Chapter 24

0Shares

கூட்டத்தில் விசில்கள் தூள் பறந்தன..

“ஏ.. சிங்கம் போலே நடந்து வற்றான்..

செல்லப் பேராண்டி..! -அவனை

 சீண்டியவன் தாங்க மாட்டான்

உதையில தாண்டி..

ஏ. டில்லா டாங்கு டாங்கு

சும்மா திருப்பிப் போட்டு வாங்கு

ஏ.. சிய்யான் சிய்யான் சிலுக்கு

இவனை புத்தூருக்கு அனுப்பு..”

அன்பழகனின் பாட்டியின் பாடலுக்கு கரகாட்டக் குழுவினர்கள் மேளம் கொட்டி, நாதஸ்வரம் ஊதி ஆட ஆரம்பித்ததில் ஆனந்தனுக்கு உற்சாகம் ஏற்பட்டது.. அவன் சுற்றிய சிலம்பம் எதிரியை பின்னடைய வைத்தது..

“ஏ… புலியைப் போல

துணிஞ்சவண்டா எங்க பேராண்டி..

உங்களை பஞ்சு மிட்டாய் போலே

பிச்சு வீசப் போறாண்டி..

ஏ.. டில்லா டாங்கு டாங்கு..

சும்மா திருப்பிப் போட்டு வாங்கு..

ஏ.. இந்தா.. ஏ.. இந்தா.. ஏ.. இந்தா இந்தா இந்தா..”

இப்போது கரகாட்டக் குழுவினருடன் அரச பட்டினத்தின் இளைஞர்குழாம் சேர்ந்து கொண்டது.. ஆனந்தனின் சிலம்பம் சூறாவளிக் காற்றைப் போல சுழன்று ஆடியது.. எதிராளி மிரண்டான்..

“ஏ.. சூறாவளிக் காத்தைப் போல

சுழன்று வாராண்டி..

அவனை எதுத்து நின்ன சிலம்பக்காரன்

மிரண்டு போறாண்டி..

எ.. டில்லா டாங்கு டாங்கு

சும்மா திருப்பிப் போட்டு வாங்கு..

ஏ.. கோவில்பட்டி முறுக்கு

சும்மா குனிய வைச்சு முறுக்குடா.. டேய்..”

ஆனந்தனின் சிலம்பம் சுழன்று எதிராளியின் சிலம்பக் குச்சியை பறக்க வைத்தது.. கூட்டம் வேலியை உடைத்துக் கொண்டு மைதானத்துக்குள் பாய்ந்தது.. ஆனந்தனைத் தோள்களில் தூக்கிக் கொண்டு கூத்தாடியது.. நிரஞ்சன் கூட்டத்தின் முன்னிலையில் நண்பர்களுடன் ஆடினான்..

“ஏ.. ஜல்லிக்கட்டுக் காளையைப் போல

துள்ளி வர்றாண்டி..

எதிரியை பனைமரமா பிடுங்கி

இப்ப வீசி விட்டாண்டி..

ஏ.. கும்தலக்கடி கும்மா..

எங்க ஆனந்தன்னா சும்மாவா..?”

அன்பழகனின் பாட்டி ஆரத்தியுடன் பாடியபடி வந்தாள்.. வெற்றி வீரனாக மேடையேறியவனை வாத்சல்யத்துடன் தழுவிக் கொண்டார் நீலகண்டன்.. மைதானத்தில் தோற்று நின்றவன் சப்தமிட்டான்..

“இப்பவும் ஜெயிச்சிருக்கவன் அரசபட்டினத்துக் காரனில்ல பண்ணையாரே..”

நீலகண்டனின் முகம் இறுகியது.. மைக்கைப் பிடித்தவரின் சப்தம் எட்டுத் திசைகளிலும் எதிரொலித்தது..

“எல்லோரும் நல்லாக் கேட்டுக்கங்க.. இந்த அரசபட்டினத் தோட மானம் மரியாதையைக் காப்பாத்தினவன் அரசபட்டினத்துக் காரன்தான்.. என் பெண்ணை அவருக்குக் கட்டிக் கொடுத்து என் மருமகனாக்கிக்கறேன்.. இப்பச் சொல்லுங்க.. ஜெயிச்சது யாரு..?”

கூடியிருந்த கூட்டம் “அரசபட்டினத்துக்காரன்தான்..” என்று குரல் கொடுத்தது..

தன் கழுத்திலிருந்த முகப்பு வைத்தச் சங்கிலியைக் கழற்றி மருமகனாக்குவதற்கான உறுதி மொழியாக ஆனந்தனின் கழுத்தில் போட்டு விட்டார் நீலகண்டன்.. பார்வதியம்மாள் மகிழ்ந்து போனாள்.. நிரஞ்சனோ அத்தான் என்று ஆனந்தக் கூத்தாடி விட்டான்.. கீதாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்..

