Chapter 12

0Shares

பெங்களூரின் இதமான சீதோஷ்ணநிலை உடலை குளிர்வித்தது.. ‘ஆல்பா ரிசர்ச் சென்டர்..’ என்ற நியான் எழுத்துக்கள் பெரிதாக பொறிக்கப்பட்டிருந்த அந்த விஞ்ஞான கூடத்தின் வாசலை மிதித்த ராதா.. மானசீகமாய் கடவுளை வணங்கிக் கொண்டு உள்ளே கால் எடுத்து வைத்தாள்..

“வாட் ஆர் யூ வாண்ட்..?” ரிசப்ஷனில் அமர்ந்திருந்த அழகுப் பெண் வினவினாள்..

“ஐ ஆம் ராதா.. கமிங்ஃபிரம் சென்னை.. இங்கே பயோடெக்னாலஜி செக்சனில் எனக்கு வேலை கிடைத்திருக்கிறது..” ராதா தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்..

“யுவர் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் ப்ளீஸ்..”

ராதா கொடுத்த வேலை நியமன உத்தரவை வாங்கிப் பார்த்த அந்தப் பெண் தொலைபேசியில் பேசிவிட்டு ராதாவைப் பார்த்து சிரித்தாள்..

“வெல்கம் மிஸ் ராதா..”

“தேங்க் யூ..”

“ஐ ஆம் சுனிதா.. கமிங் ஃபிரம் கன்னியாகுமரி..”

“ஓ..”

சுனிதா நீட்டிய கையைப் பற்றிக் குலுக்கிவிட்டு.. ராதா.. உள்ளே போக முனைந்தாள்..

“வெயிட் எ மினிட்.. நானும் உங்க கூட வருகிறேன்..”

“இட்ஸ் ஆல்ரைட்.. நானே போய்க் கொள்வேன்..”

“உங்களால் அது முடியாது ராதா.. இந்த ரிசர்ச் சென்டரின் பிரம்மாண்டத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியாது.. உங்கள் செக்சனைக் கண்டு பிடித்துப் போக சிரமப்பட்டு விடுவீங்க.. என்னுடன் வாங்க..”

“இன்றைக்கு ஒரு நாள் நீங்க… வழி சொல்லிவிடுவீங்க.. நாளைக்கு..?”

“நாளைக்கு சங்கதியை நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் முதலில் இன்றைக்கு நடக்க வேண்டிய வேலையைப் பாருங்க..”

“இவள் யதுநந்தனைப் போலவே பேசுகிறாளே..” ராதாவின் மனம் வலித்தது..

யார் முகத்தைப் பார்ப்பதற்காக.. இருட்டிய பின்னாலும் வீட்டிற்குப் போகாமல் காத்திருந்தாளோ.. யார் குரலைக் கேட்பதற்காக.. படிப்பைக் கூட மறந்து பித்துபிடித்தவள் போல் பரபரபத்தாளோ.. யாரின் அருகாமைக்காக அல்லும் பகலும் உருகி நின்றாளோ.. அந்த யதுநந்தனைப் பிரிந்து.. சென்னையைவிட்டு பெங்களூருக்கு வருவாள் என்று கனவிலும் ராதா நினைத்துக்கூடப் பார்த்ததில்லை..

நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்.. தெய்வத்தை நாம் நினைக்க மறந்து விடுவோமே.. அது தெய்வத்திற்கு பொறுக்குமா.. என்ன..?

‘நீ நினைத்தது கை கூடிவிட்ட கனவில் மிதக்கிறாயோ..? கை கூடிவிட்ட கனவு.. காலத்திற்கும் நிலைத்து நிற்குமா..?’ என்று தெய்வம் நினைத்து விட்டது போல..

ராதாவின் கனவுக் கோட்டை ஒரு நாள் கலகலத்துப் போனது.. அவளும்.. யதுநந்தனும் அன்யோன்யமாக அவர்களே சிருஷ்டித்த ஒரு மாய உலகில்.. மானசீக கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தார்கள்.. அந்த மானசீக உறவு ஒருநாள் ஆடிப் போனது..

