Chapter 12

0Shares

கல்லில் வடித்த ஓவியமாய்..

என் மனதில் நான்வடித்த ஓவியம் நீ..

     கல் ஓவியம் கூட கரைந்து போகலாம்..

என் மனதில் உன்நினைவு மறைந்து போகாது..

     காதலாகி.. கசிந்துருகி…

கன்யாகுமரிக் கடலின் அலைகள் இருளில் வெள்ளைக் கொடிகள் எழுந்து அடைவதைப் போல அடைந்து ஓடிவந்து கரையில் விழுந்து திரும்பின.. இருளில் தன்னைக் கரைத்துக் கொண்டு கிடந்த ஜீவா ஆகாயத்தை பார்த்த வண்ணம் படுத்து கண்களை மூடிக் கொண்டான்..

மூடிய கண்களுக்குள் அவன் முன்பொரு தடவை கண்ட கனவு உலா வந்தது..

அது கனவு போலவே இல்லை.. உண்மையில் நடந்த நிகழ்வு போல இருந்தது.. மண மேடையில் அவன் அமர்ந்திருந்தான்.. மந்திரங்களை ஓதிக் கொண்டு முன்னால் அய்யர் அமர்ந்திருந்தார்.. தோழிகள் மணப் பெண்ணை அழைத்து வந்து அவன் பக்கத்தில் அமரச் செய்தனர்..

“கெட்டிமேளம்.. கெட்டிமேளம்..” யாரோ ஒருவர் குரல் கொடுத்தார்..

அவன் தாலியை எடுத்துக் கட்டும் போது மணப்பெண் தலைநிமிர்ந்து அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

அது.. சந்தியா..?

ஜீவா கண் விழித்துக் கொண்டான்.. அறையின் ஜன்னலில் வெளிச்சக் கீற்றுத் தெரிந்தது.. அவன் எழுந்து ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான்.. சிட்டுக் குருவிகள் இரண்டு.. கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தன.. இவனைப் பார்த்ததும் விருட்டென்று பறந்து விட்டன.. ஜீவாவின் மனம் ததும்பியது.. சந்தோசம் தாங்க முடியாமல் அவன் மெல்லிய குரலில் விசிலடித்தான்..

“அண்ணே டீ..” என்று வந்த டீக் கடைக்காரப் பையன்.. ஜீவாவின் உற்சாகமான முகத்தைக் கண்டு முகம் மலர்ந்தான்..

“என்னடா அப்படிப் பார்க்கிற..” என்றபடி டீயைக் கையில் எடுத்துக் கொண்டான் ஜீவா..

“இப்போத்தான் நீங்க பழைய அண்ணன் போலவே இருக்கறீங்க..”

“ஏண்டா.. இத்தனை நாளாய் புது அண்ணன் போல இருந்தேனா ஹா.. ஹா..”

“அழுது வடிஞ்ச முகமாய்.. சகிக்க மாட்டாமல் இருந்தீங்க..”

எதற்கும் இருக்கட்டுமென்று தள்ளி பாதுகாப்பாய் நின்று கொண்டு சொன்ன டீக்கடைக்காரப் பையன் ஓட யத்தனித்தான்..

“டேய்.. இங்க வாடா..” என்று கையசைத்து அவனை அருகில் அழைத்தான் ஜீவா..

“அண்ணே.. விட்டுருங்க அண்ணே.. தெரியாமல் சொல்லிவிட்டேன் அண்ணே..” டீக்கடைக்காரப் பையன் கண்களில் பயத்துடன் கெஞ்சினான்..

“அடச்சீ பயப்படாதே.. பக்கத்தில் வாங்கிறேனில்ல..” ஜீவா அதட்டினான்..

டீக்கடைக்காரப் பையன் பயம் விலகாமலேயே ஜீவாவின் அருகில் வந்தான்..

ஜீவா எழுந்து அலமாரியைத் திறந்து பர்ஸை எடுத்தான்.. அதிலிருந்து ஒரு நோட்டை உருவி டீக்கடைக்கார பையனிடம் நீட்டினான்..

“வாங்கிக்கடா..”

“அண்ணே..”

“வைத்துக் கொள்..”

“ஹை.. ஆயிரம் ரூபாய் நோட்டு..”

