Chapter 12
“எப்படிடா..?”
அர்ஜூன் வியந்து போனான்.. புத்திசாலியான நந்தகுமார் கட்டிடக்கலையில் என்ஜினியராக விரும்பியதற்கு காரணமாக இந்தியாவின் கோவில்களின் தொன்மையைத்தான் சுட்டிக் காட்டுவான்..
“சின்னக் கோவிலா இருந்தாலும் செதுக்கி வைத்திருப்பாங்கடா.. ஒவ்வொரு தூணிலும் சித்திரம் போலத் தெரியும் சிற்பங்களைச் செதுக்கி வைத்திருப்பாங்க பாரு.. ஒவ்வொரு தூணும் கதை பேசும் அர்ஜூன்.. கோவிலின் கூரையில் இதிகாசக் காட்சிகள் சிற்பத் தொகுப்புகளாத் தெரியும்.. கார்ட்டூனெல்லாம் இப்ப வந்ததுடா.. எந்த ஹார்டு டிஸ்க்கிலும் ஷேவ் பண்ணி வைக்க வேண்டிய தேவையில்லாம.. நம்ம நாடு முழுவதும் கலாச்சாரமும், கட்டிடக் கலையும் பின்னிப் பிணைந்து நிற்குதுடா.. அதைப் படிக்க இந்த ஆயுள் போதுமா..?”
போதாது என்பதை அர்ஜூன் ஒப்புக் கொள்வான்.. அவன் என்னவோ கிடைத்த பிரிவை எடுத்துப் படிக்கலாம் என்றுதான் சிவில் என்ஜினியரிங்கை எடுத்துக் கொண்டான்.. நந்தகுமார் அப்படியல்ல.. கம்யூட்டர் பிரிவை வேண்டாமென்று சொல்லிவிட்டு சிவில் என்ஜினியரிங் பிரிவில் சேர்ந்தவன் அவன்.. இன்று அனுராதாவைப் பார்த்து அவன் கேட்ட கேள்வியை.. அன்று.. அவனைப் பார்த்து அவனது சீனியர்கள் கேட்டார்கள்.. இன்று அனுராதா சொன்ன இதே பதிலைத்தான் அன்று நந்தகுமாரும் அவனுடைய சீனியர்களிடம் சொன்னான்.. அப்போது அர்ஜூனும் பக்கத்தில் இருந்தான்..
ஒன்றுபட்ட ரசனைகளும்.. எண்ணங்களும்.. ஒருவர்பால் ஒருவரை ஈர்க்கும்தானே.. அனுராதாவும் நந்தகுமாரை ஈர்த்தாள்.. நந்தகுமார் அவளிருக்கும் இடத்தைத் தேடித் தேடிப் போய் பேசியதில் கல்லூரிப் பெண்கள் மத்தியில் புயல் எழும்பியது.. நிராகரிக்கப்பட்ட வலி அவர்களுக்கு… நிராகரிப்பைப் பொருட்படுத்தாமல் ‘தோழி’ என்ற போர்வையில் அவனைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்த கோபிகாவுக்கு பேரிடியே விழுந்தது..
“என்ன.. கோபிகா.. என்னவோ நந்து உன்னை ரிஜக்ட் பண்ணலை.. படித்து முடிக்கிற வரைக்கும் நம்ம காதலைப் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம்.. படிப்பு முடியட்டும்.. அதுக்கப்புறம் எல்லோருக்கும் மேரேஜ் இன்பிடேசனே கொடுக்கலாம்ன்னு நந்தகுமார் சொல்லியிருக்கிறதா பீலா விட்டுக்கிட்டு இருந்தியே.. அது அத்தனையும் ரீலா..?” என்று சக மாணவிகள் கேலி பேசி சிரித்ததில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாள் கோபிகா..
“அப்படியெல்லாமில்லை.. அவ மேலே ஏதோ ஒரு ஷாப்ட் கார்னர்.. அதனால ஷாப்டாப் பேசிப் பழகறான்.. தட்’ஸ் ஆல்.. ஹி இஸ் மை மேன்..”
“அப்படின்னு நீதான சொல்லிக்கிட்டு இருக்கிற.. அவன் ஓர்நாள்கூடச் சொன்னதில்லையே.. அவளைத்தான் ‘ஷி இஸ் மை வுமன்’னு சொல்லாம சொல்லிக்கிட்டு இருக்கிறான்..”
“அது உன்னோட இமோஜினேசன்..”
