு ஓடி விடுவான்.. அதனால் சொல்லாமலே அவனைக் கோவிலுக்குத் தள்ளிக் கொண்டு வந்து விட்டான் ஆனந்தன்..

“என்ன சார்.. கோவிலுக்கு கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கீங்க..?”

“இன்னைக்கு என்ன கிழமை அன்பு..?”

“வெள்ளிக்கிழமை சார்..”

“அதான்.. கோவிலுக்கு வந்திருக்கோம்..”

“இது நாயமே இல்லை சார்.. ஒரு மனுசனாப்பட்டவனுக்கு தான் எங்கே போகிறோம்ன்னு தெரிஞ்சுக்கக் கூட உரிமை யில்லையா..?”

“அதான்.. இப்பத் தெரிஞ்சுக்கிட்ட இல்ல..? அப்புறம் என்ன..?”

“நான் கோவில் பக்கமே வாரதில்ல சார்..”

“ஏன் வர்றதில்ல..? மந்திரமாவதும் திருநீறு..! புரிஞ்சுக்க..”

“என்னத்தைப் புரிஞ்சுக்கிட்டு..”

ராகம் போட்டபடி சைக்கிளை கோவிலுக்கு வெளியே நிறுத்தி பூட்டிச் சாவியை எடுத்துக் கொண்ட அன்பழகன் பக்கத்திலிருந்த பூக்காரம்மாவிடம்..

“சைக்கிளைப் பார்த்துக்கம்மா..” என்று சொல்லி வைத்தான்..

“உன் ராயல் என்ஃபீல்டை யாரும் கைப்பத்திக்கிட்டுப் போக மாட்டாங்க.. வா.. வா..” என்றான் ஆனந்தன்..

அன்பழகனுக்கு சோரம் வந்து விட்டது..

“என்னோடது ஓட்டை சைக்கிளாவே இருக்கட்டும் சார்.. அதையாவது நான் வைச்சிருக்கேனா இல்லையா..? போஸ்ட் மாஸ்டரா இருந்து என்ன பிரயோசனம்..? அங்கே ஓட்டை சைக்கிளுக்குக் கூட வழியைக் காணோமே..” என்று சண்டைக்கு கிளம்பினான்..

“நடக்கிறதில இருக்கிற சுகம்.. டூ வீலரில கிடைச்சிருமா அன்பு..?”

“இப்படியே சொல்லிக்கிட்டு இருங்க.. சுகுமாறன் வாத்தியாரப் பாருங்க.. எம்மாம் பெரிசா வண்டி வைச்சிருக்கார்..!”

“அவனுக்கென்னப்பா.. பெரிய இடத்துக்கு மாப்பிள்ளை யாகப் போறான்..”

“அப்படியா சார்.. இருங்க.. இதை இப்படியே நீங்க சொன்னதாச் சொல்லி கீதாம்மா காதுல போட்டு வைக்கிறேன்..”

“ஏன்ப்பா இந்த காண்டு..?”

பேச்சு வாக்கில் இருந்தவனைக் கோவிலுக்குள் இழுத்துக் கொண்டு நடந்தான் ஆனந்தன்.. மாலை நேரத்துக் கோவிலின் பிரகாரம் மனதுக்கு அமைதியைத் தருவதாக இருந்தது..

“நல்லா இருக்கே சார்..” அன்பழகன் வியந்து போனான்..

“அதுக்குத்தான் சொன்னேன்.. கோவிலுக்கு வந்து பாருன்னு..”

ஈஸ்வரனின் சன்னதியில் மிதமான கூட்டம் இருந்தது.. பெண்கள் பகுதியில் பட்டும், வைரமுமாக பெரிய வீட்டுக் களையுடன் மங்களகரமான தோற்றத்துடன் இருந்த பெண்மணி அன்பழகனைப் பார்த்து புன்னகைத்தாள்..

“வணக்கம்மா..” மரியாதையுடன் சொன்னான் அன்பழகன்..

