Chapter 01

0Shares

வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்த அந்த திருமண மண்டபத்தின் வாசலில் தன் டிவிஎஸ் அப்பாச்சியை நிறுத்தி விட்டு இறங்கினான் யதுநந்தன்.. அவனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி கூட இறங்கிய முரளி..

“ஏன்டா.. எப்போதிலிருந்து இந்த பெரிசுகள் செய்யும் வேலைகளை எல்லாம் செய்ய ஆரம்பித்தாய்..?” என்று விசாரித்தான்..

“கிண்டலா..?” ஒரு மாதிரியான தொனியில் வினவினான் யதுநந்தன்..

“ஆமாம் என்கிறேன்.. அதுக்கு இப்ப என்னங்கிற..?”

“எரிச்சலைக் கிளப்பாமல் பேசாமல் கூடவா.. நானே கல்யாண மண்டபத்தை விசாரிக்கும் வேலையை என் தலையில் கட்டிவிட்டார்களேன்னு நொந்து நுலாகி வந்திருக்கிறேன்.. நீ வேறு.. கூட கொஞ்சம் குழப்பாதே..”

“கல்யாண மண்டபத்தை விசாரிக்கும் வேலையைத் தானே உன் தலையில் கட்டியிருக்கிறார்கள்..? கல்யாணப் பெண்ணையே உன் தலையில் கட்டவில்லையே..”

“அதுவேறு ஆசையா உனக்கு..? யாருக்கு வேண்டும் அந்தச் சுமை..? இந்தத் தாலியைக் கட்டிவிட்டு.. சாயந்திரம் ஐந்து மணிக்கு வீட்டிற்கு ஆஜாராகும் வேலையெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது.. கொடுமைடா  சாமி.. எப்படித்தான் இந்தக் கல்யாணத்தை – பல்லைக் கடித்துக் கொண்டு பண்ணிக் கொள்கிறாங்களோ..”

“அது கல்யாணம் பண்ணிக் கொள்கிறவனின் பாடு.. உனக்கும் எனக்கும் என்னவந்தது..? வந்தோமா.. நாலு ஃபிகரை சைட் அடித்தோமா.. பந்தியில் உட்கார்ந்து சாப்பாட்டை ஒரு கை பார்த்துவிட்டு.. வீட்டில் கொடுத்த மொய் பணத்தை எழுதினோமா… நடையைக் கட்டினோமான்னு இல்லாமல் வீணாய் ஏன் கல்யாணம் பண்ணிக் கொள்கிறவங்களைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிற..?”

“அப்படிங்கறே..?”

“அப்படித்தாண்டாமச்சி..”

“இந்த வள்ளுவர் இருக்கிறாரே.. அவர் சரியான ஆள்..”

“எந்த வள்ளுவரைச் சொல்கிற..? நம் தெருமுனையில் நாயர் டீக்கடைப் பக்கத்தில் பெட்டிக் கடை வைத்திருக்கிறாரோ அந்த வள்ளுவரையா சொல்கிற..?”

“உன் புத்தி இருக்கிறதே.. அது இப்படித்தான் புல்மேயப் போகும்.. ஏண்டா.. சின்ன வயதில் படித்த திருக்குறளெல்லாம் உனக்கு நினைவில் இருக்கிறதா.. இல்லையா..?”

“ஏன் நினைவில் இல்லை..? ‘யான் நோக்க நிலம் நோக்கும்..'”

“ஆரம்பிச்சுட்டியா.. இதை மட்டும் நொட்டை விட்டுக் கொண்டு சொல்லு.. இதை எழுதிய திருவள்ளுவரை இப்போது நினைவுக்கு வருகிறதா..?”

“ஓ.. நீ வள்ளுவரைச் சொல்கிறாயா..?”

“ஆமாம்டா.. ஆமாம்..”

“நான் பெட்டிக்கடை வள்ளுவரைத்தான் சொல்கிறாயோன்னு நினைத்து விட்டேன்.. ஹி.. ஹி..”

“சிரிக்காதே.. சகிக்கல்லை.. வாசலில் வரவேற்கிறதுக்கு டீன்ஏஜ் பெண்களாய் நிற்கிறாங்க.. அடக்கிவாசி..”

