Chapter 18

0Shares

மாடிப்படிகளில் இறங்கிய அனுராதா வாசலில் கால் வைத்த போது பின்னாலேயே வந்த ஆகாஷ் அவள் சற்றும் எதிர்பாராமல் அவளைத் தூக்கிக் கொண்டான்.. கையில் பெட்டியோடு அவனது கரங்களில் பூமாலையாய் கிடந்தவள் சுதாரித்துக் கொண்டு திமிறுவதற்குள் வீட்டுக்குள் வந்து சோபாவில் அவளைப் போட்டுவிட்டு வாசல் கதவை மூடி சாவியை கைப்பற்றிக் கொண்டான்.. அனுராதா எழுந்து பின்பக்கம் போகப் பார்த்தாள்.. அதற்குள் ஆகாஷ் முந்திக் கொண்டு அந்தச் சாவியையும் கைப்பற்றி விட்டான்..

“ஹவுஸ் அரெஸ்ட் பண்ணுகிறீர்களா..?”

“அதை எப்போதோ செய்து விட்டேன்..”

“என்ன உளருகிறீர்கள்..”

“உளறல் இல்லை.. உண்மைதான்.. உன் கழுத்தில் தாலிகட்டி உன்னை கைது பண்ணிவிட்டேனே.. அப்புறம் என்னை விட்டு எப்படி நீ போவாய்..?”

“அந்த மட்டிலும் உங்களைக் கல்யாணம் பண்ணிக் கொள்வது ஆயுள் தண்டனையென்பதை ஒத்துக் கொண்டால் சரி..”

“உண்மையை ஒத்துக் கொள்ளத்தானே வேண்டும்.. நான் மட்டுமா உன்னை கைது பண்ணியிருக்கிறேன்.. நீயும்தான் என்னைக் கைது பண்ணியிருக்கிறாய்.. எனக்கும் இது ஆயுள் தண்டனைதான்.. ஸோ நீயும் நானும் நம் கடைசி மூச்சு வரை ஒருவரை விட்டு ஒருவர் பிரிய முடியாது..”

‘இறுதிமூச்சு’ அனுராதாவிற்கு இதயத்தை என்னவோ செய்தது.. ஏன் இவன் இப்படியெல்லாம் பேசுகிறான்..?

“பிரியாமல் ஒருவரிடம் ஒருவர் போராடிக் கொண்டு வாழ வேண்டுமா..? அது ஒரு வாழ்க்கையா..?”

“புதிதாகவா போராடுகிறோம்..? எப்போது இருவரும் சந்தித்தோமோ அப்போதிருந்தே போராடிக் கொண்டு தானே இருக்கிறோம்..? இதை மாற்ற வேண்டுமானால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது..”

“என்ன வழி..?” யோசனையுடன் கேட்டாள் அனுராதா..

“வாழ்ந்து விடு அனு.. என்னுடன் வாழ்ந்து விடு.. அதன் பின் இப்படி மனதிற்குள் போட்டு குமைந்து கொண்டிருக்க மாட்டாய்.. நானும் உன் மனது தெரியாமல் இன்று போல் எதையாவது ஏடாகூடமாய் செய்து விட்டு உன்னிடம் மாட்டிக் கொண்டு விழிக்க மாட்டேன்..” ஆகாஷின் விழிகள் அவளிடம் தாபத்தைக் கொட்டின..

“அது எப்படி முடியும்..”

“இப்படி முடியும்..”

ஆகாஷ் அனுராதாவின் கையைப் பிடித்து அருகே இழுத்தான்.. அவன் இழுத்த வேகத்தில் அவன் மேல் விழுந்தவளை அவன் கரங்கள் சுற்றி வளைத்தன.. விடு பட அவள் முயன்றாள்.. அவனது கரங்கள் அவளை இறுக்கிக் கொண்டு விலக அனுமதிக்கவில்லை.. அனுராதாவின் உடலில் ஏதோ மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது.. உடல் சூடேற அவனது அணைப்புக்குள் அடங்க உடல் விழைவதைக் கண்டு அவள் அதிர்ச்சியுற்றாள்.. அவள் உடலின் ஒவ்வொரு அணுவும் அவன் வேண்டும் என்று துடிப்பதை உணர்ந்த அவளது இதயம் தவித்தது.. அவளது இதயத்தை அறிந்து கொள்ளாமல் அவளது உடலை அவன் தொடுவதா..? விடுபட அவள் போராட ஆரம்பித்தாள்.. ஆனால் அவளது போராட்டத்தை லட்சியமே பண்ணாமல் ஆகாஷின் இதழ்கள் அவளது இதழ்களின் மேல் பதிந்தன.. அனுராதா தொய்ந்து அவன் கரங்களில் அடங்கினாள்.. ஆகாஷின் உடலில் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகமாக அவளை ஆவலுடன் தழுவிக் கொண்டான்.. மெல்ல அவனது கரங்கள் முன்னேறின.. ஓர் நிலையில் அனுராதாவின் புலன்கள் விழித்துக் கொண்டன.. அவனை உதறிப் பிரிந்து நின்றாள்..