‘என்னை விட்டு ஓடிப் போக முடியுமா..?’ என்று அவள் விழிகள் சவால் விட்டன..

“அடிச்சீங்க சார்.. லக்கி பிரைஸ்..” அன்பழகன் பாராட்டினான்..

ஆனந்தன் எதையும் பேசவில்லை.. திருவிழா முடிந்தது.. வந்திருந்த உறவினர் ஒவ்வொருவராக விடைபெற்று அவரவரின் ஊருக்குத் திரும்பி விட.. அரசபட்டினம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியது.. ஆனந்தன் அலுவலகத்தில் மும்முரமாக கணக்கு வழக்குகளை சரி செய்தான்.. ஏனென்று கேட்ட அன்பழகனிடம் மழுப்பினான்..

அந்த வார இறுதியில் அலுவலகம் முடிந்ததும் வழக்கம் போலக் கூடவந்த அன்பழகனிடம்..

“தலை வலிக்குது அன்பு.. ரெஸ்ட் எடுக்கனும்.. நீ வீட்டுக்குப் போ..” என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டான்..

அவன் முகத்தை உற்றுப் பார்த்த அன்பழகன் என்ன நினைத்தானோ.. வழக்கடிக்காமல் போய் விட்டான்.. வீட்டுக்கு வந்த ஆனந்தன் வீட்டை ஓர்முறை சுற்றிப் பார்த்துவிட்டு பெருமூச்சுடன் பெட்டியை எடுத்துத் தன் துணிகளை அடுக்க ஆரம்பித்தான்.. சுகுமாறன் வீட்டில் இல்லை.. அதிசயத்திலும் அதிசயமாக அப்பா அம்மாவைப் பார்க்கப் போவதாகச் சொல்லிப் போயிருந்தான்.. பெட்டியை மூடிக் கையில் எடுத்துக் கொண்ட ஆனந்தன் வீட்டைப் பூட்டிச் சாவியைக் கையில் எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தான்.. இருள் பரவியிருந்த அந்த இரவில் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.. தெருமுனையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர், சிறுமியரில் ஒரு சிறுவனை அழைத்து வீட்டுச் சாவியை அவன் கையில் கொடுத்து..

“பண்ணையார் வீட்டில கொடுத்திருப்பா..” என்றான்..

சிறுவன் ஓடி விட்டான்.. ஆனந்தனின் முகத்தில் துயரம் கவிந்தது.. விடைபெற முடியாத சொந்தங்களை அவனுக்குத் தந்த பண்ணையாரின் வீட்டை திரும்பிப் பார்த்தான்.. கோவிலைப் பார்க்கும் உணர்வு அவனுக்குள் ஏற்பட்டது.. ஊரெல்லையைத் தாண்டிக் காத்திருந்தகாரின் பக்கத்தில் போனவனை.

“நினைச்சேன் சார்.. இப்படித்தான் எதையாச்சும் செய்து வைப்பீங்கன்னு..” என்று அன்பழகனின் குரல் தடுத்து நிறுத்தியது..

“அன்பு..”

“பஸ்ஸில போனா ஊர்க்காரனுக பார்த்துப் புடுவானுகன்னு டாக்ஸியை வரச் சொல்லித் தப்பிக்கப் பார்க்கறிங்க..?”

“எனக்கு வேற வழி இல்லை அன்பு..”

“அடப் போங்க சார்.. நீங்க வேற.. அவனவன் அவனோட வழியைத் தேடிப் போயாச்சு.. நீங்கதான் அறியாப் புள்ளையா இருந்து தொலைக்கறீங்க..”

“என்னப்பா சொல்ற..?”

“நம்ம கீதாம்மாவோட சின்னம்மா பொண்ணுக்கு வாத்திமேல ஒரு கண்ணு..”

“நிஜமாவா..?”

“நிஜம்தான் சார்.. வாத்திக்கும் இது தெரியும் போல.. இது கிடைச்சா இது.. அது கிடைச்சா அதுன்னு திருவிழாவுக்கு வந்து போகிற பொண்ணு கிட்ட நூல் விட்டுக்கிட்டு இருந்திருக்காரு..”

“அடப்பாவி..! கீதாவுக்குத் துரோகம் பண்ணினானா..?”

“உங்களை சிலம்பக் குச்சியாலேயே மண்டையில ஒரு போடு போடனும் சார்.. தேறவே மாட்டிங்களா..?”

“இல்லேப்பா.. அவன்தான் பண்ணையாரு, சத்தியம்ன்னு ஏதேதோ சொன்னான்..”

