Chapter 05
“எக்ஸ்யூஸ் மீ..”
யதுநந்தன் யாரை அழைக்கிறான் என்று திரும்பிப் பார்த்த முரளிக்கு தூக்கி வாரிப் போட்டது..
“இப்போ எதுக்குடா.. அந்தப் பெண்ணைக் கூப்பிடுகிற..?”
“சும்மாதான்..”
“நீ சும்மா இருக்க மாட்டாயே.. அந்தப் பெண்ணுடன் சண்டைக்கு போவாயே.. வேண்டாம்டா.. இப்போதுதான் அந்தப் பொண்ணு.. லேசுபாசாய் என்னைத் திரும்பிப் பார்க்குது..”
முரளி புலம்பிக் கொண்டிருக்கையில் சுபா விறைப்பான பார்வையுடன் எழுந்து அவனருகே வந்து நின்றாள்.. அவளுக்கு இருபுறமும் பாதுகாப்பு அதிகாரிகள் போல.. லாவண்யாவும் ரேவதியும் நின்று கொள்ள.. அவள் விழியில்..
‘நீ என்னை என்ன செய்து விடுவாய்..? என்று கேட்டுக் கொண்டிருந்தாள்..’
“உட்காருங்க..” யதுநந்தன் பக்கத்து நாற்காலியைக் காட்டினான்..
“உங்கள் பக்கத்திலெல்லாம் உட்கார முடியாது.. என்ன விஷயம்ங்கிறதைச் சொல்லுங்க..” சுபா கறாராய் வினவினாள்..
“நின்றால் கால் வலிக்காதா..?” முரளி அக்கறை காட்டினான்..
“என் கால்.. வலித்தால் வலித்து விட்டுப் போகட்டும்.. அது என் இஷ்டம்.. வேறு யாரும் அக்கறை பட வேண்டாம்..” சுபா எரிச்சலுடன் முறைத்தாள்..
“என்னடா இவங்க எப்பப் பார்த்தாலும் முறைத்து கிட்டே இருக்காங்க…?” முரளி கவலையுடன் யதுநந்தனிடம் கேட்டுக் கொண்டிருந்த போது..
“என்ன மாப்பிள்ளை.. சௌக்கியமா..?” என்றபடி ஒருவர் அங்கே வந்தார்..
“என்னது.. மாப்பிள்ளையா..?” சுபா.. தூக்கிவாரி போட்டவளாய் வந்தவரைப் பார்த்தாள்..
“என்னம்மா இப்படிக் கேட்டுவிட்ட.. இது யாருன்னு நினைத்தே..?” என்று அவர் சுபாவைக் கேட்டார்..
அவள் திருதிருவென்று விழித்தாள்.. முரளி.. யதுநந்தனின் காதோரமாய் சரிந்து..
“யாருடா இவரு..?” என்று வினவினான்..
“யாருக்கு தெரியும்..”
“உன்னைப் போய் மாப்பிள்ளை என்கிறாரே..”
“ஓ… உனக்கு அதுதான் பிரச்சனையா…? வேண்டுமானால் உன்னை மாப்பிள்ளைன்னு சொல்லச் சொல்லவா..?”
“அதற்கு முன்னால் இந்த சுபாவிற்கு இவர் என்ன உறவு முறைன்னு தெரிந்து கொள்ளலாம்.. அப்பா.. சித்தப்பான்னால்.. மாப்பிள்ளைன்னு கூப்பிடட்டும்.. போனால் போகிறதுன்னு ஏற்றுக் கொள்ளலாம்.. மாமாவாய் இருந்து தொலைத்தால் இவளுக்கு நான் அண்ணன் ஆகிவிடும் அபாயம் இருக்கிறதே..”
“அது வேறயா.. அப்போ.. பொறுத்திருந்துதான் பார்க்கணும்..”
