Chapter 04
ஊர் உறங்கிய பின்னாலும்..
நான் உறங்க வில்லையடி..
உன் நினைவு ஊனுருக்க..
உறக்கம் வரவில்லையடி..
காதலாகி.. கசிந்துருகி…
அந்தி நேரத்து செந்நிற வெயில் கடல் மேல் பட்டு.. கடல் செந்நிறக்கதிர்களுடன் தகதகத்தது..
சூரியன் மேற்கு வானில்.. மெல்ல இறங்கிக் கொண்டிருந்தான்.. சுற்றி இருக்கும் கூட்டத்தினரின் பார்வை கடலின் மேலும்.. கதிரவனின் மேலும் லயித்திருக்க ஜீவாவின் பார்வை சூன்யத்தில் நிலைத்திருந்தது..
சந்தியா குமாரின் நண்பன்.. என்ற முறையில்தான் தன்னோடு பழக ஆரம்பித்தாள் என்பது ஜீவாவிற்கு நன்கு தெரியும்.. அவளுடைய சூழ்நிலையை அறிந்த பின்னால்.. ஜீவாவின் மனதில் அவள் மேல் அளவு கடந்த பரிவு உருவாகியிருந்தது.. அவர்களுடைய நட்பு வட்டாரத்தில் சந்தியாவும் இணைந்து கொள்ள.. ஜீவாவும்.. அவளும் பேசிப் பழக பல சந்தர்ப்பங்கள் உருவாகின.. காலப் போக்கில் சந்தியா தன் துன்பங்களை குமாரிடம் பகிர்ந்து கொள்வதைப் போல.. ஜீவாவிடமும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தாள்..
“கஷ்டமாயிருக்கு ஜீவா.. யார் மனசில் என்ன இருக்குன்னே தெரியலை.. யாரோடும் பழகவே பயமாய் இருக்கு…” என்று ஒருநாள் ஜீவாவுக்கு போன் பண்ணினாள்..
சந்தியா போன் பண்ணுவாள் என்று ஜீவா எதிர் பார்த்திருக்கவில்லை.. ஜிம்மில்.. பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தவன் ஆச்சரியப்பட்டுப் போனான்.. தன் உதவியாளரை அழைத்து பயிற்சியை தொடரும்படிச் சொல்லிவிட்டு.. ஜிம்மில் அவனுக்கென்று இருந்த தனி அறைக்குள் போய் அமர்ந்து கொண்டு.. சந்தியாவிடம் பேச ஆரம்பித்தான்..
“எதுக்குப் பயப்படணும் சந்தியா..? மற்றவங்க மனசில் என்ன இருந்தால் உனக்கென்ன..?”
“மத்தவங்க மனசில் என்ன இருந்தால் எனக்கென்ன ஜீவா.. ஆனால் அது என்னைப் பாதிக்காதது போல் இருக்கணுமில்லையா..? என்னைப் பற்றி தவறாய் நினைக்க.. இவங்க யார்..?”
சந்தியாவின் கேள்வியில் இருந்த நியாயம் ஜீவாவிற்கும் புரிந்தது..
“பாரு சந்தியா.. மத்தவங்க நம்மைப் பற்றி என்ன நினைப்பாங்களோன்னு பயந்து கொண்டே இருந்தால் வாழ முடியாது.. நீ கண்ணதாசன் பாட்டு ஒன்றைக் கேட்டிருக்கிறாயா..?”
“நான் பழைய பாட்டைத்தான் விரும்பிக் கேட்பேன் ஜீவா.. அதுதான் எனக்கு மனசுக்கு ஆறுதலா இருக்கும்..”
“அப்போ இந்தப் பாட்டை நினைவு படுத்திக்க..” என்ற ஜீவா அந்தப் பாடலைப் பாடிக் காட்டினான்..
“உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..
உனக்கு நீதான் நீதிபதி..
மனிதன் எதையோ பேசட்டுமே..
மனசைப் பார்த்துக்க நல்லபடி – உன்
மனசைப் பார்த்துக்க நல்லபடி..”
மறுமுனையில் சந்தியா தேம்புவதை உணர்ந்தான் ஜீவா.. அவன் மனம் விசனப்பட்டது.. இந்த இளம்வயதில் இவள் மனதில் இத்தனை துயரங்களை சுமக்கும்படி சாபம் கொடுத்தது யார் என்று கோபப்பட்டான்..
வலி கொண்ட மனதை கவிதை வரிகள் அமைதிப் படுத்தட்டும்.. என்று தொடர்ந்து பாடினான்..
“கதைகட்ட சிலபேர் இருந்து விட்டால்..
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு..
காப்பாற்ற சிலபேர் இருந்து விட்டால்..
கள்வர்கள் வாழ்விலும் நியாயமுண்டு..
கோர்ட்டுக்குத் தேவை சிலசாட்சி-உன்
குணத்துக்குத் தேவை மனச்சாட்சி..”
