Chapter 07
என்னைக் கொன்று தின்னும் உன் நினைவுகளுடன்
இன்றும் என்றும் நான் போராடவோ?
என் கண் பார்க்க உனக்கு மனமில்லையோ?
அது காதலைச் சொல்கின்ற உணர்வில்லையோ..?
காதலாகி கசிந்துருகி..
லேசாக இருள் பரவ ஆரம்பித்தது.. விவேகானந்தர் பாறைக்குச் செல்லும் படகுகள் நிறுத்தப்பட அங்கிருந்து திரும்பி வந்த படகிலிருந்து உதிர்ந்த மக்கள்.. பேசிக் கொண்டே ஜீவாவைக் கடந்து சென்றனர்..
சந்தியாவின் மறுப்பையும்.. விலகலையும் பற்றி கேட்டவுடன்..
“அவள் ரொம்பவும் அலட்டிக் கொள்கிறாள்..” என்று தான் டேனியல் சொன்னான்..
“வேண்டாம் டேனியல்.. அவளைக் குறை சொல்லாதே..” என்றுதான் அந்த நிலையிலும் ஜீவா கூறினான்..
“என்ன பொண்ணுடா அது.. கஷ்டமான சூழ்நிலையில் இருக்கு.. சுற்றியிருக்கிறவங்களில் சிலர் அவளை சூறையாட நினைக்கிறாங்க.. மத்தவங்க தேவையில்லாமல் கதை கட்டி விடுகிறாங்க.. இந்த நிலையில் அவளைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்காமல்.. உயிருக்குயிராய் காதலிக்கும் நீ அவளுக்கு கிடைத்திருப்பது எவ்வளவு பெரிய விசயம்..? கடலில் மூழ்குபவன் துரும்பைப் பற்றிக் கொண்டு கூட கரையேறத் துடிப்பான்.. நீ கை கொடுக்கிறாய்.. அதைப் பிடித்துக் கொண்டு அவள் கரையேற வேண்டாமா..?”
“அவள் மனதில் என்ன இருக்கோ..?”
“அப்படி இருக்கிறவள்.. அவளுடைய சோகத்தைப் பகிர்ந்து கொள்ள உன்னைத் தேடியிருக்கக் கூடாது..”
“ஆறுதலாய் நான் நான்கு வார்த்தை பேசுவேன் என்பதால் சொல்லியிருப்பாள்..”
“அந்த ஆறுதலையும் உன்னிடம் ஏன் அவள் தேடினாள்..?”
“சொல்லி அழுக நினைத்திருப்பாள்..?”
“உன்னிடம் அவள் சொல்லி அழ வேண்டிய தேவையென்ன..? நீயென்ன அவளுக்கு சொந்தமா.. பந்தமா..?”
“பந்தம் இருந்தால்தான் பேச வேண்டுமா டேனியல்..?”
“இதுபோன்ற ஆண்களிடம் பந்தம் இருந்தால்தான் பேச வேண்டம்.. காசு பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றுவதும்.. காதல் உணர்வுகளை மனதில் உண்டாக்கி விட்டு.. உன்னை நான் காதலிக்கவில்லை.. நட்போடுதான் பழகினேன் என்று சொல்லி தூக்கி எறிவதும் ஒன்றுதான்.. இரண்டும் வேறு வேறில்லை..”
“நான்தான் அவளைக் காதலித்தேன்.. அவள் என்னைக் காதலிக்கவில்லையே..”
“ஏன் காதலிக்கவில்லை..? உனக்கும்.. அவளுக்கும் பொதுவான நண்பன் உங்களிருவரையும் அறிமுகப் படுத்தி வைத்தால்.. அவள் ஒரு ‘ஹலோ..’ வைச் சொல்லிவிட்டு.. அவள் வழியில் போயிருக்க வேண்டியதுதானே.. ஏன் உன்னிடம் பேச ஆரம்பித்தாள்..”
“அதைத்தான் ‘நட்பு’ என்கிறாளேடா..”