சுபாவின் அருகேயிருந்த லாவண்யாவோ சன்னக் குரலில், “ஏண்டி சுபா.. இவரு யாருன்னு நினைத்தேன்னு உன் அப்பா கேட்கிறாரே.. வில்லனாக நினைத்தேன்னு உண்மையைப் போட்டு உடைத்து விடலாமா..?” என்று கேட்டாள்..
“சும்மாயிருடி.. நீ ஒரு பக்கம் கடுப்பேத்தாதே.. போயும் போயும் இந்த வில்லனைப் போய் மாப்பிள்ளைன்னு கூப்பிட்டுக் கொண்டிருக்கிறாரேன்னு நானே வெந்து கொண்டிருக்கிறேன்..”
சுபாவின் தந்தை யதுநந்தனை பாசமாய் பார்த்தபடி.. “என் ஒன்று விட்ட தங்கையின்.. நாத்தனாரின் சித்தப்பா மகளின் அக்காவைத்தான்.. இந்தத் தம்பியோட சின்னத் தாத்தாவின் பெரியப்பா மகனின் வீட்டில் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கிறாங்கம்மா..” என்று கூறினார்..
சுபா திகைத்துப் போய் விழித்தபடி யதுநந்தனைப் பார்க்க அவன் முரளியைப் பார்த்தான்..
“என்னடா இது.. அப்போ.. இவர் எந்தச் சொந்தத்தை வைத்து உன்னை மாப்பிள்ளைங்கிறாரு..?”
“அதுதாண்டா எனக்கும் குழப்பமா இருக்கு..”
“அதை விடு… இந்தப் பொண்ணுக்கு இவர் என்னவாகணும்..? அதை நேரடியாய்க் கேட்டுவிடு..”
“நேரடியாய் நான் கேட்டால் மட்டும் இவர் உடனே நேரடியாய் பதில் சொல்லிவிடுவாராக்கும் என்னால் முடியாது.. நீயே கேள்..”
“நானா..? போடா போ.. ஏற்கனவே இவர் சொன்ன உறவு முறையை வரைபடம் வரைந்து கண்டுபிடிக்க வேண்டுமேன்னு நானே கவலையில் இருக்கிறேன்.. நான் போய் இவரைக் கேட்பதா..?”
அவர்களின் பேச்சு சுபாவின் அப்பாவின் காதுகளில் விழாமல் போனாலும் சுபாவின் காதுகளில் தெளிவாக விழுந்து விட்டது.. அவளுக்கு வெட்கம் பிடுங்கித்தின்றது.
“அப்பா.. இவர் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.. உறவு முறையைச் சொல்லி தலையைச் சுற்ற வைக்காமல் விட்டு விடுங்கள்..”
“அது இல்லையம்மா… உனக்கும் நம் உறவு முறைகளைப் பற்றித் தெரிய வேண்டாமா..?”
“தெரிந்த வரைக்கும் போதும்..”
“என்னத்தைத் தெரிஞ்சு என்ன பிரயோஜனம்…? இந்தக் காலத்துப் பிள்ளைக சொந்த பந்தத்தைப் பற்றி எங்கே யோசிக்கிறீங்க..”
“அவர்தான் என் மாமாவா..?” என்று சுபாவிடம் விசாரித்தான் யதுநந்தன்..
“கொழுப்பா..” என்று கொதித்தபடி..
“ம்ம்.. அவர் என் அப்பா மட்டும்தான்..” என்று விரைத்துக் கொண்டாள் சுபா..
“அப்பாடி.. அவர் அப்பாதானாம்டா..” முரளி மகிழ்ந்து போனான்..
“அதில் பாருங்க சுபா.. நீங்களும்.. நானும் ஒன்றுக்குள் ஒன்று ஆகிவிட்டோம்..”
“அப்படின்னு யார் சொன்னது..?”
“உங்கள் அப்பாதானே இப்போது சொல்லிவிட்டுப் போனார்.. சந்தேகமிருந்தால் அவரைக் கூப்பிடுகிறேன்.. கேட்கறீங்களா.. மாமா.. மாமா..”
