Chapter 02

0Shares

பரசுராம் மிக மெதுவாக அவனை அணுகினான்.. கைகளை முன்புறம் கட்டிக் கொண்டு..

“ஆகாஷ்..” என்று அழைத்தான்..

ஜீன்ஸ் பேன்டின் இரு பாக்கெட்டுகளிலும் கைகளை விட்டுக் கொண்டு கால்களை அகல விரித்து ஓடும் பஸ்ஸில் பேலன்ஸ் பண்ணுவது போல் நின்று கொண்டிருந்த ஆகாஷ் திரும்பினான்..

பரசுராம் அவன் முன்னால் கையை விரித்து,

“என்னடா இதெல்லாம்..?” என்று வினவினான்..

“எது..”

“நீ பண்ணும் லொள்ளுதான்.. ஏண்டா கல்யாண மாப்பிள்ளையாடா நீ..? கீழே உன் கல்யாண வேலைகள் நடந்துகிட்டிருக்கு விடிந்தால் கல்யாணம்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் நிச்சயதார்த்தம் நடக்கப்போகுது.. நீ இங்கே மொட்டை மாடி இருட்டில் நின்று கொண்டு விண்வெளி ஆராய்ச்சி பண்ணுகிறாய்.. எதுக்குடா..? பிடிக்கவில்லையென்றால் விட்டுத் தள்ள வேண்டியது தானே..”

“எதை விட்டுத் தள்ளச் சொல்கிறாய்..?”

“இந்தக் கல்யாணத்தை.. அந்த அனுராதாவை..”

“ஏய்ய்..” ஆகாஷ் பரசுராமன் சட்டையைப் பிடித்து விட்டான்.. பரசுராம் அசையாமல் அவன் முகம் பார்த்துக் கொண்டே நின்றான்.. கொஞ்சம் கொஞ்சமாய் ஆகாஷின் கோபம் குறைந்தது.. பரசுராமின் சட்டையை விட்டான்.. அவன் பிடித்ததால் ஏற்பட்டிருந்த சுருக்கங்களை நீவி விட்டான்.. முகத்தில் குற்ற உணர்வுடன்..

“ஸாரி..” என்றான்..

“எதற்கு..?”

“பரசு..”

ஆகாஷ் மொட்டை மாடியின் கைப்பிடிச் சுவரில் அமர்ந்து தலையைக் குலுக்கிக் கொண்டான்.. எல்லையில்லாத வேதனை அவன் குரலில் தெரிந்தது..

“ஆகாஷ் திரும்பவும் சொல்கிறேன்.. இவ்வளவு மனப் போராட்டத்தோடு அவளை நீ மணக்க வேண்டுமா..? வேண்டாமென்றால் விட்டுவிடு..”

“முடியவில்லை..”

“எது முடியவில்லை..”

“அவளை வேண்டாமென்று விட்டுத்தள்ள..”

“அப்படியானால் கலகலப்பாய் கீழே இறங்கி வா..”

“அதுவும் முடியவில்லையே..”

“ஏண்டா.. முன்னாலும் போக மாட்டேன்.. பின்னாலும் போகமாட்டேன்னு அடம் பிடித்தால் எப்படிடா..? ஒன்று அவளை வெறுத்து ஒதுக்கிவிடு..”

“பரசு.. எப்படிடா என்னால் அவளை வெறுக்க முடியும்..?”

“அப்போது சந்தோசமாய் கல்யாணம் பண்ணிக்கொள்..”

“அதுவும் முடியலைடா..”

“வருவது வரட்டும்ன்னு கல்யாண மாப்பிள்ளையாய் நீ இருப்பதைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் தூக்கிப் போட்டு மிதிச்சிருவேன்.. ஏண்டா இப்படி கடுப்படிக்கிறாய்..? உனக்கு இவ்வளவு சஞ்சலம் இருந்தால் ஏண்டா கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டாய்..?”

“வாக்குக் கொடுத்து விட்டேனேடா..”

“யாருக்கு.. தொண்டைமான் தாத்தாவிற்கு கொடுத்த வாக்கைப் பற்றியா சொல்கிறாய்..? அவர் வாக்குக் கேட்டால் நீயேன் கொடுத்தாய்..? அவரென்ன உனக்கு சொந்தமா..? பந்தமா..?”

“என் மரியாதைக்கு உரியவர்..”

“மரியாதைக்கு உரியவர் காசு பணத்தைக் கேட்டால் கொடுக்க வேண்டியதுதான்.. வாக்குறுதியைக் கேட்டால் கொடுத்து விடுவதா..?”

