Chapter 16

0Shares

இறப்பதற்கு மனமுமில்லை..

      இன்னுமொரு பிறப்பெடுத்தால்..

உன்னை நான் சந்திப்பேனோ..

    அதனால் உயிர் துறக்க முடியவில்லை..

காதலாகி.. கசிந்துருகி..

அந்த  பிளாட்பாரத்தில் எதிரும் புதிருமாய் சண்டைக்கோழிகள் போல் ஜீவாவும் சந்தியாவும் முறைத்துக் கொண்டு நின்றார்கள்..

‘எவ்வளவு தைரியமிருந்தால்.. இவன் என் மனதில் கள்ளம் இருக்கிறது என்று சொல்வான்..’ சந்தியா பொருமினாள்..

“கள்ளமா..? என்னிடமா..? இதை நீங்க சொல்லி நான் கேட்க வேண்டியிருப்பதுதான் கொடுமை..”

“ஏன் நான் சொன்னால் என்ன..? என் மனதில் கள்ளமில்லைன்னு நான் ஏற்கனெவே சொல்லி விட்டேனே..”

“அப்போ என் மனசில்தான் கள்ளமிருக்குன்னு சொல்கிறீங்களா..”

“ஆமாம்..”

“எதை வைத்து அப்படிச் சொல்கிறீங்க..?”

“உனக்கு பயம்..”

“எதைப் பார்த்து பயம்..?”

“உன்னைப் பார்த்தே.. உனக்கு பயம்..”

“என்ன உளறுகிறீங்க.. குடித்திருக்கீங்களா..?”

“இப்போது குடிக்கவில்லை.. குடிக்காமல் தான் உன்னோடு பேசிக் கொண்டிருக்கிறேன்.. சந்தேகமிருந்தால் என்கிட்ட வந்து பார்.. வாசனை வராது..”

“ஜீவா..”

“கோபம் வருதில்ல..? குடித்திருக்கிறாயான்னு என்னைப் பார்த்து நீ கேட்ட போது எனக்கும் கோபம் வராதா..? அதுதான் வாசனை பிடித்துப் பாருன்னு சொன்னேன்.. உன் கேள்விக்குப் பதிலைத்தானே சொன்னேன்.. இதுக்கு ஏன் இப்படி கத்துகிறாய்..?”

“இப்படிக் கூட உங்களால் பேச முடியுமா..?”

“பேச வைத்தவள் நீதானே.. நான் பாட்டுக்கு தேமேன்னு நான் உண்டு என் பிரண்ட்ஸ் உண்டுன்னு ஊரைச் சுற்றிக் கொண்டு இருந்தேன்.. மகராசி நீ வந்து நடுவில் புகுந்தாய்.. என் நிம்மதியே போச்சு..” ஜீவா பல்லைக் கடித்தான்..

“உங்கள் நிம்மதி காணாமல் போனதற்கு நான் காரணமில்லை.. நீங்கள்தான் காரணம்.. போனது உங்கள் நிம்மதி மட்டும் தானா..? என் நிம்மதியும் சேர்த்துத்தான் காணாமல் போய் விட்டது..” சந்தியா எரிச்சலுடன் பதில் சொன்னாள்..

“வேண்டுமானால் காணவில்லைன்னு பேப்பரில் விளம்பரம் கொடுத்துப் பார்க்கலாமா.. அவர்கள் கண்டுபிடித்துக் கொடுப்பார்கள்..” என்றான் ஜீவா.. கொஞ்சம் கூட சிரிக்காமல்..

“பேப்பரில் விளம்பரம் கொடுப்பீங்களா..? எப்படி..?”

“காணவில்லை.. என் நிம்மதியையும் சந்தியாவின் நிம்மதியையும் காணவில்லை.. இரண்டு மாதங்களுக்கு முன்வரை அவை நன்றாகத்தான் இருந்தன.. திடீரென்று ஒரு திடுக்கிடும் திருப்பம் வந்ததால் அவை காணாமல் போய்விட்டன.. கண்டுபிடித்துத் தருபவர்க்கு.. ‘காதல் கசக்குதடா..’ பாடல் கேசட் இலவசமாகத் தரப்படும்.. எப்படி வாசகங்கள் நன்றாக இருக்கிறதா..?”

