Chapter 16

0Shares

அதிகப்படியான பணம் இருக்கும் இடத்தில் கட்டுக் காவல்களும் சூழ்ச்சிகளும் சூழ்ந்திருக்கும் என்பதை கணக்கு வாத்தியாரான வாசுதேவன் கணக்கிட்டது சரியாகத்தான் இருந்தது.. நந்தகுமாரின் காதலை அழிப்பதற்கான சதி வேலைகள் ஆரம்பமாகி விட்டன.. அந்த சதி வலையைப் பின்ன ஆரம்பித்தவன் கரண்..!

கரண்..! நந்தகுமாரின் காதலுக்கு வில்லன் அவன்தான்.. முகம் காட்டாமல் பின்னாலிருந்தே சதி வேலைகளைச் செய்து முடிப்பதில் வல்லவன்.. நந்தகுமாரின் காதலை அழித்தது அவன்தான்.. வெளியில் தெரிந்தது பீம்சிங்தான் என்றாலும் சதி வேலையின் சூத்திரதாரி கரண்தான்..

கரண் வேறு யாருமல்ல.. தீப்தியின் தம்பி.. ஒரே உடன் பிறப்பு.. தீப்தி வில்லாதி வில்லி.. என்று பீம்சிங்கின் சொத்துக்களில் முக்கால்வாசிக்கும் மேல் அவரது மனைவி இனியாவுக்குத்தான் சொந்தம் என்பதை அறிந்து கொண்டாளோ.. அன்று அவளது மூளை வகுத்த திட்டம் இது.. இனியாவின் வாரிசு அனுராதாதான் என்றால்.. அந்த அனுராதாவின் பாஸ் தீப்தியின் தம்பிதான்.. ஆனானப்பட்ட பீம்சிங்கையே அவள் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் போது.. அமைதியான அனுராதாவை அவளது தம்பி சுண்டு விரலில் சுளுக்கெடுத்து சிறை வைத்து விட மாட்டானா..?

தீப்தி ஒன்றும் ஏப்பை சாப்பையானவளல்ல.. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும்.. அழகி..! புத்திசாலி..! படிப்பில் கெட்டி.. அவளது  சுறுசுறுப்பும், வேலைத் திறமையும்தான் பீம்சிங்கின் கவனத்தை முதலில் கவர்ந்தவை.. அவரது பாராட்டைப் பயன்படுத்திக் கொண்டு அவரை நெருங்கி தனது அழகையும் இளமையையும் கவனிக்க வைத்தவள் அவள்.. அவளது தம்பி மட்டும் சோடை போய் விடுவானா..?

தீப்தி பிறந்து எட்டு வருடம் கழித்துப் பிறந்தவனாம் கரண்.. ஒரு வேளைச் சாப்பாட்டுக்காவது வழி செய்து கொண்டு அடுத்த குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தீப்தியின் பெற்றோர்கள் நினைத்தார்களாம்.. அப்படி ஒரு வேளைச் சோற்றுக்குக் கூட வழியில்லாத குடும்பத்தில் பிறந்த பெண்ணரசிதான் பீம்சிங்கைக் கைக்குள் போட்டுக் கொண்டு உலகையே வலம் வரும் கோடிஸ்வர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாள்.. ஒருவேளைச் சோற்றுக்கு வழி கிடைத்தபின் பிறந்த தம்பியின் அடையாளத்தையே மாற்றி அமைத்து.. உயர்மட்டத்து வாசியாக்கி விட கங்கணம் கட்டிச் செயல் பட்டாள் தீப்தி..

அவளுடைய இருபத்தி இரண்டாம் வயதில் பீம்சிங்கின் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தாள்.. இருபத்தி ஐந்தாம் வயதில் பீம்சிங்கின் இரண்டாவது மனைவியானாள்.. கரணுக்கு அப்போது பதினேழு வயது.. ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்தான்.. தீப்தியின் வாழ்க்கை மாறியபோது அவளது தம்பியின் வாழ்க்கையும் சேர்ந்தே மாறியது.. பெற்றோருக்கு டில்லியில் பங்களா, கார் என்று வாங்கிக் கொடுத்த தீப்தி.. மாத வருமானத்திற்கு என ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸையே அவர்கள் பெயருக்குக் கட்டிக் கொடுத்தாள்.. கரண் தனது என்ஜினியரிங் படிப்பை வெளிநாட்டில் படித்தான்.. அவனது நடை, உடை பாவனைகள் மாறின.. ஏழ்மையாக இருந்தாலும் அழகான தோற்றத்துடன் இருப்பவர்கள் தீப்தியின் பெற்றோர்.. தீப்தியும், கரணும் அவர்களின் அழகை அள்ளிக் கொண்டு பிறந்திருந்தார்கள்.. ஏழ்மை மாறிக் கோடிக்கணக்கில் பணம் கைக்கு வந்தால் அவர்களது தோற்றம் மெருகேறாதா..?

