Chapter 19
காதலில் காத்திருத்தலும் சுகம்தான்..
அதற்காக காத்திருப்பை மட்டுமே..
என் சொந்தமாக்க நினைக்காதே..
உன்னையென் சொந்தமாக்கி வாழ்ந்துவிடு..
காதலாகி.. கசிந்துருகி..
‘இந்த ஜீவாதான் என்னுடைய நண்பன்..’
மீள முடியாத துயரப் படுகுழியிலிருந்து.. தன்னை மீட்டுக் கொண்டு கண்சிமிட்டும் தன் நண்பனை.. ஆதுரத்துடன் பார்த்தான் டேனியல்.. அவனுக்கு நிம்மதியாக இருந்தது..
காதல் என்னும் நோய்க்கு மருந்து கிடையாது.. ஆற்றிவிட காதலி வருவாள் என்று காத்திருப்பதைவிட சோகத்தை உதறி விட்டு.. துடிப்புடன் எழுந்து காதலியை சிறையெடுக்கச் செல்வதே உத்தமம்..
காதலை மறக்க வேண்டாம்.. கடைசி வரை அவள் நினைவை துறக்க வேண்டாம்.. அவளுக்கு இடம் கொடுத்த மனதில் வேறு ஒருத்திக்கு இடம் கொடுக்க வேண்டாம்.. அவளைத் தொட்ட விரலின் நுனி கூட வேறொருத்தியின் மீது படவேண்டாம்..
காதலுக்கும் கற்பு உண்டு.. காதலுக்காக தாராளமாக வாழலாம்.. ஆனால் தன்னைத்தானே கொன்று தின்று கொண்டு வாழக்கூடாது.. தானும் துடித்து அடுத்தவரையும் துடிக்க வைத்துக் கொண்டு வாழக் கூடாது.. தன் திறமைகளை குழி தோண்டிப் புதைத்து விட்டு.. மூலையில் முடங்கக் கூடாது.. தன் தைரியத்தை தொலைத்து விட்டு கோழை போல உலவக் கூடாது.. முக்கியமாக ஒரு மனநோயாளியைப் போல மாறக் கூடாது..
எந்த ஒரு போர்க்களத்திலும் இறங்கி விட்ட வீரன் இறுதிவரை போராடுவான்.. அதுதான் வீரம்.. அதுதான் ஆண்மை.. தன் கடைசி வினாடி வரை தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் எவன் ஒருவன் போராடுகிறானோ.. அவனே தைரியலட்சுமிக்கு சொந்தக்காரன்.. தைரியலட்சுமி இருக்கும் இடத்தில்தான் மற்ற லட்சுமிகளும் குடியிருப்பார்கள்..
காதல் போர்க்களத்தில் மட்டும் இதை மறக்கலாமா..? கையில் உள்ள ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு நிராயுதபாணியாய் நிற்கலாமா..? புற முதுகு காட்டி ஓடலாமா..? அது வீரமா..? காதல் களத்தில் காதலியை ஜெயிக்க தன் திறமைகளை ஆயுதமாக பயன்படுத்த வேண்டும்.. கண்ணீரை ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது.. கோழைதான் கண்ணீர் விடுவான்.. வீரன் ஒரு போதும் கண்ணீர்விட மாட்டான்..
எந்த ஒரு பெண்ணும் வீரனைத்தான் விரும்புவாள்.. கோழையை விரும்ப மாட்டாள்.. ஜெயித்தவர்களை மட்டுமே திரும்பிப் பார்க்கும் உலகம் இது.. காதலிக்கும் பெண்ணின் மனதை ஜெயிப்பது பெரிய விசயமா என்ன..?
உண்மையான காதலுக்கு என்றுமே தோல்வியில்லை.. அம்பிகாபதியினால் அமராவதியை மணந்து கொள்ள முடிந்ததா..? இல்லை சலிமினால் அனார்கலியை காப்பாற்ற முடிந்ததா..? அவர்களின் காதலிகளை அவர்களால் அடைய முடியவில்லை.. அவர்களுடன் வாழவும் முடியவில்லை.. ஆனால் அவர்களின் காதல் காலம் கடந்தும் வாழவில்லையா..?
