Chapter 05

0Shares

நிச்சயதார்த்த மேடையில் வசுந்தராவின் அண்ணனும் அனுராதாவின் தாய் திலகவதியின் அண்ணனும் எதிர் எதிரே அமர்ந்தார்கள்.. நிச்சயதார்த்தப் பத்திரிகை வாசிக்கப்பட்டது.. தாம்பூலத் தட்டை மாற்றிக் கொண்டார்கள்.. நிச்சயதார்த்த புடவையை பெற்றுக் கொண்ட அனுராதா உடை மாற்ற உள்ளே செல்ல வீடியோ காமிரா வந்திருந்த விருந்தினர் பக்கம் திரும்பியது..

ஆகாஷின் நினைவும் பழைய நாட்களுக்குத் திரும்பியது.. அடுத்து ஒவ்வொரு வார இறுதியையும் ஆவலோடு எதிர்பார்த்து.. தஞ்சையிலிருந்து மதுரைக்கு வந்த வேகத்திலேயே பெற்றவர்கள் தங்கையிடம் கூட உட்கார்ந்து பேசாமல் அன்னலட்சுமிபுரத்திற்கு ஓடிவிடுவான்..

மெல்ல.. மெல்ல.. அவன் இதயத்தில் அனுராதா குடியேறி நிரந்தரமாய் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டாள்.. அவளது வெடுக்.. வெடுக்கென்ற பேச்சில் அவன் தடுக்கி விழுந்து விட்டான்..

அப்போதுதான் அவன் வாழ்வில் ராகினி குறுக்கிட்டாள்.. ஒரு நாள் மாலைப் பொழுதில் அன்னலட்சுமி புரத்து வீட்டின் உள் முற்றத்தில் தொண்டைமானின் அருகே நாற்காலி போட்டு அமர்ந்து ஆகாஷ் டீ குடித்துக் கொண்டிருந்த வேளையில் அவள் வீட்டினுள் பிரவேசித்தாள்..

“தாத்தா..”

“வாம்மா.. ராகினி.. எப்ப வந்தாய்.. உன் அப்பா, அம்மா வந்திருக்கிறாங்களா..?”

“ஆமாம் தாத்தா.. மே வெகேஷன்.. அதனால் வந்திருக்கிறோம்..”

“அதைச் சொல்லு.. இல்லாவிட்டால் இந்தப் பட்டிக்காட்டுப் பக்கம் நீ எப்படி வந்திருப்பாய்..? கிராமம் என்பது.. வீட்டுக்கு வீடு வயோதிகர்கள் வாழும் பூமி என்றாகி விட்டது..”

தொண்டைமான் பெருமூச்சு விட்டார்.. அப்போதுதான் ஆகாஷை கவனித்த ராகினியின் முகத்தில் வெட்கச் சிகப்பு வந்தது..

‘ஆள் உயரமாய் செம ஹேன்ட்சம்மாய் இருக்கிறானே.. யார் இவன்..?’

நினைத்ததை வாய்விட்டுக் கேட்டும் விட்டாள்..

“தாத்தா.. இவர் யார்..? புதிதாய் தெரிகிறாரே..” அவள் விழிகளால் ஆகாஷை விழுங்க..

“ஆமாம்.. இப்போதுதான் இவரைப் புதிதாய் செய்து வைத்திருந்தார்கள்.. கடை வீதிக்குப் போய் வாங்கி வந்து விட்டோம்..” பல்லைக் கடித்துக் கொண்டு பதில் சொன்ன அனுராதாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

ஆகாஷின் மனதில் தென்றல் அடித்தது..

‘இவளுக்கு ஏன் இவ்வளவு கோபம்..? பொறாமை..ம்ம்..’

அவனும் ராகினியை ஆர்வமாய் பார்ப்பது போல் நடித்தான்.. கடைக்கண்ணில் அனுராதாவைப் பார்த்துக் கொண்டே ராகினியிடம்.. “நீங்கள் கூடப் புதிதாகத் தெரிகிறீர்களே.. நீங்கய் யார்..?” என்று வினவினான்..

