Chapter 22
கண்களை உறுத்தாத மெல்லிய ஒளி.. இசையும் அப்படித்தான்.. சன்னமான குரலில் ஒலித்த ஆங்கிலப் பாடல்.. கை கோர்த்து ஆணும், பெண்ணுமாக இணைந்து ஆட ஆரம்பித்த அந்த அற்புத வேளையில் அனுராதாவின் முன்னால் கரம் நீட்டி அழைத்தான் நந்தகுமார்..
அவனது பிளான் அனுராதாவால் அங்கீகரிக்கப்பட்டு அழகான அடுக்கு மாடிக் கட்டிடங்களை கட்டி முடித்து விட்டார்கள்.. ஒவ்வொன்றிலும் தன் தனி முத்திரையைப் பதித்து செயல் திறமையை நிரூபித்திருந்தான் நந்தகுமார்.. ஆனானப்பட்ட பீம்சிங்கின் விழிகளிலேயே பாராட்டு தெரிந்து விட்டது.. வாய் வார்த்தையில் சொல்லாவிட்டாலும் நந்தகுமாரை அவர் பார்த்த பார்வை.. காரணம் இல்லாமலா கிஷோர் இவனை பரிந்துரை செய்தான் என்று சிலாகித்தது..
கரண் கடுப்பாகி இருந்தான்.. அனுராதாவின் முக்கியமான புராஜெக்ட் அது.. அதில் தனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்று அவன் நினைத்திருந்தான்.. அவனால்தான் அந்த புராஜெக்ட் வெற்றிகரமாக முடிந்தது என்று பீம்சிங் நினைக்க வேண்டும்.. அனுராதா நம்ப வேண்டும்.. அவனில்லாமல் அனுராதா தனித்து இயங்கவே கூடாது என்று அவன் போட்டு வைத்திருந்த சதித் திட்டங்கள் தவிடு பொடியாகி விட்டன.. அனுராதா அந்த முக்கிய புராஜெக்டை கரணின் தலையீடு இல்லாமல் நந்தகுமாரின் உதவியோடு தனித்து முடித்துக் காட்டி விட்டாள்..
கரணின் கண்ஸ்ட்ரக்சன் கம்பெனிக்குக் கிடைக்காமல் கை நழுவிப் போன புராஜெக்ட் அந்த புராஜெக்ட்.. வெளிநாட்டுக் கம்பெனியொன்றின் அலுவலகத்திற்காகக் கட்டப்பட்ட அடுக்கு மாடிக்கட்டிடங்களுக்கான காண்ட்ராக்ட்… அந்தக் கம்பெனி மைசூரில் ஐ.டிக் கம்பெனிகளை ஆரம்பிக்க உத்தேசித்திருந்தது.. அதற்கான கட்டிடங்கள் அழகுற வடிவமைக்கப் பட்டிருந்ததில் மகிழ்ந்து போனவர்கள் அடுத்து அவர்கள் கட்ட முடிவு செய்திருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலைக் கட்டும் காண்ட்ராக்டையும் ‘அனுராக்’ கண்ஸ்ட்ரக்சன் கம்பெனிக்கே கொடுத்து விட்டார்கள்.. மகளின் கம்பெனி முன்னேறுவதில் பீம்சிங் பெருமையாக கரண் இடிந்து போனான்.. அடுத்தடுத்த தோல்விகளை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..
