Chapter 02
கொள்ளிடக் கரையோர கிராமம் அது.. ‘வேம்பூர்’ என்றால் மூன்று போகமும் பொன் விளையும் பூமி என்று பிறந்த குழந்தை கூடச் சொல்லும்.. தூக்கி மடித்துக் கட்டிய வேட்டியுடன், தலையில் துண்டை முண்டாசு கட்டிக் கொண்டு வரப்பில் வேப்பங்குச்சியை வைத்து பல் துலக்கியவாறு வந்து கொண்டிருந்தார் துரைசிங்கம்.. எதிர்த்தாற்போல் வந்த பலவேசம்..
“என்ன துரைசிங்கம்.. நான் சொன்னதை வீட்டில் பொஞ்சாதி காதில் போட்டாயா.. இல்லயா..” என்று விசாரித்தார்..
வரப்பை விட்டு இறங்கி வாய்க்காலில் சுழித்தோடிய நீரில் வாய் கொப்புளித்து முகம் கழுவியவர், தலையில் முண்டாசு கட்டியிருந்த துண்டை அவிழ்த்து முகத்தைத் துடைத்துக் கொண்டவர், தன் முகத்தை மறைக்கும் கடாமீசையை முறுக்கியவாறு,
“எல்லாம் சொல்லியாச்சுய்யா.. மகன்கிட்ட கொஞ்சி, கெஞ்சி.. எல்லா வகையிலயும் பேசிப் பார்த்திட்டாள்.. பயல்தான் மசிய மாட்டேங்கிறானே..” என்றார்..
“என்னய்யா இது..? உனக்குப் பேருதான் பெத்த பேரு போல.. பெரிசா துரைசிங்கம்ன்னு.. வீட்டில் உன் ஜம்பம் இவ்வளவுதானா..?”
“யோவ்.. பலவேசம்.. சந்தடி சாக்கில் சிந்து பாடாதே.. என் வீட்டில் என் ஜம்பம் செல்லுமா, செல்லாதான்னு பரிட்சை பண்ணிப் பார்க்க அது விளையாடற மைதான மில்லய்யா.. குடும்பம்.. என் பொஞ்சாதி நான் கீறின கோட்டைத் தாண்ட மாட்டாள்.. பயல்.. தோளுக்கு மேல் வளர்ந்தா தோழன்ய்யா.. இவன் பனை மரத்தில பாதி உயரத்துக்கு வளர்ந்து நிற்கிறான்.. அவன் கிட்டப் போய் ஜம்பம் பேசச் சொல்றயா.. அதுக்கு வேற ஆளைப்பாரு..”
“அட என்னய்யா நீ வேற சுத்த விவரம் கெட்ட மனுசனா இருக்க.. இந்த வேம்பூரில் இருக்கிற முக்கால்வாசி வயலுக்கு சொந்தக்காரன் நீ.. ஊருக்குப் பெரிய தனக்காரன்.. உனக்கு இருக்கிற பணத்துக்கும் பவிசுக்கும் உன் மகன் ஒரு இடத்தில் கை கட்டி வேலை பார்க்கலாமா..?”
“ஏன்ய்யா.. நான் என்னவோ அவனை வேலைக்கு விரட்டினது போலப் பேசுற.. நாமதான் பெரிய படிப்பு படிக்கலை.. பிள்ளை படிக்கட்டுமேன்னு காலேஜுக்கு அனுப்பி வைச்சேன்.. படிச்சுப் பட்டம் வாங்கியவன் கவர்ன்மெண்ட் உத்தியோகத்தையும் சேர்த்து வாங்கிக் கொண்டு வந்து நிற்கிறான்.. நான் என்ன பண்ண முடியும்..?”
“அதைவிடு.. உன் பெண்டாட்டி பிள்ளை வரம் கேட்டு கோவில் கோவிலாய் சுற்றிப் பிறந்தவன் உன் பிள்ளை.. நீயோ கோவில் தர்மகர்த்தா.. உன் பிள்ளை நாத்திகம் பேசிக்கிட்டு அலைஞ்சா நல்லாவா இருக்கு..?”
