Chapter 03
“இதுதான் நீங்க இறங்க வேண்டிய பிளாக்கா..?”
டிரைவருக்கு நந்தகுமாரை விட்டுப் பிரிய மனமில்லை.. நந்தகுமாருக்கு அப்படியாகப்பட்ட பிணைப்பு எதுவும் டிரைவரின் மீது ஏற்படவில்லை என்பதால், படு சுறாராக..
“இதுவேதான்..” என்றான்..
“பெட்டியை நான் கொண்டு வரேன் சார்..”
அந்தச்சாக்கில் நந்தகுமார் எந்த ஃப்ளோரில் எந்த பிளாட்டில் நுழையப் போகிறான் என்று பார்த்து விடும் ஆவல் டிரைவருக்கு.. நந்தகுமாரா அதற்கு இடம் கொடுப்பான்..?
“இந்தப் பெட்டியைத் தூக்கக்கூட எனர்ஜி இல்லாத ஆளா நான்..?” என்றபடி பெட்டியைத் கைப்பற்றிக் கொண்டு டிரைவருக்குப் பணத்தைக் கொடுத்தான்..
“வரவா சார்..?” பிரியாவிடை பெற்றான் டிரைவர்..
‘வரவே வேணாம்.. ஓடிப் போயிரு..’ என்னவோ.. காதலி காதலனைப் பிரிய மாட்டேனென்று அடம் பிடிப்பதைப் போல டிரைவர் பார்த்த ஏக்கப் பார்வையில் கடுப்பானான் நம் கதாநாயகன்.
“கிளம்பாமல் இங்கேயே நின்றா பிழைப்புக்கு என்ன வழி..? அடுத்த சவாரிக்கு கால் வந்துச்சே.. அங்கே போங்க..”
டிரைவரை விரட்டி விடாத குறையாகப் பற்றி விட்டுத் தரைத்தளத்தில் இருந்த லிப்டில் புகுந்தான்.. இரண்டாவது மாடியில் வெளிப்பட்டு பொன்னிறத்தில் பதினைந்து என்று மின்னிய பிளாட்டின் காலிங் பெல்லை அழுத்தினான்.. கதவைத் திறந்த அர்ஜூன் நேர்த்தியாக உடையணிந்து டைகட்டியிருந்தான்.. நந்தகுமாரைக் கண்டதும்..
“நந்து..”என்றான் மலர்ச்சியாக..
“வாடான்னு போன் பண்ணினவன் ஏரோடிராமுக்கு வராம பிளாட்டுக்குள்ள அடைந்துக்கிட்டு இருக்க.. நானே டாக்ஸி பிடித்து வந்து சேர்ந்தா வழியை விடாம வழியை ஏண்டா மறிச்சுக்கிட்டு நிற்கிற..?” என்றான் நந்தகுமார்..
“ஸாரிடா மச்சான்.. இப்பத்தான் கம்பெனியில இருந்து வந்தேன்.. கம் இன்..”
“கதை விடறயா..”
சுவாதீனமாக உள்ளே சென்ற நந்தகுமார் சோபாவில் சரிந்தான்.. அவனது பெட்டி தரையில் சரிந்தது.. அர்ஜூன் பெட்டியை நிமிர்த்தி, உருட்டி சுவரோரமாக நிறுத்தி விட்டு.. பிரிட்ஜைத் திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து நந்தகுமாரிடம் கொடுத்தான்.. குளிர்ந்த நீரைத் தொண்டையில் சரித்துக் கொண்ட நந்தகுமார்.. சில நிமிடங்கள் விழி மூடினான்.. காபியின் வாசம் நாசியில் ஏறக் கண்விழித்தான்..
அவனிடம் காபிக் கோப்பையை நீட்டிய அர்ஜூன், குளித்து ஜீன்ஸ், டி சர்ட்டுக்கு மாறியிருந்தான்.. நந்தகுமாரைப் பார்த்தபடி காபியை உறிஞ்சினான்..
“இப்படிப் பார்க்காதே..” சலித்துக் கொண்டான் நந்தகுமார்..
“ஏண்டா..?”
