Chapter 07

0Shares

சுழல் நாற்காலியில் சுழன்று திரும்பிய ‘அவளும்’ அவனைக் கண்டவுடன் அதிர்ச்சியுடன் எழுந்து நின்று விட்டாள்.. நந்தகுமாரின் விழிகளில் நவரசமும் வந்து போயின.. எங்கிருந்தோ ஓர் மிதப்பு வந்து அவனுள் குடிகொள்ள.. படு தெனாவெட்டாக சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு கால்மேல் கால் போட்டு அமர்ந்தான்.. அத்துடன் நில்லாமல் இடது கையை உயர்த்தி, இறக்கி..

“டேக் யுவர் சீட்..” என்றான்..

அவளது விழிகளில் வந்தது கோபமா.. இல்லை.. ரசனையா..? அவனைத் தீர்க்கமாகப் பார்த்தபடி..

“நான்தான் இந்தக் கம்பெனிக்கு எம்.டி.” என்று அறிவுறுத்தினாள்..

“ஸோ.. வாட்..?” அலட்சியமாக அவன் புருவங்களை உயர்த்தினான்..

“என் சீட் எதுன்னு எனக்குத் தெரியும்.. அதில் எப்போ.. எப்படி உட்காரனும்னும் எனக்குத் தெரியும்..”

“ஈஸிட்..? ஐ டோன்ட் நோ திஸ்.. நான் என்னவோ உங்களை பீடிங் பாட்டிலும் கையுமா இருக்கிற ‘பப்பா’ன்னுள்ல நினைத்திருந்தேன்..”

“அதுதான் எனக்குத் தெரியுமே.. அந்த நினைவிலேதானே கோபியர் கொஞ்சும் ரமணனாய் இருந்தீங்க..?”

அவளது உதடுகள் துடித்தன.. அந்தத் துடிப்பில் அவன் மீதான அதீத காதல் இருந்ததில் அவன் மனதில் ஓர் திருப்தி மையம் கொண்டது.. அவளையே பார்த்தான்.. அந்தப் பார்வையின் தீட்சண்யத்தில் அவள் தடுமாறினாள்.. அவனுக்குத் தெரியாமல் அந்தத் தடுமாற்றத்தை மறைத்து விட வேண்டுமென்று அவசரம், அவசரமாக சுழல நாற்காலியில் உட்கார்ந்தாள்.. கூர்மையான அவனது பார்வை அவளது தடுமாற்றத்தை இனம் கண்டு கொண்டது.. ஒரு மார்க்கமாக அவளைப் பார்த்தபடி..

“இந்தக் கம்பெனிக்கு எம்.டி நீங்க.. சந்தோசம்தான்.. பட்… இதில எனக்கு சீஃப் என்ஜீனியர் போஸ்ட் கிடைச்சிருக்குங்கிறதைத்தான் என்னால் நம்ப முடியலை.. மேடம் திசை மாறிய பறவையாகிட்டிங்க.. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாதே மேடம்.. குருவியை எப்படி செலக்ட் செய்தீங்க..?”

அடிபட்ட பார்வை பார்த்தாள் அவள்.. அதில் அவன் நிறைவு கொண்டான்.. ஆறாத மன ரணத்தை ஆற்றிவிட எவருமில்லாமல், தன்னைத்தானே தனிமைபடுத்திக் கொண்டு ஊர், ஊராக, தேசாந்திரியைப் போல அவன் சுற்றிக் கொண்டு இருக்கிறானே.. அதை அறிவாளா அவள்..?

“நீங்களா ஊர்க் குருவி..? ஹ..! பருந்தாச்சே நீங்க..” அவளது கண்கள் சிவந்தன..

“இந்தப் பருந்து ஒரே ஒரு பறவையைத்தான் வட்டம் போட்டுச்சு மேடம்.. அந்தப் பறவையும் திசை மாறிப் பறந்திருச்சு..” அவனது கண்களும் சிவந்தன..

“இந்தக் கதையை நம்ப.. நானொன்றும், நீங்கள் சொல்கிறதைப் போல ஃபீடிங் பாட்டிலை வைத்துக்கிட்டு இருக்கிற ‘பப்பா’ இல்லை..”