பரம்பரை கோடிஸ்வரர்கள் போல தீப்தியின் பெற்றோர்கள் மின்னினால்.. ராஜ வம்சத்தில் பிறந்தவனைப் போல கரண் அதீத வசீகரத்தோடு மிடுக்காக மிளிர்ந்தான்.. பலர் இருக்கும் இடத்தில் கம்பீரமாக அவன் நுழைந்தால் பார்ப்பவர்களின் கண்கள் அவன் மீதுதான் நிலைத்திருக்கும்.. அந்தப் பக்கம், இந்தப் பக்கம் நகராது..

தீப்தி சாதுர்யமாக காய் நகர்த்தினாள்.. எம்.பி.ஏ படிப்பை முடித்த கரணுக்கு டெல்லியில் சொந்தமாக ஒரு கம்பெனியை ஆரம்பித்துக் கொடுத்தாள்.. பீம்சிங்கின் வேர் டெல்லியில் இருந்தது.. அங்கேயிருக்கும் அவரது உறவினர்களும் நண்பர்களும் பீம்சிங்கின் மைத்துனை பெரிய ஆள் என்று சொல்ல வேண்டும்.. அப்படிச் சொன்னால்தான் அவர் கரணை ஊன்றிக் கவனிப்பார்.. தன் மகளுக்குப் பொருத்தமான ஜோடி கரண்தான் என்று தன் வாயாலேயே சொல்லுவார்..

கோட்டைப் போட்டுக் கொடுத்தால் ரோட்டை அமைத்துக் கொள்ளும் கெட்டிக்காரன் கரண்.. அந்த இளம் வயதில் அவனுக்கென்று கிடைத்த கம்பெனியை வெற்றிகரமாக நடத்திக் காண்பித்தான் அதை விரிவுபடுத்தி வெளிநாடுகளில் கிளை பரப்பினான்..

வெகு விரைவில் டில்லியின் இளந் தொழிலதிபர்களில் அவனும் ஒருவனாகி விட.. பிஸினெஸ் பார்ட்டிகளில் அவனுக்கான முக்கியத்துவம் அதிகரித்தது..

“ஹேய்.. கரண் இஸ் தேர்..”

இளம் பெண்கள் அவனைச் சூழ்ந்து கொள்ள.. பெண்ணைப் பெற்றவர்கள் அவன் தங்களுக்கு மாப்பிள்ளையாக வர மாட்டானா என்று போட்டி போட ஆரம்பித்தார்கள்..

“கரணா.. அவன் பீம்சிங்கின் மைத்துனனாச்சே..” என்று அவன் அடையாளம் காணப்பட்ட காலம் போய்..

“கரண்..? தட் யங் பிஸினெஸ் மேன்..? ஓ.. ஐ நோ ஹிம் வெரி வெல்.. ஹி இஸ் வெரி ஸ்மார்ட் அண்ட் சக்சஸ்ஃபுல் பிஸினெஸ் மேன்..” என்று அவன் தனித்து அடையாளம் காணப்பட்ட காலம் வந்து விட்டது..

“பீம்சிங்.. உங்கள் மைத்துனனுக்குப் பெண் கொடுக்க ஆசைப்படுகிறோம்.. அவரது விருப்பத்தைக் கேட்டுச் சொல்ல முடியுமா..?” பீம்சிங்கின் நண்பர் ஒருவர் பீம்சிங்கிடமே கேட்ட போதுதான் அனுராதாவுக்கான வினை ஆரம்பித்தது..

கரணுக்குப் பெண் கொடுக்க ஆசைப்பட்ட அந்த நண்பருக்கும் ஒரே மகள்தான்.. அனுராதாவை விட ஆறு வயது பெரியவள்.. கரணை விட ஒரு வயது சிறியவள்.. படிப்பை முடித்துத் தந்தையின் தொழிலை மேற்பார்வை செய்து கொண்டிருந்தாள்..

செய்தியைக் கேள்விப்பட்ட தீப்தி..