“ஏய்ய்.. கிட்ட வா..” ஆகாஷ் கள்ளுண்ட வண்டாக மயக்கத்துடன் அவளிடம் நெருங்கினான்..

“வேண்டாம்.. கிட்ட வராதீர்கள்..” அவள் பின்னடைந்தாள்..

“வருவேன்..”

“எனக்கு விருப்பமில்லை..”

“காலையில் ஓகே சொன்னவள்தானே..”

அனுராதா திகைத்து விழித்தாள்.. ஆகாஷ் வெற்றியுடன் அவளைப் பார்த்தான்.. பின்னடைந்த அனுராதா சோபாவின்மேல் விழுந்து விட ஆகாஷ் அவள் மேல் படர்ந்தான்.. அனுராதாவிற்கு அழுகை வந்தது.. காலையில் சரியென்று சொல்லும் போது இருந்த மனநிலையா இப்போது இருக்கிறது..? பேசாமல் அப்போதே லீவ் சொல்லிவிட்டு வந்திருக்கலாம்.. இந்த மனப்போராட்டம் அவளுக்கு வந்திருக்காது.. அவனுடன் வாழ்ந்திருக்கலாம்.. இப்போது முடியவில்லையே.. அவனைத் தழுவத் துடிக்கும் அதே நேரம் அவளை பின்சீட்டில் அமர வைத்துவிட்டு அவள் கண் முன்னாலேயே இன்னொருத்தியை பக்கத்தில் அமர வைத்துக் கொண்டு அவன் காரோட்டியதுதானே நினைவுக்கு வருகிறது.. எப்படி இவனுடன் இழைவது..?

அனுராதா தன் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி அவனைத் தள்ளி விட்டாள்.. அவளும் எழுந்து அமர்ந்து கொண்டாள்..

“என் மேல் உங்களுக்கு உண்மையிலேயே துளியளவாவது அன்பும் மரியாதையும் இருந்தால் கிட்ட வராதீர்கள்..”

ஆகாஷின் உடலில் இருந்த உணர்வுகள் காணாமல் போயின.. அவளிடம் நெருங்காமல் விலகி அமர்ந்தான்.. நிறைவேறாத தாபமும் கோபமும் அவனின் வார்த்தைகளில் வெளிப்பட்டன..

“ஏன்.. ஏன்.. சொல்லுடி.. ஏன் என்னை இந்தப் பாடு படுத்துகிறாய்..? என் தேவைக்கு உன்னை நாடாமல் வேறு யாரை நாட முடியும்..? புரிந்து கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தால் எப்படி..? ராகினி என் கையைத் தொட்டுப் பேசலாம்.. சொப்னா காரில் என் பக்கத்தில் உட்கார்ந்து வரலாம்.. ஆனால் நீ.. நீ மட்டும் தானே என்கைகளுக்குள் வர முடியும்..? உன்னோடு மட்டும் தானே என்னால் வாழ முடியும்..? ஏண்டி பிடிவாதம் பிடிக்கிறாய்.. நீ எனக்கு வேண்டும் அனு.. இப்போதே வேண்டும்..”

அவனுடைய வார்த்தைகளில் வெளிப்பட்ட தாகம் அவளைக் காந்தமாய் கவர்ந்து அவன் பால் ஈர்த்தது.. அனுராதா தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்..

‘பொறு அனுராதா.. அவன் உன் இதயத்தை உணர்ந்து கொள்ளட்டும்.. அதன்பின் உன்னை சொந்தமாக்கிக் கொள்ளட்டும்.. அதுவரை வைராக்கியமாய் இரு.. இது போன்ற சோதனைகளை வென்றுகாட்டு.. உன் பெண்மைக்கு அதுதான் மரியாதை..’

அனுராதா அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.. அவன் பார்வையில் அழைப்பை கண்டு கொள்ளாதவளாய் பேசினாள்..

“எனக்கு கொஞ்ச நாள் அவகாசம் வேண்டும்..”

“அடிப்பாவி.. எதற்குடி அவகாசம் கேட்கிறாய்..? இதற்கா..? உனக்கே இது நியாயமாய் இருக்கிறதா..? நமக்கு கல்யாணம் முடிந்து ஒரு மாதம் ஆகப்போகிறதுடி..”

