Chapter 21
“ஏன் என்னை வெறுக்கறீங்க..?”
விசும்பியபடி கேட்ட கீதாவின் கேள்வியில் அவனுக்கு துக்கம் கலந்த சிரிப்பத்தான் வந்தது..
அவன் கீதாவை வெறுக்கிறானா..?
“அப்படின்னு யார் சொன்னது..?”
“யாரும் சொல்லனுமா என்ன..? அதான் உள்ளங்கை நெல்லிக்கனியப் போல உங்க மனசு தெரியுதே.. என்னைக் கண்டாலே விலகி நடக்கறிங்க.. பேசறதில்ல.. இதுக்கு அர்த்தம் என்னவாம்..?”
இவள்தான் எத்தனை நுணுக்கமாக அவனை கவனித்து வைத்திருக்கிறாள் என்று வியந்து போனான் அவன்..
“இதைவிட அதிகமாவே கவனிச்சு வைச்சிருக்கேன்.. அங்கேதான் என்னைப் பத்தின எண்ணமில்லை..” குற்றம் சொன்னாள் அவள்..
ஆனந்தன் பெருமூச்சு விட்டான்.. அவளைப் பற்றி அவன் எண்ணுவதில்லை என்பது என்னவோ உண்மைதான் என்றாலும் அவனது இதயத்தில் ஓர் ஓரமாக அவளைப் பற்றிய எண்ணங்களும், நினைவலைகளும் மண்டிக்கிடப்பது உண்மைதானே..
அதை அவள் அறிவாளா..? இல்லை.. அவள் அறியும்படி அவனால் சொல்லத்தான் முடியுமா..?
இயலாமையுடன் அவளை விலக்க யத்தனித்தான்.. அவள் விலக மறுத்து அவன் உடலோடு ஒட்டிக் கொண்டாள்..
என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறிப் போனான் ஆனந்தன்.. உடலோடு உடலாக ஒட்டி நிற்பவளை விட்டுப் பிரிக்கவும் அவனுக்கு மனம் வந்து தொலைக்கவில்லை.. அதே சமயத்தில் அந்த நிலையை நீடித்தால் அவனையும் அறியாமல் அவனுடைய கட்டுப்பாடுகள் தகர்ந்து அவளுடன் சங்கமித்து விடுவானோ என்றும் அஞ்சினான்..
எப்படி அவளை விலக்குவது..
“கீதா..” மிருதுவாக அழைத்தான்.
“ம்ம்ம்..” அவனை இறுக்கியபடி இமைதிறக்காமல் முணுமுணுத்தாள் கீதா..
“எனக்கு உன்னைத் தெரிவதற்கு முன்னால் சுகுமாறைத் தெரியும்..”
அவன் சொல்லி விட்டான்.. இமைமூடி அவன் மீது புதைந்திருந்தவளிடம் ஓர் அதிர்வு வந்ததை அவனது உடல் உணர்ந்தது.. இமை திறந்தவள் அண்ணாந்து அவன் முகம் பார்த்தாள்.
“புரியலை.. இப்ப சுகுமாறனைப் பத்தி எதுக்குப் பேசனும்..?”
“பேசியாகனும் கீதா.. அவனும் நானும் ஸ்கூலில இருந்து காலேஜ் வரைக்கும் ஒன்னாப் படிச்சவங்க..”
“அப்படிப்பட்ட நெருங்கின நண்பர்தான் உங்களை நான் தோட்டக்காரன்னு நினைச்சப்ப இல்லேன்னு சொல்லாம ஆமாம்ங்கிறதைப் போல நின்னாராக்கும்..?”
கீதா சுட்டிக்காட்டிய நிகழ்வில் சங்கடம் கொண்டான் ஆனந்தன்.. சுகுமாறனின் பொடித்தனத்தால் எப்படியெல்லாம் கேலிக்கு ஆளாக வேண்டியிருக்கிறது..?
“அவன் குணம் அப்படி..?”
“அதைக் காட்டிக் கொடுக்காத உங்க குணத்தைத்தான் எனக்குப் பிடிக்குது..”
“இல்லை கீதா.. அவன் ஒன்றும் கெட்டவனில்லை..”
