Chapter 25

0Shares

‘…… அவன் முகம் பார்க்காமல் அனுப்பிவிட்டேன்.. ஆனால் இந்த வெட்கம் கெட்ட மனது அவனது வரவிற்காக ஏங்கி இந்த ஒரு வாரமும் தவித்து விட்டது.. இன்று காலையில் அவன் வந்தவுடன் ஆவலாய் அவன் முகம் பார்க்க ஓடினேன்.. ஆனால் முந்திரிக் கொட்டை போல் ராகினி வந்து நின்று கொண்டாள்.. ஜாலக்காரி..! அவள் பண்ணிய ஜாலம் பொறுக்காமல் கோபித்துப் பேசினால் அந்த சாகஸக்காரி.. எனக்கும் ஆகாஷிற்கும் இடையே மோதலை உருவாக்கினாள்.. இவன்தான் ஆகட்டும் அவளின் சரஸப் பேச்சை ரசிக்காமல் இருந்திருக்கக் கூடாதா.. அவளுடன் சேர்ந்து கொண்டு என்னை மட்டம் தட்டிப் பேசுகிறான்.. தனிமையில் என்னை என்ன வேண்டுமானாலும் பேசட்டும்.. அவள் முன் பேசலாமா.. இவனையா நான் இத்தனை நாளாய் காதலித்தேன்.. என்மேல் இவனுக்குக் காதல் இல்லை.. கை நீட்டி அழைக்கும் பெண்களின் பின்னால் போகும் கூட்டத்தைச் சேர்ந்தவன் தான் இவன்.. இவனுக்கு நான் மரியாதை கொடுக்க வேண்டுமாம்.. ராகினி சொல்கிறாள்.. வெட்கக்கேடு.. யாருக்கு யார் சிபாரிசு செய்வது.. இந்தக் கயவனை நான் இத்தனை நாளாக என் மனதிற்குள் நினைத்து பூஜித்தேனே.. எனக்கு இவன் மேல் எந்த உரிமையும் கிடையாதா..? இவனை நான் என்ன வேண்டுமானாலும் சொல்வேன்.. ‘வாடா.. போடா..’ என்று கூடச் சொல்லுவேன்.. இவள் யார் அதைக் கேட்க.. நானென்ன இவளைப் போல் இவனது குடும்ப வரலாற்றை தெரிந்து கொண்டு ஆள் பிடிக்க அலைபவளா.. இவனது குடும்பத்தின் சொத்து சுகத்தைப் பற்றிய எண்ணமே எனக்கு இருந்ததில்லையே.. இவன் என்ன படித்திருக்கிறான்.. இவன் என்ன வேலை பார்க்கிறான் என்ற நினைவே எனக்கு இருந்ததில்லையே.. எனக்கு தெரிந்ததெல்லாம் இவனது முகமும் பார்வையும் மட்டும் தானே.. இவன் சொத்து சுகமில்லாத படிப்பறிவில்லாத நாடோடியாய் இருந்திருந்தாலும் நான் இவனைத் தானே காதலித்திருப்பேன்.. ராகினிக்கு வேண்டுமானால் இவன் உயர்த்தியாய் இருக்கலாம்.. ஏனென்றால் அவளது கண்ணிற்கு தெரிவதெல்லாம் காரும், பங்களாவும், வழியும் வாய்ப்பும்தானே.. இவனுக்கும் அவளைத்தானே பிடிக்கிறது.. அவளது புகழ்ச்சிதானே பிடிக்கிறது.. கூட்டிக் கொண்டு போ என்று சொல்லிவிட்டேன்.. அவளது ஆசைக்குரியவன் என் கண் முன் இருக்க வேண்டாம்.. வேண்டாம்.. வேண்டாம்.. வேண்டாம்.. வேண்டாம்..’

அனுராதா ஏறக்குறைய மூன்று நான்கு பக்கங்களில் இதைப் பற்றியே எழுதியிருந்தாள்.. ஒரு பக்கம் முழுவதும் ‘வேண்டாம்.. வேண்டாம்..’ என்ற வார்த்தையை எழுதியிருந்தாள்..

ஆகாஷ் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.. அன்று அவளைத் ‘திமிர் பிடித்தவள்’ என்று நினைத்தானே.. தற்பெருமை கொண்டவளென்று அனுமானித்தானே.. அவளது திமிர் எதனால் வந்தது..? ‘அவனைக் காதலிப்பவள் நான்..’ என்ற உரிமையினால் வந்த திமிரல்லவா..? அவளது தற்பெருமை எங்கிருந்து வந்தது..? ‘உன்னை உனக்காகவே காதலிக்கிறேன்.. உன் பெருமை எனக்கு எதற்கு..’ என்றல்லவா அவள் கேட்டிருக்கிறாள்..? அந்த எண்ணத்திலிருந்து வந்ததல்லவா அந்தத் தற்பெருமை..?

அவன் முகம் பார்க்க விருப்பமில்லாமல் போனதற்கு யார் பொறுப்பு..? ஒருவகையில் தானும் பொறுப்பு என்றே ஆகாஷிற்கு தோன்றியது..

   ‘எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்.. அப்பொருள்

    மெய்பொருள் காண்ப தறிவு..’

என்றார் பொய்யா மொழிப் புலவர்.. அனுராதா பேசியதற்கு காரணம் என்ன என்று கண்டுபிடிக்காமல் அவளுக்கு ‘திமிர் பிடித்தவள்’ என்ற பட்டத்தைக் கொடுத்தானே.. அவனுக்கு என்ன அறிவு இருந்தது..?