“அலையாதேடா..”

“யார்..? நான்..? அலைகிறேன்..? நேரம்டா..”

“ஆமாம்.. வள்ளுவரை ஏன் இப்போது இழுத்த..”

“அவர்.. ‘இடுக்கண் வருங்கால் நகுக..’ன்னு சொல்லி வந்திருக்கிறார்..”

“அப்படின்னா..?”

“இதுக்கு உனக்கு அர்த்தம் தெரியாதே.. ‘யான் நோக்க நிலம் நோக்கும்’ என்பதற்கு மட்டும் அர்த்தத்தை பிட்டுப்பிட்டு வைப்பாயே.. துன்பம் வரும்போது அதைச் சிரிப்பாக மாற்றிக் கொள்ளணுமாம்..”

“இதையெல்லாமாவள்ளுவர் எழுதி வைத்திருக்கிறார்..?”

“இதுக்கு மேலேயும் எழுதி வைத்திருக்காருடா ராசா.. அவர் அறத்துப்பால்.. பொருட்பால்.. இன்பத்துப்பால்ன்னு மூன்று வகையாய் பிரித்து எழுதினார்.. உன் மண்டையில்தான் இன்பத்துப்பாலைத் தவிரவேறு எதுவும் ஏற மாட்டேன் என்கிறதே..”

“விடு மச்சி.. இந்த வயதில் இதெல்லாம் சகஜம்..”

“அப்போ.. இன்னும் கொஞ்சம் வயசானால் நீ மாறி விடுவாயாக்கும்..?”

“அதை எதற்கு வெட்டியாக செய்யச் சொல்கிற..?”

“அதுதானே.. கிழக்கே உதிக்கும் சூரியன் வடமேற்கே உதிக்கலாம்.. ஆனால் நீ மட்டும் மாறவே மாட்டாய்..?”

“அதனால் உனக்கென்ன நஷ்டக்கழுதை வந்து விட்டது..?”

“எனக்கென்ன வந்தது..? அதோ… அங்கே வரவேற்பில்தான் சூப்பர் ஃபிகர் ஒன்னு வந்து நிற்குது..”

“அதற்கு என்னை என்னடா செய்யச் சொல்கிற..?”

“இங்கே நின்று பேசுவதை.. அந்தப் பெண்களுக்கு முன்னால் நின்று பேசலாமே..”

“ஏண்டா.. அதுகளுக்கெல்லாம் அவ்வளவு வெயிட் கொடுக்கணுமாடா..?”

“உனக்குப் பெண்களைப் பிடிக்காவிட்டால் ஒதுங்கி நில்.. என் வழியை மறைக்காதே..”

“நான் என்ன உன் முகத்தை மறைத்தா நின்று கொண்டு இருக்கிறேன்..?”

“இது உன் சொந்தக்காரங்க வீட்டுக் கல்யாணம்..”

“அதையேண்டா நினைவு படுத்துகிற..? ஒரே நாளில் மூன்று கல்யாணம்.. பாட்டியும் தாத்தாவும் ஒரு கல்யாணத்தை அட்டெண்ட் பண்ணப் போய்விட்டாங்க.. அப்பாவும் அம்மாவும் இன்னொரு கல்யாணத்தில் ஆஜராக வேண்டுமாம்.. அதனால் என்னைப் பிடித்து இங்கே அனுப்பி வைத்திருக்கிறாங்க..”

“உன் தங்கை இருப்பாளே..”

“அவளுடைய ஃப்ரெண்டுக்கு கல்யாணமாம்.. ஏன் தான் ஊரெல்லாம் இப்படிக் கல்யாணம் பண்ணிக் கொள்ள அலைகிறான்களோ..”

யதுநந்தன் விளக்கெண்ணெயைக் குடித்தவன் போல் முகத்தை வைத்துக் கொண்டு பேசிய தினுசில் முரளிக்கு சிரிப்பு வந்து விட்டது..

“உன்னைப் போலவே ஊரில் இருக்கிறவங்க எல்லாம் நினைத்தால் விளங்கிவிடும்.. பேசாமல் வாடா.. நான் உன்கூடத் துணைக்கு வந்தவன்.. உன்னை முன்னால் விட்டுத்தான் நான் பின்னால் வந்தாக வேண்டும்..”