“பண்ணையாரு பணத்தில மட்டுமில்ல.. குணத்திலயும் பெரிய மனுசன்தான்.. அப்படிச் சத்தியம் பண்ணியிருந்தா.. ஊரே கூடியிருக்கிற மேடையில உங்களுக்குப் பொண்ணைக் கட்டிக் கொடுக்கப் போறதா சொல்லுவாரா..?”

“அட.. ஆமாமில்ல..”

“அதைவிட.. அதைக் கேட்டுக்கிட்டு நியாயம் கேட்காம சுகுமாறன் சார் சும்மாயிருப்பாரா..?”

“ஏன்ப்பா கேக்கலை..?”

“சத்தியம் பண்ணியிருந்தாத்தானே கேப்பாரு..?”

“இருந்தாலும் அன்பு.. என் நண்பனுக்குன்னு அவன் மனசில நினைச்சிருந்த பொண்ணை நான் தட்டிப் பறிக்க முடியாதுப்பா..”

“அவரே கெட்டி மேளம் கொட்ட நாள் பார்த்து ஊரு பூராவும் பத்திரிக்கை வைச்சுக்கிட்டு இருக்காரு.. நீங்க பினாத்தறிங்க..”

“பத்திரிக்கையா..?”

“ஆமாம் சார்.. கீதாம்மா கிடைக்காமாட்டாங்கன்னு தெரிஞ்சதும் அவங்க சின்னம்மா மகளை உஷார் பண்ணிப் பொண்ணு கேட்கிற வரைக்கும் போயிட்டாரு.. கமலாம்மா வீட்டில சம்மதமில்லதான்.. இந்தம்h கிறுக்குத்தனமா விசப் பாட்டிலை தூக்குனாங்களாம்.. போகுது கழுதைன்னு சுகுமாறன் சார் வீட்டில சம்பந்தம் பேசி முடிச்சு அடுத்த வாரம் கல்யாணத்துக்கு நாள் குறிச்சு பத்திரிக்கை அடிச்சு சுத்துப்பட்டி ஊருக்கெல்லாம் வைக்க ஆரம்பிச்சிட்டாங்க.. நாளைக்கு நம்ம ஊருக்கு பத்திரிக்கை வைக்க வரப் போகிறாராம்..”

“அன்பு.. என் வயித்தில பாலை வார்த்தப்பா..”

தோழனைக் கட்டித் தழுவிக் கொண்டான் ஆனந்தன்.. அவனைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் படுத்திய அன்பழகன் பெட்டியை பிடுங்கிக் கொண்டு அவனை வீட்டுக்கு இழுத்துக் கொண்டு வந்தான்.. வீட்டு வாசலில் கீதா நின்றிருந்தாள்.. அவளைத் தின்று விடுவதைப் போல பார்த்தான் ஆனந்தன்..

“நண்பனுக்கு வாக்குக் கொடுத்துட்டோம்ன்னு மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி பம்மிக்கிட்டு இருந்தாரும்மா.. மந்திரத்தை பத்தி விட்டாச்சு.. இப்ப கொண்டைச் சேவல் போல சிலுத்துக்கிட்டு வந்திருக்காரு.. இனி இருக்கிப் பிடிச்சுக்க வேண்டியது உங்க பொறுப்பு..”

அன்பழகன் போய் விட்டான்.. ஆனந்தனை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் கீதா.. விலகாமல் இசைந்து கொடுத்து தழுவிக் கொண்டான் ஆனந்தன்..

மதுரை மாநகரம்..! ஆனந்தனின் வீடு திருமணக் கோலம் பூண்டிருந்தது.. அன்று காலையில் திருமணம் முடிந்த ஆனந்தனுக்கும் கீதாவுக்கும் அன்றைய இரவு முதலிரவு..!

வீடு நிரம்பிய உறவுக்கார ஜனங்களுக்கு அந்த நினைவேயில்லை.. ஆனந்தனின் ஒன்று விட்ட அக்காதான் மற்றவர்களின் கண் பார்வையிலிருந்து மறைவாக கீதாவை அழைத்து வந்து ஆனந்தனின் அறையில் விட்டாள்.. அறை வாசலில் வரிசையாக ஜமுக்காளங்களை விரித்து சொந்தபந்தம் உறங்கிக் கொண்டிருந்தது..

கீதாவை நெருங்கிக் கட்டிக் கொண்டான் ஆனந்தன்.. மூச்சுக் காற்றின் சப்தம் கூட வெளியில் இருப்பவர்களை எழுப்பிவிடுமோ என பயந்தாள் கீதா..

“ஆனந்த கீதம்..! உன் கூந்தல்..

பூக்கள் தீர்க்குமே.. நாணம் தோற்குமே..

அடிக்கடி மலர்கொடி நேரம் பார்க்குமே..”