“கரணைக் கேட்கனும் டார்லிங்.. அவன் பிஸினெஸ்ஸில் இண்ட்ரெஸ்ட்டா இருக்கான்.. மேரேஜ் பண்ணிக்கிட்டா பிஸினெஸ்ஸில் அவனுக்கு இருக்கிற கான்சென்ட்ரேட் போய் விடும்ன்னு நினைக்கிறான்.. அவனோட ஆம்பிசன் பிஸினெஸ்ஸில் பெரிதா அஃசீவ் பண்ணனும்ங்கிறதுதான்.. இந்த யங் ஏஜில் சாதிக்காம எப்போது சாதிக்கிறதுன்னு கேட்கிறான்.. யு நோ.. பார்ட்டியில கலந்துக்கிட்டாலும் அவன் டிரிங்ஸைத் தொட்டுக்கூடப் பார்க்க மாட்டான்.. எத்தனை கேர்ள்ஸ் அவனைச் சுத்தறாங்க.. திரும்பிக் கூடப் பார்க்க மாட்டான்..” என்று இயல்பாகச் சொல்வதைப் போலச் சொல்லிக் கரணனின் தகுதிகளையும், குணாதிசியத்தையும் பீம்சிங்கின் மனதில் பதிய வைத்து விட்டாள்..

கரண் அப்படித்தான் இருந்தான்.. சிகரெட், மதுபானங்களைத் தவிர்த்தான்.. பெண்களிடமிருந்து விலகி நின்றான்.. பிஸினெஸ் பார்ட்டிகளில் கெத்தாக கலந்து கொண்டான்..

“அனுராதாவை இவனுக்கு மேரேஜ் பண்ணி வைத்தால் என்ன..?” தீப்தியிடம் சொல்லி விட்டார்..

ஆஹா.. அதற்கென்ன என்று தீப்தி துள்ளிக் குதித்து விடவில்லை.. தீவிரமான முகபாவத்துடன் மறுத்தாள்..

“இது சரியா வராது டார்லிங்..”

தீப்தியின் மறுப்பு பீம்சிங்கை சீண்டி விட்டது.. அவர் என்னவோ.. ‘செய்தால் என்ன..?’ என்ற ரீதியில்தான் சொல்லி வைத்தார்.. உடனடியாக வந்த தீப்தியின் மறுப்பு அவரது கோபத்தை கிளறி விட்டு விட்டது..

“ஏன் சரியா வராது..? உன் தம்பியின் ஸ்டேட்டஸிற்கு என் மகளின் ஸ்டேட்டஸ் குறைவு என்று நினைக்கிறாயா..?”

இதை பீம்சிங் சொன்ன விதம் தீப்தியைக் காயப்படுத்தியது.. இகழ்ச்சியாக உதட்டை வளைத்து.. என் பணத்தில் படித்து வந்தவன்தானே உன் தம்பி என்ற ஏளனத்துடன் அவர் சொன்னார்..

‘இது கோபத்தைக் காட்ட வேண்டிய நேரமல்ல..’ தீப்தி வெள்ளையாகச் சிரித்தாள்..

“நான் சொல்ல நினைத்ததை நீங்க சொல்லிட்டிங்க பார்த்தீங்களா..? என்ன ஒன்று.. மாற்றிச் சொல்கிறிங்க.. அனுவின் ஸ்டேட்டஸ்க்கு கரண் ஈக்குவல் ஆக மாட்டான் டார்லிங்.. அத்துடன் அனுவின் தாத்தா, பாட்டி அவளுடைய பியூச்சர் பற்றி என்ன பிளான் பண்ணியிருக்காங்களோ.. என்னதான் நீங்க அனுவுக்கு அப்பாவாக இருந்தாலும் அவள் இனியாவின் வயிற்றில் பிறந்த பெண்ணாச்சே.. அவ பியூச்சரை நீங்க மட்டும் முடிவு பண்ண முடியாதே..”

அடுத்த சீண்டல்..! எந்தத் தகப்பனுக்குத்தான் தான் பெற்ற பிள்ளையின் மீது தனக்கு முழு உரிமையில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியும்..? இரண்டாம் தாரத்தின் முன்னால் தன் ஆளுமையை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார் பீம்சிங்..

“அவங்க என்ன என் பெண்ணின் பியூச்சர் பற்றி முடிவு செய்கிறது..? நான் சொல்கிறேன்.. கரண்தான் அனுராதாவை மேரே3 பண்ணிக்கப் போகிற மாப்பிள்ளை.. இதை யாராலும் மாற்றியமைக்க முடியாது.. அண்டர்ஸ்டாண்ட்..”

சிங்கம் போல அவர் லண்டனில் கர்ஜித்துக் கொண்டிருந்த போது.. சென்னையில் அனுராதா நந்தகுமாரின் மார்பில் சாய்ந்து.. கண்மூடி..

“ஐ லவ் யு..” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்..

அவளை இறுக்கி அணைத்து அவளது உச்சந்தலையில் முகத்தைப் பதித்திருந்த நந்தகுமாருக்கு அவர்களது காதல் நிறைவேறுமா.. நிறைவேறாதா.. என்ற சந்தேகமே வரவில்லை.. அவள்.. அவனுடைய ராதை என்று தீர்மானமாக அவன் நம்பினான்.

0Shares

Reviews — Brinthavanathil Nanthakumaran / பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link