ஓர் நொடி.. ஒரேயொரு நொடி.. அவள் பக்கமும் என்ன நியாயமிருக்குமோ என்று சிந்தித்துப் பார்க்கத் தெரியாதவனுக்கு அவள்மேல் பழிசொல்ல என்ன தகுதி இருக்கிறது..?

ராகினியின் மேல் ஓர் நாள் கூட அவனுக்கு ஈர்ப்பு இருந்ததில்லையே.. அப்புறம் ஏன் அவளையும் ஒரு மனுஷியாக நினைத்து பேசித் தொலைத்தான்.. அவ்வாறு பேசுவதற்கு முன் அவனது காதலை அனுராதாவிடம் தெரியப்படுத்திவிட்டு பேசியிருந்தால் அது அனுராதாவை பாதித்திருக்காதே..

எண்ணங்கள் சிலந்தி வலை.. அதன் பின்னலில் சிக்கிய ஆகாஷ் அமைதியிழந்தான்.. என்றோ செய்த தவறிற்கு எப்படிப் பரிகாரம் செய்வது என்று துடித்தான்..

அன்று அவள் தொண்டைமானிடம் அவனது முகத்தைப் பார்க்க விருப்பமில்லையென்று சொன்னதன் காரணம் அவன்மேல் உள்ள அளவு கடந்த வெறுப்பினால் அல்ல.. அவன் மேலிருந்த அளவுகடந்த விருப்பத்தினால் என்பது இன்று அவனுக்குப் பிடிப்பட்டது..

ஆகாஷ் முகத்தை துடைத்துக் கொண்டு மேலே படிக்க ஆரம்பித்தான்..

‘…… தாத்தா என் மனதை கண்டு பிடித்து விட்டார் என்று தோன்றுகிறது.. உனக்கு யார் மேலும் இவ்வளவு கோபம் வராதே ராதா.. ஆகாஷின் மேல் ஏன் கோபிக்கிறாய் என்று இன்று கேட்டார்.. ராகினி செய்யும் தவறுக்கு அவன்  எப்படி பொறுப்பாவான் என்று வேறு கேட்கிறார்.. தாத்தா உங்களுக்கு தெரியாது.. இன்றைக்கு சாயங்காலம் 

அவன் காரில் ஏறிக் கொண்டு அவளிடம் கொஞ்சிப் பேசினான்.. அவள் கார் ஜன்னலோரம் குனிந்து அவன் பெண்டாட்டி போல் குழைந்து குழைந்து பேசுகிறாள்.. அவனுக்கு டாட்டா வேறு காட்டுகிறாள்.. அவனுக்கு ஒன்றும் தெரியாதாம்.. பாப்பாவாம்.. நான் மொட்டை மாடியில் அநாதை போல நின்று கொண்டு அவர்கள் சரஸமாடுவதைப் பார்த்துக் கொண்டு நின்றேன்.. அவர்கள் பேசியது காதில விழவில்லை.. ஆனால் ராகினியிடம் தோன்றிய அசைவுகள் அவர்களது இணக்கத்தை உணர்த்தியதே.. தாத்தா நான் ஏன் வெட்கம் கெட்டு மொட்டை மாடிக்குப் போனேன் தெரியுமா..? அவனை ஒளிந்திருந்து ஓர் முறை பார்க்க விரும்பினேன்.. அவனை மட்டும் பார்க்கப் போனேன்.. அவளோடு அவனையும் சேர்த்துப் பார்த்துவிட்டேன்.. போதும் தாத்தா போதும்.. என் இதயம் வெடித்து விட்டது.. நான் அநாதையாகிவிட்டேன் தாத்தா.. எனகென்று அவனில்லை.. அவனே எனக்கில்லை யென்று ஆகிவிட்ட பின்னால் மற்றவர்களின் சொந்தம் எனக்கு இருந்தாலென்ன.. இல்லாமல் போனால் என்ன.. ஏதேனும் ஓர் ஆசிரமத்தில் சேர்ந்து சந்நியாசினியாய் ஆகிவிட வேண்டும்.. எனக்கு இந்தக் காதல் வேண்டாம்.. அது தரும் வேதனை வேண்டாம்.. தாத்தா.. எனக்கு சாக வேண்டும் போல் இருக்கிறதே.. நான் என்ன செய்வேன்.. என்ன செய்வேன்..’

அந்தப் பக்கம் முழுவதும் கண்ணீர் துளிகள் பட்டு எழுத்துக்கள் சிதைந்திருந்தன.. ஆகாஷ் அவற்றைத் தடவிப் பார்த்தான்.. இவை அவனது காதலியின் கண்ணீர் பட்ட சுவடுகள்.. அவள் இதயத்தின் வலி தெரிந்த எழுத்துக்கள்.. இந்தக் கண்ணீரின் சுவடுகள் சொல்லும் அவளின் காதலின் தவிப்பை.. துடிப்பை.. சோக்ததை..

ஆhஷின் கண்ணீரும் அவளின் கண்ணீர் பட்ட இடங்களில் பட்டு வெடித்துச் சிதறியது..

காதலித்தேன்.. காதலித்தேன்.. என்று சொல்லிக் கொண்டு திரிகிறானே.. இவன் இந்த அளவுக்கு அவளை நேசித்திருக்கிறானா..? அவளின் காதலின் முன்னால் ஓடி ஒளிந்த தன் காதல் எம்மாத்திரம் என்றே அவனுக்குத் தோன்றியது..

இடது விழியில் தூசு விழுந்தால் வலது கண்ணும் கலங்கியிருக்க வேண்டும்.. அவளின் துயரில் எழுந்த கோபத்தில் அவன் இதயம் கலங்கியிருக்க வேண்டும்.. நிழலாக அவளைத் தொடர்ந்திருக்க வேண்டும்.. தாடர்ந்தானா..?

0Shares

Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link