தினமும் யதுநந்தனைக் கடற்கரையில் சந்திக்கும் வழக்கமுள்ள ராதா.. படிப்பு முடிந்ததும்.. சந்திக்கும் இடத்தை.. பக்கத்திலிருந்த பூங்காவிற்கு மாற்றிக் கொண்டாள்..

“அம்மா.. ‘ஈவினிங் வாக்’ போயிட்டு வரேன்..”

அந்தப்பூங்காவில்.. மாலைநேரத்தில்.. சுற்றிப் போடப்பட்டிருக்கும் நடைபாதையில்.. நிறைய பேர் நடப்பது வழக்கமான ஒன்று என்பதால்.. ராதாவின் இந்தக் கோரிக்கையை மந்தாகினி மறுக்கவில்லை..

அப்படி யதுநந்தனுக்காக காத்திருந்த ஒருநாளில், தற்செயலாக வருவதுபோல்.. முரளி எதிரே வந்து நின்றான்..

“ஹலோ சார்.. என்ன இந்தப் பக்கம்..?” ராதா இயல்பாக வினவினாள்..

“அடுத்த தெருவில் எங்க உறவுக்காரங்க வீட்டிற்கு வந்தேன்.. நீங்க இங்கே உட்கார்ந்திருக்கவும்.. பேசிவிட்டுப் போகலாமுன்னு நினைத்து வந்தேன்..” முரளி அவளருகே அமர்ந்தான்..

‘யதுநந்தன் வரும் வேளையில்… என்னோடு இவனுக்கென்ன பேச்சு…’ ராதா மனம் கடுகடுக்க.. நகர்ந்து அமர்ந்தாள்..

அதைக் கண்டு காணாதவன் போல் முரளி பேச்சைத் தொடர்ந்தான்..

“யதுநந்தனைப் பார்த்தீங்களா..?”

‘அதுதான் தினமும் பார்க்கிறேனே..’ என்ற நினைவுடன் ராதா அவனை ஏறிட்டுப் பார்த்தாள்..

“ஏன் கேட்கறீங்க..?”

“இல்லை.. சும்மாதான் கேட்டேன்..?”

“நீங்க சும்மா கேட்டது போல இல்லையே..”

“எனக்கெதுக்குங்க அடுத்தவங்க வம்பு..?”

‘இவன் ஏன் சம்பந்தமில்லாமல் உளறுகிறான்..’ என்று பல்லைக் கடித்தாள் ராதா..

“சரியாச் சொன்னீங்க.. எனக்கும் வம்பு பேசப் பிடிக்காது..”

‘இடத்தைக் காலி பண்ணுன்னு மறைமுகமாய் சொல்கிறாள்..’ முரளி எரிச்சல்பட்டான்.. ஆனாலும் அதை மறைத்துக் கொண்டு..

“யாருக்குத்தான் வம்பு பேசப் பிடிக்கும்..? ஆனாலும் கண்ணுக்கு முன்னால் சில விஷயங்கள் நடக்கும் போது.. நமக்கென்னான்னு போக என்னால் முடியவில்லைங்க.. 

என் மனது கேட்கவில்லை.. ஏன்னா.. எனக்கு இளகின மனது..” என்று கூறினான் முரளி..

“அதுவும் பெண்களென்றால் ரொம்பவும் இளகி விடுவீங்களாமே..” ராதா வாய் பொத்தி சிரித்தாள்.

அவளிடம்.. தனது காதல் ராசியைப் பற்றி யதுநந்தன் பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறான் என்பதை யூகித்துக் கொண்டான் முரளி.. அவன் மனதில் யதுநந்தனின் மேலிருந்த புகைச்சல் இன்னும் வீரியம் கொண்டது..

“என்னவோ போங்க.. உங்களைப் பார்த்தால் எனக்கு.. என் தங்கை நினைவு வருகிறது..” முரளி பாசமலர் வளர்த்தான்..

“உங்க தங்கை என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க..” ராதா சாதாரணமாக கேட்டாள்..

