Chapter 23
இது ஏன் தனக்கு முன்னரே தெரியாமல் போனது..? தனக்குள் கேட்டுக் கொண்டான் ஆகாஷ்..
ராகினியின் விசயத்திலும் ஆகாஷ் அளவோடு நடந்து அவளுக்கு புத்தி சொல்லியிருந்தால் அனுராதா அவனைப் புரிந்து கொண்டிருப்பாளோ..? பொறாமையைத் தூண்டி விடுகிறேன் பேர்வழியென்று ராகினியோடு சேர்ந்து கொண்டு அனுராதாவை கிண்டலடித்தது தவறோ..? ஆகாஷிற்கு நினைக்க நினைக்க நெஞ்சம் கனத்தது..
அவளின் இதயத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிய அவன் மனம் ஆசைப்பட்டது.. அனுராதாவிற்கு டைரி எழுதும் பழக்கம் இருந்தது.. அன்னலட்சுமிபுரத்தில் அவனைப் பார்த்தது முதல் அவள் என்ன நினைத்தாள் என்பதை அறிந்து கொள்ள ஒரே வழி.. அவளது இதயத்தின் சாளரக் கதவுகளை திறப்பதுதான்..
ஆகாஷ் அவளது டைரிகளை திருட்டுத்தனமாய் தேடியெடுத்து படிக்க முடிவு செய்தான்..
உடல்நிலை சரியானதும் ஆகாஷ் கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்தான்.. அனுராதாவும் அலுவலகம் சென்றுவிட்டாள்.. ஆகாஷ் அவளில்லாத சமயம் அவளது அலமாரியைக் குடைய நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்..
அன்று சொப்னா வந்தபோது அவன் பதறிப்போய் எழுந்து வார்த்தைகளைக் கொட்டியது தற்செயலான விஷயம்.. இன்னும் சொல்லப் போனால் ஆகாஷ் கோபப் பட்டதற்கான காரணமே வேறு..
சொப்னாவை அவள் போக்கில் விட்டிருந்தால் அவள் இயல்பாக ஆகாஷின் கட்டிலில் அமர்ந்து அவனது நெற்றியைத் தொட்டுப் பார்த்திருப்பாள்.. அத்துடனும் நில்லாமல் அவனுக்குக் கஞ்சி குடுக்கவும் கிளம்பியிருப்பாள்.. அது மட்டும் அனுராதாவின் கண் முன் நடந்திருந்தால்.. அந்தக் கணமே ஆகாஷை விட்டு அனுராதா பிரிந்து போயிருப்பாள்.. அதன் பின்னர் அனுராதாவோடு சேர்ந்து வாழும் வாழ்க்கையை கனவில் கூட ஆகாஷால் நினைத்துப் பார்த்திருக்க முடியாது..
அந்தப் பயத்தில்தான் அவன் சாவி கொடுத்த பொம்மை போல் கத்த ஆரம்பித்தான்.. கண் மண் தெரியாத அவனது கோபத்தில் வெளிவந்த வார்த்தைகள் சொப்னாவின் மீது அடி மனதில் அவனுக்கிருந்த அபிப்ராயத்தையும், மனத்தாங்கலையும் வெளிப்படுத்தி விட்டது.. அதன் விளைவு அவனே எதிர்பாராத வகையில் இனிய திருப்பதை உண்டு பண்ணிவிட்டது..
புதிர் போன்ற அனுராதாவின் பூப்போன்ற மனதின் மறு பக்கத்தையும் அன்று அவன் தரிசிக்க நேர்ந்தது..
அவன் எதிர்பார்த்த தருணமும் ஓர் நாள் வாய்த்தது.. கல்லூரியின் கல்ச்சுரல் புரோகிராமுக்காக அவனது வகுப்புக்கள் கேன்சலாக ஆகாஷ் வீடு நோக்கி காரை விட்டான்.. கதவு திறந்து வீட்டை உள்பக்கமாய் பூட்டி விட்டு மாடியறை நோக்கி நடந்தான்.. அனுராதாவின் அலமாரியைத் திறந்து ஆராய்ந்தான்.. உடைகள்.. நைட்டிகள்.. உள்ளாடைகள்.. வேறு எவையும் இல்லை.. யோசனையுடன் லாக்கரைத் திறந்து பார்க்க எண்ணி சாவியைத் தேடினான்.. அவளது புடவைகளுக்கு அடியில் அது கிடைத்தது.. லாக்கரைத் திறந்தான்.. அவளது நகைகள்.. செர்டிபிகேட்ஸ் அடங்கிய ஃபைல்.. அதைத் தவிர்த்து அழகான ஜரிகை எம்பிராயிடரி வேலைப்பாடுகளுடன் கூடிய பை அவனது கருத்தைக் கவர்ந்தது.. எடுத்துப் பார்த்தான்.. அவன் தேடியது அதில் இருந்தது..