சந்தியாவிற்கு மனதிற்குள் சிரிப்பு வந்து தொலைத்தது.. ஜீவாவிடம்.. பரிவைக் கண்டிருக்கிறாள்.. தோழமையைக் கண்டிருக்கிறாள்.. அவனுடைய காதலை மறுத்தபின் ஒரு யாசகனாக மாறி அவன் கெஞ்சிய கெஞ்சலைக் கண்டிருக்கிறாள்.. இந்த கிண்டலையும் கேலியையும் நையாண்டியையும் இதற்குமுன் அவள் கண்டதேயில்லை..

“நான் போகிறேன்..”

“பொறும்மா.. ஸாரி ஸாரி.. உனக்குத்தான் அம்மான்னா பிடிக்காதே.. பொறுங்க மேடம்.. இப்போச் சரியாச் சொல்லி விட்டேனா..? எங்கேயோ ஆரம்பித்த பேச்சு எங்கேயோ முடிந்தால் அப்படியே விட்டுவிட்டுப் போய் விடுவதா..? எதையும் கண்டு கொள்ளாமல் அம்போன்னு விடுவதுதான் உங்களுக்குப் பழக்கமா..?”

ஜீவாவின் குத்தல் மொழி சந்தியாவிற்குப் புரிந்துதான் இருந்தது.. அவள் பதில் சொல்லவும் செய்தாள்..

“எனக்குப் பிடிக்காததை அம்போன்னு விடாமல் இருக்கிக் கொண்டு பறக்கச் சொல்கிறீங்களா..?”

“ஆல்ரெடி நீங்க பறந்துக்கிட்டுத்தான் இருக்கீங்க அம்மணி.. கொஞ்சம் தரையில் கால் பாவி நில்லுங்க..”

“என்னைப் பற்றித் தேவையில்லாமல் பேச வேண்டாம்..”

“அதுதானே கள்ளம் இல்லாதவங்களைப் பற்றிப் பேசலாம்.. உன்னைப் பற்றி நான் பேசலாமா…? பேசக் கூடாதுதான்..”

“திரும்பத் திரும்ப இது என்ன வார்த்தையின்னு என்னைப் பார்த்துச் சொல்லிக் கொண்டிருக்கீங்க.. கள்ளம் புகுந்தது உங்கள் மனசிலா.. இல்லை என் மனசிலா..?”

“என் மனதில் காதல்தான் புகுந்தது.. கள்ளம் இல்லை.. உன் மனதில்தான் கள்ளம் புகுந்திருக்கிறது.. அதனால்தான் நீ என்னுடன் பேசிப் பழகப் பயப்படுகிறாய்..”

“ஏனாம்..?”

“என்னுடன் பழையபடி பழகினால் உன் மனதிலிருக்கும் என் மீதான காதல் எனக்குத் தெரிந்து விடுமே.. அந்தப் பயம்தான்..”

“இது என்ன புதுக்கதை..”

“கதையில்லைன்னு நிரூபி..”

“எப்படி நிரூபிக்க..?”

“பழையபடி என்னோடு பழகு.. உன் மனசில் ‘தில்’ இருந்தால்.. இந்தச் சவாலை ஏற்றுக் கொள்..”

“என் மனதில் ‘தில்’ இருக்கு.. அதை உங்களிடம் பழகித்தான் நான் நிரூபிக்கனும்னு ஒன்றும் அவசிய மில்லை..”

“ஜகா வாங்குகிறாயா..? இதிலிருந்தே.. உன் மனதில் கள்ளம் இருப்பது தெரிகிறதே..”

ஜீவா வழி விடாமல் அவளுடன் மல்லுக்கு நின்றான்.. சந்தியா அவன் பேசிய பேச்சுக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்தாள்..

0Shares

Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link