டீக் கடைக்காரப் பையனின் விழிகள்.. ஆச்சரியத்தில் அகலமாகின.. அவன் பிரமிப்புடன் ஜீவாவைப் பார்த்தான்.

“எனக்கே.. எனக்காண்ணே..”

“உனக்கே.. உனக்குத்தான்.. வச்சுக்க..”

அந்தப் பையனின் முகத்தில் தெரிந்த ஆனந்தத்தைப் பார்க்கும் போது ஜீவாவிற்கு.. மனம் கொள்ளாத சந்தோசமாக இருந்தது..

அவன் தன் டைரியை எடுத்து அதில் எழுதினான்..

‘கனவில் கூட கடவுளைக் காணலாம் என்பது

என் வாழ்வில் இன்று உண்மையானது..

எனக்கும் என் சந்தியாவிற்கும் திருமணம் நடந்தது.

என்று அது உண்மையாக நடக்குமோ..

அன்றே எனக்கு அது உண்மையான நந்நாள்..

திருநாள்.. விழாநாள்..’

கண்களை மூடி யோசித்தவன் இன்னும் எழுதினான்..

‘வாழ்வில் ஆயிரம் விழாநாள் வரலாம்..

    நீ வரும் நாள் தானே எனக்கு திருநாள்..

வருவாய் நீயென்றே விழி பார்த்தேன்.

      உன் மனதை தருவாயென்றே விழி சோர்ந்தேன்..’

ஜீவா டைரியை மூடிவிட்டு எழுந்தான்.. குளிக்கச் சென்றான்.. அவன் ஜிம்மிற்குள் சிரித்த முகமாய் நுழைந்ததும் உதவியாளர்கள் ஆச்சரியப்பட்டனர்..

“இன்னைக்கு எல்லாருக்கும் மதியம் விருந்து கொடுக்கப் போகிறேன்.. எத்தனை பேர்ன்னு கணக்கெடுத்து ஹோட்டலுக்குப் போய் வாங்கிட்டு வந்திருங்க..”

பணத்தை தாராளமாகச் செலவு செய்தான்.. அன்று மாலை ஜீவாவைக் காணவந்த டேனியல் கோலாகலமாய் இருந்த ஜிம்மைக் கண்டதும் கேள்வியாய் ஜீவாவைப் பார்த்தான்.. அவனோ பதிலுக்கு கண் சிமிட்டினான்.. டேனியலின் முகத்தில் வியப்புக் குறி..

“என்னடா ஜாக்பாட் விழுந்திருக்கா..”

“அதை வைத்து நான் என்ன செய்ய..?”

“ஜாக்பாட்டை வைத்து ஒன்றும் செய்ய முடியாதா..? நீ ஒரு தனிப் பிறவிடா..”

“டேனியல் இன்றைக்கு நைட் டின்னர்.. நான் உனக்குத் தருகிறேன்..”

“அப்படின்னா.. செமத்தியான மூடில்தான் நீ இருக்கிறாய்.. டின்னரின் போதே உன்னிடம் விசயத்தை கறந்து கொள்கிறேன்..”

இரவு உணவின் போது ஜீவா சந்தோசம் கொப்புளிக்கும் முகத்துடன் பழைய ஜீவாவாய் கதை பேசிக் கொண்டிருக்க.. அவனைப் புதிதாய்.. புதிராய் பார்த்தபடி..

“என்னன்னு இப்போதாவது சொல்லுடா..” என்றான் டேனியல்..

“இன்றைக்கு காலையில் ஒரு கனவுடா..”

“திரும்பவும் கனவா..?”

“கேளேன்..”

“சொல்லு.. சொல்லு.. செமத்தியாய் விருந்து கொடுத்துக் கொண்டிருக்கிறாய்.. நீ சொல்வதை நான் கேட்டுத்தானே ஆக வேண்டும்..”

“அந்தக் கனவில் எனக்கும் சந்தியாவிற்கும் கல்யாணம் நடந்ததுடா..”

சாப்பிட்டுக் கொண்டிருந்த டேனியலின் கை அப்படியே நின்றது.. அவன் ஜீவாவையே ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தான்.. அவன் முகத்தில் ஒளிர்ந்த மகிழ்வைக் கண்டவனின் இதயத்தில் இரக்கம் சுரந்தது..