“இப்பத்தான் கால் டாக்ஸி டிரைவர் காதலாய் பார்த்து என்னைக் கடுப்பேத்தி விட்டுப் போய்ச் சேர்ந்திருக்கான்..”
“காதலாய் பார்த்தானா..? உன்னையா..? ஹா.. ஹா..”
அர்ஜூன் சிரித்து முடிக்கும்வரை காபியை உறிஞ்சியபடி சிந்தனையாக இருந்தான் நந்தகுமார்..
“உடையார் வம்சத்து ராஜா போல இவ்வளவு உக்கிரமா யோசிக்காதே.. மைசூர் தாங்காது.. எழுந்திரு.. இதுதான் என் பிளாட்..”
அர்ஜூன் கைபிடித்து எழுப்ப.. மறுக்காமல் எழுந்து நின்றான் நந்தகுமார்.. சின்னதாக இருந்தாலும் அழகாக இருந்தது அர்ஜூனின் பிளாட்.. சிறிய ஹால்.. ஹாலை ஒட்டிய பால்கனி.. அங்கு வரிசை கட்டியிருந்த பூந்தொட்டிகள்.. நவீன வசதிகளுடன் கூடிய சமையலறை.. அதை ஓட்டிய துணி துவைக்கும் அறை.. அங்கே வாஷிங் மெஷின் இருந்தது.. துணிகளை உலர்த்தக் கொடிகளும்.. நால்புறமும் கதவில்லாமல், காற்றோட்டமும், வெளிச்சமும் கொண்ட ஜன்னல்களும் இருந்தன..
ஹாலின் நடுவே எதிரும், புதிருமாக இரண்டு படுக்கையறைகள்.. ஒன்றைக் காட்டிய அர்ஜூன்..
“இது என் பெட்ரூம்.. எதிரே இருக்கிற ரூம் லேப்டாப் அண்ட் ஜிம் ரூமா இருந்தது.. இனி அது உன் ரூம்..” என்றான்..
நந்தகுமார் அறைக்குள் எட்டிப் பார்த்தான்.. கட்டிலின் மீது லேப்டாப் விரிந்திருந்தது.. ஒரு ஓரமாக நடைபயிற்சிக்கான மெஷின்.
“ஒன் செகண்டில கிளின் பண்ணிர்றேன்..” அர்ஜூன் புயல் வேகத்தில் அறையை ஒழுங்கு படுத்தினான்..
“இதை ஏற்கனெவே பண்ணித் தொலைச்சிருக்க வேண்டியதுதானே..” நந்தகுமார் எரிந்த விழுந்தான்..
“ஒற்றை ஆளாய் இருக்கிறவன்டா..”
“இப்பத்தான் ரெட்டை ஆளாய் பிளாட்டோட வாடகையை ஷேர் பண்ணிக்க நான் வந்துட்டேனில்ல..”
“இப்பத்தானேடா வந்திருக்க..?”
அர்ஜூன் தன் உபகரணங்களை சேகரித்து அடுத்த அறைக்குக் கடத்தி விட்டு.. நெற்றி வியர்வையை விரலால் வழிக்க..
“வெட்டி முறிச்சிட்ட.. போடா டேய்..” என்றான் நந்தகுமார்
“நீ செஞ்சிருந்தாத் தெரியும்..”
“நான் ஏன் செய்யனும்..? அதெல்லாம் உன்னோட திங்க்ஸ்..”
“வந்த உடனேயே.. ஃபைட்டை ஸ்டார்ட் பண்ணாதே.. குளித்து விட்டு வா.. சாப்பிடப் போகலாம்..”
“எங்கே..?”
“ஹோட்டலில்..”
“ஏண்டா..? கிச்சன் இருக்கே.. நீ கூடக் காப்பி போட்டுத் தந்தியே..”
“அது மட்டும்தான் போடத் தெரியும்.. மற்ற வேலைகளுக்கு ஒரு அம்மா வருவாங்க..”
“அம்மாவா..?”
“யெஸ்.. பிளாட்டைப் பெருக்கித் துடைத்து.. துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுத் துவைத்து உலர்த்தி, சமையல் செய்து, பாத்திரங்களைக் கிளின் பண்ணி வைத்து விட்டுப் போவாங்க.. இன்றைக்கு அவங்க வரலை..”
