Chapter 11
அவன் மேல் பூமாலையாய் விழுந்தவளை அவன் இறுகத் தழுவி முத்தமிட்டான்.. யாரோ கலகலவென்று நகைத்தார்கள்.. கண் விழித்துப் பார்த்தான்.. ஆனந்தி சிரித்துக் கொண்டிருந்தாள்..
“ஏண்ணா.. டவலுக்குப் போய் முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறாயே.. என்ன ஆச்சு..? தூக்கம் கலைய வில்லையா..?”
அப்போதுதான் தன் மேலே கிடந்த டவலைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான் அவன்..
‘அடச்சே.. இது அவள் இல்லையா..? டவலா..? இது எப்போது மேலே வந்து விழுந்தது..?’
“நான்தான் உன் மேல் டவலை போட்டேன்.. கையால் அடித்துப் பார்த்தேன் நீ எழுந்திருக்கவில்லை.. டவலை எடுத்து அடித்தால்.. அதை நீ இழுத்துப் பிடித்து முத்தம் கொடுக்கிறாய்.. ஹா.. ஹா.. அண்ணி..”
“ஏய்.. ஆனந்தி.. ஏய்..”
அவன் அழைக்க அழைக்க ஆனந்தி கீழே ஓடி விட்டாள்..
‘இந்த ரெட்டைவால் ஆனந்தி அவளிடம் போய்
என்ன சொல்லி இவன் மானத்தை வாங்கப் போகிறதோ தெரியவில்லையே..’
குளியலறையில் பல் தேய்த்து முகம் கழுவி அவன் திரும்பி வந்தபோது அனுராதா காபி கோப்பையுடன் அறைக்குள் வந்தாள்..
‘அதற்குள் எழுந்து விட்டாளா இவள்..? எப்போது எழுந்தாள்..?’
காபியை எடுத்துப் பருகியவாறு அவளைப் பார்த்தான்.. தலைக்குக் குளித்து ஈரத் தலையை டவலால் சுற்றிக் கொண்டையிட்டிருந்தாள்.. நெற்றியில் வகிட்டின் மேல் குங்குமம் இட்டிருந்தாள்..
‘வேசமெல்லாம் பிரமாதம்..’
காலிக் கோப்பையை எடுத்துக் கொண்டு திரும்பியவளைப் பார்த்தான்.. மயில் கழுத்து நிறத்தில் மைசூர் கிரேப் சேலை.. மஞ்சள் நிற பார்டர்.. பார்டர் கலரிலேயே ஜாக்கெட் அணிந்திருந்தாள்..
‘என்னமாய் அழகாய் இருந்து தொலைக்கிறாள்..’
குளித்து உடை மாற்றிக் கொண்டு தலை வாரினான்.. அறைக்குள் நுழைந்தவள் அவனது அழுக்குத் துணிகளை சேகரித்துக் கொண்டு திரும்பினாள்.. இப்போது தலையை காய வைத்துப் பின்னலிட்டு இருந்தாள்.. நீண்ட பின்னலாட அவள் நடக்க அவள் முதுகை வெறித்தான்.
“என்ன செய்கிறாய்..?”
“வேலைக்கார அம்மாளிடம் துணிகளை துவைக்கக் கொடுக்கப் போகிறேன்..”
“தெரிகிறது.. இதையெல்லாம் நீயேன் எடுத்துப் போகிறாய்..?”
“உங்கள் அம்மா தான் எடுத்து வரச் சொன்னார்கள்..”
“ஓயோ.. சரி நீ போ..”
அவள் இறங்கிப் போய் விட்டாள்.. அவன் சாப்பிடும் அறைக்குப் போனான்.. டைனிங் டேபிளில் அனுராதா பாத்திரங்களை வைத்துக் கொண்டிருந்தாள்.. ஆனந்தி அவளருகில் நின்று கொண்டு எதையோ சொல்லிக் கொண்டிருக்க ரசித்து சிரித்துக் கொண்டிருந்தாள்..