அந்தக் கம்பெனியின் காண்ட்ராக்ட் தனக்குத்தான் கிடைக்க வேண்டும் என்று அவன் இரண்டு வருடங்களாக முயற்சி செய்தும் அவனுடைய கம்பெனிக்கு அவர்களின் புராஜெக்டைக் கொடுக்காமல் புதிதாக ஆரம்பிக்கப் பட்டிருந்த ‘அனுராக்’ கண்ட்ஸ்ரக்சன் கம்பெனிக்கு காண்ட்ராக்டைக் கொடுத்து விட்டதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.. அவனுடைய கண்ஸ்ட்ரக்சன் கம்பெனியின் வளர்ச்சிக்கு இந்த காண்ட்ராக்ட் பெருத்த அளவில் கை கொடுத்திருக்கும்.. எப்படியாவது கரணின் பக்கம் அந்தக் கம்பெனியின் பார்வையைத் திருப்பிவிட வேண்டும் என்ற துடிப்புடன் பிளான போட்டுக் கொடுத்தால், அனுராதா அதை நிராகரித்து விட்டு நந்தகுமாரின் வரைபடத்திற்கு ஒப்புதல் கொடுத்து விட்டாள்.. கண்டிக்க முயன்ற பீம்சிங்கை அவர் போக்கிலேயே பேசி அமைதிப் படுத்தி வென்று காட்டி விட்டாள்..
“ஹாய்.. கரண்..”
மைதா மாவு நிறத்தில் கரிய முடியை விரித்துப் போட்டு வண்டுக் கண்களுடன் அவன் நெஞ்சத்தைப் பந்தாடினாள் ஷாலினி.. கரணின் மீது மையல் கொண்டவள்.. அசையாத கரணின் மனமும் அசைந்தது அவளிடம்தான்.. அனுராதாவின் பெயரில் இருக்கும் கோடிக் கணக்கான சொத்துக்களை நினைத்துத் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்வான்.. இன்று அது முடியவில்லை.. அவனுடைய கண்ணுக்கு முன்னால் அனுராதா நந்தகுமாரின் கரத்தில் தன் கரத்தை வைத்து எழுந்து அவனுடன் நடனமாட ஆரம்பித்து விட்டாள்.. பீம்சிங் அதைத் தடுக்கவில்லை என்பதில் கரணின் ரத்தம் கொதித்தது.. அருகிலிருந்த மதுக்குவளையை எடுத்துத் தன் தொண்டையில் சரித்தான்..
“எனோஃப் கரண்.. ஆல்ரெடி நீங்க அதிகமா குடித்திருக்கீங்க..” ஷாலினியின் அக்கறை அவன் மனதை வருடியது.. வேறு ஒரு தினமாக இருந்திருந்தால் அவள் அவனிடம் உரிமை எடுத்துப் பேசியதை விரும்பியிருக்க மாட்டான்.. முகச் சுளிப்பில் அவள் மனதை நோகடித்திருப்பான்.. அன்றைய தினம் அவன்மனம் நோவு கொண்டிருந்ததே.. அதனால்..
“ஜஸ்ட் ஒன் கிளாஸ் டியர்..” என்று ஷாலினியிடம் குழறினான்..
ஷாலினியின் முகம் மலர்ந்து விட்டது.. அரிதாக மலரும் குறிஞ்சி மலரைக் கண்டு விட்ட குதூகலம் அவளுக்கு..
“ஒன்லி ஒன் கிளாஸ்தான் அலோவ்டு.. ஓகே..”
பெண்டாட்டி போல அவள் கொஞ்ச.. கரணுக்கு போதை தலைக்கேறி விட்டது.. அவள் கையைப் பிடித்து இழுத்து நடனமாடுகிறேன் பேர்வழியென்று கட்டிப் பிடித்தான்.. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட ஷாலினி அவன்மீது அப்பினாள்.. இருவரும் கட்டித்தழுவி பார்ட்டி ஹாலைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள்..
நந்தகுமாரும் அனுராதாவும் சுற்றுப்புறத்தை மறந்து ஏதோ ஓர் மாய உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள். அனுராதாவின் மீதிருந்து வந்த நறுமணம் அவனை மயக்கியது.. நந்தகுமாரின் நெருக்கம் அனுராதாவை கிளர்ச்சியுறச் செய்தது.. அவளது வளவளப்பான இடுப்பில் ஆழப் பதிந்த அவனது கரத்தின் ஸ்பரிசத்தில் அவள் காய்ச்சல் வந்தவளைப் போல நடுங்கினாள்.. அவன் தோள்மீது கைபோட்டு.. முகம் பார்த்து கண்களால் கதை பேசியபடி அவள் அவனுடன் நெருங்கி நின்ற விதம் கரணுக்கு ஆத்திரமூட்டியது..