“ஓ.. அதுக்குத்தான் இந்த ஓட்டு ஓட்டினாயா..? வந்து சேரு..”

அவர்கள் இருவரும் திருமண மண்டபத்தின் வாசல் படிகளில் ஏறி.. வரவேற்புப் பகுதியை அணுகினார்கள்..

நீண்ட மேஜையின் மேல்.. பூ வேலைப்பாடு செய்த விரிப்பு போடப்பட்டிருக்க.. அதன்மேல் சந்தனப் பேழா.. பன்னீர் செம்பு.. பூக்குவியல் கொண்டதட்டு.. எல்லாம் வைக்கப்பட்டிருந்தது.. மேஜைக்கு அந்தப் பக்கமாய் இருபது வயது மதிக்கத்தக்க இளம் பெண்கள் – நால்வர் நின்றிருந்தனர்..

முரளி அவர்களைப் பார்த்ததும் பிரேக் பிடித்தது போல் நின்று விட்டான்.. முடியைக் கோதிய வண்ணம் ஏதோ முக்கியமான விஷயத்தை யதுநந்தனிடம் பேசுவது போன்ற முகபாவனையை வரவழைத்துக் கொண்டு அந்தப் பெண்களை ஜாடையாய் பார்த்தவாறு யதுநந்தனிடம் பேசினான்..

“யது..”

“சொல்லு..”

“அந்த அகர்வால் இருக்கிறானே..”

“எந்த அகர்வால்..?”

“அவன்தாண்டா.. அந்த மும்பைக் கம்பெனி அகர்வால்..”

“அவனுக்கென்னடா வந்தது..?”

முரளிக்குள் எரிச்சல் குமிழிட்டது..

‘இவன் ஒருத்தன்.. எல்லாத்தையும் இவனிடம் விளக்கிக்கிட்டே இருக்கணும் ஃபிகருக்கு முன்னால் சீன் காட்டலாம்ன்னு நினைத்தால்.. வழிக்கு வர மாட்டேன் என்கிறானே..?’

யதுநந்தனுக்கு கேட்பது போல் அடிக்குரலில் முணுமுணுத்தான் முரளி..

“டேய்.. நான் பேசுவதற்கு மண்டையையாவது ஆட்டி வைத்துத் தொலைடா..”

“ஏண்டா.. நேரம் கெட்ட நேரத்தில் தேவையில்லாத பேச்சு பேசுவ.. அதுக்கு நான் மண்டையை ஆட்டணுமா..? இதுக்கெல்லாம் நீ வேறு ஆளைப் பாரு..”

“ஏன்.. வாயை வளர்க்காதேடா.. ஃபிகருக முன்னாடி கொஞ்சம் பிலிம் காட்ட விடு..”

“ஓ.. நீ அப்படி வருகிறாயா..?”

“அப்பா.. இப்போதவது புரிந்து கொண்டாயே..”

முரளி நிம்மதியாய் மூச்சுவிட.. யதுநந்தன் திரும்பி வரவேற்பில் நின்ற பெண்களைப் பார்த்தான்..

“ஏண்டா.. இந்த மூஞ்சிகளுக்காகவா நீ பிலிம் காட்டுற..? இந்த மூஞ்சியில் எந்த மூஞ்சியும் நல்லாவே.. இல்லையேடா..” என்று சத்தமாக முரளியிடம் சொல்லிவேறு வைத்தான்..

“காரியத்தைக் கெடுத்தாயேடா..” முரளி தலையில் கை வைத்துக் கொண்டான்..

அந்தப் பெண்கள் முகத்தில் கோபம் தெரிந்தது..

“ஹலோ.. உங்கள் மூஞ்சியை நீங்கள் கண்ணாடியில் பார்த்திருக்கிறீங்களா..?” அவர்களில் ஒருத்தி எகிறினாள்.

“தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்..” பேச வாய்ப்புக் கிடைத்த உற்சாகத்தில் முரளி அவளிடம் வழிந்தான்..

‘இந்த வழிசலுக்கெல்லாம் நான் மசிய மாட்டேன் என்கிற ரீதியாய் அவள் பதிலுக்கு முரளியை முறைத்தாள்.’