ஆகாஷ் தன் முன் கட்டிலில் பரப்பப்பட்டிருந்த பொருள்களைப் பார்த்தான்.. ஆண்கள் போடும் சட்டை ஒன்று.. அது ஆகாஷின் சட்டை என்பதைப் பார்த்தவுடன் கண்டுபிடித்து விட்டான்.. அன்னலட்சுமிபுரத்தில் அனுராதா நீட்டிய மோரில் நனைந்த சட்டை.. அழகாய் துவைத்து இஸ்திரி போட்டு வைக்கப்பட்டிருந்தது.. ஒரு குறிப்பேடு.. பிரித்துப் பார்த்தான்.. அவனது கையெழுத்து.. அவன் அன்னலட்சுமிபுரத்தில் குறிப்புகளை எழுதிய நோட்டு.. பேனா.. அதுவும் அவனுடையது தான்..
அவளது லாக்கரில் இத்தனை வருடங்களாக இவற்றைப் பொக்கிஷம் போல் பாதுகாத்து வந்திருக்கிறாளா..? ஏன்..?
ஆகாஷின் இதயத்தை மெல்லிய மயிலிறகு வருடிச் சென்றது.. இவை சொல்லும் செய்தி ஒன்றுதான்..
இதயச் சாளரத்தை இறுக மூடிக்கொண்டு நடமாடும் அனுராதாவின் இதயத்தில் வாசம் செய்பவன் ஆகாஷ் மட்டும்தான்..
இதயம் படபடக்க அவளது டைரிகளைத் தேடினான் ஆகாஷ்.. லாக்கரில் அவையும் இருந்தன.. அன்னலட்சுமி புரத்தில் அனுராதாவைச் சந்தித்த ஆண்டில் எழுதப்பட்டிருந்த டைரியை எடுத்துப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தான் ஆகாஷ்..
‘…… இன்று அப்பா மொத்தமாக டிரெஸ் எடுத்து வந்திருந்தார்.. அக்காக்களும்.. அம்மாவும் அவரைச் சுற்றி வளைத்துக் கொண்டனர்.. நான் போக வில்லை.. எனக்குப் பிடித்ததை கை காட்ட நினைப்பதற்குள் அக்கா அதைப் பிடித்திருக்கிறது என்று சொல்லி எடுத்துக் கொள்வாள்.. எனக்கு புது டிரெஸ் போடும் ஆசையே போய்விடும்.. எதற்கு வம்பு.. நான் போகப் போவதில்லை..’
ஆகாஷ் புருவங்கள் முடிச்சிட யோசித்தான்..
‘ஸோ.. இவள் விரும்பும் எதன் மீதும் மற்றவர் பார்வை படுவதை இவள் சகிக்கமாட்டாள்.. போச்சுடா..’
அடுத்த பக்கத்தைப் புரட்டினான்..
‘…… இன்று திவாகரன் லவ் லெட்டர் கொடுத்து விட்டான்.. நான் பிரித்துப் படிக்காமல் கிழித்துப் போடப் போனேன்.. சுகந்தி பிரித்துப் படித்து விட்டாள்.. என்
அழகை வர்ணித்திருக்கிறான்.. அவனுக்கு என்னைப் பிடித்திருப்பதால் எனக்கும் அவனைப் பிடிக்க வேண்டுமாம்.. என் சம்மதத்தின் அடையாளமாக என் தலையில் மஞ்சள் ரோஜாவைச் செருகிக் கொண்டு நாளை நான் வர வேண்டுமாம்.. அவனுக்கு அது பிடிக்கும்.. இது பிடிக்கும் என்று ஆயிரம் கதை எழுதியவனுக்கு ஒரு விசயம் தெரியாது.. எனக்கு மஞ்சள் ரோஜாவே பிடிக்காது..’