சுகுமாறனைத் தங்கிப் பேசினான் ஆனந்தன்.. அவன் பேசித்தான் ஆக வேண்டும்.. கீதாவின் மனதில் சுகுமாறனைப் பற்றிய நல் அபிப்ராயத்தை உருவாக்கித்தான் ஆக வேண்டும்.. இல்லாவிட்டால் சுகுமாறனின் காதலியைத் தட்டிப் பறித்து விட்ட பாவத்திற்கு அவன் ஆளாகி விடுவான்..
“நல்லவரும் இல்லை..”
“சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் ஒரு மனிதனை நல்லவனா இல்லை கெட்டவனான்னு தீர்மானிக்குது கீதா..”
“ஓஹோ..”
“சுகுமாறனுக்கு ஓரேயொரு ஆசைதான்..”
“அப்படின்னு நீங்க நினைச்சுக்கிட்டு இருக்கறீங்க.. அவருக்கு ஊருப்பட்ட ஆசை இருக்கு..”
‘எனக்குத் தெரியாதா..?’ என்று நினைத்துக் கொண்டான் ஆனந்தன்..
நினைப்பதை எல்லாம் வெளியில் சொல்லிவிட முடியுமா..? இல்லை.. நினைக்காமல்தான் இருக்க முடியுமா..?
“அவன் உன்மேல உயிரையே வைச்சிருக்கான் கீதா..”
கை வளைவில் காதலியை வைத்துக் கொண்டு.. இறுக்கி அணைத்துக் கொண்டிருப்பவளின் காதோரமாக ரகசியக் குரலில் இப்படியாகப்பட்ட வார்த்தைகளைப் பேச வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு ஆளாகி விட்டதில் துயரப்பட்டுப் போனான் ஆனந்தன்.
“என்னது..?”
கீதா விலகி விட்டாள்.. அவளை விலக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஆனந்தனால் அவள் விலகியதில் மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை.. வைரத்தை பறி கொடுத்த வறியவனாக அவன் துக்கம் கொண்டு நின்றான்..
“என்னை மன்னிச்சிரு கீதா.. அவன் என்னிடம் சொன்னதைத்தான் உன்னிடம் சொல்றேன்..”
“அவர் சொன்னா.. அதை நீங்க கேட்டுக்குவீங்களா..? என் மனசில என்ன இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா..?”
“இந்த ஊருக்கு நான் வந்தப்ப இருக்க இடம் கிடைக்காம ஆபிஸில் தங்கிரலாம்ன்னு முடிவுக்கு வந்திருந்தேன்.. அவன்தான் இந்த வீட்டில அவனோட தங்கிக்கலாம்ன்னு கூப்பிட்டுக்கிட்டு வந்தான்.. அப்படி வரப் போய்தான் என்னை நீ பார்த்த.. இல்லேன்னா நீயாரோ.. நான் யாரோ..”
“அதுக்கு..?”
“ரெண்டு வருசமா உன்னையே நினைச்சுக்கிட்டு இருந்திருக்கான்.. உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிற கனவில வேற ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கிக்காம இந்த ஊரிலேயே காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கான்.. அதையும் நீ நினைச்சப் பார்க்கனும்..”
“என் மனசில அவரைப் பத்தின எந்த எண்ணமும் இல்லை.. அவரைப் போல ஒரு பிரகிருதியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா மூச்சு முட்டிப் போய் சேர்ந்திருவேன்..”
“சீச்சி.. என்ன பேச்சுப் பேசற..?”
ஆனந்தனின் அதட்டலில் சுகமான இன்பம் வந்தது கீதாவுக்கு.. அவனது உரிமையான அதட்டல் அவளைத் தாலாட்டியது.. அதன் இதத்தில் அவள் முக்குளித்து எழுந்தாள்..
“இதுக்குத்தானே ஆசைப்பட்டிங்க ஆனந்தனே..?”
அவளின் கோபமான கேலியில் உதட்டைக் கடித்துக் கொண்டான் ஆனந்தன்.. அவளது கோபமான கேலியிலும் ஒரு நியாயம் இருக்கிறதே..
“அவனை விடு..”
“ஆஹா..! இதைச் சொல்றது நீங்கதானா..?”
“என்னைப் பத்தி நினைச்சுப் பாரு..”
“அதைத்தானே நானும் சொல்லிக்கிட்டு இருக்கேன்.. தினமும் உங்களை நினைச்சுப் பார்த்துக்கிட்டுத் தானே இருக்கேன்..? உங்களைக் காதலிக்கிறேங்க.. உங்களை மட்டும்தான் காதலிக்கிறேன்.”