“ஓ..!”

உதடுகளைக் குவித்தவனின் மேய்ச்சல் பார்வை அவளது அங்கங்களில் ஊர்ந்து அவளை அலைக்கழித்தது.. அவள் பப்பாவா இல்லையா என்பதை ஆராய்ச்சி செய்பவனைப் போல அவளை பாதாதி கேசம் முதல் தாகத்துடன் பார்த்து சோதித்து வைத்தான் நந்தகுமார்..

“லுக் மிஸ்டர்..” சங்கடத்துடன் அவள் அதட்டினாள்..

“லுக் விட்டுக்கிட்டுத்தானே இருக்கேன் மேடம்..” விசமமாக அவன் பதில் சொன்னான்..

“லுக் விடறதிலதான் நீங்க எக்ஸ்பர்ட் ஆச்சே.. பின்னலிட்ட கோபியரின், கன்னத்திலே கன்னம் வைத்து மன்மதன் போல் லீலை செய்வதை விட்டு விட்டு.. மைசூர் பக்கம் எதுக்கு வந்தீங்க..?”

“பிருந்தாவனத்தில்தானே நந்தகுமாரன் இருப்பான்..? அதனால்தான் வந்தேன்..”

யோசிக்காமல் வந்த அவனது சாதுர்யமான பதிலை மெச்சுவதைப் போல அவளது விழிகள் மின்னின.. ஊன்றி அவன் பார்த்த கள்ளூரும் பார்வையில் போதை வரவா என்று கேட்டதில் கடுமைக்கு மாறினாள் அவள்..

“நீங்க மதியாதார் தலைவாசலை மிதிக்காத ரோசக்காரர் ஆச்சே..” பட்டென்று சொல்லி விட்டாள்..

அவனது முகமும் மாறி விட்டது.. கல் போல கடினமான முகத்துடன் அவள் முன் குனிந்து விரல் சொடுக்கியவன்..

“அந்த ரோசம் உனக்கில்லையா..? உனக்குத் துரோகம் செய்தவனை ஏன் வர வைத்திருக்கிற..?” என்று கேட்டான்..

“இது நீங்கன்னு தெரியாது..” மென்று விழுங்கியவளின் இமையோரம் கண்ணீர் முத்துக்கள் திரண்டு விட்டன..

‘சிறு சொல்லையும் தாங்க மாட்டாள்..’ கடினப் பட்டிருந்த அவனது முகத்தில் இளக்கம் வந்தது..

“மும்பையில கிஷோர் அங்கிள் சொன்னாராம்.. ஹி இஸ் வெரி, வெரி எக்ஸ்பர்ட் இன் திஸ் ஃபீல்டுன்னு.. டாடி புதிதா சில புராஜெக்ட்ஸை கமிட் பண்ணியிருக்கிறார்.. ஸோ.. ஹி கால்டு யு..”

“நான்னு தெரிஞ்சிருந்தா உன் டாடி கால் பண்ணியிருக்க மாட்டார்.. நீயும் ரிஸீவ் பண்ணியிருக்க மாட்டே..”

ஆழ்ந்த குரலில் தொனித்த குற்றச்சாட்டில் அவளது மனம் வலித்தது.. அவனென்று தெரிந்திருந்தால் அவளுடைய தந்தை நிச்சயமாக அவனுக்கு அழைப்பு விடுத்திருக்க மாட்டார்தான். 

அவள் அவனை வரவேற்காமல் இருந்திருப்பாளா..? அவளால் அது முடியுமா..? என்னதான் அவன் அவளுக்குத் துரோகம் செய்திருந்தாலும்.. இதயத்தை இற்று விழ வைத்திருந்தாலும்.. அவன் நினைவு அவள் மனதை விட்டு அகலவில்லையே.. அதை அறிவானா அவன்..?

“இப்ப உங்களை ரிஸிவ் பண்ணி உட்கார வைத்துப் பேசிக்கிட்டு இருக்கிறதாகத்தான் ஞாபகம்..” சுட்டிக் காட்டினாள்..