அதற்குப் பின் சந்தியா.. ஜீவாவிற்கு அடிக்கடி போன் பண்ண ஆரம்பித்தாள்.. எவ்வளவு நெருக்கடியான வேலைகள் இருந்தாலும் அதை விட்டுவிட்டு சந்தியாவின் போனை உடனே அட்டெண்ட் பண்ணி விடுவான் ஜீவா..
மெல்ல.. மெல்ல.. சந்தியாவிடமிருந்து எப்போது போன் வரும்.. என்று எதிர்பார்க்க ஆரம்பித்தான் ஜீவா..
சாய்ந்து கொள்ள தோள் கிடைத்து விட்டதை சந்தியா உணர்ந்தாளோ இல்லையோ.. அவளுடைய சுமைகளை ஜீவாவிடம் இறக்கி வைக்க ஆரம்பித்து விட்டாள்..
“எல்லாருமே ஏதாவது ஒருவகையில் நடிக்கிறார்கள் ஜீவா இவர்களுக்கு மத்தியில் எனக்கு மூச்சு முட்டுகிறது..”
“நீ ஏன்.. மற்றவர்களைப் பற்றிக் குறைவாகவே நினைக்கிறாய்..? நிறைவாய் நினைத்துப் பழகு.. பாஸிடிவ் திங் எப்போதுமே முக்கியம் சந்தியா..”
“என்னைப் பற்றி வாய்க்கு வந்தபடி பேசுகிறாங்க.. இவங்களைப் போய் எப்படி நான் நிறைவாக எடுத்துக் கொள்ள..?”
“அவங்க உன்னைப் பற்றித்தான் பேசினாங்கன்னு உனக்கு எப்படித் தெரியும்..? நீயாய் தானே நினைத்துக் கொள்கிறாய் அவங்க உன்னைப்பற்றிப் பேசவில்லைன்னு நினைத்துப் பாரேன்.. அப்போது உனக்கு மன அமைதி கிடைக்கும்..”
“நீங்கள் பிரச்சினைக்கு வெளியேயிருந்து பேசுகிறீங்க ஜீவா.. நான் பிரச்சினைக்குள் மாட்டிக் கொண்டு.. வெளியே வர வழி தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன்..”
சந்தியாவின் வார்த்தைகள் அன்று முழுவதும் ஜீவாவை அலைக்கழித்துக் கொண்டே இருந்தன.. அன்று இரவு அவன் ஒரு கனவு கண்டான்.. அதில் சந்தியா இருந்தாள்.. அவளைச் சுற்றி நெருப்பு இருந்தது..
“காப்பாற்றுங்க.. என்னைக் காப்பாற்ற யாருமே இல்லையா..” என்று கதறித் துடித்தாள் அவள்.. ஜீவா.. ஒரு குதிரையின் மீது ஏறி.. அவளை நோக்கி விரைந்தான்.. அவளைக் கை கொடுத்து நெருப்பு வளையத்திலிருந்து மீட்டு.. குதிரையில் ஏற்றிக் கொண்டு பறக்கிறான்..
சட்டென்று விழிப்பு வந்து விட்டது ஜீவாவிற்கு.. எழுந்து விளக்கைப் போட்டுத் தண்ணீர் குடித்தான்.. மீண்டும் படுத்தான் தூக்கம் வரவில்லை.. அவளைப் பற்றி கனவே.. அவனுடைய நினைவில் சுழன்றது..
‘அந்தக் கனவிற்கு என்ன அர்த்தம்..? ஜீவா நினைத்தால் அவளைக் காப்பாற்றி விட முடியுமா..? அவளை சுற்றியிருக்கும் ‘அவதூறு’ என்ற நெருப்பு வட்டத்திலிருந்து அவளைக் காப்பாற்றி வெளிக் கொணர முடியுமா..?’
“ஏண்டா என்னவோ போல இருக்கே..” ஜீவாவின் நண்பன் டேனியல் வினவினான்..
ஜீவா கனவை விவரிக்கவும் அவன் சிரித்தான்..
“குதிரை மேல் ஏறிப் போனாயா..? ஹா.. ஹா..”
“சிரிக்காதே டேனியல்.. ஏன்.. எனக்கு இப்படியொரு கனவு வந்தது..?”
“நீ சந்தியாவிடம் அதிகம் பேசிப் பழகுகிறாய் இல்லையா..?”
“ஆமாம்..”
“அவளும் சொல்லி அழுக ஆள் கிடைத்து விட்ட சந்தோசத்தில் அவளுடைய துக்கங்களையெல்லாம் உன்னிடம் இறக்கி வைத்துக் கொண்டு இருக்கிறாள் இல்லையா..”
“டேய்.. அவளுடைய வேதனையைப் பார்த்தால் உனக்குக் கிண்டலா இருக்கா..?”
“அதைக் கேட்டுவிட்டு ‘த்சு’ கொட்ட நீதான் லாயக்கு.. என்னாலெல்லாம் ஒரு அளவுக்கு மேல் இந்தப் புலம்பல்களைக் கேட்க முடியாது.. அது என்னவோ தெரியவில்லை.. கன்யாகுமரிக் கடலில் அலைகள் கூட ஓய்ந்து விடும் போல.. இந்த சந்தியாவின் துன்பங்கள் மட்டும் ஓயவே மாட்டேன்கிறதே..”