‘இவளுக்கு சிரிக்கக் கூடத் தெரியுமா..? சிரித்தால் எவ்வளவு அழகாய் இருந்து தொலைக்கிறாள்.. பாவி.. என்னிடம் மட்டும் முகத்தை கருங்கல் போல் வைத்துக் கொள்கிறாளே..’
அவன் உட்காரவும் அவள் தட்டைப் போட்டுப் பரிமாற ஆரம்பித்தாள் அனுராதா..
“அனுராதா..” என்று அழைத்துக் கொண்டே அங்கு வந்தாள்..
“என்னங்க அத்தை..?” பவ்யமாய் கேட்டாள் அனுராதா..
“அத்தையா.. யாரைச் சொல்கிறாய்..?” அறியாதவன் போல் கேட்டான் ஆகாஷ்..
“இது என்னடா பைத்தியக்காரத்தனமான கேள்வி..? அத்தை என்று என்னைக் கூப்பிடாமல் வேறு யாரைக் கூப்பிடுவாள்..?”
“நான் பைத்தியக்காரன்..? ஏன் சொல்ல மாட்டிங்கம்மா.. நீங்கள் என் அம்மாவாயிற்றே..
அவள் அத்தையென்று கூப்பிடுகிறாளே.. அதனால்தான் கேட்டேன்..”
“என்னவோ.. போ.. நீ சொல்வது எனக்கொன்றும் புரியவில்லை..”
“புரிகிறவர்களுக்குப் புரிந்தால் சரி..”
அனுராதாவிற்குப் புரிந்தது.. மாடியில் ‘உங்கள் அம்மா’ என்று அவள் சொன்னதைச் சொல்கிறான்.. உதட்டை மடித்துக் கடித்தவள்..
“நீங்கள் எதையோ சொல்ல வந்தீர்களே அத்தை..” என்று பேச்சை மாற்றினாள்..
“உன்னுடைய அப்பா போன் பண்ணினாரும்மா.. இப்ப உன் அப்பாவும் அம்மாவும் உங்களை மறுவீட்டிற்கு கூட்டிக் கொண்டு போக வந்து விடுவார்கள்.. நீயும் சாப்பிட்டு விட்டு ரெடியாக இரும்மா..”
“மறுவீடா.. அப்படியென்றால்..?” ஆகாஷ் புருவம் தூக்கினான்..
“அடி வாங்கப் போகிறாய் பார்.. மறுவீடு என்றால் தெரியாதா..?”
“கல்யாணம் என்றால் என்னவென்றே தெரியவில்லை.. நீங்கள் மறுவீட்டிற்குப் போய் விட்டீர்கள்..” அவன் சூள் கொட்டினான்..
“என்னடா உளறுகிறாய்..?” வசுந்தரா சந்தேகமாய் அவன் முகம் பார்த்தாள்.. தாய் மனம் விழித்துக் கொண்டது..
‘ஏன் மகன் இப்படிச் சொல்கிறான்..?’
“ஏன் அண்ணா.. கல்யாணமென்றால் என்னவென்று தெரியாமலா நீ அண்ணி கழுத்தில் தாலியைக் கட்டியிருக்கிறாய்..? அண்ணி.. பார்த்து கவனமாய் இருந்து கொள்ளுங்கள்.. வேறு யாராவது மோதிரம் மாற்றக் கூப்பிட்டால் பின்னாலேயே போய் விடப் போகிறார்..”
ஆனந்தி அனுராதாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்..
“சரியாகச் சொன்னாய்.. யாராவது கூப்பிட்டால் உன் அண்ணன் பின்னாலேயே போகிறவர்தான்..” அனுராதா சிரிக்காமல் கூறினாள்..