“உன்னோடதுதான் இமாஜினேசன் கோபிகா..”
‘பார்.. பார்.. நந்தகுமார் எனக்குத்தான்..’ என்பதைப் போல ஆணவப் பார்வை பார்த்தபடி நந்தகுமாருடன் ஒட்டிக் கொண்டு அலைந்த கோபிகாவிற்கு முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.. சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த பெண்கள் வாரியதில் அவள் மனம் வன்மம் கொண்டது.. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் விகல்பமில்லாதவளைப் போல நந்தகுமாருடன் பழகிக் கொண்டிருந்தாள்..
நந்தகுமார் அவளை சந்தேகிக்கவில்லை.. அவன்தான் கோபிகாவை ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லையே.. அவன் மனது முழுவதும் அனுராதாதானே நிறைந்திருந்தாள்..
வள்ளுவரின் வாய்மொழியைப் பின்பற்றிய கோபிகா.. கொக்கைப் போல அனுராதாவின் மனதைக் கலைப்பதற்கான சந்தர்ப்பங்களுக்காக தவமிருக்க ஆரம்பித்தாள்.. சிறு இடைவெளி கிடைத்தாலும் போதும்.. எதையாவது சொல்லி அனுராதாவின் மனதில் சஞ்சலத்தை உண்டு பண்ணி விடுவாள்..
“ஹாய் அனு.. எங்கே இந்தப் பக்கம்..?”
“நந்துவைப் பார்க்க வந்தேன்..”
“அவன் ஸ்கை வாக் போயிருக்கானே.. உனக்குத் தெரியாதா..?”
“தெரியாதே.. என்னை இங்கே வரச் சொல்லியிருந்தாரே..”
“மறந்திருப்பான்.. யு ஸீ.. அவனுக்கு என்னைத்தவிர மத்தது எல்லாமே மறந்திரும்.. இப்போக்கூட எனக்காக டிரஸ் பர்ஸேஸ் பண்ணத்தான் ‘ஸ்கைவாக்’ போயிருக்கான்.. நான் சொன்னதா அவனிடம் காட்டிக்காதே.. ப்ளீஸ்.. என்னைக் கோவிச்சுக்குவான்..”
இதுதான் கோபிகா பயன்படுத்திய யுக்தி.. நான் சொன்னதாக அவனிடம் சொல்லாதே.. காட்டிக் கொள்ளாதே.. சொன்னால் அவன் என்னை கோபித்துக் கொள்வான்..
அனுராதா தனக்கென்று சில தனிப்பட்ட கொள்கைகளையும் கோட்பாடுகளையும் உடையவள்.. எதிரியோ.. துரோகியோ.. யாராக இருந்தாலும்.. என்னைக் காட்டிக் கொடுக்காதே என்று அவர்கள் கேட்டுக் கொண்டால் ஓர்நாளும் அவர்களைக் காட்டிக் கொடுக்க மாட்டாள்..
இந்த உலகம் நல்லவர்களை விட தீயவர்களையே வாழச் செய்கிறது.. கொள்கைகளும் கோட்பாடுகளும் தளைகளாகக் காலைச் சுற்றாமல் தடுக்கும் வல்லமையை நல்லவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.. நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது.. தற்காத்துக் கொள்ளும் வல்லமையுடையவராகவும் இருக்க வேண்டும்.. இல்லையெனில் போகிற போக்கில் ஸ்வாஹா செய்து வாயில் போட்டு வெற்றிலை பாக்கை மென்று துப்புவதைப் போல மென்று துப்பி விடுவார்கள்..
இதைப்பற்றி அனுராதாவுக்கு என்ன தெரியும்..? அவள் கோடிஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்தவள்.. பிறக்கும் போதே தங்க ஸ்பூனை வாயில் கவ்விக் கொண்டு பிறந்தவள்.. சொல்லிக் கொடுக்க தாயிருந்திருந்தால் இந்தத் துன்பம் நேர்ந்திருக்காது.. அனுராதாவின் எட்டு வயதில் அவளது தாய் இனியா ஒரு விமான விபத்தில் இறந்து விட்டாள்.. அனுராதாவின் தந்தை பீம்சிங் வெளிநாட்டில் இருந்தார்.. டில்லியின் முதன்மையான தொழிலதிபர்களில்
அவரும் ஒருவர்.. அவரது பல்வேறு பிஸினெஸ்களின் கிளைகள் உலகமெங்கும் பரந்து விரிந்திருந்தன..