கீதா மறுபடியும் அவன் மார்பில் சாய்ந்து விட்டாள்.. தேவதை வரம் கொடுத்து விட்டாள்.. துரதிர்ஷ்டசாலியான அவனால்தான் அந்த வரத்தைக் கொண்டு வாழ முடியவில்லை.. சுகுமாறனுக்குக் கொடுத்திருந்த வாக்கு அவனைக் கட்டிப் போட்டிருந்தது..
“இல்லை கீதா..” மனதை திடப்படுத்திக்கொண்டு அவளை விலக்கி நிறுத்தினான்.. அவள் முகம் பார்க்காமல் நிலவைப் பார்த்தபடி பேசினான்..
“இந்த வீட்டுக்கு வந்த முதல் நாளிலேயே தன் மனதைச் சொல்லி வாக்குக் கேட்டான் சுகுமாறன்..” அவனது குரல் பிசிறியது.
“என்ன..?” பதறினாள் கீதா..
“ம்ம்ம்.. இந்த வீட்டில நான் பெட்டிய வைச்ச மறுநிமிசமே அவன் ரெண்டு கண்டிசன் போட்டான்.. முதலாவது நான் மாடிப் பக்கம் வரக்கூடாது..”
“ஏன்னா அவன் கோட்டானைப் போல முழிச்சுக்கிட்டு பால்கனியிலே நின்னு எங்க வீட்டையே பார்த்துக்கிட்டு இருப்பான்.. அவனுக்குத் தெரியாம இருட்டுக்குள்ள நான் உக்காந்திருப்பேன்..”
அவன் இதைத்தான் செய்து தொலைப்பான் என்பதை புரிந்து வைத்திருந்த ஆனந்தன் கையாலாகாத கோபத்துடன் பல்லைக் கடித்தான்..
“இரண்டாவது கண்டிசன் உன்னுடன் பேசக் கூடாதுங்கிறது.. நீயா பேச வந்தாலும் நான் விலகிப் போயிரனும்..”
“ஓ…”
அர்த்தத்துடன் உதடுகளைக் குவித்து ‘ஓ’ போட்டாள் கீதா.. அந்த ‘ஓ’ வைக் கேட்பதற்கு பதில் பூமிக்குள் புதைந்து போய் விடலாம் என்று காயப் பட்டுப் போனான் ஆனந்தன்.
“அதனாலதான் ஐயா என்னைக் கண்டா எட்டடி தூரத்துக்குத் தள்ளித் துள்ளிக் குதிச்சு ஓடினீங்களா..?”
“ம்ம்ம்..”
நிலா வெளிச்சம் மறைத்த மரத்தின் இருள் படர்ந்த நிழலில் ஒரு ரோமானியச் சிற்பம் போல அவளது மனதை மயக்கிக் கவர்ந்து இழுத்தவனின் முகத்தை ஆழ்ந்து பார்த்தாள் கீதா.. அதில் தெரிந்த துயரத்தில் அவள் மனம் வலித்தது..
‘இவன் நல்லவன்.. இந்த நல்ல குணத்தை வைத்து காய் நகர்த்தி பகடை விளையாடறான் அந்த சுகுமாறன்.. நண்பனை வேணும்னா அவன் பகடைக்காயாக்கலாம்.. என்னை ஆக்க முடியாது..’
“எப்படின்னு தெரியலை கீதா.. என்னையறியாம வாக்குக் கொடுத்திட்டேன்.. ஏன் அந்த வாக்கைக் கொடுத்தேன்னு இப்ப மறுகறேன்..”
“எப்படியோ நொந்து நூலாகுங்க.. அது உங்க தலைவிதி..! உங்களைக் காதலிச்சுத் தொலைச்ச பாவத்துக்கு வாழ்க்கையில் ஒன்னு சேர முடியாம தவியா தவிச்சு நான் செத்து ஒழியறேன்.. அது என் தலைவிதி..! உங்களைக் சொல்லிக் குத்தமில்லை.. அவனோட காலமும் நேரமும் நல்லாயிருக்கு.. என்னோட காலமும் நேரமும் என்னைப் பழிவாங்கி என் வாழ்க்கையை வாழ விடாம செய்யுது..”
விருட்டென்று அவள் போய் விட்டாள்.. ஆனந்தன் சிலை போல அசையாமல் நின்றான்.
Reviews — Anantha Geetham / ஆனந்த கீதம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.