Chapter 27
நிலைக் கண்ணாடியில் என் முகம் பார்த்தேன்..
என் முகம் தெரியாமல் உன் முகம் தெரிந்தது..
நினைவுகள் எல்லாம் நீயாகிப் போனதால்..
நானே.. நீயாக மாறிப் போனேன்..
காதலாகி.. கசிந்துருகி..
கவிதாவின் கைகளுக்கு மெஹந்தி இட்டுக் கொண்டே பம்பரமாய் சுழன்ற ஜீவாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சந்தியா..
“ஹலோ ஹோட்டல் சிவ ஜோதியா.. மதிய லன்சுக்கு அறுபது சாப்பாடு வேண்டுமே.. இல்லை வீட்டுக்கு கொண்டு வந்து டோர் டெலிவரியாய் கொடுத்துவிட வேண்டும் ஆமாம்.. பனிரெண்டு மணிக்கெல்லாம் வந்து விடவேண்டும்..”
செல்போனில் பேசி முடித்தவன் ரேணுகாவின் பக்கம் திரும்பி..
“அம்மா அறுபது சாப்பாடு வாங்கினால் நூறு பேர் தாராளமாய் சாப்பிடலாம்.. போதுமில்லையா..” என்று கேட்டான்..
“போதும் ஜீவா.. இதுவே மிச்சமாக இருக்கும்..”
“கூடுதலாக இருந்தால் இல்லாதவர்களுக்கு கொடுத்து விடலாம்மா.. பற்றாமல் போய்விடக்கூடாது..”
“இதுவே தாராளம் ஜீவா..”
ரேணுகாவின் பதிலில் திருப்தி அடைந்தவன் மீண்டும் செல்போனில் பேச ஆரம்பித்தான்.. சற்றுத் தள்ளி நின்று பேசியவன் ரேணுகாவின் அருகே வந்து..
“அம்மா எனக்குத் தெரிந்த மெஸ்ஸில் நைட் டின்னருக்கு ஆர்டர் கொடுத்து விடலாமா..?” என்று கேட்டான்..
“நல்லா இருக்குமா ஜீவா..?” கவலையுடன் வினவினாள் ரேணுகா..
“பிரமாதமாய் இருக்கும்மா.. மதிய சாப்பாட்டிற்கே அவங்களிடம் சொல்லலாமென்றுதான் நினைத்தேன்.. ஆனால் அவர்களுக்கு செய்து கொடுக்க டைம் வேண்டும்.. அதனால்தான் நைட் டின்னருக்கு ஆர்டர் கொடுத்து விடலாம்ன்னு நினைத்து விட்டுவிட்டேன்..”
“நீ சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.. செய்..”
ரேணுகா ஜீவாவிடம் காட்டிய நம்பிக்கையைக் கண்டு சந்தியாவிற்கு ஆச்சரியமாக இருந்தது..
ரேணுகா யாரையும் அவ்வளவு சீக்கிரத்தில் நம்பிவிட மாட்டாள்.. ஆரம்பகாலத்தில் சந்தியாவையே ஆயிரம் கேள்விகள் கேட்டுவிட்டு அப்புறம் பழகிப் பார்த்தபின் தான் வீட்டுக்குள் அனுமதித்தாள்..
யாரையும் எடை போட்டு பழகும் ரேணுகா இந்த ஜீவாவிடம் மட்டும் அவ்வளவு மரியாதையையும் பாசத்தையும் வைத்திருக்கிறாள் என்றால் ஜீவா உண்மையிலேயே பெரிய ஆள்தான்..
“என்னடி ஜீவா அண்ணனையே விழுங்கி விடுவதைப் போல பார்க்கிற..?” என்று கேட்டாள் கவிதா..
“ஒன்றுமில்லையே..” என்று மழுப்பினாள் சந்தியா..
“ஜீவாண்ணாவைப் பார்த்து சமாளிபிகேசன்னு சொல்லி விட்டு நீ சமாளிக்கப் பார்க்காதே.. எதுக்கு எங்கண்ணனை.. அப்படிப் பார்த்தாய்..?”
“ம்ம்.. உங்க அம்மாவுக்கு பலமாய் ஜால்ரா போடுகிறாரே.. எப்படி ஜால்ரா போடுகிறார்ன்னு பார்த்துக்கிட்டு இருந்தேன்.. போதுமா.. நீ ஒழுங்காய் ஆட்டாமல் கையை வை.. மெஹந்தி தீற்றி விடப் போகிறது..”
சந்தியா கவிதாவை அதட்ட கவிதா சந்தியாவையே இமைக்காமல் பார்த்தாள்.. அவள் பார்வையைக் கண்ட சந்தியாவின் புருவங்கள் மேலே எழுந்தன..
“என்னடி..”
“நீ ஏன் ஜீவாண்ணாவை வேண்டாம்கிற..”
“கவிதா..”
“என்னிடம் சொல்லாமல் நீ மறைத்தது இது ஒன்றைத்தான் சந்தியா.. ஏன் மறைத்தாய்..?”
“இதைச் சொல்ல வேண்டும்ன்னு தோணலை..”
“அதுதான் ஏன்..?”
“இதை பெரிய விசயமாய் நான் நினைக்கவேயில்லை..”
“இது பெரிய விசயமில்லைன்னா வேறு எதுதான்.. பெரிய விசயம்..?”
“கவிதா இன்றைக்கு உன் கல்யாண நிச்சயதார்த்தம்.. நீ அதைப் பற்றி மட்டும் யோசி..”
“உன் கல்யாணத்தைப் பற்றி யோசிக்கவே மாட்டாயா..?”
“நான் கல்யாணமே செய்து கொள்ளப் போவதில்லை..”
“ஏன்..?”
“இந்த ஆண்கள் எல்லாருமே நயவஞ்சகர்கள்.. ஏமாற்றுக்காரர்கள்..”
சந்தியா இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது ஏதோ வேலையாக அங்கே வந்த ஜீவா அப்படியே நின்றான்.. சந்தியாவையே ஊடுருவிப் பார்த்தான்..
“ஆண்கள்தான் ஏமாற்றுக்காரர்களா..? பெண்கள் எல்லாரும் அப்பாவிகளா..? அப்படி யார் உன் பிரண்டை நயவஞ்சகமாய் ஏமாற்றியதாம் கவிதா.. அந்தக் கள்வனின் பெயரைக் கொஞ்சம் கேட்டுச் சொல்லேன்..”
சந்தியா பதில் சொல்லாமல் மெஹந்தியை சரிசெய்வது போல் குனிந்து கொண்டாள்..
“காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் தானாம் கவிதா.. நான்தான் அப்போதே சொல்லி விட்டேனே.. உன் பிரண்டிற்கு நல்லது எதுவும் கண்ணுக்குத் தெரியாதுன்னு..”
ஜீவா நறுக்கென்று சொல்ல சந்தியா கோபத்துடன் நிமிர்ந்தாள்..
Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.