“கத்தரிக்காய்..! எனக்கு நன்றாகத்தான் வந்துவிடும் வாயில்.. ஏண்டா இப்படி ஒரு ஏமாளியாக இருந்து தொலைக்கிறாய்.. வாட்ட சாட்டமாக.. பத்துப் பேரை ஒரே நேரத்தில் அடித்துத் தூக்கிப் போகும் ஆண்பிள்ளையாக இருந்து கொண்டு.. அவளிடம் போய் மண்டியிட்டு விட்டு வந்திருக்கிறாயே.. உனக்கு வெட்கமாக இல்லையா..?”
“அவள் வேண்டுமானால் என்னைக் காதலிக்காமல் இருக்கலாம்.. ஆனால்.. நான் அவளை உயிருக்குயிராய் காதலிக்கிறேன்டா.. என்னால் அவளை வெறுக்க முடியாது.”
“மறக்கவாவது முடியுமா..?”
“அது என்னால் எப்படிடா முடியும்..?”
இதைச் சொன்ன ஜீவாவை எரிச்சலுடன் பார்த்தான் டேனியல்.. கண் முன்னால் சிதைந்து போயிருந்த ஜீவாவின் மனதை நினைத்து அவனுக்கு விசனம் வந்தது..
“தனியொரு மனிதனாக இந்த ஜிம்மை உருவாக்க உன்னால் முடிந்தது.. நீதான் பயிற்சி தர வேண்டும்ன்னு நிறைய பேரை.. உன்னைத் தேடி வர வைக்க உன்னால் முடிந்தது.. உனக்காக உயிரையே கொடுக்கும் நண்பர்களை சம்பாதித்துக் கொள்ள உன்னால் முடிந்தது.. அவளை மறக்க மட்டும் முடிய வில்லையா..?”
“நீ ‘வசந்தமாளிகை’ என்கிற பழைய படத்தை பார்த்திருக்கிறாயா டேனியல்..?”
“அதுதான் காலத்தால் அழியாத காவியமாச்சே.. பார்த்திருக்கிறேன்..”
“அதில் சிவாஜி கணேசன் ஒரு டயலாக் சொல்வார்..”
“அவர் டயலாக்கைப் பற்றி இந்த உலகமே அறியும் நீ எந்த டயலாக்கைப் பற்றிச் சொல்கிற..”
“குடிப்பதற்கு ஒரு மனயிருந்தால்..
அவளை மறந்து விடலாம்..
அவளை மறப்பதற்கு ஒரு மனமிருந்தால்
குடித்து விடலாம்..
ஆனால்.. இருப்பதோ.. ஒரே மனம்
நான் என்ன செய்வேன்..?”
ஜீவா நடிகர் திலகத்தை விட சோகமாக.. அந்த வசனத்தை ஏற்ற.. இறக்கத்துடன் சொல்லி விட்டு டேனியலை சோகமாய் பார்க்க..
“உன்னை.. என்ன செய்யலாம்..?” என்று பல்லைக் கடித்தான் டேனியல்..
“என்னைப் புரிந்து கொள் டேனியல்.. என்னால் அவளை மறக்க முடியாது.. அதற்கு பதில் இறந்து விடுகிறேன்.”
டேனியல் பதறிப் போய் விட்டான்.. தன் முன்னால் கம்பீரமாக அமர்ந்திருந்த ஜீவாவின் சோக முகத்தைப் பார்த்து மனதிற்குள் அரண்டு போனான்..
இவன் முரட்டுத்தனமானவன்.. ஆனால் குழந்தை உள்ளம் கொண்டவன்.. இவன் பாட்டுக்கு எதையாவது ஏடாகூடமாக பண்ணி வைத்து விட்டால் என்ன செய்வது..?
“அடிவாங்கப் போகிறாய் ஜீவா..”
“அவள்தான் என் மனதில் பலமாக அடித்து விட்டாளே..”
“உன் கண்ணுக்கு அவள் மட்டும்தான் தெரிவாளா..? நான் தெரிய மாட்டேனா.. நம் மத்த பிரண்ட்ஸ் தெரிய மாட்டாங்களா..”
“டேனியல்..”
ஜீவா கண்ணீர் விட்டதைப் பார்த்து டேனியல் அதிர்ச்சியானான்..
