Chapter 05

0Shares

“மும்பைக் கம்பெனியில பெஸ்ட் ஃபியுச்சர் இருந்ததே.. ஏன் வேண்டாம்ன்னு ரிசைன் பண்ணிட்ட நந்து..?”

“ம்ப்ச்.. பிடிக்கலைடா..”

“எதை..?”

“இந்தியை..”

அர்ஜூனுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.. இந்தியைப் பிடிக்கவில்லையென்று நல்லதொரு வேலையை ராஜினாமா செய்யும் அளவிற்கு நந்தகுமார் ஒன்றும் இந்தி எதிர்ப்பாளன் கிடையாது.. சரளமாக இந்தி பேசுவான்.. தெழுங்கு, கன்னடம், மலையாளம் என்று எதையும் விட்டு வைக்கவில்லை.. பெங்காலி நண்பன் ஒருவனுடன் பழக ஆரம்பித்ததில் பெங்காலியைக் கற்றுக் கொண்டு அவனைவிட இவன் நன்றாகப் பெங்காலி பேசுவதாக பெயர் வாங்கியவன்..

“அதைவிடு.. நியுயார்க்கில் வேலை கிடைத்ததே..”

“இங்கிலிஷ்காரனை விரட்டிட்டு அவன்கிட்டேயே நாம வேலை பார்க்கப் போகிறதா..?”

“நாமன்னு என்னையும் உன்னுடன் கூட்டுச் சேர்க்கப் பார்க்கறியா..? எனக்கெல்லாம் சான்ஸ் கிடைத்ததுன்னு வை.. அடுத்த பிளைட்டைப் பிடிச்சு பறந்திருப்பேன்..”

“நான் பறக்க மாட்டேன்.. போதுமா..?”

“திருவனந்தபுரம் கம்பெனி..?”

“மலையாளம் பிடிக்கலை..”

“விசாகப்பட்டினம்..?”

“தெழுங்கைப் போய் யார் பேசறது..?”

“உனக்கு இங்கிலிஷ் தெரியாதா..? அதைப் பேசு..”

“அதெல்லாம் வேலைக்கு ஆகாதுடா..”

“மைசூர் மட்டும் வேலைக்கு ஆகுமா..? செந்தமிழ் பேசற சென்னையிலேயே குப்பை கொட்ட வேண்டியதுதானே..? மைசூருக்கு ஏண்டா வந்த..? கன்னடம் பிடிக்கலைன்னு கழண்டுக்கிட்டு ஓடறதுக்கா..?”

“பார்க்கலாம்..”

“என்னத்தைப் பார்க்கப் போகிற..? வேலையையா..? இல்லை கழண்டுக்கிட்டு ஓடறதையா..?”

இரண்டில் எதைப் பார்க்கப் போகிறான் என்று நந்தகுமார் சொல்லவில்லை.. அர்ஜூனுக்கு ஆற்றாமையாக இருந்தது..

‘எப்படி இருந்தவன்..!’

இது ஒன்றுதான் அர்ஜூனை வேதனைப் படுத்தியது.. யுனிவர்சிட்டி கோல்டு மெடல்..! இறுதியாண்டிலேயே கேம்பஸ் இண்டர்வியூவில் நியுயார்க் கம்பெனியொன்றின் உயர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவன்.. அனைத்தையும் ஓரம் கட்டி விட்டு எதிலும் பிடிப்பில்லாமல் விட்டேற்றியாக இருக்கிறான்..

“குதிரை வண்டி..” நந்தகுமார் உற்சாகமானான்..

இப்போதைக்கு இது போதும் என்றிருந்தது அர்ஜூனுக்கு.. நந்தகுமார் உற்சாகமான மனநிலைக்கு மாறியிருக்கிறான்.. இது எத்தனை நிமிடங்களுக்கு நீடிக்குமோ தெரியாது.. வினாடியில் அது மறைந்து அவன் சுள்ளென்ற முகபாவம் காட்டலாம்.. கிடைக்கும் மணித்துளிகளில் அர்ஜூன் தொலைந்து போன தன் பழைய நண்பனைப் பார்க்கலாமே.. 