ஆகாஷின் புருவங்கள் முடிச்சிட்டன.. இவள் என்ன சொல்கிறாள்..? தாயின் முன்னே வாக்குவாதம் வேண்டா மென்று வாய் மூடிக் கொண்டான்.. அவன் கை கழுவிக் கொண்டிருக்கையில் வசுந்தரா அருகில் வந்து மெதுவான குரலில் கேட்டாள்..
“ஏண்டா.. ஆகாஷ் அப்படிச் சொன்னாய்..”
“சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் அம்மா..”
“பொய் சொல்லக்கூடாது..”
“மெய்தானே சொல்கிறேன்..”
“ஆகாஷ்..” வசுந்தரா செல்லமாய் முறைத்தாள்..
“அம்மா..” தாயின் கன்னத்தில் ஈரக்கையை வைத்து விட்டுச் சிரித்தான் ஆகாஷ்..
“எல்லாமே உனக்கு விளையாட்டுத்தான்டா..” ஈரக் கன்னத்தை துடைத்துக் கொண்டே சிரித்தாள் வசுந்தரா.. அவள் மனதில் இருந்த கிலேசம் பறந்து விட்டிருந்தது.. நிம்மதியான வதனத்துடன் சென்ற தாயைப் பார்த்த ஆகாஷின் மனம் கனத்தது..
‘ஆனால் காதலையும், கல்யாணத்தையும் நான் விளையாட்டாய் நினைக்கவில்லை அம்மா.. சீரியஸாகத் தான் நினைத்தேன்.. நினைக்கின்றேன்.. ஆனால் நான் காதலித்து மணந்து கொண்டவளே என்னை முறைத்துக் கொண்டு நிற்கிறாளே அம்மா.. இதை நான் எங்கே சொல்வேன்..? உங்களிடம் எப்படி முறையிடுவேன்..? இவளுடன் எப்படி என் வாழ்க்கையை வாழ்வேன்..?’
கோவிந்தசாமியும், திலகவதியும் மிகவும் மரியாதையுடன் ஆகாஷை மறு வீட்டிற்கு அனுப்பி வைக்கும்படி மருதநாயகத்திடமும் வசுந்தராவிடமும் வேண்டிக் கொண்டனர்..
“ஆனால் மாமா.. என்னால் ஒரு நாள் தான் இருக்க முடியும்..” என்றான் ஆகாஷ்..
அனுராதா அவனை யோசனையுடன் பார்த்தாள்..
“என்னடா ஆகாஷ்.. உன்னை ஒரு மாதம் லீவ் போடச் சொன்னேனே..” மருதநாயகம் வியப்புடன் கேட்டார்..
“போட்டேனே அப்பா.. கல்யாணத்திற்கு இரு வாரத்திற்கு முன்னாலேயே இங்கே வந்து விட்டேனே.. லீவெல்லாம் தீர்ந்து போச்சேப்பா..”
“இப்படிச் சொன்னால் எப்படிடா..? மறுவீட்டிற்குப் போகத்தான் ஒரு நாள் இருக்குமென்றால்.. நாளைக்கே நீ கிளம்ப வேண்டுமா..?”
“ஆமாம்..”
“என்ன மாப்பிள்ளை இப்படிச் சொல்கிறீர்கள்..? என் மூத்த மகன்கள், மகள்கள் வீட்டிற்கு விருந்துக்குப் போக வேண்டாமா..?” கோவிந்தசாமி மனத்தாங்கலுடன் வினவினார்..
“இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் மாமா..”
ஆனந்தி வேறு ஒன்றைக் கிளப்பி விட்டாள்..
“ஏன் அண்ணா.. ஹனிமூன் என்று ஒன்று இருப்பதை மறந்து விட்டாயா..?”
“இருக்கிற வொர்க் லோடில் அது ஒன்றுதான் குறைச்சல்..” ஆகாஷ் அலுத்துக் கொண்டான்..
இரு பக்க தாய் தந்தையரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.. மருதநாயகம் மெல்லிய குரலில் கோவிந்தசாமியிடம் சொன்னார்..