“ஆண்டவன் சன்னதியிலே அவருக்குத்தான் வணக்கம் சொல்லனும்.. மனுசங்களுக்குச் சொல்லக் கூடாது..” என்றாள் அந்தப் பெண்மணி..

ஆனந்தனை அவள் பார்த்த பார்வை அறிமுகமான மனிதரைப் பார்க்கும் பார்வையாக இருந்ததில் இந்தப் பெண்மணியை எங்கே பார்த்தோம் என்று யோசித்துக் குழம்பிப் போனான் அவன்..

அன்பழகனிடம் கேட்கலாம் என்றால் அது ஈசனின் சன்னிதானமாக இருந்தது.. அன்பழகன் வெங்கலத் தொண்டையில் பதில் சொல்லி விட்டால் நன்றாக இருக்காது.. அதனால் அப்புறமாக அன்பழகனிடம் விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம் என்று தள்ளி வைத்து விட்டு.. தீபாதரனை ஒளியில் தெரிந்த ஈசனை ஆவலுடன் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டான்..

“எங்கப்பன் சிவனைப் பத்தி யாராச்சும் பாட்டுப் பாடுங்க..”

அர்ச்சகர் கூறினார்.. குழுமியிருந்தவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி பேசாமல் இருக்க.. ஆனந்தன் கணீரென்ற குரலில் பாட ஆரம்பித்தான்..

“தீன கருணாகரனே நடராஜா..!

தில்லைநாதனே..!”

சுருதி சுத்தமான அவனது பாடலில் குழுமியிருந்தவர்கள் மௌன வியப்புடன் ஆழ்ந்து கேட்க ஆரம்பித்தார்கள்..

“பஞ்ச பூத தலங்கள் கொண்டாய்..

பாருக்கெல்லாம் காவல் நின்றாய்..

கைலாயத்தில் குடி கொண்டாய்..

நீல கண்டனே..!”

அர்ச்சகரின் முகத்தில் பக்திப் பரவசகம்.. ஆனந்தனின் பாடல் சிவனின் ஆலயத்தில் காற்றோடு கலந்து ஆகாய மார்க்கமாக பயணிப்பதைப் போல உணர்ந்தான் அன்பழகன்.. அவனறிந்த ஆனந்தனா இவன் என்ற பிரமிப்பு அவன் முகத்தில் தெரிந்தது..

“பிறை நிலாவைத் தலையில் சூடினாய்..!

பிள்ளையாரின் தந்தையாய் சாடினாய்..

முருகனை நெற்றிக் கண்ணில் படைத்தாய்..

நமச் சிவாயனே..!”

பெண்களின் வரிசையில் நின்றிருந்த பெரிய வீட்டம்மாள் பக்திப் பிழம்பாய் மாறிப் போயிருந்தாள்.. நெற்றியில் திருநீறிட்டு.. வேட்டி சட்டையுடன் பாந்தமாக கை குவித்து இமைகளை மூடி உருகிப் பாடும் ஆனந்தனையே இமைக்காமல் பார்த்தாள்..

“சடைமுடியில் கங்கையை வைத்தாய்..

        உடலில் பாதியை உமையவளுக்குக் கொடுத்தாய்..

அம்மையோடு அப்பனும் ஆனாய்..

சொக்க நாதனே..!

தீன கருணாகரனே நடராஜா..!

தில்லை நாதனே..!”

பாடி முடித்து இமைகளைத் திறந்து பரவசப் பட்டுப் போன ஆனந்தனுக்கு தீபாதரனை ஒளியில் புன்னகையோடு காட்சி தந்து அருள் பாலித்தார் ஈஸ்வரன்.. அம்பாளின் சன்னதிக்குக் சென்று உமையவளை வணங்கி விட்டு, நவக்கிரகங்களைச் சுற்றி விட்டு பிரகாரத்தை வலம் வந்தார்கள்..

“ஏன் சார் கோவிலுக்கு வந்தா இம்புட்டெல்லாம் செய்யனுமா..?” முட்டியைத் தடவியபடி கேட்டான் அன்பழகன்..

“ஏம்ப்பா.. கால் வலிக்குதா..?”

