Chapter 32
“அனு.. அனு.. இங்கே வாயேன்.. சீக்கிரம் வா..” ஆகாஷ் வாசலில் நின்று கொண்டு கத்தினான்..
அனுராதா அவசரமாய் வாசலுக்கு ஓடி வந்தாள்..
“ஏங்க.. இப்படிச் சத்தம் போடறீங்க.. வாசலில் என்ன வைத்திருக்கிறீங்க..”
கேட்டபடி வந்தவள் திகைத்து நின்றாள்.. வாசலில் புத்தம் புதிய கார் நின்று கொண்டிருந்தது.. ஆகாஷ் பெருமையுடன் கையைக் கட்டியபடி அதில் சாய்ந்து கொண்டு நின்றான்..
“என்னங்க புது கார் போல இருக்கே..?”
“புதுக் கார் தான்..”
“நம்ம கார் எங்கே..?”
“இதுதான் நம்ம கார்..”
“ச்சு.. பழைய கார் எங்கே..”
“விற்று விட்டேன்..”
“ஏன்..” அனுராதாவிற்கு விடை தெரிந்திருந்தது.. அவனது கண்களும் அதையே கூறின..
“நீ என்னருகில் உட்கார மறுக்கும் கார் எனக்கு எதற்கு..? அதனால்தான விற்றுவிட்டு புதுக்கார் வாங்கி விட்டேன்..”
“எனக்காகவா..?”
அனுராதா வாசலென்றும் பாராமல் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்..
“உனக்காகத்தான் நான்.. கார் மட்டும் விதி விலக்கா..?”
“இதற்கு அப்போதே சொப்னாவை அருகில் உட்கார விடாமல் இருந்திருக்கலாமே..”
“அதைத்தான் அன்றே சொல்லி விட்டேனே.. இனி நான் குடும்பஸ்தன்.. அனுராதாவின் கணவன்.. உலக நடப்பு தெரிந்தவன்..”
வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டது.. திரும்பிப் பார்த்தார்கள்.. பரசுராம் கைப்பெட்டியுடன் இறங்கினான்.. ஆகாஷ் முகம் மலர்ந்தான்.. வாசலை நோக்கி கையை விரித்துக் கொண்டு விரைந்தான்..
“டேய் பரசு..”
“ஆகாஷ்..”
ஆகாஷின் நீட்டிய கைகளுக்குள் புகுந்து கொண்டு ஆகாஷை கட்டியணைத்துக் கொண்டான் பரசுராம்..
“அனு.. இது யார் தெரியுமா..?” ஆகாஷ் பரசுராமனின் கையைப் பிடித்துக் கொண்டு அனுராதாவிடம் கேட்டான்..
“நீங்கள் சொன்னால்தானே தெரியும்..” அனுராதா பரசுராமை ஆராய்ந்தபடி கூறினாள்..
அவளுக்கு ஆகாஷ் பரசுராமிடம் காட்டிய நெருக்கம் பிடிக்கவில்லை.. அவனது மார்பில் சாய்ந்து நின்றிருந்த போது நொடிப் பொழுதில் ஆகாஷ் அவளை விட்டுப் பிரிந்து பரசுராமை கட்டித் தழுவிக் கொண்டது அனுராதாவின் மனதில் பொறாமையை உண்டு பண்ணியது..
‘எத்தனையோ ஆண்டுகளுக்கு பின்னர் ஒன்று சேர்ந்திருக்கிறோம்.. இவன் யார் பூஜை வேளைக் கரடி போல் எங்கள் இருவருக்கும் குறுக்கே வர..’
அவள் சமையலறைக்குள் நுழைந்து காபி கலக்க பாலைச் சுட வைக்க ஆரம்பித்தாள்.. ஹாலில் பேச்சுக் குரல் கேட்டது.. அவள் காபியைக் கலக்கி இரண்டு கப்களில் ஊற்றி எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தபோது பரசுராம் உற்சாகமாய் கூறிக் கொண்டிருந்தான்..
“இன்னைக்கு சன்டே.. நீங்கள் இரண்டு பேரும் லீவில் இருப்பீங்கன்னு தெரியும்.. அதனால் இன்றைக்கு முழுவதும் உங்களுடன் இருக்கலாம் என்கிற ஐடியாவோடு.. கிளம்பி வந்தேன்..”
“கெட்டிக்காரண்டா நீ.. சரியாத்தான் யோசித்திருக்கிறாய்..” ஆகாஷ் பரசுராமின் தோளில் கை போட்டுக் கொண்டு கூறினான்..