“என் முன்னால் அவளைக் கிண்டல் பண்ணாதே..”
ஜீவா கோபமாகக் கூறவும்.. டேனியல்.. இமைக்காமல் ஜீவாவின் முகத்தையே பார்த்தான்..
“ஏண்டா.. அப்படிப் பார்க்கிற..?”
“நீ இதற்கு முன்னால்.. இப்படியெல்லாம் பேசியது இல்லையே..”
“டேனியல்.. ஐ ஆம் ஸாரி..”
“விடுடா.. பட்.. ஒன்றைமட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது ஜீவா..”
“என்னடா..”
“நீ நட்பை விட உயர்வாக.. அந்தப் பெண் சந்தியாவை நினைக்க ஆரம்பித்து விட்டாய்..”
“உளறாதே..”
“இது உளறல் இல்லை.. உண்மை.. இன்னும் ஒன்றையும் சொல்கிறேன் கேள்.. உனக்கு ஏன்.. இப்படியொரு கனவு வந்திருக்கிறது தெரியுமா..?”
“அது தெரியாமல்தானே உன்னிடம் கேட்டுவிட்டு வாயைக் கொடுத்து.. வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன்.”
“உன் அடி மனதில்.. அந்தப் பெண்ணைக் காப்பாற்ற வேண்டும் என்ற தவிப்பு இருக்கிறது.. அவள் சிந்தும் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்ற வேகம் இருக்கிறது அவளை இனிமேல் யாரும் தவறாய் பேசி விடக் கூடாது நினைக்கவும் கூடாது என்ற எண்ணம் இருக்கிறது.. நீ அவளைக் காப்பாற்ற துடிக்கிறாய்.. எப்படியாவது அவளை இந்தத் துன்பங்களில் இருந்து மீட்டு விட வேண்டும் என்று துடிக்கிறாய்.. அதுதான் இப்படி குதிரை மேல் நீ போய் அவளைக் காப்பாற்றுவது போல கனவு வந்திருக்கிறது..”
“அப்படியா சொல்கிறாய்..”
“ம்ம்.. ஜீவா நான் ஒன்று சொல்லவா..?”
“என்னடா..”
“சந்தியாவின் துன்பங்களுக்கு எல்லாம் முடிவு வரவேண்டுமென்றால்.. அவளை நல்ல மனம் கொண்ட யாராவது கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும்.. கல்யாணம் மூலமாக வரும் கணவன் என்ற உறவுதான் அவளை அபவாதங்களில் இருந்து காப்பாற்ற முடியும்..”
டேனியல் போய் விட்டான்.. அவன் மறைமுகமாக உணர்த்திய செய்தி ஜீவாவிற்கு புரிந்தது.. நண்பனாக மட்டுமே நீ இருந்தால் அவளைக் காப்பாற்ற முடியாது.. கணவனாக ஆனால் மட்டுமே அவளைக் காப்பாற்ற முடியும் என்பதைச் சொல்லாமல்.. சொல்லி விட்டுப் போகிறான்..
அவன் கூறிய வார்த்தைகள் ஜீவாவிற்கு பிடித்தமான ஒன்றுதான்.. சந்தியா அடிக்கடி அவனுடன் போனில் பேசுவாள் நலம் விசாரிப்பாள்.. அவளுடைய துயரங்களைச் சொல்லி அழுவாள்.. ஜிம்மிற்கு ஜீவாவைத் தேடி வருவாள்.. மணிக்கணக்காய் அவனுடன் பேசிக் கொண்டிருப்பாள்.. ஜீவாவும் குமாரும் நண்பர்களுடன் கடற்கரைப்பக்கம் போகும் போது சில நேரம் அவளும் வந்து இணைந்து கொள்வாள்..
சந்தியா என்னவோ.. ஒரு தோழியாகத்தான் ஜீவாவிடம் அறிமுகம் ஆனாள்.. பேசிப் பழகினாள்..
ஆனால்.. ஜீவா.. அவளிடம் எந்த விதமான உணர்வையும் காட்டாமல் இயல்பாகத்தான் பேசிப் பழகினான் சந்தியாவுடன்.. அவனுக்கு இருந்த பந்தத்தை ‘நட்பு’ என்று அவன் வரையறுக்கவில்லை..
வாழ்க்கையில் உழைத்து முன்னேறியவன்.. சொந்தமாய் சுயதொழில் ஒன்றை ஆரம்பித்து வெற்றிகரமாய் நடத்தி வருபவன்.. நண்பர்களுடன்.. சிட்டுக் குருவி போல கவலைகள் ஏதுமின்றி.. விட்டுச் சிறகடித்து.. வாழ்க்கை வானில் பறந்து கொண்டிருந்தவன்.. என்று ‘சந்தியா’ என்னும் சோகம் ததும்பும் விழிகளைக் கொண்ட பெண்ணைச் சந்தித்தானோ அன்றிலிருந்து தலைகீழாய் மாறிப்போனான்..
Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.