“நல்லாத்தான் இல்லே.. நான் சொன்னா எங்கே அவன் கேட்கிறான்..?”
“சரி.. இதையெல்லாத்தையும் விடு.. ஜமீன் பரம்பரையில் ஒத்தப் பொண்ணு.. கங்கு கரையில்லாத சொத்து.. பொண்ணு கொடுக்கிறேன்னு என் மூலம் தூது மேல் தூது சொல்லியனுப்புறாங்க… ஒரு நல்ல பதிலைச் சொல்லாம நாள் கடத்தினா எப்படிப்பா…? நான் அவங்களுக்குப் பதில் சொல்ல வேணாமா..?”
“இன்னைக்கு பதில் சொல்லிடறேன் பலவேசம்..”
விரைவாய் நடையைக் கூட்டி மகன் அலுவலகம் செல்லும் முன்னர் அவனைப் பிடித்து விட எண்ணிச் சென்ற துரைசிங்கம் வழியில் வணங்கிய பண்ணை ஆள்களைக் கவனிக்காமல் வீடு சென்றடைந்தார்..
சுற்றுச் சுவர்கள் அரண்மனைப் பக்கச் சுவர்கள் போல் சுற்றி வளைத்திருக்க நடுவில் பிரம்மாண்டமாய் மூன்று கட்டாய், மூன்று அடுக்காய் கட்டப்பட்டிருந்தது அந்த வீடு.. வீட்டைச் சுற்றிலும் சிமிண்ட் தரையிருக்க அதில் நெல், மிளகாய், தானிய வகைகள் போன்றவை காய்ந்து கொண்டிருந்தது.. வீட்டின் பின் பகுதியில் தென்னை, மா, கொய்யா மரங்கள் இருந்தன.. வீட்டின் பின் கட்டு சமையல் பகுதியாகவும் நடுவில் முற்றமாகவும் முன்புறத்தில் பெரிய வரவேற்பறையும் அதற்கு முன்னால் நீண்ட தாழ்வாரமும் அதன் முனையில் பெரிய திண்ணைகளுமாக பழமையின் அடையாளமாய் அந்த வீடு இருந்தது.. மாடியில் பால்கனியில் ஊஞ்சல் கட்டப்பட்டிருக்க அதில் அமர்ந்தபடி பேப்பர் படித்துக் கொண்டு இருந்தான் நந்தகுமாரன்.. எதிரில் காபியை ஆற்றியபடி நின்று கொண்டிருந்தாள் சோலையம்மாள்.. புயலென மாடிக்குச் சென்ற துரைசிங்கம்,
“என்னதாண்டி நினைச்சுக்கிட்டு இருக்கான் உன் பிள்ளை.. எனக்கு ரெண்டில் ஒண்ணு தெரியணும்.. கேட்டுச் சொல்லு.. அந்த ஜமீன்தார் வீட்டுப் பெண்ணை கட்டப் போகிறானா இல்லையா..?” என்று சப்தம் போட்டார்..
மகனின் கையில் காபியை கொடுத்து விட்டுக் கையைப் பிசைந்தவாறு மகனைப் பார்த்தாள் சோலையம்மாள். தகப்பனாரை நிமிர்ந்து பார்க்காமல் பேப்பரில் ஆழ்ந்திருந்தான் நந்தகுமாரன்..
“ஐயா நந்து..! அப்பா கேட்கிறாரில்ல.. பதில் சொல்லுய்யா..” என்று மகனிடம் இரைஞ்சினாள் சோலையம்மாள்..
“எதுக்கும்மா பதில் சொல்லணும்..?”
“நாளைக்குப் பொண்ணு பார்க்கப் போகணுமாம்..”
“யாருக்குப் பெண் பார்க்க..?”
“நக்கலா பேசறான் உன் பிள்ளை..?” என்று ஆவேசமானார் துரைசிங்கம்.. அவர் மீசை துடித்தது.. பதறினாள் சோலையம்மாள்..
“பொறுங்க.. பொறுங்க.. நான் கேட்கிறேன்.. நந்து.. என்னய்யா இது..? உனக்குத்தான் பொண்ணு பார்க்கப் போகிறோம்..”