“இந்தாங்க..”
அனுராதா இருவருக்கும் காபியை நீட்டினாள்.. அவள் மனம் பரசுராமைத் திட்டிக் கொண்டிருந்தது.. சற்று முன் தான் ஆகாஷ் அவளிடம் கூறிக் கொண்டிருந்தான்..
“அனு.. இத்தனை நாளாய் என் அருகே நீ உட்காராமல் கார் ஓட்டும்போது என் மனம் என்ன பாடுபட்டது தெரியுமா..? இன்றைக்கு புதுக் கார் வந்திருக்கிறது.. கமான்.. கெட் ரெடி.. க்விக்..”
“எங்கே.. கிளம்பச் சொல்கிறீர்கள்..?”
“எங்கேயாவது போவோம்.. ஊர் சுற்றுவோம்.. தஞ்சை பெரிய கோவிலுக்குப் போகலாம்.. மணி மண்டபத்தைச் சுற்றலாம்.. இன்று ஊர் சுற்றுவதுதான் வேலை..”
“நல்ல கதையாய் இருக்கே.. சமைக்க வேண்டாமா..?”
“வெளியே பார்த்துக் கொள்ளலாம்.. கிளம்பு.. கிளம்பு..”
அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதுதான் பரசுராம் ஆட்டோவில் வந்து இறங்கினான்..
‘முதன் முதலாய்.. அவர் வெளியே போகலாம்ன்னு கூப்பிட்டார்.. அது முடியாமல் போய் விட்டதே..’
அவள் மனம் சோர்ந்து போனாள்..
“அனு.. டிபன் என்ன பண்ணப் போகிறாய்..? பரசு நான்வெஜ் வாங்கிட்டு வரவா..” ஆகாஷ் பரசுராமனிடம் கேட்டான்..
‘இதுவேறா.. இன்றைக்கு சமையல்காரி உத்தியோகம் தான்..’
அனுராதா முடிவெடுத்தபோது பரசுராமன் ஆகாஷிடம் அதை மறுத்து விட்டான்..
“டேய்.. நான் ஒரு முக்கியமான விஷயத்திற்காக வந்திருக்கிறேன்.. இன்றைக்கு நான்வெஜ் வேண்டாம்..”
‘அப்பாடி..’ அனுராதா உள்ளே செல்ல திரும்பினாள்.
“அனு இங்கே வா.. இவன் யார் என்று தெரியுமா..? இப்படி உட்காரேன் சொல்லுகிறேன்..”
அவன் பரசுராமின் அருகே உட்கார்ந்து கொண்ட அனுராதாவிற்கு எதிர் சோபாவைக் காட்டினான்..
அனுராதா முறைத்துக் கொண்டே எதிரே அமர்ந்தாள்..
“அனு.. இவனும் நானும் நகமும் சதையும் மாதிரி.. எல்.கே.ஜியிலிருந்து காலேஜில் பி.ஜி. வரை ஒன்றாகப் படித்தோம்.. நான் எம்.பிஃல் பண்ணிவிட்டு லெக்சரர் ஆகி விட்டேன்.. இவன் ஸ்டேட் கவர்ன்மென்டில் ஆபிசர் போஸ்டில் ஜாயின் பண்ணிட்டான்.. காலேஜில் இவனுக்கும் எனக்கும் என்ன பெயர் தெரியுமா..?”
ஆகாஷ் ஏதோ ஜோக் சொல்லியது போல் சிரிக்க பரசுராம்,
“டேய்.. வேண்டாம்டா.. இதையெல்லாம் தங்கைகிட்ட போய் சொல்லாதேடா..” என்று தடுத்தான்.
“அதெல்லாம் முடியாது.. சொல்லியே தீருவேன்.. எங்கள் இரண்டு பேரையும் ஜோடிப் புறாக்கள்ன்னு சொல்லுவாங்க ஹோ.. ஹோ..”
ஆகாஷ் விழுந்து விழுந்து சிரித்தான்.. அனுராதா சிரிக்காமல் பரசுராமை உர்ரென்று பார்த்தாள்..
‘நீ என் புருசனுக்கு ஜோடிப் புறாவா.. அப்போ நான் யார்..?’
பரசுராம் தான் அனுராதாவின் பார்வை வித்தியாசத்தை உணர்ந்தான்.. யோசனையுடன் அவளைப் பார்த்தான்..