“பொறுப்பான வேலை.. லீவ் கிடைப்பது கஷ்டம்.. அவன் சொன்னது போல் லீவ் கிடைக்கும்போது எல்லா வற்றையும் பார்த்துக் கொண்டால் போகிறது.. என்னங்க நான் சொல்கிறது சரிதானே..”
பெண்ணைப் பெற்றவர் வேறு என்ன சொல்லுவார்..?
“நீங்க சொன்னால் தப்பாகவா இருக்கும்.. ரொம்பச் சரி..”
ஆகாஷும், அனுராதாவும் திருமங்கலத்திற்கு மறுவீட்டு விருந்திற்குப் போனார்கள்..
திலகவதி பார்த்துப் பார்த்துப் பரிமாறினாள்..
“அப்போ.. நீங்கள் நைட்டே கிளம்பப் போகிறீர்களா மாப்பிள்ளை..?”
“ஆமாம்.. அத்தை..”
“ராதாவும் உங்களுடனேயே வருகிறாளா..?”
“தெரியவில்லை..”
திலகவதி கணவனின் முகத்தைப் பார்த்தாள்.. பின் ஆகாஷிடமே வினவினாள்..
“நீங்கள் அவளிடம் இதுபற்றிப் பேசவில்லையா..?”
“எது பற்றியும் பேசவில்லை..”
“என்ன மாப்பிள்ளை.. இப்படிச் சொல்கிறீர்கள்..?”
“எல்லாக் கேள்விகளையும் என்னிடமே கேட்டால் எப்படி அத்தை..? கொஞ்சம் உங்கள் மகளிடமும் கேள்வி கேட்கலாமே..”
“என்னடி மாப்பிள்ளை இப்படிச் சொல்கிறார்..?” திலகவதி மகளைப் பார்த்துக் கேட்டாள்..
“அவர் டயர்டாக இருக்கிறார் அம்மா.. அதனால் அப்படிச் சொல்கிறார்.. நானும் அவரோடுதான் போகப் போகிறேன்..”
‘இது என்ன புதுக்கதை..?’ ஆகாஷின் விழிகள் அவளைப் பார்த்துக் கேட்டன.. அவள் அதைக் கவனிக்காதவள் போல் திலகவதியிடம் கூறினாள்..
“இனிமேல் அவர் எங்கே இருக்கிறாரோ.. அங்கே தானே நானும் இருக்க வேண்டும் அம்மா..?”
“அதற்காக நேற்று இந்நேரம் கல்யாணம் முடித்த பெண் உடனே ஓடி விடுவதா..? மாப்பிள்ளைக்குத்தான் லீவ் இல்லை.. உனக்கு இருக்கிறதே..”
“நான் லீவை கேன்ஸல் பண்ணிவிட்டு டியூட்டியில் ஜாயின் பண்ணப் போகிறேன் அம்மா..”
“ஏண்டி மாப்பிள்ளை வீட்டை வாடகைக்கு விட்டிருந்தாரே.. அவர்கள் காலி பண்ணி விட்டார்களா..?”
“ஏம்மா.. எனக்குக் கல்யாணமாகி ஒரு நாள் தானே ஆகிறது..? நேற்று பகல் பூராவும் கல்யாண மண்டபத்தில் இருந்தோம்.. சாயந்திரம் சிந்துபட்டிக்கும் அன்னலட்சுமி புரத்திற்கும் போய் வந்தாகி விட்டது.. நாங்கள் இரண்டு பேரும் உட்கார்ந்து பேச நேரம் எங்கே கிடைத்தது..? வீடு காலியாக இருந்தால் வீட்டில் போய் இருக்கிறேன்.. கூடு காலியாக இல்லா விட்டால் அவர் எங்கே தங்கியிருக்கிறாரோ.. அங்கேயே போய் அவருடன் தங்கிக் கொள்கிறேன்.. இது ஒரு பெரிய விஷயமா..?”