“எனக்குத் தங்கையே இல்லைங்க.. நான் என் அப்பா அம்மாவிற்கு ஒரே மகன்.. சென்னையில் சொந்தமா பிளாட் இருக்கு.. கார் இருக்கு..” என்று தன் பெருமைகளை முரளி அடுக்க..

‘உன்னை.. இதையெல்லாம் என்னிடம் ஒப்பிக்கச் சொல்லி.. நான் கேட்டேனா..’ என்ற பார்வை ஒன்றை பார்த்து வைத்தாள் ராதா..

‘உனக்குத்தான்… யதுநந்தன் பித்துப் பிடித்திருக்கிறதே..!’ முரளி பொறாமைப்பட்டான்..

“அப்புறம் ஏன்.. என்னைப் பார்த்தால் உங்களுக்கு தங்கையின் நினைவு வருகிறதுன்னு சொன்னீங்க..?”

“உங்களைப் பார்த்தால் எனக்கு.. என் தங்கையைப் போல பாசம் வருதுன்னு சொன்னேம்மா..”

“ஓஹோ..”

ராதா நம்பாத பார்வையுடன் இன்னும் தள்ளி உட்கார்ந்து கொண்டாள்..

‘இந்த நந்து சீக்கிரம் வந்து சேர்ந்தால் தேவலை.. இவன் போடும் பிளேடைத் தாங்க முடியவில்லை..’ என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தபோது..

“யதுநந்தன்.. உங்களுடன் பழக ஆரம்பித்த புதிதில் என்ன சொன்னான் தெரியுமா..?” என்று கேட்டான் முரளி..

“என்ன சொன்னார்..?”

“அந்தப் பெண்ணின் மீது எனக்கொரு ஈர்ப்பு வந்திருக்குடா’னு சொன்னான்..”

ராதாவின் முகம் மாறியது..

“நான் உடனே.. ‘என்னடா.. உனக்குக் கூட காதல் வந்திருக்கிறதா’ன்னு கேட்டேன்..”

“ஏன் அப்படிக் கேட்டிங்க..?”

“அவனுக்கு கல்யாணமெல்லாம் பிடிக்காதும்மா ‘தாலியைக் கட்டிவிட்டு.. வாழ்நாள் பூராவும் யார் அவஸ்தைப் படுவது’ன்னு கேட்பான்..”

ராதா முகம் வெளிறிப் போனாள்..

“அவனைப் பொறுத்தவரை.. கல்யாணம் பண்ணிக் கொள்கிறவங்க எல்லாம் ஆயுள் தண்டனைக் கைதிகள்..”

ராதாவின் முகத்தில் பயம் வந்தது..

“அதனால்தான் நான் அவனிடம் அப்படிக் கேட்டேன்.. ‘இது காதலான்னு எனக்குத் தெரியலைடா’னு சொன்னான்..”

அவன் பேசுவதைக் கேட்க கூடாது.. எழுந்து சென்றுவிட வேண்டும்.. என்று ராதாவிற்கு தோன்றியது.. ஆனாலும் அவளின் உள்மனது.. ‘யதுநந்தனின் அந்தரங்க மனதில் தனக்கு இடம் இல்லையோ..’ என்று அலை பாய்ந்தது… அவள் முரளியின் முகம் பார்த்தாள்..

அவனது வார்த்தை அவள் மனதைக் கலக்கி விட்டதை முரளி இனம் கண்டு கொண்டான்.. அவன் மனதில் களிப்புத் தோன்றியது..

‘நான் விலகினாலும் அவள் என்னை விட்டு விலக மாட்டாள்..!’

யதுநந்தனின் நம்பிக்கையான வார்த்தைகள் அவன் மனதில் அம்புகளாய்ப் பாய்ந்தன.. அந்த நம்பிக்கையைக் குலைக்கும் திட்டத்தை அவன் செயலாற்ற ஆரம்பித்தான்..

0Shares

Reviews — Geethaiyen rathai / கீதையின் ராதை

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link