“போகலாமான்னு என்கிட்ட கேட்டீங்களா.. போறோம்ன்னு சொன்னால்.. என்ன அர்த்தம்..? இல்லை.. நான் தெரியாமல்தான் கேட்கிறேன்.. கட்டிக்கப் போறது நானா இல்லை வேறு யாருமா..?”
“பேச்சைப் பார்த்தியாடி..” என்று பல்லைக் கடித்த தகப்பனாரைப் பார்க்காதது போல் தாயைப் பார்த்தவன்,
“அம்மா..! எனக்கு இப்பக் கல்யாணம் வேணாம்.. எனக்கு வேணும்னு தோணினப்போ பண்ணிக்கறேன்.. இப்ப என்னை பேப்பர் படிக்க விடுங்க..” என்றான்..
“அப்பன் பேச்சைக் கூடக் கேட்காமல் அப்படி என்னடி அந்தப் பேப்பரில் படிச்சுக் கிழிக்கறான்.. பெரிய ஹிண்டு, இந்தியன் எக்ஸ்பிரஸ் பேப்பரைப் படிச்சு உலக நடப்பைத் தெரிஞ்சுக்கப் போகிறது போல் விழுந்து விழுந்து படிக்கிறதைப் பாரு.. கருப்புச் சட்டைக்காரன் போடற பேப்பர்.. இவனுக்கு எதுக்குடி அந்தக் கருமாந்திரமெல்லாம்..? வருசா வருசம் அம்மன் கொடை சுமக்கிற குடும்பத்தில் நாத்திகம் பேசறவன் பிள்ளையா பிறந்திருக்கான்.. ஒத்தப் பிள்ளையைப் பெத்தவனெல்லாம் என்னை மாதிரியாடி இந்தப் பாடு படறான்..? அவனவன் ஒத்தப் பொண்ணை வச்சுக்கிட்டு ஆள் மேல் ஆள் தூது அனுப்பிக்கிட்டிருக்கான்.. இவன் அசைஞ்சு கொடுக்கிறானா பாருடி..” என்று எண்ணையில் போட்ட அப்பமாய் குதித்தார் துரைசிங்கம்..
“அம்மா.. ஜமீன் பரம்பரை அந்தப் பரம்பரை.. இந்தப் பரம்பரைன்னு பரம்பரை பெயரைச் சொல்லிக்கிட்டு அலையாம மனுசனை மனுசனா பார்க்கச் சொல்லுங்க.. ஜமீன்ங்கிற பெயரெல்லாம் ஒழிந்து எவ்வளவு காலமாச்சு..”
“டேய்.. அதிகாரத்தை வேணும்னா பிடுங்கலாம்.. ஜமீன்ங்கிற மரியாதையை பிடுங்க முடியாது..”
“ஸ்ஸ்.. அப்பா.. எனக்குப் பிடிக்கலைன்னா விடுங்க..”
“அதுக்காக.. உனக்குப் பிடிச்ச மாதிரியே இஷ்டப்படி ஆடுவே நான் பார்த்துக்கிட்டு இருக்கணுமா..? இந்த துரைசிங்கத்திற்குன்னு ஊருக்குள்ள ஒரு பெயர் இருக்கு.. மானம் மரியாதை இருக்கு.. அதுக்கு தக்கபடி தான் நான் பெண் எடுப்பேன்..”
“தாராளமா எடுங்க.. என்னை தாலிகட்டுன்னு மட்டும் சொல்லாதீங்க..” கோபத்துடன் பேப்பரை மடித்து விட்டு உள்ளே சென்று விட்டான் நந்தகுமாரன்.. துரைசிங்கத்தின் மீசை துடித்தது..
“ஆகிற பேச்சாடி இது..? கிறுக்கன் மாதிரி பேசறான் பாரு.. பொழைக்கிறவன் இப்படிப் பேசுவானாடி..? பரம்பரையை மதிக்க மாட்டேன்னு பஞ்சப் பனாதி எதையாவது கூட்டிக்கிட்டு வந்து நின்னுருவானோன்னு பயமா இருக்குடி சோலையம்மா..” என்ற துரைசிங்கம் மாடி இறங்கிச் சென்று விட்டார்..
