Chapter 18

0Shares

“பிருந்தாவனமும்.. நந்தகுமாரனும்..

யாவருக்கும் பொது செல்வமன்றோ..”

அனுராதா துணுக்குற்றாள்.. கல்லூரியில் நடந்த இறுதியாண்டு மாணவர்களின் ஃபேர்வெல் விழாவில் பாடும் கோபிகா ஏன் இந்தப் பாடலைப் பாடவேண்டும்..? பாடலில் ‘நந்தகுமாரன்’ என்ற வார்த்தை வந்ததுதான் அனுராதாவை பாதித்தது.. பிருந்தாவனம் வேண்டுமானால் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கலாம்.. நந்தகுமாரன் அப்படியல்லவே.. அவன் அனுராதாவிற்கு மட்டும் சொந்தமானவன் அல்லவா..?

கோபிகா அதை ஒப்புக் கொள்ள மறுத்தாள்..

“உன்னை நந்தகுமார் காதலித்தால் எனக்கென்ன வந்தது..?” அலட்சியமாக உதட்டைச் சுழித்தபடி கேட்டாள்..

“என் காதலனுடன் நீ கடலை போடுவதை நான் விரும்பவில்லை..” கடுமையாகச் சொன்னாள் அனுராதா..

“உன் காதலனா..? அப்படி அவனை நீ மட்டும் உரிமை கொண்டாடிவிட முடியாது அனுராதா.. அவன் எனக்கும் காதலன்..”

அனுராதாவினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. எப்போது நந்தகுமாரைப் பற்றிப் பேசினாலும் கோபிகா இப்படித்தான் விதண்டாவாதம் செய்கிறாள்.. நந்தகுமார் அனுராதாவிற்கு மட்டுமே சொந்தமானவன் என்பதை ஒப்புக் கொள்ளாமல் சண்டித்தனம் செய்கிறாள்..

“என் காதலன் உனக்கும் காதலனாக இருக்க முடியாது கோபிகா..”

“நான் உனக்கு சீனியர்.. பெயர் சொல்லிக் கூப்பிடாதே..”

“அதற்கென்ன.. அப்படியே செய்து விட்டால் போச்சு.. அக்கான்னு கூப்பிடவா..? இல்லை.. ஆண்ட்டின்னு கூப்பிடவா..?”

அனுராதா எரிச்சலுடன் கேட்டாள்.. கோபிகாவின் முகம் கோவத்தில் கோவைப் பழமானது.. அவள் சும்மாவே தன்னை எல்.கே.ஜி படிக்கும் பப்பாவைப் போல நினைத்துக் கொண்டு.. கொஞ்சிக் கொஞ்சிப் பேசிக் கேட்பவரைக் கதறடிப்பாள்.. அவளைப் போய் அனுராதா ‘ஆண்ட்டி’ என்று விளித்தால் மகிழ்ந்து போவாளா என்ன..?

“நீ வேண்டும்ன்னா ஃபீடிங் பாட்டிலை மறக்காத ‘பப்பா’ வாக இருக்கலாம்.. அதுக்காக அக்கா, ஆண்ட்டின்னு செல்லம் கொஞ்சினா நல்லா இருக்காது.. சொல்லிட்டேன்..”

“இப்ப மட்டும் எல்லாமும் நல்லாவா இருக்கு..?”

“எதைச் சொல்கிற..?”

“நீ என் நந்துவைச் சுற்றிச்சுற்றி வர்றதைச் சொல்கிறேன்.. ஐ டோன்ட் லைக் இட்..”

“பட்.. ஐ லைக் இட் வெரிமச்.. யு நோ.. அது என்னம்மா உன் நந்துன்னு சொந்தம் கொண்டாடற..? இப்படித்தானே சொன்னேன்.. நானும் அவனைக் காதலிக்கிறேன்..”

“அவர் உன்னைக் காதலிக்கிறாரா..?”

“என் காதலை ஏத்துக்கிட்டானே.. அது போதாதா..?”

“பொய்..”

“பொய்யா இருந்தா.. ஏன்ம்மா.. என் பர்த்டேவுக்கு என்னுடன் மட்டும் தனியே செலிபரேட் பண்ணனும்.. ஊம்..?”

கோபிகாவின் புருவங்கள் கேலியாக உயர்ந்ததில் பொடிப் பொடியாக நொறுங்கிப் போனாள் அனுராதா… அதை இல்லையென்று அவளால் சொல்லிவிட முடியுமா..? நட்சத்திர ஓட்டலில் அவளுடன் விருந்து சாப்பிடச் சென்றதாக நந்தகுமாரே ஒப்புக் கொள்கிறானே..

“நான் கூப்பிட்டால் அவன் எங்கு வேண்டுமானாலும் வருவான்..”

கோபிகாவின் குரலில் ‘கூப்பிட்டுக் காட்டவா..?’ என்ற சவால் இருந்தது.. அந்த அறைகூவலைக் கண்டு அனுராதா எதற்காக பயந்தாள்..? ‘கூப்பிட்டுப் பார்’ என்று சவாலை ஏற்றுக் கொள்ள அவளால் ஏன் முடியவில்லை..

