Chapter 06

0Shares

காதல் அரும்பி மலராகி மணம் வீசிய கதைகளை அசை போட்டபடி மைதிலி பஸ்ஸிலும், நந்தகுமாரன் தன் இரு சக்கர வாகனத்திலும் வந்து அலுவல வாசலில் சந்தித்துக் கொண்டார்கள்.. கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி பதறியபடி படியேற முயன்றவளின் மேல் மோதுவது போல் வேகமாய் வந்து உராய்ந்து நின்றது நந்தகுமாரனின் வண்டி.. திடுக்கிட்டுப் பின் வாங்கியவள் அவனைக் கண்டதும் மலர்ந்தாள்..

“யாரோன்னு பயந்திட்டேன்..”

“உன்னை இடிக்க யார் வருவார்கள்..? உன் இடி மன்னன் நான்தான் வரவேண்டும்..”

“போதுமே.. முதல் நாள் தெரியாமல் ஒரு வார்த்தை சொல்லி விட்டால் அதையே உடும்புப் பிடியாய் பிடிச்சிக்கிட்டு இருக்கணுமா..?”

“சரி.. விட்டு விட்டேன்.. ஏண்டி லேட்..?”

“எல்லாம் உங்களால்தான்.. உங்களை முதல் நாள் பார்த்ததிலிருந்து இன்று வரை நடந்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தால் நேரமாகாமல் என்ன செய்யுமாம்..?”

நந்தகுமாரன் சிலிர்த்தான்.. இவன் போல் அவள்..? காதலின் அதிசயங்களில் இதுவும் ஒன்று போலும்.. முகம் மென்மையுர,

“என்னையே இருபத்தி நாலு மணி நேரமும் நினைக்கணுமா..?” என்றான்.

“மறந்தால்தானே நினைப்பதற்கு..”

நந்தகுமாரன் கிறங்கிப் போய் அவளைப் பார்க்க அவள் பதறிப் போனாள்.

“நந்து.. இது ஆபிஸ் வாசல்.. ஏற்கெனவே நான் லேட்.. ஹெட்கிளார்க் என்ன பாட்டுப் பாடப் போகுதோன்னு பயந்துக்கிட்டு இருக்கேன்.. நீங்க வேற இப்படிப் பார்த்து பயமுறுத்தாதீர்கள்..”

“ஏண்டி.. காதலன் காதல் பார்வை பார்த்தா கொலை பண்ண வந்தது மாதிரி அலறுகிறாய்..? உன்னைப் போய் காதலிச்சுத் தொலைச்சேனே..”

“ஏன் வேறு ஆள் மாற்றும் ஐடியா இருக்கிறதா..?”

“ஏன் நீ என்னைக் கொலை பண்ணுவதற்கா..? கொஞ்சம் நில்.. வண்டியை பார்க் பண்ணிட்டு வந்து விடுகிறேன்..”

“எதுக்கு..? ஜோடியாப் போய் எல்லோரின் வாயிலும் விழுகவா..?”

“புரியாமல் பேசாதே.. நான் முன்னால் போகிறேன்.. நீ பின்னால் வா.. இல்லைன்னா ஹெட்கிளார்க் உன்னைத் தொலைத்து விடுவார்..”

“அதெல்லாம் அவர் தொலைத்து விடாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.. நீங்க மெதுவா வந்தால் போதும் ஆபிசர் சார்..” என்ற கிண்டல் குரல் கேட்டு திடுக்கிட்டு இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்..

டேவிட் நின்றிருந்தான்.. மைதிலி முகம் சிவக்க நந்தகுமாரன் சிரித்தான்..

“டேவிட்.. இவள் ஏற்கனவே பயந்து கொண்டு இருக்கிறாள்.. நீ வேற போட்டு உடைத்து விடாதே..”

“உடையாமல் கண்ணாடிப் பாத்திரம் போல் உங்கள் காதலை பாதுகாக்கிறேன் போதுமா.. வாங்க சிஸ்டர்.. ஹெட்கிளார்க்கை நினைத்துப் பயந்து கொண்டு வாசலிலேயே நின்றிருந்தால் இன்றைக்கான வேலைகளை பார்க்க முடியாது..”