ஆகாஷிற்கு சிரிப்பு வந்துவிட்டது..
‘அடப்பாவி தினகரா.. ஒரு மஞ்சள் ரோஜாவினால் உன் காதல் கன்ஸிடர் பண்ணப்படாமலே போய்விட்டதா..? என் அழகான ராட்ஸஸி இன்னும் எத்தனை பேரின் இதயத்தை நொறுக்கினாளோ..’
சுவாரஸ்யத்துடன் அடுத்த பக்கத்திற்கு தாவினான் ஆகாஷ்..
‘….. அம்மாவிடமிருந்து வழக்கமான பாட்டுக் கிளம்பிவிட்டது.. நான் அன்னலட்சுமிபுரத்திற்கு போகக் கூடாதாம்.. பக்கத்து வீட்டு பரிமளம் ஆன்டியின் பெண் லீவு நாளில் பாட்டுக் கற்று கொள்கிறாளாம்.. எதிர் கூட்டு பாட்டியின் பேத்தி லீவு நாளில் பரத நாட்டியம் கற்றுக் கொள்கிறாளாம்.. கோடி வீட்டு கோமளம் மாமியின் தம்பி பெண் லீவு நாளில் கம்ப்யூட்டர் கிளாஸ் போகிறாளாம்.. நான் இது எதையும் கற்றுக் கொள்ளாமல் என் லீவ் நாளை வேஸ்ட் பண்ணுகிறேனாம்..
….. என் அருமை அம்மாவே.. இந்த வீட்டில் நான் கடைக்குட்டி.. எல்லோருக்கும் கடைசியாய் பிறந்த பெண்… எதிலும் கடைசி.. ஆனால் அன்னலட்சுமி புரத்தில்…?
…. என் தாத்தாவிற்கு நான்தான் எல்லாமும்.. தாத்தா அதட்டினால் நீ பயப்படுவாய்.. அப்பா பயப்படுவார்.. ஆனால் தாத்தா..? நான் அதட்டினால் பயப்படுவார்.. என் வார்த்தைக்கு கட்டுப்படுவார்.. அன்னலட்சுமிபுரத்து வீட்டில் நான் வைத்ததுதான் சட்டம்.. என் வார்த்தைக்கு மறு வார்த்தை தாத்தாவிடமிருந்து வராது.. அங்கு நான் தான் மகாராணி.. எனக்கு எதற்கம்மா பாட்டும், வீணையும், நாட்டியமும், கம்ப்யூட்டரும்.. தாத்தாவின் வீடு தரும் சந்தோசத்தை இவை தர முடியுமா..?’
ஆகாஷ் ஒரு முறைக்கு பலமுறை அந்தப் பக்கத்தை ஊன்றிப் படித்தான்.. அவை சொல்லிய செய்தி அவனுக்கு மெல்ல.. மெல்ல புரிந்தது..
அனுராதா பத்தோடு பதினொன்றாய் இருப்பதை விரும்ப மாட்டாள்.. தன் வீட்டில் கடைக்குட்டி என்பதால்.. தான் முதன்மையாய் விளங்கும் தாத்தாவின் வீட்டையே விரும்பியிருக்கிறாள்.. அடிபணிதலை விரும்பாதவள்.. தாத்தாவின் செல்லப்பேத்தி.. அதனால் குடும்பத்தில் சில அதிகாரங்கள் கிடைக்கப் பெற்றவள்.. தனக்குப் பிடித்ததை மட்டும் செய்பவள்.. மற்றவர் சொல்வதற்காக எதையும் செய்வதை விரும்பாதவள்..
ஆகாஷ் யோசனையில் ஆழ்ந்தான்.. இப்போது அனுராதாவின் இயல்பு அவனுக்கு முழுவதும் பிடிபட்டு விட்டது..
யாருக்கும் அடிபணியாத இயல்புடையவள்.. யார் சொன்னாலும் கேட்டுக் கொள்ளாத தன்மையுடையவள்.. கட்டாயப்படுத்தி இவள் மீது யாரும் தங்களது விருப்பத்தை திணித்து விட முடியாது.. அந்தக் கட்டாயத்திற்கு இவள் கட்டுப்படவே மாட்டாள்..
அப்புறம் எவ்வாறு தொண்டைமானின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இவள் வாக்குக் கொடுத்தாள்..?
Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.