“நாம் ஒருவரையொருவர் புரிந்து கொண்டவர்களாய் இருந்திருந்தால் இந்த ஒரு மாத இடைவெளி கூட நம்மிடையே வந்திருக்காதே..”

“நீதான் என்னைப் புரிந்து கொள்ள மறுக்கிறாயே..”

“இப்போதும் நான்தான் உங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றுதானே எதிர்பார்க்கிறீர்கள்.. நீங்கள் என்னைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யவில்லையே..”

“புரிந்து கொள்ள நீதான் விட மாட்டேன் என்கிறாயே.. ஆகாஷின் கை அவளது கையைப் பற்றி அழுத்தியத..”

கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அனுராதாவின் இதழ்களில் புன்முறுவல் அரும்பியது..

‘இவன் இது ஒன்றில்தான் குறியாக இருப்பான்.. இவன் பாஷையில் ஒருவரையொருவர் புரிந்து கொள்வது என்பது ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொள்வது..’

ஒரு கணம் தன் வைராக்கியத்தைக் கைவிட்டு அவனுடன் கலந்து விட்டால் என்ன என்று அவளுக்குத் தோன்றியது.. ஏக்கத்துடன் தன் முகம் பார்ப்பவனின் தாபத்தை தீர்த்து விட்டாலென்ன என்ற வேகம் எழுந்தது.

‘அதற்குப் பின்..?’ அனுராதா தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்..

‘இது தினசரி நடவடிக்கையாக ஆகிவிடும்.. அவன் மனதில் என்ன நினைப்பான்..? கழுத்தில் விழுந்த தாலிக்காக மனைவியென்ற கடமையை அவள் நிறைவேற்றுகிறாள் என்றுதானே நினைப்பான்..? நோ அதர் வே என்று அவனுடன் இசைந்து வாழ்வதாகத்தானே அந்த வாழ்க்கை இருக்கும்..’

நினைக்கவே சகிக்கவில்லை அனுராதாவிற்கு.. அவள் தீவிரமான முகபாவத்துடன் கூறினாள்..

“இதோ பாருங்கள்.. அனுராதா ஒன்றும் கிள்ளுக்கீரையில்லை.. நீங்கள் அவமானப்படுத்தும்போது அவமானப் பட்டுக் கொண்டு.. இழுத்து அணைக்கும் போது பதிலுக்கு தழுவிக் கொண்டு.. உங்களுடன் குடும்பம் நடத்திக் கொண்டு இருப்பதற்கு.. கொஞ்ச நேரத்திற்கு முன்னாடிதான் என்னை ‘ஒழிந்து போ’ என்று சொன்னீர்கள்.. இப்போது என்னுடன் ‘வாழ வா’ என்கிறீர்கள்.. நீங்கள் ‘போ’ என்றவுடன் பெட்டியைத் தூக்க.. ‘வா’ என்றவுடன் பெட்டியை கீழே போட்டு விட்டு உங்களிடம் வந்துவிட.. என்று ஒரு மரியாதை இல்லாத வாழ்க்கையை வாழ என்னால் முடியாது.. நாம் ஒரே வீட்டில் இருக்கலாம்.. ஆனால் நம் மனம் இரு வேறு திசைகளில் இருக்கின்றன.. அவை ஒன்று சேரட்டும்.. அதன்பின் உடலால் ஒன்று படுவதைப் பற்றி நாம் யோசிக்கலாம்..”

“இன்று நடந்த நிகழ்விற்கு நான் மன்னிப்புக் கேட்டு விட்டேனே அனு.. நான் உன் ஆகாஷில்லையா..? என்னை மன்னிக்கக் கூடாதா..?”

‘உன் ஆகாஷ்..’ அனுராதாவின் கண்கள் கலங்கி விட்டன..

“நீங்கள் எனக்கு மட்டும் சொந்தமென்று என் இதயம் சொல்லட்டும்.. அதன்பின் காலமெல்லாம் உங்கள் காலடியில் கிடப்பேன்.. அதுவரை என்னை நெருங்காதீர்கள்..”

அவளது கண்ணீர் கலந்த இந்த வார்த்தைகள் ஆகாஷின் இதயத்தை துளைத்தன.. அவள் மனதிலும் இந்த அளவிற்கு வேதனை இருக்கின்றதா..? எதற்காக இந்த துன்பம் கொள்கிறாள்..?

அவன் மனம் புரிந்தும் புரியாமலும் திகைத்தது..

0Shares

Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link