கோபத்துடன் மகன் ஒரு பக்கம் போக கணவர் ஒரு பக்கம் போக இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்த சோலையம்மாளுக்கு மனம் சங்கடப்பட்டது.. நந்தகுமாரன் தாயின் மேல் உயிரையை வைத்திருந்தான்.. தாயின் பாசத்துக்குக் கட்டுப்படுவான்.. ஆனால் பணக்கார ரத்தம் உடலில் ஓடியும் ஏழைப் பங்காளனாக வாழ நினைப்பவன்.. ஆகாத வேலையென்று மற்றவர்கள் புறக்கணிப்பதை ஆர்வமாய் செய்வான்.. அனைவரும் விரும்புவதை ‘ப்பூ’ வென்று கணப் பொழுதில் அலட்சியப்படுத்திச் சென்று விடுவான்.. குணத்தில் தங்கம்.. சமீப காலமாக புத்தி வக்கரித்து தெய்வம் இல்லையென்று கூறி கோவிலுக்கு வருவதைத் தவிர்க்கிறான்.. யாரும் உதவியென்று கேட்டு விட்டால் கையில் இருப்பதை கொடுத்து விட்டு வந்து விடுவான்.. மதியாதார் தலைவாசல் மிதிக்க மாட்டான்.. அதே சமயம் வாசல் படியேறி வருபவர்கள் எதிரியாக இருந்தாலும் இன் முகம் காட்டி வரவேற்பான்..
‘கடவுள் பக்தியை விட மனித நேயம் உயர்ந்தது..’ என்பது அவன் கொள்கை.. இதில் சோலையம்மாளுக்கும் உடன்பாடு உண்டு.. கோவிலையே பிறப்பிடமாகக் கொள்ளாவிட்டாலும் பழைய சம்பிரதாயங்களை மதிக்கும் குடும்பம் அது.. அதில் கருப்புச் சட்டை போட்ட வெள்ளை மனத்தவன் பிறந்து விட்டான்.. பிறந்தவன் சும்மா இருக்காமல் கோவிலையே இருப்பிடமாய் கொண்ட தெய்வபக்தி மிகுந்த மைதிலியைக் காதலித்து விட்டான்..
அலுவலகத்துக்குத் தயாராகி தலை வாரிக் கொண்டிருந்த நந்தகுமாரன் ஆளுயுரக் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டான்.. ‘ராஜகுமாரன்’ என்கிறார் அப்பா.. கருப்பு நிற ராஜகுமாரன்.. இந்த ராஜகுமாரனுக்கு ஏற்ற ராஜகுமாரி ஜமீன் வம்சத்தில் இருந்துதான் வரவேண்டுமாம்..
‘மைதிலி உன் அப்பா ஜமீன்தாரா..! என்று கேட்க வேண்டும்.. கேட்டால் என்ன சொல்லுவாள்..?’
அழகிய முகம் கோபத்தில் இன்னும் சிவக்க,
‘ஒகோ.. இந்த மூஞ்சிக்கு.. எங்க மூஞ்சி பத்தாதோ.. ராஜகுமாரி கேட்குதா ஏன்.. ஜமீன்தார் மகளா இருந்தால் தான் கல்யாணம் பண்ணிக்குவீங்களோ..? இல்லைன்னா.. மாட்டீங்களோ..? மகனே.. என்னை விட்டு விட்டு இன்னொருத்தி கழுத்தில் தாலியை கட்டிருவியா நீ..? நான் விட்டுவிடுவேனா..?’ என்று பொரிந்து தள்ளி விடுவாள்..
மைதிலியின் நினைவில் மனம் கிறங்க முதல் முதலில் அவளைச் சந்தித்த நாளை நினைவில் கொண்டு வந்தான்..
அன்று வேண்டுமென்றே தன் இரு சக்கர வாகனத்தைப் புறக்கணித்துப் பேருந்தில் ஏறிச் சென்றான்.. துரைசிங்கம் கூடக் கத்தினார்..