“ஏன்..? நான் வர்றது தெரிஞ்சதும் தலை மறைவா-கிட்டாங்களா..?”
“அதை நாளப் பின்ன செய்வாங்க.. உன்னைத்தான் அவங்க முன்னே, பின்னே பார்த்ததில்லையே.. அதனால தைரியமா எப்பவும் போல நாளைக்கு வேலைக்கு வருவாங்க.. இன்னைக்கு அவங்க லீவ்.. கதை பேசாம குளிக்க ஓடு..”
அர்ஜீன் ஹாலுக்குச் சென்று விட்டான்.. நந்தகுமார் அறைக் கதவைத் தாழிட்டு விட்டுப் பெட்டியைத் திறந்து மாற்றுடையை எடுத்துக் கட்டிலின் மீது வைத்து விட்டுக் குளிக்கப் போனான்.. அவன் தயாராகி அறைக் கதவைத் திறந்த போது அர்ஜூன் டிவியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தான்..
“சிக்சர்..”
அவன் ஆர்ப்பரிக்க.. நந்தகுமார் யாருக்கு வந்த விருந்தோ என்பதைப் போல முகத்தை வைத்துக் கொண்டு..
“போகலாமா..?” என்றான்..
அர்ஜூன் நந்தகுமாரின் முகத்தைக் கூர்ந்து பார்த்தான்.. அதை உணர்ந்தும் சலனமில்லாத முகத்துடன் அவன் பார்வையை வெறுமையாக எதிர் கொண்டான் நந்தகுமார்..
“நந்து.. நம் காலேஜ் கிரிக்கெட் டீமுக்கு நீதான் கேப்டன்..”
“ஸோ வாட்..?”
“காலேஜோட சூப்பர் ஸ்டார்டா நீ.. சூப்பர் ஹீரோ..”
“ம்ப்ச்.. அதெல்லாம் ஒன்ஸ் அஃப்பான் எ டைம்..”
“இப்ப நீயென்ன கிழவனா..?”
“லீவ் தட் அர்ஜூன்..”
“மைசூருக்கு வர்றது உனக்கு மாறுதலா இருக்கும்ன்னு சொன்ன நந்து.. உற்சாகமாகத்தானே பேசின.. இப்ப ஏண்டா டல்லாயிட்ட..? வாட் ஹேப்பன்..?”
‘வாட் ஹேப்பன்..?’
விமானத்தை விட்டு இறங்கிய போது நந்தகுமார் உற்சாகமாகத்தானே இருந்தான்.. புத்துணர்வாய் உணர்ந்தானே.. புதிய வானம், புதிய பூமி என்று பாட்டுப் பாடி மழையில் நனைந்து ஆட விழைந்தானே.. அந்த உணர்வு எப்போது மாறியது..?
“இந்த ஊருப் பொண்ணக் காதலிச்சுத் தொலைச்சுட்டேன்..”
அந்த டாக்ஸி டிரைவர் சொன்னானே.. அதைக் கேட்ட பின்புதானே இவன் உற்சாகமிழந்து போனான்.. விரக்தி நெஞ்சில் வந்து கூடு கட்டவா என்று கேட்க ஆரம்பித்ததே..
“அந்த டாக்ஸி டிரைவர் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டவனாம்..”
“ஓ..”
அந்த ஒற்றை எழுத்தில்தான் எத்தனை உணர்ச்சிப் பிரவாகங்கள்.. அர்ஜூன் நந்தகுமாரின் தோள்தட்டி நண்பனைத் தழுவிக் கொண்டான்..
“மறக்கனும்டா நந்து.. அவளை மறக்கனும்.. அதற்காகத்தான் சென்னையை விட்டுத் தூரமாய் வந்திருக்கிற..”
எதிலிருந்து தப்பிக்க நந்தகுமார் ஓடிவந்தானோ… அதில்தான் சிக்கப் போகிறான் என்று தெரியாமல் பேசிக் கொண்டிருந்தான் அர்ஜூன்..
Reviews — Brinthavanathil Nanthakumaran / பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.