யதுநந்தன்.. போய்க் கொண்டிருந்த சுபாவின் அப்பாவைக் கூப்பிடயத்தனிக்க, அவசரமாய் சுபா – அவனுக்கு அருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்..
“ஏன் சார் இப்படி அராத்து பண்ணுகிறீங்க..? உங்களுக்கு என்னதான் வேணும்..?”
“ம்ம்.. உங்களிடம் என் முகத்தில் வீசியது போக மீதியிருக்கும் கரிப்பொடி வேணும்.. கொடுக்கறீங்களா..?”
“அது உங்களுக்குத் தெரிந்து விட்டதா..?”
“தெரியாமல் எப்படிப் போகும்..? புலியை முறத்தில் அடித்த தமிழச்சியைப் பற்றித்தான் கேள்விப் பட்டிருக்கிறேன்.. கரிப்பொடியால் அடித்த தமிழச்சியை இப்போதுதான் நேரில் பார்க்கிறேன்..”
யதுநந்தன் சொல்லிக் கொண்டே போக.. சுபா சுற்றுமுற்றும் பார்வையில் தேடினாள்..
“என்ன தேடுகிறீங்க..?”
“புலியைத் தேடுகிறேன்.. இங்கே எங்கேயும் புலியைக் காணோமே..”
“ஓஹோ.. அம்மணி என் காலை வாருகிறீங்களாக்கும்.. ஏன்.. என்னைப் பார்த்தால் புலிபோல தெரியவில்லையா..?”
“புலியா.. நீங்களா.. ஹ..”
“போதும்… போதும்… ரொம்பத்தான் சிலிர்த்துக்காதீங்க… நான் பழைய யதுநந்தனாக இருந்திருந்தால் உங்களைச் சந்திக்கும் விதமே வேறு.. இப்போது எனக்கு வேறு ஒரு வேலை உங்களால் ஆக வேண்டியிருக்கிறது.. அதனால்தான் உங்களை.. உட்கார வைத்து உரையாடிக் கொண்டிருக்கிறேன்..”
“என்ன சார்.. எங்களை மிரட்டிப் பார்க்கறீங்களா..?”
“அது என்ன ‘எங்களை..’னு பன்மையில் சொல்லிக் கொள்கிறீங்க… இங்கே நீங்க மட்டும்தான் உட்கார்ந்திருக்கிறீங்க… உங்க ஃப்ரெண்ட்ஸ் யாரும் இப்போது உங்க கூட இல்லை… நீங்க செய்ததை நான் கண்டு பிடித்து விட்டேன்னு நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவங்க கம்பி நீட்டி விட்டாங்க.. என்ன மாதிரியான ஃப்ரெண்ட்ஸ் உங்களுக்கு..? ச்ச்..ச்…ச் பாவம் நீங்க..”
“இப்ப எதுக்கு இத்தனை ‘ச்’ போடுகிறீங்க..”
“ஒரு பரிதாபம்தான்.. வேறு என்ன..? ‘உடுக்கை இழந்தவன் கைபோல.. ஆங்கே.. இடுக்கண் களைவதாம் நட்பு’ன்னு.. தாடிக்கார புலவர் ஒருவர் சொல்லியிருக் கிறாரே.. அதை உங்கள் ஃப்ரெண்ட்ஸுக்கு அப்புறமாய் எடுத்துச் சொல்லுங்க..”
“இங்கே பாருங்க சார்..”
“உங்களையெல்லாம் என்னால் பார்க்க முடியாது.. இதோ என் பக்கத்தில் இருக்கிறானே.. இவன் தான் காலையிலிருந்து உங்களைப் பார்த்து ஜொள்ளு விட்டுக் கொண்டிருக்கிறான்.. இவனை வேண்டுமானால் உங்களைப் பார்க்கச் சொல்கிறேன்..”