“வலிக்காதா சார்.. என்னவோ கிரௌவுண்டைச் சுத்தி ஓட விடறதைப் போலயில்ல நடக்க வைச்சுக்கிட்டு இருக்கீங்க..”

“அவ்வளவுதாம்ப்பா.. உக்காந்து எழுந்ததும் வீட்டுக்குப் போயிரலாம்..”

“நிஜமாத்தான் சொல்றீங்களா..? வார்த்தை மாற மாட்டிங்களே..?”

“அட..! என்னாச்சுப்பா உனக்கு..? இதுக்குப் போயி இம்புட்டுக் கேள்வி கேட்கற..?”

“உங்களை நம்ப முடியாது சார்.. வாப்பா ஊரைச் சுத்தலாம்ன்னு சொல்லிக் கோவிலுக்கு கூப்பிட்டுக்கிட்டு வந்த ஆளுதானே நீங்க..?”

“கோவிலுக்கு வந்தா புண்ணியம் கிடைக்கும்ப்பா.. உட்காரு..”

அவர்கள் பிரகாரத்தின் தூணில் சாய்ந்து உட்கார்ந்தார்கள்.. கோவில் கோபுரத்தை அண்ணாந்து பார்த்த அன்பழகன்..

“இதுவும் கூட நல்லாத்தான் இருக்கு சார்..” என்று லயிப்புடன் சொன்னான்..

ஆனந்தன் எது என்று கேட்காமல் புன்னகைத்தான்.. சில ஆழ்ந்த உணர்வுகளை சொல்லால் உணர்த்த வேண்டிய தேவையில்லை..

“இத்தனை நாளா இதையெல்லாம் கண்டுக்காம இருந்திருக்கேன் பாருங்க.. என்னை என்னான்னு சொல்றது..?”

“இனிக் கண்டுக்க..”

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அந்த பெரிய வீட்டம்மாள் அங்கே வந்தாள்.. சற்றுத் தள்ளி பிரகாரத்தில் அமர்ந்தவள் ஆனந்தனைப் பார்த்து வாத்சல்யத்துடன் சிரித்து..

“அருமையாப் பாடினீங்க தம்பி.. மனசில பக்தி இருந்தாத்தான் லயிச்சுப் பாட வரும்.. உங்ககிட்ட அந்த பக்தி இருக்குது.. இந்த சின்ன வயசில கடவுள் பக்தியோட இருக்கிறவங்களை பார்க்கிறது அபூர்வம் தம்பி.. மனசுக்கு நிறைவா இருக்கு..” என்றாள்..

ஆனந்தனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.. பொதுப் படையாக சிரித்து வைத்தான்.. அந்தப் பெண்மணி கையிலிருந்த பூஜைக்கூடையிலிருந்த தேங்காய் வாழைப் பழங்களை அன்பழகனிடம் நீட்டினாள்.. அவசரமாக அதை வாங்கிக் கொண்டான் அன்பழகன்..

“வர்றேன் தம்பி..” அந்தப் பெண்மணி போய்விட்டாள்..

“இப்படியா பறக்கா வெட்டியைப் போல வாங்குவ..?” ஆனந்தன் திட்டினான்..

“அடப்போங்க சார்.. மதியம் சாப்பிட்ட சாப்பாடு எப்பவோ செரிச்சுப் போயிருச்சு.. நீங்க கொடுத்த காபி எவ்வளவு நேரத்துக்குத் தாக்குப் பிடிக்கும்..? புண்ணியவதி.. பசிச்ச வயித்துக்கு பிரசாதத்தக் கொடுத்துட்டுப் போயிருக்காங்க.. அதைச் சொல்ல வந்துட்டிங்களே..”

“அது சரிப்பா.. அந்த புண்ணியவதி யாரு..?”

“நிசமாகவே உங்களுக்குத் தெரியாதா..?”

ஆச்சரியப்பட்டுப் போனான் அன்பழகன்.. இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்று புரியாமல் விழித்தான் ஆனந்தன்..

0Shares

Reviews — Anantha Geetham / ஆனந்த கீதம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link