டேவிட் படியேற மைதிலி பின் தொடர்ந்தாள்.. கண்ணாடியைத் தூக்கி விட்டுக் கொண்டு மைதிலியை முறைத்த ஹெட்கிளார்க் தன் கரத்தைத் திருப்பி மணி பார்த்தார்.. நேரமாகி விட்டதாம்.. மைதிலி தாமதமாய் வந்து விட்டாளாம்.. மைதிலியின் முகம் பார்த்த டேவிட்,

“குட்மார்னிங், ஹெட் கிளார்க் சார்.. என்ன வாட்சைப் பார்க்கறீங்க..? சரியா, ஓடுதா, இல்லையான்னு பார்க்கறீங்களா..?” என்றான் டேவிட்..

“ஹி..ஹி.. அதெல்லாமில்லைப்பா சும்மா.. மணி பார்த்தேன்..”

“சும்மாதானே மணி பார்ப்பீங்க.. வேலையிருந்தால் பார்க்கவா போறீங்க..? நேற்று உங்க பெண்ணோட காலேஜ் அட்மிசன்னு மதியம்தான் வந்தீங்க.. அப்பப்போய் மணிபார்த்தீங்களா..? அதற்கும் முதல் நாள் உங்க மிஸஸ் மயக்கம் போட்டு விழுந்துட்டாங்கன்னு சொல்லிக்கிட்டு சாயந்திரம் மூணு மணிக்கு வந்தீங்களே அப்ப மணி பார்த்தீங்களா..? அப்புறம் போனவாரம்..”

“யப்பா.. டேவிட்.. இந்தா என் வாட்சைக் கழற்றி டேபிள் டிராயரில் போட்டு மூடிவிட்டேன்.. போதுமா..? கொஞ்சம் மலையிறங்கு ராஜா..”

“சார்.. பர்மிசனெல்லாம் உங்களுக்குத்தான்.. எங்களுக்கு இல்லை.. வேர்த்து விறுவிறுத்து, அடிச்சுப் பிடிச்சு பஸ் பிடிச்சு வந்தால் ஒரு நிமிடம் கூட லேட்டாகக் கூடாதே.. உடனே வாட்ச்சின் மேல் ஒரு பார்வை எங்கள் மேல் ஓர் பார்வை.. ம்ம்..” என்ற டேவிட் அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரில் கையெழுத்துப் போட்டு விட்டு மைதிலியிடம் பேனாவை நீட்ட அவள் விட்டால் போதுமென்ற வேகத்துடன் கையெழுத்துப் போட்டு விட்டு அலுவலகத்தின் உள்ளே விரைய டேவிட் மட்டும் மகா அன்பாய் ஹெட்கிளார்க்கைப் பார்த்தபடி,

“பார்வை ஒன்றே போதுமே..

பல்லாயிரம் சொல் வேண்டுமா..?” 

என்று பாடியபடி உள்ளே சென்றான்.. பக்கத்து சீட் ராமாமிர்தம்,

“ஹூம்..” என்று ஓர் பெருமூச்சை வெளியேற்றி விட்டு ஹெட்கிளார்க்கைப் பார்த்து,

“எல்லாம் கலிகாலம் சார்.. அவன் வயசென்ன.. நம்ம வயசென்ன.. எத்தனை வருசம் சீனியர் நாம.. ஒரு பயம், பணிவு இருக்கா.. பாட்டு வேற பாடிட்டுப் போறான்.. நேத்து வந்த பயல் அவன்.. ஹூம்.. இனி வரும் காலத்தில் எல்லாம் சர்வீஸுக்கு மதிப்பிருக்காது சார்..” என்றார்..

“ஏன் இப்ப மட்டும் என்ன வாழுதாம்..? சர்வீஸை மதிச்ச காலமெல்லாம் மலையேறிப் போச்சுய்யா.. இப்ப யூனியன் வேற ஸ்ட்ராங்கா இருக்கு.. பயல் யூனியன் லீடர்.. அசைக்க முடியலை..” 

உள்ளே வேகமாகச் சென்ற மைதிலி அவள் இடத்தில் அமர்ந்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.. பக்கத்து சீட் பாத்திமா,

“என்னப்பா லேட்டாயிருச்சு போல..? ஹெட்கிளார்க்கு கிட்ட பாட்டு வாங்கினியா..?” என்று கேட்டாள்..

“களுக்..” கென்று சிரித்தாள் மைதிலி..

“என்னடி சிரிக்கிறே..?”

“அவர்கிட்ட நான் பாட்டு வாங்கலை.. டேவிட் கிட்டத்தான் அவர் பாட்டு வாங்கினார்..”

“டேவிட் திட்டினாரா..?”

“இல்லை பாடினார்..” மீண்டும் குலுங்கிச் சிரித்தாள் மைதிலி..

“என்னது பாடினாரா..?” புரியாமல் கேட்டாள் பாத்திமா..