“இந்தக் கலாட்டாவினால்தான் உங்களுக்கும் எனக்கும் தகராறே வருகிறது.. நீங்கள் என்ன பெரிய ஹேண்ட்சம் மேனா..? உங்களைத் திரும்பிக்கூட நான் பார்க்க மாட்டேன் தெரியுமா..?”
“அவசியமேயில்லை.. என்னை வேறு ஒரு ஆளு திரும்பிப் பார்த்தால் போதும், அதற்காகத்தான் உங்களோடு உட்கார்ந்து பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறேன்..”
“இது வேறா..! உங்களைப் போய் எவள் சார் திரும்பிப் பார்ப்பாள்..?”
“உங்கள் நால்வர் குழுவில் ஒருத்தித்தான்..”
“எங்கள் நால்வர் குழுவிலா..? யாரைச் சொல்றீங்க..?”
“உங்கள் நான்கு பேரில்.. முதுகில் குத்தாத வீரப் பெண்மணி.. மங்கையர் குல திலகம்.. மாதருள் மாணிக்கம்னு ஒரு அழகுப் பெண் இருக்காளே.. அவளைச் சொன்னேன்..”
‘முதுகில் குத்தாதவளா..’ சுபாவிற்கு புரிந்து விட்டது.. அவர்கள் மூவரும் மாடிப் படியில் மறைந்திருந்து யதுநந்தனின் மேல் கரிப்பொடியை வீசியதைச் சொல்கிறான்..
‘அந்த மங்கையர் குல திலகம்.. ராதாவா..?’ அவள் ஆச்சரியத்துடன் யதுநந்தனைப் பார்த்தாள்..
“ராதாவா.. உங்களைப் பார்க்கிறாள்..? இருக்காதே..”
“அதை நீங்க சொல்ல வேண்டாம்.. அவள் சொல்லட்டும்..”
“ஊஹூம்.. நான் இதை நம்ப மாட்டேன்..”
“உங்களுக்கும்.. எனக்கும்.. எதற்கு வீண் விவாதம்..? உங்கள் ராதாவையே இங்கே கூப்பிடுங்களேன்..”
“கூப்பிட்டு.. அவளிடம் போய் இதைக் கேட்பதா..? சேச்சே..”
“ஏங்க.. இதையெல்லாம் வாயால் கேட்டுத்தான் தெரிந்து கொள்வீங்களா..? உங்களுக்கு மண்டையில் மசாலா இருந்திருந்தால் தானாய் கண்டுபிடித்து விட மாட்டீங்களா..?”
சுபாவிற்கு ரோசம் வந்துவிட்டது.. அவளைப் போய் இவன் இப்படிக் கேட்க.. அவள் சும்மாயிருப்பதா..? உண்மையை அறிந்து கொள்ள களம் இறங்கினாள் அவள்.. அந்தப் பக்கமாய் ஏதோ வேலையிருப்பது போல் சென்ற ராதாவை கைதட்டி அழைத்தாள்..
“ராதா.. ராதா…”
திரும்பிப் பார்த்த ராதாவின் முகத்தில் வியப்புக் கூறி..
‘என்னடா இது.. ஒபாமாவும்.. லேடி பின்லேடனும் ஒன்றாக உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருகிறாங்க.. இது எப்படி சாத்தியம்..?’
“என்னடி..?”
“இங்கே வா..”
ராதா வந்தாள்.. முகம் சிவக்க யதுநந்தனை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டாள்.. தேவையின்றி.. புடவை முந்தானையை விரலால் சுற்றியபடி.. காலால் தரையில் கோலம் போட்டாள்.. உதடுகளை லேசாக மடித்துக் கடித்தபடி ஒரு மார்க்கமாய் சுபாவை பார்த்து வைத்தாள்..
‘இவள் ஏன்.. இப்படி விழிக்கிறா..?’ சுபா யோசனையுடன் யதுநந்தனைப் பார்க்க.. அவன் சங்கோஜமே இல்லாமல் ராதாவை விழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தான்..
Reviews — Geethaiyen rathai / கீதையின் ராதை
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.