அதற்கு முன்னால் பல பார்ட்டிகளில் கரணுடன் அனுராதா நடனமாட நேர்ந்திருக்கிறது.. அந்தச் சமயங்களில் எல்லாம் அவள் கரணிடம் பட்டும் படாமல் தள்ளி நிற்பாள்.. அவளது இடுப்பை அவன் தொட அனுமதிக்க மாட்டாள்.. மீறி கரண் தொடும் போது அருவெருப்புடன் விலகி விடுவாள்..
‘இப்போ அவன் தொட்டா மட்டும் மந்திரத்தில மயங்கினவளைப் போல ஒட்டிக்கிறா..’ கரணின் மனதில் வன்மம் வளர்ந்தது..
நந்தகுமார் தொடுவதில் மட்டும் அனுராதாவின் உணர்வுகள் கிளர்கின்றன என்ற உண்மை கரணைச் சுட்டது.. நந்தகுமாரால் மட்டுமே அனுராதாவின் உணர்வுகளைத் தட்டி எழுப்ப முடிகிறது.. அவனால் மட்டுமே அவள் மனதில் இடம் பிடிக்க முடிகிறது என்றால் கரண் அனுராதாவை மணந்து கொள்வதால் என்ன பயன்..?
“நீ அவளுடன் குடும்பம் நடத்த மேரேஜ் பண்ணிக்கப் போகிறதில்ல கரண்.. நமக்குத் தேவை அவள் பெயரில் இருக்கும் கோடிக்கணக்கான சொத்துக்கள்..”
ஷாலினியிடமிருந்து கரணைப் பிரித்து இழுத்து வந்து ஓரமாகக் கிடந்த சோபாவில் அமிழ்த்திய தீப்தி சீறினாள்..
“ஐ டோன்ட் கேர்..” கரணும் பதிலுக்குச் சீறினான்..
“அனுராதாவை நீ மேரேஜ் பண்ணியே ஆகனும் கரண்.. அதுக்காகத்தான் இத்தனை வருசமா ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்தியிருக்கோம்.. அவள் காதலை பிரித்து.. அவளைத் தனிமைப் படுத்தி.. அவளுக்கேற்ற ஹஸ்பெண்ட் நீதான்னு பீம்சிங்கை நம்ப வைத்துன்னு கிளைமாக்ஸீக்கு வந்துட்டோம்.. இப்போது போய் இந்த ஷாலினி மேல இண்ட்ரெஸ்ட் காமிக்கிறயேடா..”
“ஷாலினி லைக்ஸ் மீ.. தட் ப்ளடி அனுராதா லவ்ஸ் தட் ராஸ்கல் நந்தகுமார்.. ஐ ஹேட் தெம்..”
கரண் தீப்தியைத் தள்ளி விட்டு ஷாலினியுடன் ஆடுவதைப் போலக் கட்டிப் பிடித்துக் கும்மாளம் போடப் போய்விட்டான்..
அனுராதாவின் இடுப்பை வளைத்து சங்கீதத்திற்கு ஏற்ப இசைந்து ஆடியபடி அவளது காதோரமாக ரகசியக் குரலில் பேசி அவளை லஜ்ஜை அடையச் செய்து கொண்டிருந்த நந்தகுமார்.. கரணும் ஷாலினியும் கட்டிப் புரண்டு கொண்டிருந்ததைப் பார்த்து விட்டான்.. நடனமாடியபடியே தன் செல்போனை எடுத்தவன் கரணின் களியாட்டத்தை போட்டோ பிடித்து விட்டான்..