ராகினி மகிழ்ந்து போனாள்.. அனுராதாவின் முகம் கறுத்தது..

“ஐ ஆம் ராகினி.. கமிங் பிரம் திருமங்கலம்..” என்றாள் ஸ்டைலகா..

“ஏன்ம்மா ராகினி.. இதோ பதினைந்து கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற திருமங்கலத்தில் இருந்துதானே வருகிறாய்.. வெளிநாட்டில் இருந்து வந்தது போல் 

ஏனம்மா பேசுகிறாய்..? நீ ஒழுங்காய் பேசுகிறவள்தானே.. இன்றைக்கு என்ன வந்தது..?” தொண்டைமான் புரியாமல் கேட்டார்..

“நீங்க வேற தாத்தா.. இன்றைக்கு புதிதாக வேறு ஒன்று அவளுக்கு வந்திருக்கிறதே..” அனுராதா இடக்காகக் கூறினாள்.. அவள் பார்வை ஆகாஷை சுட்டெரித்தது..

“என்னவோம்மா நீங்க சின்னஞ் சிறுசுகள் பேசுவது இந்தக் கிழவனுக்கு எங்கே புரியப் போகிறது..?” தொண்டைமான் எழுந்து வாயில் பக்கம் சென்றார்..

இப்போது ராகினியின் பார்வை ஆகாஷின் மேல் தைரியமாய் பரவியது.. அனுராதா பல்லைக் கடித்தாள்..

“நான் யார் என்று சொல்லி விட்டேன் நீங்கள் யாருன்னு சொல்லவில்லையே..” கால்களை ஆட்டியவாறு அமர்ந்த வாக்கில் வினவினாள் அவள்..

“நான் ஒரு ஆசிரியர்..”

“அப்படியா.. வாசலில் கார் நிற்கிறதே..”

“என்னுடையதுதான்..”

“ஓ..” அவள் கண்கள் விரிந்தன..

“நீங்கள் எந்த ஸ்கூலில் வொர்க் பண்ணுகிறீர்கள்..?”

“ஸ்கூலில் இல்லை.. காலேஜில்..”

“காலேஜ்..? யு மீன்.. யு மீன்..”

அவள் கண்களை அகல விரித்துக் கேட்க அனுராதா அவள் முதுகில் ஓங்கி ஒரு போடு போட்டாள்..

“ஏய்.. சொல்ல வந்ததை ஒழுங்காய் சொல்லாமல் ஏண்டி மீனை வறுக்கிறாய்..? இன்றைக்கென்று வந்து தொலைத்தாயே..”

“இன்றைக்கு வந்ததால்தான் நான் இவரை மீட் பண்ண முடிந்தது..”

அன்று மாலை ஆகாஷ் விடை பெற்றுக் கிளம்பும் போது அனுராதா அங்கே இல்லை.. விழிகளால் துழாவியவன் ஏமாற்றத்துடன் கிளம்பினான்..

மறுவாரம் அவன் அங்கே வந்த மறுவிநாடி ராகினி,

“ஹலோ லெக்சரர் சார்..” என்றபடி அங்கு பிரசன்னமானாள்..

அனுராதா அவளை வெறுப்பாகப் பார்த்தாள்.. அதை சட்டையே செய்யாதவளாய்..

“காலையிலிருந்து உங்களை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன் தெரியுமா..? ஏன் இவ்வளவு லேட்..?” என்று காலம் காலமாய் ஆகாஷுடன் பழகியவள் போல ராகினி சிணுங்கினாள்..

“அவர் லேட்டாய் வருகிறார் என்று உனக்கு எப்படித் தெரியும்..? போன வாரம் அவர் கிளம்பும்போது தானே வந்தாய்..?” குத்தலாக வினவினாள் அனுராதா..