உடல் ஒன்று சேர்ந்தால்தான் அது காதலா..? கண்பார்க்க முடிந்தால்தான் அது காதலா..? மனதுக்குப் பிடித்தவளை மணந்து கொண்டால்தான் அது காதலா..?
‘எங்கிருந்தாலும் வாழ்க..’ என்று காதலியை அவள் மணமுடித்த கணவனுடன் வாழ வாழ்த்திவிட்டு அவள் கணவனைக் காப்பாற்ற தன் உயிரைத் தியாகம் செய்த கதாநாயகனைக் கொண்ட ‘நெஞ்சில் ஓர் ஆலயம்..’ திரைப்படம் இன்றும் நம் மனதில் நிற்கவில்லையா..?
அது அந்தக் காலம்.. என்று நினைத்தால் புரிந்து கொள்ளாத காதலியை.. சிறை பிடித்து.. தன் மனதைப் புரிய வைத்த ‘சேது..’ திரைப்படத்தின் ‘சீய்யான்’ நினைவுக்கு வரவில்லையா..?
இரண்டுமே வேறுபட்ட காதல் கதைகள்.. வேறுபட்ட காதல் களங்கள்.. வேறுபட்ட கால கட்டங்கள்.. ஆனால் இரண்டு திரைப்படங்களுக்கும் பொதுவான ஒரு விசயம் உண்டு..
அது.. அந்த இரண்டு திரைப்படங்களின் கதாநாயகர்களும் மூலையில் முடங்கி கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கவில்லை.. தன் கையைத் தானே சுட்டுக் கொள்ளவில்லை.. மனநோயாளி போல் பிதற்றிக் கொண்டிருக்கவில்லை..
‘நெஞ்சில் ஓர் ஆலயம்..’ படத்தின் கதாநாயகன் ஒரு டாக்டர்.. காதலில் தோற்றாலும் அவன் தன் தொழிலில் மிகப் பெரிய வெற்றிப் பெற்றான்.. தொழிலை மூச்சாக நினைத்தான்..
‘சேது..’ திரைப்படத்தின் கதாநாயகன் உற்சாகமானவன்.. கவலைகளற்றவன்.. நண்பர்களுடன் சுதந்திரமாக சுற்றிவந்தவன்.. காதலைப் புரிந்து கொள்ளாத காதலியை நினைத்து கண்ணீரோடு அவன் ஊரைச் சுற்றவில்லை.. காதலியைத் தூக்கிக் கொண்டு தான் வந்தான்..
ஜீவா, இந்த இரண்டு கதாநாயகர்களின் குணாதிசயங்களையும் பெற்றவன்.. தன் உழைப்பினால் ‘கிரேட் ஜிம்’ மை உருவாக்கியவன்.. மிகவும் திறமை பெற்ற பயிற்சியாளன்.. அதே சமயம் உற்சாகமாய் நண்பர்களுடன் ஊரை வலம் வந்தவன்..
அவனுடைய திறமையையும் உற்சாகத்தையும் – காதல் பறிப்பதற்கு அவன் விட்டு விடலாமா..?
காதலியின் பின்னால் கண்ணீர் விட்டுக் கொண்டு யாசகனாய் அவன் சுற்ற வேண்டிய அவசியமே இல்லை.. கம்பீரமாய் பின் தொடரலாம்.. ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்..’ என்று அவள்முன் மண்டியிட்டு பூக்கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை.. அவள் முன் தலை நிமிர்ந்து நின்று முகம் பார்த்து காதல் சொல்லலாம்.
ஜீவா இதற்கு முன்னால் தன் காதலில் ஜெயிக்க கையாண்ட விதிமுறைகளை மாற்றக் கொண்டு களம் இறங்கி விட்டதில் டேனியல் அதிக மகிழ்ச்சி கொண்டான்.
பழைய ஜீவா புத்துணர்வுடன் எழுந்துவிட்டதில் அவனுக்குள் மனம் கொள்ளாத பெருமிதம் சுரந்தது..
Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.