மறுநாளின் செய்தித்தாள்களில்.. இளந்தொழிலதிபரின் கும்மாளம் என்ற தலைப்பில் கரணும், ஷாலினியும் அதீத நெருக்கத்துடன் இருந்த படங்கள் வெளியாகி இருந்தன.. பீம்சிங் அவற்றை தீப்தியின் முகத்தில் வீசிக் கத்தினார்..
“பார்ட்டியில் உன் தம்பி ஆடிய ஆட்டத்தை நானும் பார்த்தேன் தீப்தி.. உன் தம்பி ‘பிக் மேன்’ என்கிறதினால நான் என் மகளை அவனுக்கு மேரேஜ் பண்ணி வைக்கலாம்ன்னு நினைக்கலை.. சில குவாலிட்டீஸ் அவனிடம் இருந்தது.. இப்ப அது இல்லை..”
“ரிலாக்ஸ் டியர்.. பார்ட்டியில் இதெல்லாம் சகஜம்தானே..” தீப்தி பீம்சிங்கை சமாதானப் படுத்த முயன்றாள்..
“டான்ஸ் சகஜம்தான்.. பட்.. உன் தம்பியும் அந்தப் பெண்ணும் டான்ஸ்தான் ஆடிக்கிட்டு இருக்காங்களா..?”
“ப்ளீஸ்.. நேற்று அவன் அதிகமா டிரிங்க் பண்ணியிருந்தான்..”
“உன் தம்பி டிரிங்ஸை விரலால் கூடத் தொடமாட்டான்னு சொன்னியே.. அவனும் அப்படித்தானே ஆக்ட் பண்ணினான்..?”
“அது ஆக்ட் இல்லை.. நிஜம்..”
“நேற்று அவன் ட்ரிங்க் பண்ணியது பொய்யா..?”
“அதுவும் நிஜம்தான்.. பட்.. அதற்கு ரீசன் யாரு..? உங்க டாட்டர்தானே..?”
“வாட் ரப்பிஷ்..!”
“ஹ.. அவள் அந்த நந்தகுமாருடன் டான்ஸ் ஆடுகிறதைப் போல ரொமான்ஸ் பண்ணினா.. அதைத் தாங்கிக் முடியாம கரண் டிரிங்ஸ் சாப்பிட்டுட்டு ஷாலினியுடன் கூத்தடிச்சுட்டான்.. தப்பு செய்தது கரண்ணா.. தப்பு செய்ய வைத்தது அனுராதா.. மைண்ட் இட்..”
கொதிப்புடன் நினைவுறுத்தினாள் தீப்தி.. பீம்சிங் உஷ்ணமானார்.. தீப்தி அனுராதாவைக் குற்றம் சொல்வதை அவர் விரும்பவில்லை..
“பர்ஸ்ட் டைண்ட் யுவர் டங் தீப்தி.. நந்தகுமார் அனுராதாவின் எக்ஸ் லவ்வர்.. அவன் மீது அவளுக்கு இன்னமும் ஷாப்ட் கார்னர் இருக்கிறது.. அதற்காக உன் தம்பியைப் போல அவங்க லிமிட்டைக் கிராஸ் பண்ணி பப்ளிக்கா பார்ட்டியிலே மத்தவங்க முகம் சுளிக்கிறதைப் போல பிஹேவ் பண்ணலை.. அனுராதாவின் இந்த வெற்றிக்குப் பின்னால் நந்தகுமார் இருக்கிறான்.. அவனுடன் அவள் அந்த வெற்றியை செலிபரேட் பண்ண டான்ஸ் ஆடினா..” தட்ஸ் ஆல் எனும் விதமாக பீம்சிங் பேச்சை கத்தரித்துக் கொண்டார்.
Reviews — Brinthavanathil Nanthakumaran / பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.