“ஆமாம்.. ஹெட்கிறார்க் வாட்சைப் பார்த்துவிட்டு என்னையும் முறைத்துப் பார்த்தாரா.. டேவிட் அவரைப் பார்த்து.. ‘பார்வை ஒன்றே போதுமே’ன்னு பாடினார்..” என்று அந்தப் பாடலைப் பாடிக் காட்டினாள் மைதிலி..

அதே நேரம் டேவிட் உள்ளே வர பாத்திமா வியப்பாய் அவனைப் பார்த்தாள்..

“என்ன பார்வை.. உந்தன் பார்வை..” என்று டேவிட் மீண்டும் பாட,

“அதுசரி.. இன்னைக்கு என்ன.. அன்னையர் தினம், நண்பர்கள் தினம் மாதிரி டேவிட் பாட்டுப் பாடுற தினமா..?” என்று பாத்திமா கேட்டாள்..

“ம்ம்.. ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது இல்லையா.. அதுதான் பாடலாம்ன்னு தோணிச்சு பாடறேன்..”

“அப்போ ஆடணும்னு தோணினால்..?”

“ஆடிட்டாப் போச்சு.. ஆடவா..?”

“எதற்கு..? இந்த இடத்தை விட்டு நான் ஓடவா..? நீங்கள் மட்டும் எழுந்து ஆடினீங்க.. இந்தக் கட்டிடம் என்ன ஆகும்ன்னு உங்களுக்கே தெரியும்.. சொல்லிட்டேன்..” என்றாள் பாத்திமா சிரித்தபடி..

“என்ன ஆகும் கட்டிடம் தூள் தூளாகும்..” என்று கூடச் சேர்ந்து சிரித்தான் பருமனான உடல்வாகு கொண்ட டேவிட்..

அப்போது நந்தகுமாரன் அவர்களைக் கடந்து செல்ல மைதிலி அவனைப் பார்வையால் தொடர்ந்தாள்.. அறைக் கதவைத் திறக்கும்போது திரும்பி மைதிலியின் பார்வையைச் சந்தித்த நந்தகுமாரன் ஒரு தலையசைவுடன் உள்ளே சென்று மறைந்தான் டேவிட் ஜாடை காட்ட பாத்திமா வேடிக்கை பார்த்தாள்.. நந்தகுமாரன் சென்றதும் தன்னுணர்வு பெற்ற மைதிலி அவர்களது பார்வையைக் கண்டு முகம் சிவந்தாள்..

“டேவிட்.. தப்பான ஆள்கிட்ட பார்வையைப் பத்திப் பாடிட்டிங்க..” என்று பாத்திமா கூற,

“ஆமாமாம்.. அந்தப் பாட்டை இங்கே.. இப்போ.. பாடியிருக்கணும்..” என்று டேவிட் ஒத்து ஊதினான்..

உதட்டை மடித்துக் கடித்த மைதிலி அவர்கள் பேச்சு காதில் விழாதது போல் வேலை பார்க்க ஆரம்பித்தாள்.. மாலையில் கிளம்பும்போது அவளது செல்போனின் மணியொலிக்க எடுத்துப் பார்த்தாள்.. நந்தகுமாரன் அழைத்தான்.. போனைக் காதில் வைத்து, “என்னங்க..?” என்றாள்..

“உன்கிட்டப் பேசணும்..” என்றான் அவன்..

“பேசுங்க..”

“விளையாடுகிறாயா.. உட்கார்ந்து பேசணும்.. உடனே உட்கார்ந்துக்கிட்டுப் பேசுங்கள்’ன்னு போனிலேயே பேசி முடிக்காதே.. நேரில் பேசணும்..”

“எப்போது..?”

“இப்போதே..”

“இப்போதேவா..” என்று அவள் தயங்க,

“இப்போதுதான்..” என்றான் அவன் அழுத்தமான குரலில்.

“சரி.. எங்கே பார்ப்பது..”

“வேறு எங்கே.. கோவிலில்தான்.. வேறு பார்க்.. அது, இதுன்னால் நீ வருவாயா..? மாட்டாயே.. வேறு வழியில்லை எனக்கு.. கோவிலுக்கு வந்து சேர்..”