“இங்கே குதிரை வண்டி அதிகம் இருக்கும்டா..”

“நம்ம ஊர்ப்பக்கம் காணக் கிடைக்காத காட்சி.. ஆட்டோ வந்தது.. அதை பீட் அடிக்கிறதைப் போல கால் டாக்ஸி.. குதிரை வண்டியெல்லாம் மியுசியத்தில நிக்குது..”

நந்தகுமார் காரச்சட்னியை இட்லியுடன் சேர்த்து வாய்க்குள் தள்ளியதைப் பார்த்த சர்வர்..

“சார்.. தெழுங்கானாவோ..” என்றான்..

“இவனைப் பாருடா.. தெழுங்கர்தான் மிளகாய் காரத்தை அள்ளி மொக்குவாங்கன்னு கண்டு வைச்சிருக்கான்..” முணுமுணுத்தான் நந்தகுமார்..

பக்கத்து டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் செல்போனில்..

“நானு நின்ன சஞ்சே பேட்டி மாடுவே..” என்று சொல்லிக் கொண்டிருந்தான்..

“நைட் டயத்தில போய் நான் உன்னை ஈவினிங்கில மீட் பண்றேன்னு சொல்லிக்கிட்டு இருக்கான் பாரு..” நந்தகுமார் சிரித்தான்..

“நாளைக்கு சாயங்காலம்ன்னு சொல்றானோ என்னவோ..” என்றான் அர்ஜூன்..

நண்பர்கள் சாப்பிட்டு முடித்து கை கழுவ எழுந்த போது பக்கத்து டேபிள்காரன் பேச்சை முடித்துப் போனை அணைத்து டேபிளில் வைத்தான்..

“இவன் திங்க வந்தானா.. இல்ல.. போன் பேச வந்தானா..?”

“பேசாம வாடா..? நமக்கென்ன வந்தது..? அவன் போன் அவன் பேசறான்..”

“கேக்கறது நாம..”

வழக்கடித்தபடி கை கழுவி விட்டு டேபிளுக்குத் திரும்பினால் பக்கத்து டேபிள்காரன் செல்போனை எடுத்து யாருடனோ பேச ஆரம்பித்தான்..

“ஆரம்பிச்சுட்டாண்டா..” தலையில் கை வைத்தான் நந்தகுமார்..

“நந்து..” அர்ஜூனுக்குக் சிரிப்புத் தாங்கவில்லை..

“நானு பகுவாவரே காதிரி..” பக்கத்து டேபிள்காரன் ஹஸ்கி வாயில் ஜொள்ளினான்..

“விடியும் வரை காத்திருன்னு ஒரு சினிமா இருக்கில்ல..” பக்கத்து டேபிள்காரனைப் பார்த்தபடி கேட்டான் நந்தகுமார்..

“டேய்.. அவனைப் பார்க்காதேடா..” கால்களில் விழாத குறையாக கெஞ்சினான் அர்ஜூன்..

“நான் வரும்வரை காத்திருன்னு சொல்றான்.. இது யாரு..?”

“யாரோ.. நமக்கென்னடா..?”

“ஏண்டா.. இப்பத்தான் எவளோ ஒருத்தியிடம் மணிக்கணக்காப் பேசிட்டு சாயங்காலம் மீட் பண்ணலாம்ன்னு சொன்னான்.. இப்ப என்னடான்னா வேறு ஒருத்திகிட்ட நான் வரும்வரைக் காத்திருங்கிறான்.. பெரிய ஜகதால பிரதாபனா இருப்பான் போல..”

“பாருடா நந்து.. நீ இப்பத்தான் மைசூரில காலடி வைச்சிருக்கிற.. கொஞ்ச நாளாவது இங்கே இருக்கனும்னு நினை.. வந்தவுடனே ரணகளம் வேண்டாம்.. வா.. போகலாம்..”

அர்ஜூன் நந்தகுமாரை ஏறக்குறைய இழுத்துக் கொண்டு வெளியேறினான்.. எதிரில் வந்தவர் நந்தகுமாரைப் போலவே மைசூருக்குப் புதியவர் போல.. நந்தகுமாரின் முகத்தில் தமிழ்க்களைத் தாண்டவமாடியதில்..