“அடச்சீ.. கண்ணைத் துடை.. நாங்களெல்லாம் உன்னை மலை போல் நினைத்துக் கொண்டிருக்கிறோம்டா.. மலைசாயக் கூடாது ஜீவா.. மனதை தைரியமாக வைத்துக் கொள்..”
“முடியவில்லைடா.. நானென்ன கல்லா.. மனிதன்டா.. கல்லுக்குள் கூட ஈரம் இருக்கலாம்.. என் மனதில் மட்டும் காதல் இருக்கக் கூடாதா..?”
“அவளுக்கு உன் மனதைப் புரிந்து கொள்ள மனம் இல்லைன்னு நினைத்துக் கொள் ஜீவா..”
“எனக்கு என்ன தண்டனையை வேண்டுமானாலும் கொடு.. பிரிவைக் கொடுத்து விடாதேன்னு கெஞ்சினேன்.. முடியாதுன்னு சொல்லி பிரிந்து போய் விட்டாள் டேனியல்.”
“அவளுக்கு கொடுத்து வைக்கவில்லைன்னுதான் நான் சொல்வேன்..”
“இல்லைடா.. எனக்குத்தான்.. அவளுடன் சேர்ந்து வாழக் கொடுத்து வைக்கவில்லை.. ஆறு நாள்கள் ஆகிவிட்டதுடா.. பேச மாட்டேன்கிறாள்.. நான் போன் பண்ணினால் கட் பண்ணி விடுகிறாள்.. ஹாஸ்டலுக்குத் தேடிப் போனால்.. இருந்து கொண்டே இல்லைன்னு சொல்லி அனுப்பி விடுகிறாள்.. பித்துப் பிடித்தது போல் அலைகிறேன்டா..”
“அதுதான் உன் முகத்தைப் பார்த்தாலே தெரிகிறதே.. ஏண்டா இப்படி உன்னையே.. நீ உருக்குலைத்துக் கொள்கிறாய்..”
“உனக்குத் தெரியாதுடா.. நான் படும் பாடு என்னன்னு உனக்குத் தெரியாது.. நேற்று அவள் பின்னாலேயே போனேன்..”
“அவள் திரும்பிப் பார்த்தாளா..?”
“ஊஹும்.. அவள் நடந்து போன பாதையில் நடந்து போவதில் எனக்கு எவ்வளவு சந்தோசமாக இருந்தது தெரியுமா..?”
“நீ தேற மாட்டாய்டா.. ஏண்டா.. ஆம்பளைகளின் கால் தடத்தில் கால் வைத்து பெண்கள் நடந்து வருவதைத்தான் சினிமாவில் நான் பார்த்திருக்கிறேன்.. நீ என்னடா.. கதையையே மாற்றுகிறாய்..? உன்னை என்ன செய்தால் தகும்..”
டேனியல் முறைத்துப் பார்க்க.. நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்.. எனக்கு அதைப் பற்றிக் கவலையில்லை என்ற பாவனையில் முகத்தை வைத்துக் கொண்டு கண்கள் தொலைதூரத்தில் தொடு வானத்தை இலக்கில்லாமல் வெறிக்க.. அசையாமல் தன் போக்கில் பேசிக் கொண்டிருந்தான் ஜீவா..
“அவளின் பிரிவை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை டேனியல்..”
“இதையே எத்தனை தரம் சொல்வாய்..?”
“நான் சாகும் வரை சொல்வேன்..”
“வாழ வேண்டிய வயதில் சாவைப் பற்றிப் பேசினால்.. உன் வாயிலேயே போட்டு விடுவேன்.. படவா..”
“நான் தூக்க மாத்திரைகளை வாங்கி விட்டேன் டேனியல்..”
“அடப்பாவி.. எப்போதுடா வாங்கினாய்..?”
“முந்தா நாள்.. நைட்..”
“ஜீவா.. எதையாவது பைத்தியக்காரத்தனமாய் பண்ணி வைத்து விடாதேடா.. பாவி.. ஏண்டா இப்படிச் செய்தாய்..?”