மைதிலி ஒரு ஆட்டோவைப் பிடித்து கோவில் வாசலில் இறங்கினாள்.. வெளியே செருப்பை அவிழ்த்து விட்டு விட்டு உள் பிரகாரம் சென்றவள் கோவில் கோபுரத்தைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.. அதிவேகமாய் உள்ளே சென்று கடவுளை வணங்கி கோவிலை வலம் வந்தவள்.. வெளிப்பிரகாரத்து மண்டபத்துப் படியில் அமர்ந்திருந்த நந்தகுமாரனைக் கண்டதும் மலர்ந்து அவன் அருகில் சென்றாள்.. அவள் வருவதையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவன், “பரவாயில்லை.. கூப்பிட்டதும் வந்து விட்டாய்..” என்றான் மெச்சுதலாய்,

“ஏன் வராமல் என்ன..? பத்து நாள் முன்னாடி கூட வரவில்லையா..?”

“ஓகோ.. அதற்கு முன்னால் எப்போது வந்தாய்..?”

“அது..” என்று அவள் நெற்றியில் விரலைத் தட்டி யோசிக்க ஆரம்பிக்க,

“ரொம்ப யோசிக்காதே.. இருக்கிற மூளையும் குழம்பிக்கப் போகுது..” என்றான்..

“இப்போது எதுக்கு என்னைத் திட்டுகிறீர்கள்..?”

“பின்னே என்னடி.. ஆடிக்கொருதரம்.. அமாவாசைக் கொரு தரம்.. ஒளிஞ்சு, ஒளிஞ்சு.. கோவிலில் பவ்யமாய் உட்கார்ந்து நலம் விசாரித்துப் போகிறதுதான் காதலா.. எனக்குன்னு வந்து வாய்த்தாயே..”

மைதிலி ரோசமாய் முறைத்தாள்..

“திட்டத்தான் என்னை வரச் சொன்னீர்களா..?”

“இல்லை கொஞ்சத்தான் வரச் சொன்னேனா என்ன செய்யப் போகிறாய்..? கிட்ட வந்து கொஞ்சப் போகிறாயா..?”

“ஸ்ஸ்.. கோவிலில் வந்து என்ன பேச்சு இது..? அது தான் தினமும் ஆபிசில் பார்த்துக்கிறோமே.. செல்போனில் வேறு மணிக்கணக்கில் பேசியாகிறது போதாதா..?”

“எனக்குப் போதாது.. சைட் அடிச்சு சலித்துப் போச்சு..”

“என்னது.. சலித்து விட்டதா..?” என்று மைதிலி முறைக்க,

“அடடா.. சைட் அடித்துக் கிட்டே சும்மா கையைக் கட்டிக்கிட்டு இருப்பது சலித்து விட்டதுன்னு சொன்னேன்டி..” என்று நந்தகுமாரன் சிரித்தான்..

“அப்படின்னா..” என்று மைதிலி நகர்ந்து அமர்ந்து கொள்ள,

“எதுக்குடி அவ்வளவு தள்ளிப்போய் உட்காருகிறே..? அறிவு கெட்டவளே.. இது கோவில்டி.. நான் உன்னைக் கடித்துத் தின்று விடமாட்டேன்..” என்று நந்தகுமாரன் சிடுசிடுத்தான்..

பழையபடி மைதிலி அருகில் வர,

“ஏன் இப்ப வருகிறாய்.. எழுந்து போவதுதானே..” என்று எரிந்து விழுந்தான்..

“இப்ப என்னை என்னதான் செய்யச் சொல்கிறீர்கள்..?” என்று மைதிலி கேட்டாள்..

“என் கையைக் கட்டவிழ்த்து விடுன்னு சொல்றேன்..”

“என்னது..?” என்று அவள் விழிக்க,

“உனக்கு நல்லதே நினைவில் வராதா.. மர மண்டைகையைக் கட்டவிழ்த்து விட்டால் தானே அது உன்கைபிடிக்கும்..?” என்றான் அவன்..

மைதிலி மௌனமானாள்.. நந்தகுமாரன் அவள் முகவாயைத் தொட்டு நிமிர்த்தி அவன் முகம் பார்த்துக் கேட்டான்..

“உன் வீட்டில் என்னைப் பற்றிப் பேசக் கூடாதா..?”

“கொஞ்ச நாள் பொறுங்கள்..” என்றாள் அவள் கெஞ்சுதலாய்..

“சரி.. உனக்குப் பேசப் பயமாக இருந்தால் என்னிடம் பிரச்னையை விட்டுவிடு.. நான் என் வீட்டில் சொல்லி முறைப்படி உன்னைப் பெண் கேட்டு வருகிறேன்..” என்று அவன் கூற,

“ஐயையோ.. வேண்டாம்.. அப்படிச் செய்து விடாதீர்கள்..” என்று அவள் அலறினாள்..