இனியாவும் பீம்சிங்கும் வெளிநாட்டில் வசித்தார்கள்.. டில்லிக்கு வந்து செல்வார்கள்.. அனுராதா தனது பள்ளிப் படிப்பை வெளிநாட்டில்தான் படித்தாள்.. சென்னையில் இருந்த தனது பெற்றோரைப் பார்க்கத் தனித்துப் பயணப்பட்டுத் திரும்பிய இனியா விமான விபத்தில் இறந்து போன பின்பு அனுராதாவைச் சுற்றி தனிமையின் நிழல் கவிந்து விட்டது.. இரண்டு வருடங்கள் வேலையாள்களின் கண்காணிப்பில் வளர்ந்தாள்.. அனுராதாவின் பத்தாவது வயதில் பீம்சிங் மறுமணம் புரிந்து கொண்டார்.. தீப்தி அனுராதாவின் சித்தியாக வந்து சேர்ந்தாள்.. அனுராதாவின் தனிமை அதிகரித்தது..
தீப்தி கணவருடன் உலகம் சுற்றி வர விரும்பினாள்.. டில்லியில் இருந்த பீம்சிங்கின் கம்பெனிகளில் ஒன்றில் மேனேஜராக இருந்தவள் தீப்தி.. மனைவியை இழந்திருந்த பீம்சிங்கிடம் நெருக்கத்தை உண்டாக்கிக் கொண்டு அவரை மறுமணம் புரிந்து கொண்டவள்.. மத்தியதர வாழ்க்கையிலிருந்து உயர்மட்ட வாழ்க்கைக்கு வந்தவள் அனைத்து வசதிகளையும் அனுபவிக்கத் துடித்தாள்.. அதற்குத் தடையாக இருந்த அனுராதாவை பீம்சிங் உணராத வண்ணம் அவரிடமிருந்து பிரித்தாள்..
“சின்னக் குழந்தை டியர்.. நல்ல முறையில் வளர்க்க வேண்டும்.. என்னதான் ஃபாரினில் படித்தாலும் நம்ம இந்தியாவின் கல்ச்சர் வருமா..? அனுவை ஊட்டிக் கான்வெண்டில் சேர்த்தால் என்ன..? கட்டுப்பாடு, கல்ச்சர், டேபிள் மேனர்ஸ், வெல் எஜீகேசன்னு அத்தனையும் கிடைக்குமே..”
இளைய மனைவியின் வார்த்தைகளில் மறைந்திருந்த விசத்தை உணராமல் அனுராதாவை இந்தியாவிற்கு அழைத்துச் சென்று ஊட்டிக் கான்வெண்டில் சேர்த்து விட்டார் பீம்சிங்.. தீப்தி சொன்ன அத்தனையும் அனுராதாவுக்குக் கிடைத்தது.. கூடவே சொந்தமென்று சொல்லிக் கொள்ள ஆளில்லாத சோகமும் தனிமையும் சேர்த்துக் கிடைத்தது..
என்னதான் பிஸினெஸ், பிஸினெஸ் என்று கால்களில் சக்கரங்களைக் கட்டிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தாலும் மகளுக்கென்று நேரம் ஒதுக்க மறக்க மாட்டார் பீம்சிங்.. தினமும் மகளிடம் சில நிமிடங்களாவது உட்கார்ந்து பேசுவார்.. அவளது குறைகளைக் கேட்பார்.. இப்போதோ மகளை அவரது நினைவிலிருந்து முற்றிலுமாக பிரித்து விட்டாள் தீப்தி..
“அனுவுக்கு என்னங்க.. அவளைப் போல எத்தனை குழந்தைகள் அங்கே படிக்கிறாங்க.. பர்ஸ்ட் கிளாஸ் அக்காமேடசன், ஃபுட், கேர், ஸ்டடின்னு அவ அருமையான குழந்தையா உருவாகிக்கிட்டு இருக்கா.. நீங்க உங்க பிஸினெஸ்ஸில் கான்சென்ட்ரேட் பண்ணுங்க..”
பீம்சிங்கின் கவனத்தை தொழில்களின் பக்கம் திருப்பி விட்டாள் தீப்தி.. உலகம் முழுவதும் கிளை விரித்திருந்த தொழில்களை மேற்பார்வையிட பீம்சிங் சுற்ற.. அவருடன் சேர்ந்து சுற்றினாள் தீப்தி..
Reviews — Brinthavanathil Nanthakumaran / பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.