ஆகாஷ் உதடு கடித்து மௌனமாக இருந்தான்..

“எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா ஆகாஷ்..”

“என்ன..”

“நீ அவருக்கு கொடுத்த வாக்குறுதிக்கு அவர் மேல் வைத்திருந்த மரியாதை மட்டும் காரணமில்லை..”

“வேறு என்ன..?”

“அவருடைய பேத்தி மேல் நீ வைத்திருக்கும் காதலும்தான் காரணம்..”

ஆகாஷ் பதில் பேசாமல் மௌனித்தான்.. பரசுராம் தொடர்ந்தான்..

“கிடைத்த வாய்ப்பை நீ பயன்படுத்திக் கொண்டாய்.. எங்கே இல்லையென்று உன் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லு..”

“ச்சு..” சலித்துக் கொண்டான் ஆகாஷ்..

“அவள்மேல் இவ்வளவு காதலையும் ஆசையையும் வைத்துக் கொண்டு ஏண்டா கிடந்து மறுகுகிறாய்..?”

“நான் மட்டும் அவளைக் காதலித்தால் போதுமாடா..? என் மனதில் மட்டும் அவள் மேல் ஆசையிருந்தால் போதுமாடா..? அவளும் என்னைக் காதலிக்க வேண்டாமா..? அவள் மனதிலும் என் மேல் ஆசை எழ வேண்டாமா..?”

“நாளைக் காலையில் என்ன நடக்கப் போகிறது..?”

“கல்யாணம்தான் வேறு என்ன..?”

“அது முடிந்து அவள் கழுத்தில் ஒரு தாலியை நீ கட்டி விட்டால் அதற்கு அப்புறம் அவள் உனக்கு யார்..?”

“ஏண்டா.. சான்ஸ் கிடைச்சிருச்சின்னு ரம்பம் போடு கிறாயா..?”

“காரணமாகத்தான் கேட்கிறேன்.. பதில் சொல்லுடா..”

“அவள் எனக்கு மனைவி.. வொய்ப்.. பெண்டாட்டி.. போதுமா..”

“ஆஹா..! எவ்வளவு ரசித்துச் சொல்கிறான் பார்..”

“டேய்..”

“உன் பெண்டாட்டி உன்னோடுதானே இருந்தாக வேண்டும்..”

“அடிக்கப் போகிறேன் பார்..”

“ஆகாஷ்.. காலம் பூராவும் உன் நிழலில் வாழப் போகிறாள்.. இதைக் கொஞ்சம் யோசித்துப் பார்..”

“காலம் பூராவும்.. எலியும் பூனையுமாக வாழப் போகிறோம்..”

“மாற்றம் என்றாவது வரலாமில்லையா..”

“எனக்கு நம்பிக்கையில்லை..”

“நம்பிக்கையில்லாதவன் இந்த அளவுக்கு வந்திருக்கக்கூடாது.. எழுந்திரு.. கீழே எல்லோரும் உன்னைத் தேடுவதற்கு முன்னால் போகவேண்டும்.. வா..”

ஆகாஷ் எழுந்து பரசுராமைப் பின் தொடர்ந்தான்.. மாப்பிள்ளைக்கு கொடுக்கப்பட்ட அறைக்குள் அவர்கள் நுழைந்தார்கள்.. பரசுராம் ஆகாஷை பாத்ரூமிற்குள் தள்ளி விட்டான்..

“குளித்து பிரஷ்ஷாய் வெளியில் வா..”

சற்று நேரத்தில் புது உடை அணிந்து மிடுக்குடன் மாடிப் படிகளில் இறங்கி வந்த ஆகாஷை திருமண மண்டப மேடையில் நலங்கு வைப்பதற்காக நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்த அனுராதா நிமிர்ந்து பார்த்தாள்.. ஆகாஷின் பார்வை அவள் பார்வையோடு கலந்தது.. ஒரு கணம் அவளும் பார்வையை விலக்கிக் கொள்ளாமல் அவனையே பார்த்தாள்..

அவன் பார்வையில் அவன் மனதிலிருந்த காதல் இல்லை.. அவளை ஆராய்ச்சி பண்ணும் பார்வையாய் அவன் பார்வை இருந்தது.. அவள் மனதை அவள் பார்வை  வழி கண்டுபிடிக்க முயல்வது போல அவனது பார்வை அவளை ஊடுருவியது..