அவளது பார்வை ராகினியின் உடையலங்காரத்தை ஆராய்ச்சி செய்தது.. மிக இறக்கமாக வெட்டித் தைக்கப் பட்டிருந்த ஸ்லீவ்லெஸ் சல்வார்.. துப்பட்டாவை நூல் போல் கழுத்தைச் சுற்றிப் போட்டிருந்தாள்.. கண்களில் தெரிந்த கள்ளத்தனம்.. உதட்டினில் லிப்ஸ்டிக்..

‘மறைக்க வேண்டியதை மறைக்காமல் வேஸ்ட்டாக எதற்குத் துப்பட்டாவை போட்டிருக்கிறாள்..?’

அருவெறுத்தாள் அனுராதா.. அவள் ஒருத்தி அங்கு இருப்பதையே உணராதவள் போல் ஆகாஷிடம் வெகு சுவாரஸ்யமாய் பேசிக் கொண்டிருந்தாள் ராகினி..

“போன வாரம் உங்களைப் பார்த்த மேட்டரை டாடியிடம் சொன்னேனா அவர் அப்படியே ஆச்சர்யப்பட்டுப் போனார்..” ராகினி அளந்து விட்டுக் கொண்டிருந்த போது அனுராதா கோபத்துடன் குறுக்கிட்டாள்..

“ஏய்.. நில்லு.. டாடின்னு யாரைச் சொல்கிறாய்..?” அவள் விழிகள் ராகினியை வெட்டுவது போல் பார்த்தன..

“பர்ஸ்ட்.. நான் நின்று கொண்டுதானே இருக்கிறேன்.. இன்னும் உட்காரவில்லையே.. ஹா.. ஹா.. அப்புறம் டாடியென்றால் யார் என்று கூடவாத் தெரியாது..? மக்கு.. மக்கு..” ராகினி பதிலுக்கு மட்டம் தட்டினாள்..

“மக்கா..? யார் மக்கு..? டென்த்திலும்.. ப்ளஸ் டூவிலும் ஸ்கூல் பர்ஸ்ட் வந்திருக்கிறேன்.. காலேஜில் யுனிவர்ஸிட்டி ரேங்க் வருபவர்களென்று எதிர்பார்க்கப் படும் ஸ்டூடன்ஸ் லிஸ்டில் என் பெயர் தான் முதலில் இருக்கிறது.. நான் மக்கு.. டென்த்திலும் ப்ளஸ் டூவிலும் அறுபது பெர்ஸென்டேஜ் கூட வாங்காத நீ புத்தி சாலியா..? வெரிகுட்.. டாடின்னா அப்பாவென்று எனக்குத் தெரியும்.. போன வாரம் வரை ‘அப்பா.. அப்பா’வென்று வாய் நிறைய கூப்பிட்டவள்.. இந்த வாரம் ‘டாடி’யென்று புதிதாய் கூப்பிடுகிறாயே அதுதான் ஏனென்று எனக்குத் தெரியவில்லை..” அனுராதா சரியாக பதிலடி கொடுத்தாள்.

ராகினியின் முகம் அவமானத்தில் கன்றியது..

‘பாவி.. எப்படிப் போட்டுத் தாக்குகிறாள் பார்.. அதுவும் ஒரு பணக்கார, படித்த, அழகான ஆணின் முன்னால் என் மார்க்கைச் சொல்லிக் காட்டுகிறாள் பார்..’

சாகசக் கலையில் கைதேர்ந்த ராகினி உடனே முகத்தை இயல்பாய் வைத்துக் கொண்டாள்.

“என்ன ராதா இது..? நீ பெரிய ‘இவள்’ மாதிரி இவர் முன்னால் உன்னைப் பற்றிப் பெருமை பீற்றிக் கொள்கிறாய்..? நீ என்ன இவரை விடப் படிப்பில் கெட்டியா..? இவரை விடப் பணக்காரியா..? இவரை விடப் பெரிய ஆளா..? இவருக்கு முன்னால் நீ வெறும் தூசு தெரியுமா..?”

