Chapter 08
யதுநந்தன்.. அவசரமாய் குளித்து.. உடைமாற்றி.. இறங்குகையில் அவனது செல்ஃபோன் அடித்தது.. மறுமுனையில் முரளி பேசினான்..
“யது.. நீ புரொஜெக்டை கம்ப்ளீட் பண்ணிட்டியா..?”
“இல்லைடா..”
“இங்கே டீம் லீடர் கத்துகிறான்.. உடனே வந்து சேரு..”
செல்ஃபோன் அணைந்துவிட.. யதுநந்தன் டைனிங் டேபிளில் அமர்ந்தபடி..
“அம்மா சீக்கிரம்..” என்று குரல் கொடுத்தான்..
“ஏண்டா பறக்கிற..? எல்லாம் ரெடியாய் டேபிளில் வைத்திருக்கிறேனே..” ரோகினி பரிமாற ஆரம்பித்தாள்.
“வேலையிருக்கும்மா..” அவன் பொங்கலை அள்ளி வாயில் திணித்துக் கொண்டிருந்தபோது..
“எனக்கும் தட்டைப் போடு ரோகிணி..” என்றபடி வஜ்ரவேல் வந்த அமர்ந்தார்..
“அவன்தான் பறக்கிறான்னு பார்த்தா.. நீங்க அவனுக்கு மேல பறக்கிறீங்களே.. ரோகிணி அலுத்துக் கொண்டாள்..”
“ஏன் யது.. இப்படி அவசரப்படுகிற..?”
“புரொஜெக்ட் வொர்க் பாதியில் நிற்குதுப்பா..”
அரைவயிற்றுடன் எழுந்து கை கழுவிவிட்டு.. அவன் வாசலுக்கு வந்து வண்டியை எடுக்கையில்.. யாமினி ஓடி வந்தாள்..
“அண்ணா என்னைக் காலேஜூல் டிராப் பண்ணிவிடு ப்ளீஸ்..”
“உன் ஸ்கூட்டி என்ன ஆச்சு..?”
“அது ரிப்பேர்.. சர்வீஸுக்கு விட்டிருக்கிறேன்..”
“அப்பாவுடன் போக வேண்டியதுதானே..”
“அவர் இப்போதைக்கு கிளம்புகிறவர்போல் தெரியலையே.. அம்மா கொடுத்த காபியை ஆசையாய் ரசித்துக் குடித்துக் கொண்டிருக்கிறார்.. அவர் ரசனையைக் கெடுக்க எனக்கு மனமில்லை..”
“சரி.. சரி.. பின்னால் ஏறு..”
நேரமாகிறதே என்ற பதற்றம் மனம் பூராவும் வியாபித்திருக்க.. யதுநந்தன்.. புயல் வேகத்தில் வண்டியை ஓட்டினான்.. யாமினி பயத்தில் அலறினாள்..
“அண்ணா.. மெதுவாகப் போ..”
“அதெல்லாம் வேலைக்கு ஆகாது.. நீ கெட்டியாக கம்பியைப் பிடித்துக்கொள்..”
அவளைப் பொறியியல் கல்லூரி வாசலில் இறக்கி விட்டுவிட்டுப் பறந்தான் யதுநந்தன்..
மூச்சுவிட நேரமில்லாத வேலை.. அவர்களின் குரூப் லீடர் கோபத்தில் கொதிகலனாய் இருக்க.. அதைத் தாங்கிக் கொள்ளவேண்டிய நிர்பந்தம்.. இரவு பகலை உணராமல் கண்ணாடித் தடுப்பிற்குள்.. செயற்கை வெளிச்சத்தில் கம்ப்யூட்டர் திரையிலிருந்து கண்களை அகற்ற முடியாமல் அதனுள் ஒன்றிப் போக வேண்டிய சூழல்..
யதுநந்தன் வேலையை முடித்துக் கொண்டு எழுந்த போது.. இரவு மணி இரண்டு, உடலும்.. மனமும் ஓய்வுக்கு ஏங்க.. அயர்ந்து போனவனாய்.. கம்பெனியின் ரெஸ்ட் ரூமிலேயே படுத்து கண்ணயர்ந்து விட்டான் அவன்..
ராதா கடற்கரையில் காத்திருந்தாள்.. ஒவ்வொரு நொடியும் அவனுடைய வருகையை எதிர்பார்த்து.. மனம் பரபரக்க.. இருப்புக் கொள்ளாமல் அவன் வரும் திசையைக் கண்கள் பூக்கப் பார்த்திருந்தாள்.. அவன் வரவில்லை..
முதல்நாள் இரவிலிருந்து.. ஒவ்வொரு நொடியையும் அவனைச் சந்திக்கப் போகும் இந்தக் கணத்திற்காகவே நகர்த்தி அவனை எதிர்பார்த்து ஓடி வந்தவளுக்கு அவனைக் காணக் கொடுத்து வைக்கவில்லை..