“ஏண்டி.. டாடா சுமோ வீட்டில் தூங்குது.. கண்டுக்க மாட்டேங்கிறான்.. சரி.. அவனுக்குப் பிடிச்ச மோட்டார் சைக்கிள்ல போகட்டும்ன்னு பார்த்தா இன்னைக்கு அதுவும் வேண்டாமுன்னு சொல்லிட்டு பஸ்ஸில் போறேன்னு என் மானத்தை வாங்கறான்..”
“ஏன்ம்மா பஸ்ஸில் ஒரு நாள் ஆபிஸ் போனால் அது அவ்வளவு பெரிய பாதகச் செயலா..?”
“எனக்கு அப்படித்தாண்டி.. என் மவன் சிங்கம் மாதிரி காரில் போகணும் வரணும்னு நினைக்கிறவன் நான்..”
வாக்குவாதம் முற்றுப் பெறுவதற்கு முன்னால் தலை மறைவாகி அந்தக் கிராமத்திற்கு வரும் திருச்சி செல்லும் நகரப் பேருந்தில் ஏறிச் சென்றவன் திருச்சி நகரில் இறங்கி அலுவலகம் செல்ல இன்னொரு பேருந்து மாறி ஏறினான்.. காலை நேர நெரிசல் அதிகமிருந்தது..
தினம் தினம் மக்கள் இப்படித்தான் அவதிப்படுகிறார் களோ என்று சித்தார்த்தர் புத்தராகப் போவதற்கு முன்பு நினைத்த மாதிரி நினைத்துக் கொண்டவன், அருகில் பேருந்தின் நெரிசலில் நொறுங்கிக் கொண்டிருந்த வயோதிகரைப் பார்த்து, பரிதாபப்பட்டு எழுந்து தன் இடத்தை அவருக்குக் கொடுத்தான்..
“ஐயா இங்கே உட்காருங்க..”
“நல்லாயிருப்ப தம்பி..” என்று வாழ்த்திய வயோதிகர் அவனது இடத்தில் அமர்ந்து கொள்ள அவன் எழுந்து நின்று கொண்டான்..
“முன்னால் நகருங்க..” என்று கண்டக்டர் கத்தவும் இவன் நகர்ந்து நின்றபோது அருகில் நின்ற பெண் மீது மோதிக் கொண்டான்..
“ஐ ஆம் சாரி.. தெரியாமல்..” என்று அவன் கூற ஆரம்பிக்கும் போதே ‘ஷட் அப்’ என்றாள் அந்தப் பெண்..
“இடிக்கிறதுக்கென்றே பஸ்ஸில் ஏறிவிட்டு.. விளக்கம் வேற.. சரியான இடிமன்னன்..”
“ஹலோ என் பெயர் நந்தகுமாரன்..”
“நான் கேட்டேனா..?”
“இல்லை.. என் பெயரை ‘இடிமன்னன்’ என்கிறீர்களே.. அதனால் விளக்கம் சொன்னேன்..”
முறைத்துப் பார்த்தவளின் பேரழகு அவனைத் திணற அடித்தது.. பார்த்த முதல் நொடியில் அவள் மீது மோகம் வர அவளுக்கோ அவன் மீது கோபம் வருகிறது.. அடுத்த ஸ்டாப்பில் இறங்கிய அந்தப் பெண் விறுவிறுவென நடக்க இவனும் அவனது அலுவலகத்திற்கான நிறுத்தம் அது என்பதால் இறங்கி அந்தப் பெண்ணைத் தொடர்ந்து நடந்தான்.. சற்று தூரம் நடந்த அந்தப் பெண் நின்று முறைத்தாள்..
“மிஸ்டர்.. ஏன் என் பின்னாலேயே வருகிறீர்கள்..?”
“இது என்னங்க வம்பாப் போச்சு.. நான் ஒன்றும் உங்கள் பின்னால் வரலைங்க.. நீங்கதான் என் முன்னால் நடக்கிறீர்கள்..”
“ஏங்க தனியாப் போகிற பெண்கிட்ட வம்பா பண்றீங்க..?”