‘இப்போது இவனுக்கும் எனக்கும் என்ன பிரச்சனை..? இவள் ‘மக்கு’ என்பதற்கு நான் பதில் சொன்னால் இவளைப் பற்றித்தானே இவள் பீற்றிக் கொள்ள வேண்டும்..? இவனை ஏன் பேச்சில் இழுக்கிறாள்..? என் வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு என்ன அட்டகாசம் பண்ணுகிறாள் பார்..’ அனுராதாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது..

அப்போது வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டாமல் ஆகாஷ் வார்த்தைகளை விட்டு விட்டான்..

“உனக்குத் தெரியும் என் மதிப்பு மற்றவர்களுக்குத் தெரியவில்லை பார்.. இப்படியே என்னைப் பற்றிய பெருமைகளை எடுத்துச் சொல்லிக் கொண்டு இரு.. அப்படியாவது மற்றவர்களுக்கு மண்டையில் ஏறுகிறதா என்று பார்ப்போம்..” என்று உல்லாசமாய் அனுராதாவைப் பார்வையிட்டபடி ராகினியிடம் சொன்னான் ஆகாஷ்..

அவனுக்கு அனுராதாவின் வாயைக் கிளறி வம்புக்கு இழுக்க வேண்டும்.. அதற்கு இது ஒரு வாய்ப்பு.. அவ்வளவுதான்..

ஆனால் அவனது இந்த வார்த்தைகள் அங்கேயிருந்த இரு பெண்களுக்கும் இருவேறு விதமான உணர்வுகளை உண்டாக்கி விட்டது..

ஆகாஷின் பார்வையும் பேச்சும் அனுராதாவையே வலம் வர ராகினியின் உடம்பு எரிந்தது..

‘இவனுக்காக நாள் முழுவதும் மெனக்கெட்டு மேக்கப் பண்ணிக் கொண்டு வந்து முன்னே நின்றால் இவன் என்னவென்றால் இந்த முசுட்டு ராதாவையே முறைக்கிறானே..’

அனுராதாவிற்கோ ராகினியின் சாகசத்தில் எல்லை மீறிய வெறுப்பு உருவாகியிருந்தது.. என்றுமே அனுராதா ராகினியைப் போன்ற குணம் படைத்த பெண்களுடன் பேச்சு வார்த்தையே வைத்துக் கொள்ள மாட்டாள்.. ‘என்ன’ என்றால்.. ‘என்ன..’ என்று பதில் தருவது கூட அதிகம் என்பது போல் மௌனமாய் விலகிப் போய் விடுவாள்..

அப்படிப்பட்டவளிடம் ராகினி வேண்டுமென்றே வார்த்தையை விட்டு விடுவதோடு நிற்காமல் ஆகாஷை துணைக்கு அழைக்க அவனும் அவளுக்குத் துணை செய்வது போல் பேசவும் அனுராதாவிற்கு மேனி பற்றிக் கொண்டு எரிந்தது..

இவள் யார்..? அவன் யார்..? அவன் பெருமையை இவள் ஏன் கேட்க வேண்டும்..?

“ராகினி.. நீ வேண்டுமானால் இவர் பணத்திற்காக இவரிடம் பல்லைக்காட்டு.. இவர் படிப்பிற்கு பூப் போட்டு பூஜை செய்.. உனக்குத்தான் இவர் பெரிய ஆள்.. எனக்கு இல்லை.. எனக்கு இவர் வெறும் தூசுதான்..” கொதிப்புடன் கூறினாள் அனுராதா..