காத்திருக்க முடியாத ஆனந்தன் அவள் காதோரமாக ரகசியக் குரலில் பாடினான்.. அவள் வெளியில் இருக்கும் உறவினர்களை நினைத்து விலகினாள்.. அவன் முறைத்தான்..

“உண்மையில் என்மயில் ஆடும் முன்..

என் மழைக்காலம் போய்விடும்..

ஆசையாகி விட நேர்ந்திடும்..”

அவன் கோபத்தின் அனலில் மெழுகாய் உருகியவள் சத்தமின்றி பாடினாள்..

“ராத்திரி அலைகள் ஓயட்டும்..

மூத்தவர் தலைகள் சாயட்டும்..

தீபத்தின் விழிகள் மூடட்டும்..”

அவன் கேட்டும் ரகமாக இல்லை.. அவளது சேலை பற்றி இழுத்து அடம்பிடித்தான்..

“ஆடை கொடு.. ஆளை விடு..

தேகம் கொடு.. போதும் விடு..

தாகம் ஊறுதே..”

அவள் மேனியில் ஊறிய அவன் கைகளைப் பற்றித் தடுத்தவள்..

“வளைக்கரம் ஒலிக்கையில்

மானம் போகுதே..”

என்று எடுத்துக் சொன்னாள்.. அவன் விடவில்லை.. ஏஸி இல்லாத அறையில் அடைக்கப்பட்ட ஜன்னல்களில் அவளுக்கு வியர்த்தது..

“கன்னியின் மேனி வேர்க்குதே..

ஜன்னலின் கம்பிகள் பார்க்குதே..

பேசும் ஓசை அங்கு கேட்டுமோ..”

இப்படியொரு முதலிரவில் ஆனந்தன் என்னதான் செய்வான்..?

கீதாவின் நினைவு முழுவதும் கதவை ஒட்டிப் படுத்திருந்த உறவினரிடமே இருந்தது.. அதைத்தாண்டி ஆனந்தனிடம் வர மறுத்த அவள் நினைவை அவன் பக்கமாக இழுக்க அவன் போராட வேண்டியிருந்தது.. அவளை அவன் சத்தமின்றி ஆக்ரமித்ததில் அவள் மெல்ல மெல்ல அவனது அணைப்புக்குள் அடங்கி இசைந்து கொடுக்கலானாள்..

“திரிகளை விரல்கள் தூண்டுதே..

அனைகளை வெள்ளம் தாண்டுதே..

ஆசையின் தாகம் தீண்டுதே..”

அவனது கரகரப்பான கிசுகிசுப்பில் அவளது மேனியில் மோகம் பரவிப் படர்ந்து பற்றிக் கொண்டது..

“நாணம் வந்து போகின்றது..

தீயில் விசம் சேர்கின்றது..

கண்கள் மூடுதே..”

இமைகள் மூடச் சொக்கிப் போனவளின் மீது படர்ந்து பரவியவன்..

“அணைக்கையில் கவிக்குயில்

ஊமையானதே..”

என்று அவளை ஊமையாக்கி ஒன்ற வைத்தான்..

ஆனந்தனும் கீதாவுமாக இருந்தவர்கள்.. ஆனந்த கீதமாக அரசபட்டினத்திற்குத் திரும்பினார்கள்.. சுகுமாறன் அடைக்கலம் கொடுத்ததாக சொல்லிக் கொண்ட வீட்டை கீதாவின் பெயருக்கு மாற்றியிருந்தார் நீலகண்டன்.. உரிமையுடன் அந்த வீட்டின் மாடிப் படிகளில் கால் பதித்து ஏறி மாடியறையை அவர்களது அறையாக்கிக் கொண்டான் ஆனந்தன்.. சுகுமாறன் சொந்த ஊருக்கே மாற்றலாகிப் போய் விட்டதாகச் சொன்னான் அன்பழகன்..

“கிளிக்கு கமலாம்மாங்கிற ரெக்கை முளைச்சிருச்சு.. பறந்திருச்சு..” என்றான்..

ரசித்துச் சிரித்த ஆனந்தனுக்கு நினைத்துப் பார்த்த போது வியப்பாக இருந்தது.. அரச பட்டினத்திற்கு வந்த போது அந்த ஊரே அவனுக்கு சொந்த ஊராக மாறும் என்று நினைத்துப் பார்த்தானா..?

விதி வஞ்சனை செய்யாதது.. வாழ்க்கையின் திருப்பத்தில் பூங்கொத்தை பரிசளிக்கும் வல்லமை கொண்டது.. காத்திருந்தால் காலம் வந்து ஆனந்த கீதம் பாடி நம்மைத் தாலாட்டும்..

– சுபம் –

0Shares

Reviews — Anantha Geetham / ஆனந்த கீதம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link