“விழுங்கி விடத்தான் நினைத்தேன் டேனியல்.. இப்படி அவளைப் பார்க்க முடியாமல்.. பேச முடியாமல்.. அணு அணுவாய் சாவதற்குப் பதில் ஓரேயடியாய் செத்து விடாலாமேன்னு நினைத்தேன்.. ஆனால் செத்த பின்னால் அவளை எப்படி நான் காதலிக்க முடியும்..? உயிரோடு இருந்தாலாவது எங்கேயாவது ஒரு மூலையில்.. அவளுக்குத் தெரியாமல் நின்று ஒளிந்து கொண்டாவது அவளைப் பார்க்கலாம்.. செத்து விட்டால் என்ன செய்வது..?”
“ஏன்.. பேயாய் மாறி அவளைப் போய் பார்க்க வேண்டியது தானே.. மனிதனுக்குத்தான்.. டிராவல் பண்ண கால் வேண்டும்.. டூவிலர் வேண்டும்.. கார் வேண்டும் பேய்க்கு அந்த பிரச்சினையே இல்லை சும்மா ஜிவ்வுன்னு காற்றில் மிதந்து போய் வரலாம்..”
“அவள் பயந்து விடுவாளேடா..”
ஜீவா தீவிரமான முகபாவனையுடன் இதைச் சொல்லவும் டேனியல் தலையில் கை வைத்துக் கொண்டான்..
அவனறிந்த ஜீவா.. இப்படி அப்பாவியாய் பேசுகிற வனல்லன்.. உலகம் தெரிந்தவன்.. அறிவாளி பலசாலி..
அப்படிப்பட்டவன் வாயிலிருந்து வந்த பேச்சுக்களைப் பார்த்ததும் டேனியல் கவலையில் ஆழ்ந்தான்..
“காதல் என்பது இஷ்டப்பட்ட ஆள் கொல்லி நோயா..”
டேனியல் காதலித்ததில்லை.. ஜீவா படும் பாட்டைப் பார்த்தவன் இந்த ஜென்மம் முடிவதற்குள்.. ‘காதல்’ என்று யாரும் சொன்னால் காத தூரம் ஓடி விட வேண்டும் என்ற முடிவுக்கு அவன் எப்போதோ.. வந்து விட்டான்..
“அது என்னடா கையில் காயம்..?” டேனியலின் பார்வை ஜீவாவின் கைமேல் படிந்தது..
“ஒன்றுமில்லை..” என்று கையை மறைத்துக் கொள்ளப் பார்த்தான் ஜீவா..
“அதை நான் சொல்ல வேண்டும்.. முதலில் கையைக் காட்டு..” டேனியல் அதட்டிக் கொண்டே.. ஜீவாவின் கையைப் பிடித்து இழுத்துப் பார்த்தான்.. ஜீவாவின் புறங்கையில்.. நெருப்புப் பட்டது போல் ரணமாக இருந்தது..
“என்னதுடா இது.. தீக்காயம் போலத் தெரிகிறதே..” டேனியல் பதட்டத்துடன் வினவினான்..
“ம்ம்.. சூடு வைத்துக் கொண்டேன்..” என்று சாதாரணமாகச் சொன்னான்..
“அடப்பாவி.. ஜீவா.. உனக்கு என்னடா ஆச்சு.. இப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனத்தை செய்திருக்கிறாயே.. சூடு வைத்துக் கொள்வது என்ன சாதாரணமான விசயமா..? இப்படி ரணமாக இருக்கிறதே ஏண்டா உனக்கு என்ன புத்தி.. கித்தி கெட்டுப் போச்சா..” டேனியலுக்கு கண் கலங்கி விட்டது..
“எனக்குத் தண்டனை கொடுத்துக் கொண்டேன் டேனியல்..”
“தண்டனையா.. உனக்கா.. நீயென்னடா தவறு செய்தாய்..?”
“அவள் மனதைப் புண்படுத்திவிட்டேனே.. அதுதான்.. என் கையை புண்ணாக்கிக் கொண்டேன்..”
காதல் என்பது.. எப்படிப்பட்ட புத்திசாலியையும் மாற்றி அடிமுட்டாளாக்கி விடும்.. வல்லமை படைத்ததா..?
Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.