“பார்த்த பின்னாலுமா இந்தத் தெனாவெட்டு..? உங்கள் இரண்டு பேரின் குரங்கு மூஞ்சிகளுக்கு எங்கள் மூஞ்சி ஒன்றும் குறைந்து போய்வடவில்லை..” அந்தப் பெண் கோபத்துடன் பொரிய..

“சுபா.. நீ கொஞ்சம் சும்மா இருடி..” என்று அங்கிருந்த பெண் அவளை அதட்டினாள்..

“ஏண்டி சும்மாயிருக்க வேண்டும்..? நம் மூஞ்சிகளைப் பற்றி விமர்சனம் பண்ணுகிற மூஞ்சிகளாடி இது..?”

“வேண்டாம் சுபா.. இது கல்யாண வீடு..”

“நீ இதில் தலையிடாதே ராதா.. நாமா இவர்களுடன் வம்புக்குப் போனோம்..? நாம பாட்டுக்கு தேமேன்னு ரிசப்ஷனில் நின்று கொண்டிருக்கிறோம்.. இதுக இரண்டும் வந்திச்சுக.. வந்ததுக கல்யாண மண்டபத்திற்குள் போகாம இங்கே நின்னு சீன் போட்டுச்சுக.. கடைசியில் நம்ம மூஞ்சியை விமர்சனம் பண்ணுதுக.. இதைக் கேட்டுக் கொண்டு என்னைச் சும்மா இருக்கச் சொல்கிறாயா..?”

அந்த ‘ராதா’ எனப்பட்டவளிடம் ‘சுபா’ எனப்பட்டவள் கொந்தளித்துக் கொண்டிருப்பதைக் கேட்ட பின்பாவது யதுநந்தன் வாயை மூடிக் கொண்டிருந்திருக்கலாம்.. ஆனால் அவனோ..

‘இதுபோல.. நான் எத்தனைய பார்த்திருப்பேன்..’ என்று கூறிய அலட்சியப் பார்வையை சுபாவைப் பார்த்து வைத்ததுமில்லாமல்..

“சும்மா இல்லாமல் என்ன செய்யப் போகிறீங்க மே..ட..ம்.. பரத நாட்டியம் ஆடப் போகிறீங்களா..” என்று வேறு கூடச் சேர்த்துக் கேட்டு வைத்தான்..

“என்ன தைரியம்..?” இப்போது கொதித்துப் போவது ராதாவின் முறையாகிப் போனது..

“தைரியம் வந்திருப்பது யாருக்கு..? எங்களுக்கா.. இல்லை உங்களுக்கா..? ஆமாம்.. தெரியாமல்தான் கேட்கிறேன்.. உங்க ஃப்ரெண்ட் இவ்வளவு நேரமாய்.. அதுக.. இதுகன்னு பேசினாங்களே.. யாரைப் பேசினாங்க..? உங்களையும் அதுபோல நாங்கள் பேச எவ்வளவு நேரமாகும்..?”

யதுநந்தன் சட்டையை மடித்து விட்டுக் கொள்ளாத குறையாய் ராதாவிடம் மோதிக் கொண்டிருப்பதைக் கண்டு முரளி பதறிப் போனான்..

“ஏண்டா.. நாம எதற்கு வந்திருக்கிறோம்.. நீ என்ன காரியம் செய்துகிட்டு இருக்க..? உள்ளே வா போகலாம்..”

ஏறக்குறைய கையைப் பிடித்து இழுக்காத குறையாய் முரளி.. யதுநந்தனை இழுத்துக் கொண்டு போக.. ராதா ஒரு பாட்டில் தண்ணீரை எடுத்து ஒரே மூச்சில் குடித்து முடித்தாள்..

“யாருடி இவன்..? நம்ம ராதாவையே.. தலையாலே தண்ணி குடிக்க வைத்து விட்டானே..” என்று சுபாவிடம் இன்னொருத்தி கேட்டுக் கொண்டிருக்க.. ராதாவின் மனமும் அதே கேள்வியைத்தான் அப்போது கேட்டுக் கொண்டிருந்தது..

0Shares

Reviews — Geethaiyen rathai / கீதையின் ராதை

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link