டீக்கடைக்காரப் பையனுக்கு ஜீவா தானம் செய்த ஆயிரம் ரூபாய் முதல் ஜிம்மில் அவன் கொடுத்த விருந்து வரை டேனியலுக்கு தெரிந்துவிட்டிருந்தது..

‘இந்த ஒருநாள் கனவிற்காக மட்டும் இவன் எத்தனை ரூபாய் செலவு செய்திருப்பான்.. வெறும் கனவிற்கே இப்படி மகிழ்ந்து போகிறவன் நிஜத்தில் சந்தியாவின் கரம் பிடித்தால் எந்த அளவிற்கு மகிழ்ந்து போவான்..’

சந்தியா அப்படியொன்றும் அழகு இல்லை.. சாதாரணமான தோற்றம் உடையவள். அவளை விட அழகான படித்த.. வசதியான பெண்களை திருமணம் செய்ய வாய்ப்பிருந்தும் ஜீவா அதைத் தவிர்த்து விட்டு.. ‘சந்தியா.. சந்தியா..’ என்று உருகிக் கொண்டிருக்க காரணம் என்ன..?

சந்தியா என்ன பாக்தாத் பேரழகியா..? இல்லை பட்டத்து இளவரசியா..?

ஜீவாவின் மனதிற்கு பிடித்தமானவள், தன்னிடம் இருக்கும் ஏதோ ஒரு இயல்பால் ஜீவாவின் மனதை வசீகரித்தவள்.. ஜீவாவின் மனதை ஆக்ரமித்தவள்.. அவனால் உயிருக்குயிராய் காதலிக்கப்படுபவள்..

இவைதான் சந்தியாவை நினைத்து ஜீவாவை ஏங்க வைத்தன..

அன்று இரவு.. அறைக்குச் செல்ல மனமில்லாமல் ஜீவா ஜிம்மிலேயே தங்கிவிட்டான்..

‘நினைத்தாலே இனிக்கும்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நடுநிசியைத் தொடும் வேளையில் அவன் தூக்கம் மறந்தவனாய் தூங்க மறந்தவனாய் டிவி பார்த்துக் கொண்டிருந்தான்.. இளம் வயது வாலிபன் சிரித்த முகத்துடன் சின்னத்திரையில் தோன்றி அழகாக கவிதை சொன்னான்.. கறுப்பு வெள்ளைப் பாடல் காட்சி திரையில் விரிந்தது..

“பொன்னெழில் பூத்தது புதுவானில்..

  வெண்பனி தூவும் இளவேனில்..

என் மனத் தோட்டத்து வண்ணப்பறவை..

  சென்றது எங்கே.. சொல்.. சொல்.. சொல்..”

ஜீவா கண்களை மூடிப் பாடலை ரசித்தான்.. கதாநாயகனுக்குப் பதில் ஜீவா அந்தப் பாடலைப் பாட.. சந்தியா அவன் முன்னால் நடந்து சென்றாள்.. மனக்கண்ணில் தோன்றிய அந்தக் காட்சி மிகவும் பிடித்துப் போக.. ஜீவா வாய்விட்டு அந்தப் பாடலுடன் இணைந்து பாடினான்..

“தென்னை வனத்தினில்..

உன்னை முகம் தொட்டு..

எண்ணத்தைச் சொன்னவன்

வாடுகிறேன்..

உன்னிரு கண்பட்டு..

புண்பட்டு நெஞ்சத்தில்..

உன் பட்டுக் கைபட பாடுகிறேன்..”

சந்தியா அவனருகில் வந்தாள்.. அவன் கழுத்தில் கைகளை மாலையாக்கி காதலுடன் அவனை உற்றுப் பார்த்துப் பொய் கோபம் முகத்தில் ததும்ப பாடினாள்..

“என்னுயிர் என்பது..

உன்னுயிர் என்றபின்..

என்னுடன் கோபம்..

கொள்ளுவதோ..

ஒன்றில் ஒன்றானபின்..

தன்னைத் தந்தானபின்

உன்னிடம் நான் என்ன

சொல்லுவதோ..”

ஜீவாவிற்கு மனம் நிறைந்து விட்டது.. இந்த நாள் போல் இனிமையான நாள் என்றுமே அவன் வாழ்வில் வந்ததில்லை என்று நினைத்தான்.

0Shares

Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link