‘இவள் கூப்பிட்டு.. அவனும் போய் விட்டால்..?’

இதுதான் அனுராதாவின் பயமாக இருந்தது.. அவள் மனதுக்குள் நடுங்கினாள்.. அவளது காதல் பலமில்லாமல் பலவீனமாக இருப்பதைப் போல அவளுக்குத் தோன்றியது..

கோபிகா நந்தகுமாருக்கும் அவளுக்கும் இடையே நெருக்கமான உறவு இருக்கிறது என்று கல்லூரி முழுவதும் பரப்பி விடுவதைப் பற்றி நந்தகுமார் அறியாமல் இருப்பானா..? அறிந்தும் ஏன் அதை அனுமதித்தான்..? கோபிகாவை ஏன் கண்டிக்கவில்லை..?

இதுதான் அனுராதாவின் மனதைக் குடைந்தது.. இதைப் பற்றித்தான் அர்ஜூனும் நந்தகுமாரை எச்சரித்திருந்தான்..

“விடுடா.. பாவம்.. வேண்டாம்ன்னு ரிஜக்ட் பண்ணின பின்னாலும் ஃபிரண்டலியாப் பேசிப் பழகறா.. அவளைப் போய் என்னத்தைக் கண்டிக்கிறது..?”

நந்தகுமாரின் இந்த பரிதாபம்தான் அவனுடைய காதலுக்கு தீ மூட்டியது.. அனுராதாவை அவனை விட்டுப் பிரித்தது.. அவளைத்தேடி உலகம் முழுவதும் சுற்ற வைத்தது..

கோபிகா ஆபத்தானவள்.. கரண் அவளை எளிதாக இனம் கண்டு கொண்டான்.. வெள்ளைச் சிரிப்புடன் இருப்பவளின் மனம் முழுவதும் கருமை என்பதை அவனை விடச் சுலபமாக வேறு எவரால் இனம் காண முடியும்..? தீப்தியுடன் பிறந்தவனுக்கு.. தீப்தியைப் போன்ற குணமுள்ளவளைக் கண்டு கொள்வது கடினமா..?

“உனக்கும்.. எனக்கும்.. ஒரே குறிக்கோள்தான்.. அனுராதாவிடமிருந்து நந்தகுமாரைப் பிரிக்க வேண்டும்..”

கோபிகாவைச் சந்தித்தவன் பேசிய முதல் வார்த்தைகளே இவைதான்.. நேரடியான அவனது அணுகுமுறையில் கோபிகா தன் போலித்தனமான நடிப்பைக் கைவிட்டு..

“யெஸ்..” என்று தலையை ஆட்டி விட்டாள்..

“நான் பிளான் போட்டுக் கொடுக்கிறேன்.. நீ அதை செய்து முடித்தால் போதும்.. நாம் நினைப்பது நடந்து விடும்..”

“டன்..”

“இதற்காக உனக்குப் பரிசும் உண்டு..”

“ஓ.. தேங்க் யு..”

கேபிகா குதூகலமானாள்.. கரும்பும் தின்னக் கொடுத்து.. அதற்குக் கூலியும் கிடைக்கிறதென்றால் அவள் சந்தோச ஊஞ்சலில் ஆடி விட மாட்டாளா..?

கரண் வேகமாக செயல்பட்டான்.. ஒரு நொடியைக் கூட வீணடிக்காமல் கோபிகாவிற்கு திட்டம் வகுத்துக் கொடுத்தான்.. அதன்படி அனுராதா கல்லூரியில் இருக்கும் போது கோபிகா அவளை வம்புக்கு இழுத்தாள்.. நந்தகுமாரனை அனுராதா நெருங்கி விடாதபடி அட்டையைப் போல அவனுடன் ஒட்டிக்கொண்டு சுற்றினாள்.. நந்தகுமாரின் கவனத்தை அனுராதா தன் பக்கம் திருப்ப முயன்றால் கேலிச்சிரிப்புச் சிரித்து.. வெறுப்பேற்றினாள்..

“அவன் தானா உன்னை நினைக்கனும்.. நீ அவனை நினைக்க வைக்கக் கூடாது.. என்னைப் பார்.. உன்னைப் போல அவனை நான் டிஸ்டர்ப் பண்ணினதே இல்லை..”

“நான் அவரை டிஸ்டர்ப் பண்ணுகிறேனா..?”

“யெஸ்.. நீ செய்கிறது டிஸ்டர்ப்தான்.. வேறு என்ன..? அவனுக்கு உன்மீது உண்மையான காதல் இருந்தால்.. நீ அவனைக் கூப்பிடாமலே அவனாக உன்னைத் தேடி வந்திருப்பானே..”

‘அதுதானே.. ஏன் வரவில்லை..?’