“தனியாப் போறீங்களா..? என்னவோ ஒற்றையடிப் பாதையில் நீங்க ஒரு ஆள் மட்டும் ஒற்றையாய் போவது போல் பேசுகிறீர்களே.. பாருங்கள் உங்களைச் சுற்றி ஜனக்கூட்டத்தை.. தனியாகவா போகிறீர்கள்..”
அவள் வாயடைத்து நின்றது இன்றும் மனத்திரையில் நின்றது.. அதன் பின்னர் அவளைத் தாண்டி அவன் நடக்க அவன் பின்னாலேயே அவள் வந்தாள்.. இப்போது கேள்வி கேட்பது அவன் முறையாயிற்றே.. விட்டுக் கொடுத்தால் அவன் எப்படி துரைசிங்கத்தின் மகன் ஆவான்..?
“என்ன மேடம் என்னைச் சொல்லிட்டு என் பின்னால் நீங்கள் வருகிறீர்கள்..?” அவள் முகம் சிவந்து விட்டதை ரசனையாய் நோக்கினான் அவன்..
“நான் ஒன்றும் உங்கள் பின்னால் வரவில்லை.. என் ஆபிசிற்குப் போகிறேன்.. வழியை விடுங்கள்..”
“நான் என்ன பிடித்தா வைத்துக் கொண்டு இருக்கிறேன்.. எது உங்கள் ஆபிஸ்..?”
“இன்கம்டாக்ஸ் ஆபிஸ்..”
“அதுதானே பார்த்தேன்.. ஏன் மேடம் எப்போதிருந்து அது உங்கள் ஆபிஸ் ஆனது..?”
“இப்போதுதான் ஜாயின் பண்ணப் போகிறேன்..”
“ஓகே.. நியூ ஜாயினா..? இன்னும் ஜாயின் பண்ணுவ தற்குள்ளேயே அது உங்கள் ஆபிஸ்ன்னு உரிமை கொண்டாடுகிறீர்களே.. அதில் எட்டு வருடம் வேலை பார்த்து ஆபிசர் ஆகியிருக்கேனே நான் உங்களை விட எத்தனை மடங்கு உரிமை கொண்டாடனும்..?..ம்..”
அவள் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாய் தெரிந்தது.. தயங்கிக் கொண்டே அவள் பின் தொடர அவளைக் கடைக் கண்ணால் பார்த்தபடி அலுவலகம் சென்ற நாள் இன்னும் நெஞ்சில் பசுமையாக இருக்கிறது..
அன்று அவள் அலுவலகத்தில் சேர்ந்ததும் அதன் பின்னர் அவள் பெயர் ‘மைதிலி’ என்பதை அறிந்ததும் நேற்றுப் போல் இருக்கிறது..
அதன் பின்னர் ஆறு மாதங்கள் கழித்து ஒரு நாள் அவன் அலுவலகத்தில் நுழைந்து கொண்டிருந்தபோது மைதிலி அவளது பிரிவு ஹெட் கிளார்க் முன்னால் கையைப் பிசைந்து கொண்டு நிற்பதைக் கண்டான்.. என்னவென்று அறிய நின்று பார்த்தபோது ஹெட்கிறார்க் மைதிலியைப் பார்த்து,
“ஏம்மா லேட்டுன்னா.. லேட்டாயிருச்சுன்னு சொல்றே.. இதுதான்பதில் சொல்கிற விதமா..?” என்று கேட்டுக் கொண்டிருந்தார்..
மைதிலி தர்ம சங்கடத்துடன், “பஸ்ஸை விட்டு விட்டேன் சார்..” என்றாள்..
“அதெப்படி விடலாம்.. கரெக்ட் டயத்துக்கு ஸ்டாப்புக்கு வந்திருந்தால் பஸ்ஸை மிஸ் பண்ணியிருப் பீங்களா..? பொறுப்பில்லைன்னு சொல்லுங்க..”
ஹெட் கிளார்க் சந்தர்ப்பம் கிடைத்தது என்று தாளிக்க மைதிலி தவித்தாள்.. அவளின் மை விழியின் தவிப்பைக் கண்ட நந்தகுமாரன் இளகிப் போனான்..