அவள் பார்வையில் ஓர் எட்டாத தன்மை தெரிந்தது.. பழைய பாடல் ஒன்றில் வருமே..

   ‘சிரிக்கச் சொன்னால் சிரிப்பேன்..

    பார்க்கச் சொன்னால் பார்ப்பேன்..

    எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி..’ என்று..

அதுபோல் நடந்து கொண்டிருந்த திருமண நிகழ்வுகளில் எந்தவிதப் பற்றுதலும் இல்லாமல் அவள் அமர்ந்திருந்தாள்..

அவனை யாரோ ஒருவனைப் போல் அவள் பார்க்க அவனது புருவங்கள் முடிச்சிட்டன.. பல்லைக் கடித்தவாறு வந்திருந்த உறவினர்களை வரவேற்க அவன் சென்றான்.. அவள் தலையைக் குனிந்து கொண்டாள்..

“ஆகாஷ்.. உன்னைச் சின்னப் பிள்ளையாய் இருக்கும் போது பார்த்தது.. இப்போது நெடுநெடுவென்று வளர்ந்து கல்யாண மாப்பிள்ளையாக இருக்கிறாய்.. எங்கே..? யு.எஸ்.ஏ. என்று பெருமையாய் வாழப் போனேன்.. உறவுக்காரங்களுடன்தான் ஒட்டாமல் போய் விட்டேன்.. அதுதான் பிடிவாதம் பிடித்து உன் கல்யாணத்திற்கு ஓடி வந்து விட்டேன்..”

அவனது சித்தி கல்யாணி உற்சாகமாய் அவனைக் கட்டிக் கொண்டாள்.. அவளது பாசத்திற்குக் கட்டுப்பட்டு அவளுடன் பேசிக் கொண்டிருந்தாலும் ஆகாஷின் பார்வை மணமேடையில் அமர்ந்திருந்த திருமணப் பெண்ணையே சுற்றிச் சுற்றி வந்தது..

நீலக்கலர் பட்டுப் புடவையில் முந்தானையின் அரக்குச் சிகப்பில் ஜாக்கெட் அணிந்து ஒரு தேவதையின் அழகோடு அவள் அமர்ந்திருந்தாள்.. நீண்ட பின்னலில் ஜடை பில்லை வைத்துத் தைக்கப்பட்டு குஞ்சலம் தொங்கியது.. காதுகளில் மிகப் பெரிய ஜிமிக்கிகள் தொங்க மாட்டல் மாட்டியிருந்தாள்.. நெற்றியில் நெற்றிச் சுட்டி.. கைகளில் வளையல்கள்.. கழுத்தினில் அட்டிகை.. அதற்குக் கீழே காசு மாலை.. இடுப்பினில் ஒட்டியாணம்..

திருமணப் பெண்ணுக்கான அலங்காரத்தில் அவள் அழகு பன்மடங்கு பெருகித் தெரிந்தது.. எந்தவித ஒப்பனையும் இல்லாமலேயே அவளைப் பார்த்தால் ஆகாஷின் மனதில் மோகத் தீ பற்றிக் கொள்ளும்.. இன்று இப்படி ஓர் அலங்காரத்தில் அவளைப் பார்த்தபோது அது கொழுந்து விட்டு எரிந்தது..

மனதில் தாபம் மூள அவளையே பார்த்தான்.. ஒரு சிறு பார்வை..? ஊஹூம்.. அவள் அவனிருக்கும் திசைப் பக்கம் திரும்பியே பார்க்கவில்லை.. ஆகாஷின் முகம் இறுகியது..

‘திமிர்.. அன்றிலிருந்து இன்றுவரை மாறாத திமிர்.. முதன் முதலாய் அவனைப் பார்த்தபோது முறைத்துக் கொண்டு நின்றாளே அதே திமிர்..’

அன்னலட்சுமிபுரம் என்ற அந்த அழகிய கிராமத்திற்கு அவன் போனவேளை நண்பகல் வேளை..

‘இந்த வெய்யிலில் இந்தப் பட்டிக்காட்டிற்கு வந்து தொலைக்க வேண்டுமா..’ என்று அலுத்துக் கொண்டே தந்தை சொன்ன வீட்டைத் தேடினான்..

பெருமாள் கோவிலுக்கு வலது புறத்தெரு.. வாசலில் வேப்ப மரம்.. வீட்டைச் சுற்றி மரவேலி.. பச்சைக் கலர் பெயின்ட் அடித்த கம்பி கிராஸ் போட்ட வீடு..