“நீங்க தமிழா..?” என்றான் உற்சாகமாக..

“இது ஒன்னு எங்க போனாலும் துரத்திக்கிட்டு வருது..?” நந்தகுமார் உஷ்ணமானான்..

அது புரியாத அந்த அப்பாவி..

“மைசூரைச் சுற்றிப் பார்க்க வந்தோம்.. பக்கத்திலேதான் ரூம் போட்டுத் தங்கியிருக்கோம்.. ஹோட்டலிலே டிபன் எப்படியிருக்கும்ன்னு தெரிஞ்சுக்கிட்டுத்தான்.. ஃபேமிலியைச் சாப்பிடக் கூப்பிட்டுக்கிட்டு வரனும்..” என்று விசாரித்தார்..

“பேஷா செய்யுங்கோ..” நந்தகுமார் நகரப் போனான்..

“நீங்க சொல்லுங்க..” அவர் பிடித்துக் கொண்டார்..

“என்னத்தைச் சொல்ல..?”

“இங்கே சாப்பாடு எப்படியிருக்கும்ன்னு சொல்லுங்கோ..”

“அதையேன் கேட்கறிங்க.. உங்களைப் போல நானும் மைசூருக்குப் புதுசா.. சாப்பிடலாம்ன்னு நம்பி இந்த ஹோட்டலுக்கு வந்தேனா.. சர்வர் தட்டைப் போட்டான்.. அதில டிபனைப் போட்டான்.. ஷாக் ஆகிட்டேன்..”

“எதுக்கு..?”

“தோசையைப் போல இட்லி.. செங்கல் போல மெதுவடை.. ஒரு ஸ்பூன்தான் சாம்பார்.. ஒரு விள்ளலுக்குக் கூடப் போதலை..”

“என்னது.. வயித்துப் பசிக்குச் சாப்பிட வந்தா செங்கலையா தர்றாங்க..? எதுல வேணும்னாலும் விளையாடலாம்.. வயித்துப் பசியோட விளையாடாதீங்கடா.. டேய்..”

அந்த மனிதர் சப்தம் போட.. அர்ஜூன் துரிதகதியில் நந்தகுமாரை இழுத்துக் கொண்டு அங்கிருந்து எஸ்கேப் ஆனான்.. படபடக்கும் நெஞ்சில் கைவைத்து..

“சாப்பிடத்தானேடா கூப்பிட்டுக்கிட்டுப் போனேன்..?” என்று நியாயம் கேட்டால்..

“அதுவே உனக்குச் சந்தேகமா..?” என்று கேட்டு வைத்தான் நந்தகுமார்..

அடுத்து வரப் போகும் நாள்கள் எப்படிப்பட்ட நாள்களாக இருக்கப் போகிறதோ என்ற கிலி பிடித்துக் கொண்டதில் அர்ஜூன் இரவு முழுவதும் உறங்காமல் புரண்டு புரண்டு 

படுத்துக் கொண்டிருந்தான்.. ஒருவழியாக விடியும் போது கண்ணுறங்கியவனை அறையின் காலிங் பெல் அலறி எழுப்பி விட்டது.

“டேய்.. யாரோ ஈஸ்வரியாம்.. நம்ம பிளாட் வாசலிலே நிக்குது… பிளாட் மாறி வந்துட்டேன்னு விரட்டி விடவா..?” என்ற கேள்வியுடன் நந்தகுமார் நின்றிருந்தான்..

“ஐயையோ..” அர்ஜூனின் தூக்கம் பறந்து விட்டது..

“அடேய்.. அவங்கதான் இந்த பிளாட்டோட அன்னபூரணிடா.. அவங்க போயிட்டாங்கன்னா உனக்கும் எனக்கும் புவ்வா கிடைக்காது..” நந்தகுமாரை விலக்கி விட்டு வாசலுக்குப் பறந்தான்.

இவன் ஏன் இப்படி ஓடுகிறான் என்று விசித்திரமாக நண்பனைப் பார்த்தான் நந்தகுமார்..

0Shares

Reviews — Brinthavanathil Nanthakumaran / பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link