ராகினி மகிழ்ந்தே போய் விட்டாள்.. அவளுக்கு அனுராதாவின் குணம் தெரியும்.. எப்படிப் போனால்.. எப்படி அவள் வார்த்தைகளைக் கொட்டுவாள்.. எப்படி ஆகாஷிற்கு அவள்மேல் வெறுப்பை உண்டாக்கலாம் என்பதை அவளின் சாகசம் நன்கு அறியும்..

ஆகாஷ் அதிர்ந்து விட்டான்.. இப்போது அவன் என்ன சொல்லி விட்டான் என்று இப்படி வார்த்தைகளைக் கொட்டிக் கவிழ்க்கிறாள் இவள்..? கேலிகூடப் பேசக் கூடாதா..? கேலி பேசியதற்கு சாட்டையில் அடிப்பது போல் இப்படி ஓர் பதிலா..? ராகினி என்ன நினைப்பாள்..? மூன்றாம் மனுஷியின் முன்னால் அவன் காதலிக்கும் பெண் அவனை அவமானப்படுத்தலாமா..? அவன் உணர்வுகள் பொங்கி எழுந்தன..

ராகினி அனுராதாவின் கோபத்தீயை எரிய விட்டு அதில் குளிர்காய விரும்பினாள்..

“ராதா.. என்னதான் இருந்தாலும் நீ இவரை இப்படி டீஸ் பண்ணக் கூடாது.. உனக்கு இவரைப் பிடிக்கவில்லை என்பதற்காக என் முன்னால் இவரை அவமானப் படுத்தலாமா..? மதுரையில் மருதநாயகம் மாமாவின் குடும்பமென்றால் எல்லோருக்கும் தெரியுமாம்.. என் வீட்டில் சொன்னாங்க.. அப்பேர்பட்ட குடும்பத்தில் பிறந்த ஒருவரிடம் மரியாதையில்லாமல் எப்படி நீ பேசலாம்..? முதலில் இவரிடம் மன்னிப்புக் கேள்..”

எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றினால் பரவாயில்லை.. பெட்ரோலை ஊற்றினால் எப்படியிருக்கும்..?

“ஏய்.. இங்கே பாருடி.. உனக்கு இவரைப் பிடித்திருந்தால் நீயே இவரை உன் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு போய் சீராட்டு.. இது என் வீடு.. இங்கே உட்கார்ந்து கொண்டு எனக்கு உபதேசம் பண்ணும் வேலையை விட்டு விடு.. உனக்குப் பிடித்திருப்பவர்களை எனக்கும் பிடிக்க வேண்டுமென்ற அவசியம் ஏதும் இல்லை.. மதுரையில் அவர் குடும்பம் பெரியதென்றால் திருமங்கலத்தில் கோவிந்தசாமியின் குடும்பமென்றால் பிறந்த குழந்தைக்குக் கூடத் தெரியும்.. எனக்கு என் குடும்பம்தான் உயர்த்தி.. இந்த அன்னலட்சுமிபுரத்தில் பெரிய வீட்டுக்காரங்க என்று எங்கள் வீட்டைத் தான் சொல்வார்கள்.. என் தாத்தா வாழ்ந்த.. வாழ்கின்ற வாழ்க்கைக்கு ஈடாகாது யாருடைய வாழ்க்கையும்.. நான் கோவிந்தசாமியின் மகள்.. தொண்டைமானின் பேத்தி.. என்னைப் பார்த்துத்தான் மற்றவர்கள் பெரிய வீட்டில் பிறந்த பெண்ணென்று சொல்லியிருக்கிறார்கள்.. நான் வேறு யாரைப் பார்த்தும் அப்படிச் சொல்லியதில்லை.. இனிச் சொல்லவும் மாட்டேன்..” அனுராதா மூச்சு விடாமல் பேசி நிறுத்தினாள்..

கோபத்தில் அவளுக்கு கை கால் நடுங்கியது.. மூச்சு வாங்கியது.. விழிகள் சிவக்க பத்ரகாளி போல் நின்றாள்..

0Shares

Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link