நேரம் கழிய கழிய.. ராதாவின் மனதில் துயரம் கவிழ்ந்தது.. தன்னைச் சுற்றிப் படர்ந்த இரவு போர்வை நிரந்தரமாய் தன் வாழ்வில் தங்கிவிடுமோ என்று அவள் பயம் கொண்டாள்..
‘ஏன்.. என் மனதில் நீ குடியேறினாய்..?
ஏன்.. என் உயிரில் நீ கலந்தாய்..?
ஏன்.. என் சுவாசமாய் நீ மாறினாய்..?
ஏன்.. என் வாழ்வில்.. எனக்கு
அனைத்துமாக நீ ஆகிப்போனாய்..?’
ராதா மனதிற்குள் கேட்டுக் கொண்டபடி எழுந்து கொண்டாள்.. அவனுக்காகக் காத்திருந்தும் அவனைக் காண முடியாமல் போனதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..
‘ஒரு நொடி.. ஒரேயொரு நொடி.. நீ
என்னைப் பற்றி இன்று நினைத்துப் பார்த்தாயா..?’
அவளது நெஞ்சும் குமுறியது.. எப்போதும் போல் வீட்டிற்குள் நுழையும்போது.. முகத்தை மலர்ச்சியாக வைத்துக் கொண்டாள்..
“தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே..
அமைதி உன் நெஞ்சினில் நிறையட்டுமே..
அந்த தூக்கமும்.. அமைதியும்.. நானானால்.. உன்னைத்
தொடர்ந்திருப்பேன்.. நெஞ்சில்.. தவழ்ந்திருப்பேன்..”
கண்களை மூடித் தூங்காமல் படுத்திருந்தவளின் காதுகளில் இந்தப் பாடல் புகுந்தது.. ராதா வெறுமையாக சிரித்துக் கொண்டாள்.. இது யார் பாட வேண்டிய பாடல்..? யதுநந்தன் பாடவேண்டிய பாடல்.. அவன்தானே அவளுடைய தூக்கத்தையும்.. அமைதியையும் திருடிக் கொண்டான்..
அவன் மட்டும்.. அவளருகே வந்து.. காதோரமாய்.. ‘காலம் பூராவும் நான் உன்னுடன் இருப்பேன்..’ என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும்.. அவளை விட்டு விலகி நின்று வேடிக்கை பார்க்கும் தூக்கமும் அமைதியும் அவளிடம் ஓடிவந்து விடும்..
புரியாதவரை அவன்..? அவள் மனதில் அவன் மேலிருக்கும் கடலளவு காதலையும் அன்பையும் தெரியாதவனா அவன்..? அவளது ஆசையின் ஆவேசத்தை அறியாதவனா அவன்..?
புரிந்தும்.. அறிந்தும்.. தெரிந்தும்.. கைகளுக்கு எட்டாமல்.. தொலைதூர தொடுவானாய் அவன் விலகிச் செல்வதன் காரணம் என்ன..?
இரவைக் கடக்க அவள் படாதபாடு பட்டாள்..
மறுநாள் முழுவதும் அவளது மனம் அடித்துக் கொண்டது.. மாலையில் கடற்கரையில் காத்திருக்கும் போது.. ‘அவன் வருவானா..? இன்றாவது தரிசனம் தருவானா..?’ என்று மனம் தவித்தது..
‘நானாக.. நானில்லை..
நீயாக.. ஏன் மாறிப் போனேன்..?’
நெஞ்சம் கேள்வி கேட்டபடி.. தூரத்தில் அவன் முகம் கண்களுக்கு தட்டுப்படுகிறதா என்று தேடியது..
‘ஒருவேளை.. நேற்றுப் போலவே.. இன்றும் அவன் வராமல் போய் விட்டால்..?’
நினைக்கும் போதே அவளது நெஞ்சம் நடுங்கியது.. கண்களில் கண்ணீர் முத்துக்கள் தோன்ற.. இமைகளைச் சிமிட்டி அதை அடக்கிக் கொண்டாள்..
‘காதலித்துப் பார்..
சொர்க்கமோ.. நரகமோ..
அது உனக்கு.. இங்கேயே தெரியும்..!’
வைரமுத்துவின் கவிதை வரிகளை உணர்வு பூர்வமாய் இன்று உணர்ந்தாள் ராதா.. இது என்னவரி..? இதயத்தைக் கொல்லும் வரி.. மனதில் ஒரு கூரிய முள் எப்போதும் குத்திக் கொண்டிருக்கும் ரணவலி.. அவன் அருகிலிருக்கும் போது.. அவன் குரலைக் கேட்கும் போது சொர்க்கத்தை உணர்த்தி.. அவனது அருகாமை விலகிய போது.. அவன் குரலைக் கேட்க முடியாத போது.. நரகத்தை உணர்த்தும் வலி..