அவன் முகம் கல்லைப்போல் கடினமானது.

“ச்சு..” என்று அலுப்புடன் கூறியவன் எழ முயன்றான்.. மைதிலி அவன் கரம் பிடித்து மன்றாடினாள்..

“கோபமாய் போகாதீர்கள்.. நான் செத்து விடுவேன்..”

“இதில் ஒன்னும் குறைச்சல் இல்லை.. இங்கே பார் மைதிலி.. நிலைமை கை மீறிப் போய் விடுவதற்கு முன்னால் ஏதாவது செய்ய வேண்டும்.. அப்புறம் நிலைமை மோசமான பின்னால் அழுது, புலம்பினால் பயனிருக்காது.. பார்த்துக்கொள்..”

“இப்போது என்ன ஆகிவிட்டது..? கொஞ்ச நாள் பொறுங்கள் என்றுதானே கெஞ்சுகிறேன்.. எனக்காகக் காத்திருக்கக் கூடாது..?”

“காத்திருப்பேண்டி.. இந்த ஜென்மம் பூராவும் காத்திருப்பேன்.. உனக்குத் தைரியம் என்று ஒன்று வருவதாக இருந்தால்.. ஆனால் உனக்கு அது வரவே வராதுடி.. அப்புறம் ஏன் என்னைக் காத்திருக்கச் சொல்கிறாய்..?”

“இல்லைங்க.. இன்னும் சிறிது நாள் கழித்து..”

“கழித்து.. என்ன செய்யப் போகிறாய்..? நீயும் நானும் சந்தித்து இரண்டு வருடமாகிறது.. உன்னிடம் என் காதலைச் சொல்லி ஒரு வருடமாகிறது.. இந்த ஒரு வருடமாய் நீ காத்திருக்கச் சொல்லிக் கொண்டே இருக்கிறாய்..”

“நந்து.. இது வழக்கமாய் நீங்கள் பேசும் பேச்சில்லை..”

“போதும் மைதிலி.. என் பொறுமைக்கும் எல்லை இருக்கிறது.. மனதில் இருப்பதை வெளியில் சொல்ல முடியாத கோழைகள் காதலிக்கக் கூடாது..”

மைதிலியின் கன்னத்தில் கண்ணீர் முத்துக்கள் விழுந்து தெறித்தன.. நந்தகுமாரன் நெகிழ்ந்தான்.. அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் கைக்குட்டையை எடுத்து அவள் முகம் துடைத்து விட்டான்.

“ஆ, ஊன்னா அழுது சமாளிச்சுரு..” என்று அவன் கூற மைதிலி அவன் தோள் மேல் முகம் புதைத்தாள் இளகிப்போன் நந்தகுமாரன்..

“என்னைப் புரிஞ்சுக்க மைதிலி.. இத்தனை நாளா ஜமீன் வம்ச பொண்ணு, பெரிய தனக்காரர் பொண்ணுன்னு வெறும் வாயில்தான் என் அப்பா பேசிக்கிட்டு இருந்தார்.. இப்போது நிஜமாகவே ஒரு பெரிய இடத்துப் பெண்.. என்னை வலை வீசிப் பிடிப்பேன்னு சபதம் போட்டவள்.. என் வீட்டிற்கே வந்து எனக்கு வலை வீச முகாம் போடப் போகிறாள்.. அதற்கு என் அப்பா உதவி செய்யப் போகிறார்..” என்றான்..

“என்னது வலைவீச வருகிறாளா.. யார் அவள்..?”

“அவள்தான் மேனகா..!”

விசுவாமித்திரரை அன்று மயக்கிய மேனகை போல் இன்று நந்தகுமாரனை மயக்க எண்ணி வருகை புரிய இருந்த இந்த மேனகையைப் பற்றி நந்தகுமாரன் கதை கதையாய் கூறினான்.. விழி விரியச் செவி கொதிக்க கேட்ட மைதிலியின் மைவிழிகள் சிவந்தன.. அந்த நந்தகுமாரனைச் சுற்றிய கோபிகைகள் போல் இந்த நந்தகுமாரனைச் சுற்ற ஓர் மேனகை இருக்கிறாளா..? அவளது நந்தகுமாரன் அவளுக்கு மட்டும் சொந்தம் இல்லையா..?

அலை பாய்ந்தது மைதிலியின் அபலை நெஞ்சம்.

0Shares

Reviews — Kadalin Pon Vethiyle / காதலின் பொன் வீதியிலே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link