“இதுக்குப் பெயர் ரிஸிவா..? மேடம் ஒன்னும் என்னை உட்காரச் சொல்லலை.. நானாகத்தான் உட்கார்ந்தேன்.. அதையும் ஞாபகப் படுத்திக்கங்க மேம்..” என்றவன் முன்னால் சரிந்து அவளது விழிகளுக்குள் பார்த்தான்..

“இது மட்டும்தான் ஞாபகம் வருதா..? வேறு எதுவும் ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதேன்னு லைன் கட்டி வரலைங்களா..?”

அவளது மனதை உலுக்கி இழுத்தது அவனது கேள்வி.. அவனது பார்வையைத் தவிர்க்க முடியாத தவிப்போடு அவன் பார்வையோடு பின்னிப் பிணைந்தது அவள் பார்வை..

“நீ மறந்திருப்படி.. கோடிஸ்வரி.. பணம் பணத்தோடுன்னு கால்குலேசன் வைத்திருப்ப.. நான்தான் பைத்தியக்காரன்.. உயிரை உன்மேல் வைத்துட்டு உன்னை மறக்க முடியாம ஊர் ஊரா ரோந்து சுற்றிக்கிட்டு இருக்கிற பைத்தியக்காரன்..” குமுறினான் நந்தகுமார்..

“பழியை என்மேல போட்டாகிறதா..?” அவளும் குமுறினாள்.

“கோடிஸ்வரியாம் கோடிஸ்வரி.. அப்படி உங்களிடம் நான் ஒருநாள் ஒரு பொழுதாவது சொல்லியிருப்பேனா..? உங்க காதலுக்கு ஏங்குகிற யாசகியா கையேந்தி நின்றேனே.. நீங்க என்ன செய்தீங்க..? எவளோ ஒரு மயக்கு மோகினியின் பின்னால் போனீங்க..”

“அவளெல்லாம் ஓர் ஆள்.. அவளைக் காரணம் காட்டி.. என்னைத் தூக்கியெறிஞ்சுட்டு வியாக்கினம் பேசற.. உனக்குத் தேவை காரணம்டி.. என்னை விட்டுப் பிரிவதற்கான ஸ்ட்ராங் ரீசன்.. அதுக்கு அவ பெயரை யூஸ் பண்ணிக்கிட்ட..”

“யூஸ் பண்ணிக்கிட்டேனா..? நானா..? அவதான் என் பணத்துக்காக ‘காதல்’ங்கிற வார்த்தையை நீங்க யூஸ் பண்ணினதாச் சொன்னா..”

“ஏய்ய்ய்…”

கர்ஜனையோடு வீறு கொண்டு எழுந்த நந்தகுமார் அவளது கழுத்தில் கைவிரல்களைப் பதித்து நெறிக்க ஆரம்பித்து விட்டான்.. அவள் கத்தவில்லை.. கதறவில்லை.. அவனது கை விரல்களிடமிருந்து கழுத்தைப் பிரிக்க முனையவில்லை.. மூடப்பட்டிருந்த ஏஸி அறையில் குண்டூசி விழுந்தால் கூட வெளியில் கேட்காது.. அவள் அசையாமல் நீ என்னைக் கொன்றாலும் எனக்குச் சம்மதம் என்று நின்றிருந்தாள்..

அவளது அந்த சரணாகதியில் கோபம் வடிந்தவன்..

“என்னைக் கொலைகாரனாக்கறியேடி.. பாவி..” என்று தலையைப் பிடித்தபடி சேரில் சரிந்தான்..

குளிர்ந்த தண்ணீரை கண்ணாடி தம்ளரில் ஊற்றி அவனிடம் நீட்டினாள் அவள்.. அவளையே வெறித்துப் பார்த்தவனின் வெறி கொண்ட கோபப் பார்வையில் அவளது கண்கள் கலங்கின..

“விசமிருந்தாக் குடுடி.. சந்தோசமாகச் சாகிறேன்.. இப்படி பழி போட்டு பிரிஞ்சு நின்னு சாகடிக்காதே..”

சத்தியம் நிரம்பிய அந்த வார்த்தைகள் அவளைத் தாக்கித் தேம்பி அழ வைத்தன.. அவள் முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

0Shares

Reviews — Brinthavanathil Nanthakumaran / பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link