‘இங்கே பாருடா.. என் இதயப் பைங்கிளி இப்படிப் போட்டுத் தாக்கிக் கொண்டு இருக்கிறாள்.. இவளுக்கு இப்படியெல்லாம் பேசக்கூடத் தெரியுமா..’
“கவலையே வேண்டாம் அத்தை.. வீடு காலியாகத் தான் இருக்கிறது.. போன மாதமே வீட்டைக் காலி பண்ணி விட்டார்கள்.. ஆள் வைத்து வீட்டை பெயின்ட் அடித்து கழுவி சுத்தம் பண்ணி வைத்திருக்கிறேன்.. உங்கள் மகள் வந்தவுடன் பால் காய்ச்சி விடலாம்.. கேஸ் கனெக்ஷன் போன மாதமே வாங்கி வைத்து விட்டேன்.. மற்ற சாமான்களை இனிமேல்தான் வாங்க வேண்டும்..” ஆகாஷ் தன்மையாய் பேசினான்..
“நல்லாச் சொன்னீங்க போங்க.. நீங்கள் எதற்கு எதையும் வாங்க வேண்டும்..? சீர் வரிசை தரத்தானே நாங்கள் இருக்கிறோம்.. நைட்டே லாரி பிடித்து ஏற்றி விட்டு உங்கள் கூடவே வந்து பால் காய்ச்சி குடி வைத்து விட்டு வந்து விடுகிறோம்..” திலகவதி பரபரப்பாய் கணவனைத் தேடிப் போனாள்..
கை கழுவிய ஆகாஷ் கை துடைத்துக் கொள்ள அனுராதா டவலை நீட்ட வாங்கி கையைத் துடைத்தவாறு அவளைத் துளைப்பது போல் பார்த்தான்.. அவள் இரும்பாய் இறுகி நின்றாள்..
“என்னுடனேயே ஏன் வருகிறாய்..? உன் வீட்டில் இருந்து விட்டு வரவேண்டியதுதானே..” ஆகாஷ் அவளிடம் குத்தலாய் பேசிக் கொண்டிருந்தபோது..
“ஏண்டி ராதா..! உன் வீட்டிற்கு தேவையான பர்னிச்சர் லிஸ்டைக் கொடு.. அப்பா கேட்கிறார்..” என்று திலகவதி அவளை அழைத்தாள்..
ஆகாஷைக் குறிப்பாய் வெட்டும் பார்வை பார்த்தபடி தாயைத் தேடிப் போனாள் அனுராதா..
பார்த்துவிட்டுப் போகிறதைப் பார்.. இந்தப் பார்வைக் கொன்றும் குறைச்சலில்லை.. ஏன் வாய் விட்டுச் சொல்வதுதானே.. இது என் பெற்றவர்களின் வீடு..
உன் வீடுதான் இனி என் வீடென்று.. என்னிடம் மட்டும் அதைச் சொல்ல மாட்டாள்.. அவள் அம்மாவிடம் மட்டும் வாய் கிழியப் பேசுவாள்.. என்னவோ ராமன் பின்னால் போகும் சீதை மாதிரி டயலாக் விடுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை.. கடுகடுப்புடன் நினைத்துக் கொண்டான் ஆகாஷ்..
அன்று இரவு ஆகாஷின் காரில் முன் சீட்டில் ஆகாஷ் காரை ஓட்டிக் கொண்டு வர அருகே அனுராதா அமர்ந்திருந்தாள்.. பின் சீட்டில் ஆனந்தி அமர்ந்து பேசிக் கொண்டு வந்தாள்.. கோவிந்தசாமியும் திலகவதியும் மருதநாயகத்தின் காரில் ஏறிக் கொண்டார்கள்.. இரண்டு கார்களையும் சீர்வரிசை லாரி பின் தொடர்ந்தது..
Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.