“ஹலோ ஹெட் கிளார்க் சார்.. அவங்க தினமும் உங்களுக்கு பத்து நிமிடம் முன்னதாகவே ஆபிஸ் வந்தருவாங்க.. என்னைக்காவது நீங்கள் ஏன் என்னை விட பத்து நிமிஷம் லேட்டா வர்றீங்கன்னு கேட்டிருப்பாங்களா..? இல்லை நீங்கதான் தினமும் பத்து நிமிசம் முன்னாடி அவங்க வருவதற்கு பாராட்டு விழா எடுத்திருக்கீங்களா..? ஒரு நாள் லேட்டானா உடனே மாட்டிக்கிட்டாங்கன்னு பிடிச்சு வாட்டணுமா..? இதோ டேவிட்டும்தான் தினமும் லேட்டா வர்றான்.. அவனை ஒரு நாளாவது கேட்டிருக்கீங்களா..? லேடிஸ்ன்னாத்தான் மிரட்டு வீங்களா..?” என்று கேட் ஹெட்கிளார்க் பாக்கு வெட்டியில் மாட்டியது போலானார்..
டேவிட் முரடன்.. கோபம் வந்தால் எக்குத்தப்பாய் பேசி விடுவான்.. அவனிடம் மாட்டிவிடவும் அரண்டு போனவர் சமாளிக்க முயன்றவராய்,
“ஹா..! ஹா..! நம்ம ஆபிசர் சாருக்கு எல்லாமே தமாஷ்தான்..” என்றபடி முன்னாலிருந்த கம்ப்யூட்டரின் திரையை உற்றுப் பார்க்கலானார்..
மைதிலி நன்றிப் பார்வையுடன் நகர்ந்து செல்ல கிளார்க், ஆபிசர் என்ற பேதமின்றி நட்புடன் பழகும் நந்தகுமாரனிடம்,
“ம்ம்.. பெண்ணென்றால் பேயும் இரங்குமாம்.. நீங்களோ மகா மனிதர்.. இரக்கப்படுங்க பரவாயில்லை.. அதுக்காக உங்க கரிசனையைக் காட்ட என்னைப் போட்டுக் கொடுக்கணுமா..?” என்று வினவி சிரித்தான் டேவிட்..
“போட்டுக் கொடுத்ததினால் என்ன ஆகிவிட்டது..? ஹெட்கிளார்க் ஏதாவது கண்டிப்பாரா..” என்று நந்தகுமாரன் கேட்க,
“என்கிட்டே பேசினால் என்ன ஆகும்ன்னு தெரியும்.. என்கிட்டயெல்லாம் வைத்துக்க மாட்டார்..” என்று கூறினான் டேவிட்..
“அதனால்தான் உன்னைச் சொன்னேன்..” என்றான் நந்தகுமாரன்..
அதே நேரம் மைதிலியின் தோழி பாத்திமா,
“நல்ல வேளைடி மைதிலி.. ஆபிசர் தலையிட்டார்.. தப்பிச்சே.. இல்லைன்னா இன்னும் அரை மணி நேரம் திட்டு வாங்கியிருப்பே..” என்று கூற மைதிலி லேசாக விழிகளை உயர்த்திப் போய்க் கொண்டிருந்த நந்தகுமாரனைப் பார்த்தாள்.. அதே நேரம் யதேச்சையாக அவனும் திரும்பிப் பார்க்க துணுக்குற்ற மைதிலி அன்று நடுக்கத்துடன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டதை இன்று நினைத்தாலும் சிலிர்த்துப் போகும் நந்தகுமாரனுக்கு..
மழை எங்கோ பெய்யும்.. ஆனால் மண் வாசம் அதை உணர்த்தும், காதல் இருவருக்குள்ளும் ஒளிந்திருந்ததை அவர்கள் இருவரும் உணரும் நாள் ஒன்றும் வந்தது.
Reviews — Kadalin Pon Vethiyle / காதலின் பொன் வீதியிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.