‘இவள் ஏன் உர்ரென்று இருக்கிறாள்.. இன்னும் இவளும் ஆகாஷும் ஒன்று சேரவில்லையா.. நன்றாகத் தானே பேசிக் கொள்கிறார்கள்..? அப்புறம் என்ன..?’
“ஏண்டா அதுகிட்டப் போய் இந்தக் கதையை அளந்துக்கிட்டு இருக்க..? நீ சொல்லு.. எப்படி இருக்கு உன் கல்யாண லைப்..?”
“அமர்க்களமாய் இருக்கு..” ஆகாஷ் அனுராதாவைப் பார்த்து கண் சிமிட்டினான்..
அவ்வளவு நேரமும் இருந்த இறுக்கம் மறைய அனுராதாவின் முகத்தில் வெட்கம் வந்தது.. பரசுராமின் மனதில் நிம்மதி வந்தது..
‘அப்பாடா.. இரண்டும் ஜாயின் பண்ணிடுச்சு.. போல..’
பரசுராம் அனுராதாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கூறினான்..
“என்னம்மா.. என்னை தெரியாதது போல பார்த்துக் கொண்டு இருக்கிறாய்.. உங்கள் கல்யாணத்தில் நான் தான்ம்மா மாப்பிள்ளைத் தோழன்.. அது மட்டுமா.. ஏண்டா உன் கதையைச் சொல்லவா..?”
“அதெல்லாம் அவளுக்குத் தெரியும்டா..”
பரசுராம் சொல்ல வந்ததை ஆகாஷ் தடுக்க அனுராதா புரியாமல் பார்த்தாள்..
“என்ன சொல்ல வருகிறார்..?”
“அது ஒன்னுமில்லை அனு.. நீ போய் டிபன் பண்ணு..”
“இல்லை.. எதுவோ இருக்கிறது.. நீங்கள் சொல்லுங்கள்..”
பரசுராம் முன்னால் சாய்ந்து அனுராதாவின் முகம் பார்த்துக் கூறினான்..
“ராதா..”
“ராதான்னு கூப்பிடுகிறீர்களே..”
“அனுன்னு கூப்பிட்டால் இவன் என்னை உண்டு இல்லைன்னு பண்ணி விடுவான்.. இத்தனை வருடமாய் காப்பாற்றி வந்த பிரண்ட்சிப் உடைய வேண்டுமா..?
நீயே யோசனை பண்ணு.. அனுங்கிறது அவன் மட்டும் கூப்பிடும் பிரத்யேகப் பேராம்.. வேறு யாரும் அப்படிக் கூப்பிடக் கூடாதாம்..”
அனுராதாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது..
“இது உங்களுக்கு எப்படித் தெரியும்..? போனில் சொன்னாரா..?”
“போனிலா.. உன்னைப் பார்த்த நாள் முதலாய் இந்த நான்கு வருடங்களாக ஒரே ‘அனு’ ஜெபம்தானே.. ஒரு கூத்து நடந்தது தெரியுமா..? இவன் எங்கள் வீட்டிற்கு வந்து ஒரு நாள் தங்கியிருந்தான்..”
“டேய் வேண்டாம்..” ஆகாஷ் தடுத்தான்..
“போடா.. அன்று ராத்திரி தலையணையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கட்டிலில் இருந்து உருண்டு விட்டான்..”
“பரசு போதும்டா..”
“நீ கேளும்மா.. இறங்கிப் போய் தலையணையை உருவப் போனால்.. விட மாட்டேன் என்கிறான்..”
“அனு நீ உள்ளே போ..”
“நீ போகாதேம்மா.. என் அனுவை என்னிடமிருந்து பிரிக்காதேன்னு ஒரே ரகளை பண்ணிட்டான்.. ஒரு வழியாய் இது தலையணைடா.. உன் அனு இல்லைன்னு கன்வின்ஸ் பண்ணுவதற்குள் எனக்குப் போதும் போதுமென்றாகி விட்டது..”
அனுராதாவின் முகம் ஒளிர்ந்து விட்டது.. பரசுராமை பாசத்துடன் பார்த்தாள்..
“உங்களுக்கு பூரி கிழங்கு பிடிக்குமா அண்ணா..”
“செம வெட்டு வெட்டுவேன்..”
“அதுதான் காலை டிபன்..”
அனுராதா மான்போல் உற்சாகத்துடன் சமையலறைக்கு ஓடினாள்..
Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.