அனுராதா விக்கித்தாள்.. கோபிகாவின் கேள்விகளுக்கு அவளிடம் பதிலில்லை.. ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும் போலத் துடித்துப் போனாள்.. அவளுக்குத் தெரியாது.. அனுராதாவை நந்தகுமார் ஒர்நொடிகூட மறக்கவில்லை என்பது.. அவனது மனம் அனுராதாவைத்தான் தேடிக் கொண்டிருந்தது.. அதை அனுராதா அறிந்து கொண்டு விடாமலிருக்க என்னவெல்லாம் சாகசம் செய்ய முடியுமோ.. அத்தனை சாகசங்களையும் செய்தாள் கோபிகா.. அவளுடைய அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று நாடகமாடி நந்தகுமாரை உதவிக்கு அழைத்துக் கொண்டு ஊரைச் சுற்றினாள்.. அவள் தற்செயலாக அழைத்துக் செல்வதைப் போல.. நந்தகுமாரை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றிய இடங்கள் எல்லாம் மகாபலிபுரம், முட்டுக்காடு, மாயாஜால் போன்றவையாகவே இருந்தன.. ஈசி ஆர் ரோட்டில்தான் கோபிகாவின் வீடு இருக்கிறது என்று அனுராதாவுக்குத் தெரியுமா என்ன..? வீட்டிற்குப் போகும் வழியில் பணஉதவி செய்ய தகப்பனாரின் நண்பர்கள் வருகிறார்கள் என்று சொல்லி அந்த இடங்களுக்கு நந்தகுமாரை துணைக்கு அழைத்துக் கொண்டு போனாள் என்பதை நந்தகுமார் சொன்னாலும் அனுராதாவால் நம்ப முடியுமா..?

அந்தந்த இடங்களில் அவர்கள் நெருக்கமாக இருப்பதைப் போல செல்போனில் படம் பிடித்துக்காட்ட கரண் இருந்தான்.. அவற்றை உண்மையென்று சாதிக்க கோபிகா இருந்தாள்..

“ஸாரி டு ஸே அனுராதா.. இங்கேயெல்லாம் நான் போனதும், அவர்கள் என் கண்ணில் பட்டதும், நான் செல்போனில் படம் பிடித்ததும் தற்செயலாக நடந்தவை.. பிலீவ் மீ..” கரண் நாகரிகமாக வலியுறுத்தினான்..

“நான் கூப்பிட்டா அவன் எங்கே வேண்டும்னாலும் வருவான்னு சொன்னேனே.. பார்த்துக்க..” கோபிகா கொக்கரித்தாள்

அனுராதா சோர்ந்து போனாள்.. நந்தகுமாரிடம் விளக்கம் கேட்டுக் கேட்டு ஓய்ந்து போனாள்.. அவன் யாரைக் காதலித்தால் எனக்கென்ன…? நானும் அவனைக் காதலிக்கிறேன் என்று மனச்சாட்சியில்லாமல் பேசும் கோபிகாவை வெல்ல அவளால் முடியவில்லை இதோ.. மேடையில் நந்தகுமாரன் உனக்கு மட்டும் சொந்தமானவனல்ல என்ற திமிருடன் பாடுகிறாளே… இதை முறியடித்து எதிர்ப்பாட்டுப் பாட அனுராதாவினால் முடிந்ததா..?

“பிருந்தாவனமும்.. நந்தகுமாரனும்..

யாவருக்கும் பொது செல்வமன்றோ..?

ஏனோ ராதா.. இந்தப் பொறாமை..?

யார்தான் அழகால் மயங்காதவரோ..?”

கோபிகாவின் கேலிச் சிரிப்பு.. உனக்கு என்மீது பொறாமை என்று அனுராதாவைச் சீண்டியது.. தாள முடியாத அனுராதா கண்களை மூடிக் கொண்டாள்.. மூடப் படாத காதுகளில் கோபிகாவின் பாடல் நுழைந்தது..

“புல்லாங்குழலிசை இனிமையினாலே..

உள்ளமே ஜில்லெனத் துள்ளாதா..?

ராகத்திலே.. அனுராக மேவினால்

ஜகமே ஊஞ்சலில் ஆடாதா..?”

அனுராதாவுடன் கோபிகாவும் இணைந்து கொள்வாளாம்.. ‘என்ன தேவைக்கு..?’ வெறுத்துப் போனாள் அனுராதா..

“கண்ணனின் உன்தை லீலையை நினைத்தால்..

தன்னையே மறந்திடச் செய்யாதா..?

ஏனோ ராதா.. இந்தப் பொறாமை..?

யார்தான் அழகால் மயங்காதவரோ..”

அனுராதாவிற்கு அந்த இடத்தை விட்டே ஓடிவிட வேண்டும் போல இருந்தது.. அவள் வீட்டுக்கு ஓடினாள்.. அன்று இரவு அவளுக்கு செல்போனில் வந்த படத்தில் நந்தகுமாரனும், கோபிகாவும் கண்மூடிச் சரிந்திருக்க.. இந்தியாவை விட்டே ஓடிப் போனாள்.. காதலியைத் தேடிப் போன நந்தகுமார் முதன் முதலாக பீம்சிங்கை சந்தித்தான்..

0Shares

Reviews — Brinthavanathil Nanthakumaran / பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link