அடையாளம் கண்டு வேப்ப மரத்தின் அடியில் தன் காரை நிறுத்தினான்.. மரக் கதவைத் திறந்து கொண்டு வீட்டு வாசல் படியேறினான்.. அழைப்பு மணியைத் தேடினான்.. காணவில்லை.. கதவின் தாழ்ப்பாளில் சப்தம் எழுப்பினான்..

“யாரது..” உள்ளேயிருந்து யாழின் நாதம் கேட்டது..

இவ்வளவு இனிமையான குரலை அவன் இதற்குமுன் கேட்டதே இல்லை.. எனவே மீண்டும் அந்தக் குரலை கேட்க விரும்பி பதில் சொல்லாமல் தாழ்ப்பாளை மறுபடியும் சப்தமெழுப்பினான்..

“யாரதுன்னு கேட்பது காதில் விழவில்லை.. செவிடா..?”

குரலைத் தொடர்ந்து கொலுசு சத்தம் கேட்டது.. பாவாடை தாவணியில் ஓர் பருவச் சிட்டு கதவுக்கு அருகே வந்தாள்..

“ஏன் சார்.. யாருன்னு கேட்டது காதில் விழுகவில்லையா..?”

பூப்போட்ட சீட்டிப் பாவாடை.. சாதாரண ஷிபான் தாவணி.. மிக நீண்ட பின்னல்.. மெல்லிய செயின்.. மல்லிகைச் சரம்.. ஒல்லியாய் உயரமாய் இருந்தாள்.. சிவந்த மேனி.. அவளது அடர்ந்த கண் இமைகள் அவள் முகத்திற்கு தனி சோபையைக் கொடுத்தது..

முதல் பார்வையிலேயே அவளால் வசீகரிக்கப்பட்டு விட்டவனாள் ஆகாஷ் பேச்சிழந்து நிற்க அவள் அதட்டினாள்..

“காதுதான் செவிடென்றால் வாயும் பேச வராதா..? ஊமையா..?”

“ராதா.. யாரும்மா வாசலில் வந்திருப்பது..?” வினவிக்கொண்டே ஒரு நரைத்த தலைப் பெரியவர் அங்கு வந்தார்..

“இதோ இங்கே நெடுமரம் போல் ஆடாமல் அசையாமல் நிற்கிறாரே.. இவர்தான் தாத்தா..”

“யாருன்னு கேட்டாயா..?”

“அதெல்லாம் கேட்டுவிட்டேன்.. என் வாய் வலித்தது தான் மிச்சம்.. சார் செவிட்டூமை போல இருக்கிறது.. ஒரு பதிலும் வரவில்லை..”

‘என்னமாய் நக்கலும் நையாண்டியும் பண்ணுகிறாள்.. திமிர்..’ அன்று அதை ரசித்துப் பார்த்தான்.. இன்று அதை நினைத்துப் பல்லைக் கடித்தான்..

“ஆகாஷ் வாடா சீக்கிரம்.. எத்தனை நேரம் கூப்பிடுவது..? காது என்ன செவிடா..?” கல்யாணி சித்தி மேடையிலிருந்து அழைத்தாள்..

‘செவிடு..’ என்ற வார்த்தையைக் கேட்டதும் அனுராதா வின் விழிகள் ஓர் முறை உயர்ந்து அவனைப் பார்த்து விட்டுத் தாழ்ந்தன..

அன்றைய நினைவு அவளுக்கும் வந்திருக்கும்.. எரிச்சலுடன் நினைத்துக் கொண்டவன் மேடையிலேறி சித்தியின் அருகே சென்று நின்று கேட்டான்..

“என்ன சித்தி..?”

“உன் பெண்டாட்டி ரொம்ப அழகுடா..”

‘ரொம்பத் திமிரும் கூட..’ என்று நினைத்துக் கொண்டவன்..

“இதைச் சொல்லத்தான் கூப்பிட்டீர்களா..?” என்று கேட்டான்..

“உன் பெண்டாட்டிக்கு மோதிரத்தைப் போட்டு விடுடா..”

ஆகாஷின் உடல் சூடேறியது.. அனுராதாவைப் பார்த்துக் கொண்டே மோதிரத்தை எடுத்து அவள் விரலருகே கொண்டு போனான்.. அவள் அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் விரல் நீட்டினாள்.. அவள் விரல் தொட்டு மோதிரம் அணிவித்தவனின் மனம் சிலிர்த்தது..

0Shares

Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link