ராதா மனதின் வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ரண வேதனைப் பட்டாள்.. மனம் சுமக்கின்ற பாரத்தை இறக்கி வைக்க முடியாமல் மனம் கனத்தாள்..
சுமையாகிப் போன மனத்துடன்.. தொலை தூரத்தில் அவன் வருகையைத் தேடித் தவித்துக் கொண்டிருந்தபோது தூரத்தில் அவன் முகம் தெரிந்தது..
அவ்வளவு நேரமும் மனதை அரித்துக் கொண்டிருந்த வேதனை மறைய.. ராதா முகம் மலர்ந்தாள்..
‘தூரத்தில் நான் கண்ட உன்முகம் – நதி
தீரத்தில் தேன் உண்ட என் மனம்..’
அவளது மனம் பாடியது.. அவன் அருகில் வரும்வரை மூச்சடக்கி காத்திருந்தாள்.. பக்கத்தில் வந்தவனின் தோள் தழுவி.. அவனது முகம் பூராவும் முத்தமிட வேண்டும் எனற தாள முடியாத தாபம் அவளுள் கிளர்ந்தது..
‘எனக்கு நீ வேண்டும்..
நீ மட்டும்தான் வேண்டும்..
என் மற்றய ஆசைகள் எல்லாம்..
பொய்மையானவை.. வெறுமையானவை..
இரவும்.. பகலும் என்னை
அலைக்கழிப்பவை..
வெளிச்சத்தை தன்னுள்ளே..
அடக்கிக் கொண்டிருக்கும் இரவைப் போல..
ஒரு குரல்.. ஒலித்துக் கொண்டே இருக்கிறது
எனக்கு நீ வேண்டும்..
நீ மட்டும்தான் வேண்டும்..’
அவள் இதயம் கீதாஞ்சலி சொன்னது.. அவன் அருகே வந்துவிட்டான்.. அவள் பரபரப்புடன்.. பரவசத்துடன்.. அவன் முகம் பார்க்கையில்.. பேச வார்த்தைகள் வராமல்.. வார்த்தைகளைத் தேடி அவள் தவித்து நிற்கையில்.. அவன் கைக்கெடிகாரத்தில் மணி பார்த்தான்.. ஏதோ ஒரு வேலையை முடிக்கும் முகபாவனையில் அவள் முகம் பார்த்தான்.. பின் சொன்னான்..
“ஐஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்தான் உன்னோடு ஸ்பென்ட் பண்ண முடியும்.. எனக்கு வேலை தலைக்கு மேல் இருக்கிறது..”
பாலாய் பொங்கியிருந்த ராதாவின் உணர்வுகள் போன இடம் தெரியாமல்.. தண்ணீர்பட்டபாலாய்.. அடங்கிப் போயின..
‘இவ்வளவுதானா.. இவ்வளவேதானா..? உன்னைப் பார்க்கும் இந்த விநாடியில் நான் உயிர்த்தெழும்போது என்னுடன் இருக்கும் நேரங்களை நீ எண்ணிச் சிக்கனமாய் செலவழிக்கிறாயா..? உன்னை நான் நினைப்பது போலக்கூட நீ என்னை நினைக்க வேண்டாம்.. என் உயிர் மூச்சாய் நீ இருப்பது போலக்கூட.. நான் உன் உயிரில் கலக்க வேண்டாம்.. உன் இதயத்தில் எனக்காக ஒரு சிறு இடம் கூட இல்லையா..?’
ராதா மனம் உடைந்தாள்.. யதுநந்தன் உட்காரக் கூட நேரமில்லாதவனாய்.. கைகட்டிக் கொண்டு அவளைப் பார்த்துக் கேட்டான்..
“ம்ம்.. அப்புறமா..? என்ன விசயம்னு சொல்லு..”
எதை சொல்வது..? அவள் உள்ளத்தில் உறைந்து நின்று அவள் உயிரைக் குடிக்கும் காதலை.. ஐந்தே நிமிட அவகாசத்தில் எப்படி அவனிடம் விளக்குவது..? நாற்பத்தி எட்டுமணி நேரமாக ஊன் உருக அவள் துடித்த துடிப்பை.. கைக்கடிகாரத்தில் மணி பார்த்துக் கொண்டு நிற்பவனின் செவியில் எப்படி சேர்ப்பது..?
ராதா உணர்ச்சிப் பிழம்பாய் உதடு கடித்தாள்.. எதிரே நிற்பவன் அவள் மனதிற்கு இனியவன்.. அவள் முகம் பார்க்கத் துடிக்கும் முகத்தைக் கொண்டவன்.. ராதா பொறுமை காத்தாள்..
Reviews — Geethaiyen rathai / கீதையின் ராதை
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.