Chapter 08
“ஏண்டி சோலையம்மா..! ஆலத்தித் தட்டு எங்கே.. கரைச்சுத் தயாரா வை.. அந்தப் பொண்ணு ஏர்போர்ட்டி லிருந்து கிளம்பியாச்சாம்.. இப்ப வந்திரும்..”
மலையப்பன் சூழ்நிலையை தூள் பரத்திக் கொண்டிருக்க நந்தகுமாரன் மாடி வரண்டாவின் கைப்பிடிச் சுவரில் கைவைத்துக் கீழே பார்த்தான்.. வாசலில் மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.. பெரிய கோலம் போட்டு செம்மண் கரையால் அழகுக்கு அழகு சேர்க்கப்பட்டிருந்தது.. பண்ணை வேலைக்கு இருக்கும் பெண்கள் வயல்வெளியில் வேலை செய்வதை விட்டு விட்டு வீட்டுக்குள்ளே உள்ளேயும் வெளியேயும் போய் வந்து வேலை செய்து கொண்டிருந்தார்கள்.. பின்னால் அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.. சோலையம்மாள் அவசரமாய் மேலே வந்து அவன் அறைக்குப் பக்கத்தில் பூட்டிக் கிடந்த அறையைத் திறந்து கொண்டு இருந்தாள்..
“அம்மா இங்கே வாங்க..”
“என்னப்பா..” என்றபடி அவள் அருகில் வந்தாள்..
“என்னம்மா.. இங்கே என்ன கூத்து நடக்குது..?”
“கூத்துத்தான்.. வேறு என்னன்னு சொல்ல.. உங்க அப்பாதான் வீட்டை ரெண்டு நாளா ரெண்டு பண்ணிக்கிட்டு இருக்கார்.. அவர் போடுகிற சத்தத்தில் கையும் ஓடமாட்டேங்குது.. காலும் ஓட மாட்டேங்குது..” அவள் அலுத்துக் கொண்டாள்..
“எதுக்கு இந்த ஆர்ப்பாட்டமாம்..?”
“வேற என்ன.. அதுதான் போன வாரம் சொன்னாரே.. அந்த தோப்பூர் ஜமீன் வீட்டுப் பொண்ணு மேனகா இங்கே நம்ம வீட்டில் வந்து கொஞ்ச நாள் தங்கப் போகுதுன்னு.. அந்தப் பொண்ணு ஏரோப்பிளேன்ல கிளம்பி வந்து திருச்சியில் இறங்கிருச்சாம்.. கொஞ்ச நேரத்தில் இங்கே வந்திருமாம்..”
“வரட்டும்.. வந்தால் ஒரு விருந்தாளியை வரவேற்பது போல் வரவேற்பதை விட்டுவிட்டு.. இது என்ன கண்றாவிம்மா.. தோரணம் கட்டி, ஆலத்தி எடுத்துன்னு.. நாலு பேர் பார்த்தால் சிரிக்கப் போறாங்க..”
“சிரிக்க மாட்டாங்கடி.. துரைசிங்கத்துக்கு இப்பேர் பட்ட அதிர்ஷ்டமான்னு மூக்கில் விரலை வைப்பாங்க.. அவனவன் அந்தப் பொண்ணு காலடி தன் வீட்டில் படாதான்னு ஏங்கிக்கிட்டு இருக்கான்.. வாடி.. இந்த ரூமில் எல்லாம் சரியாயிருக்கான்னு ஒரு தடவை நான் பார்க்கணும்..” என்றார் அங்கே வந்த துரைசிங்கம்..
“இருங்க.. இருங்க.. அந்த ரூமில் என்ன பண்றீங்க..?”
“ஏன்..? இந்த ரூமில்தான் அந்தப் பெண் தங்கப் போகுது.. கட்டில் மெத்தை பீரோவெல்லாம் புதுசா வாங்கிப் போட்டாச்சு.. ரூமுக்குள்ளேயே பாத்ரூம் கட்டியாச்சு.. ஜன்னல், வாசல் கதவுகளுக்கு புது திரைச்சீலை வாங்கிப் போட்டாச்சு..”
“அட்டாச்சுடு பாத்ரூமே கட்டியாச்சா..? ஏம்மா ஒரு நாள் கூத்துக்கு தலையை மொட்டையடிச்ச கதையா.. ஒரு நாளோ, இரண்டு நாளோ தங்கிவிட்டுப் போறதுக்கு வீட்டையே மாற்றணுமா..? இந்த வேலையெல்லாம் எனக்குத் தெரியாமல் எப்போது நடந்தது..?”
“எல்லாம் நீ ஆபிஸ் போன பின்னால் தான்ப்பா..” என்றாள் சோலையம்மாள் ஆற்றாமையுடன்.. அவளுக்கு இந்த தடபுடல் பிடிக்கவில்லை.. கிராமத்தில் பிறந்து, வளர்ந்து, வாழ்க்கைப்பட்ட பெரிய வீட்டின் எஜமானி அவள்.. தன் ஒரே மகனுக்கு தழையத் தழைய சேலை கட்டி, நீண்ட பின்னல் போட்டு, பூச்சூடி, நெற்றியில் மங்கலகரமாய் பொட்டிட்டு வீட்டுக்கு விளக்கேற்ற வரும் மகாலட்சுமி போன்ற பெண்ணை மனைவியாக்க விருப்பப்பட்டாள்.. வீட்டிற்கு வரும் மருமகள் மாமியார் என்று பயம் கொள்ளாவிட்டாலும், கணவனைப் பெற்று வளர்த்த தாய் என்ற மரியாதையைக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாள். மேனகா ஓர் அல்ட்ரா மாடர்ன் பெண்.. கூந்தலை வெட்டி விரித்துப் போட்டுக் கொண்டு, உதட்டிலும், முகத்திலும், கண் இமைகளிலும் சாயம் பூசிக் கொண்டு, ஒரு ஜீன்ஸ் பேன்ட்டும், பனியனுமாக வலம் வருகிறவள்.. அவளை தன் மருமகளாய் நினைத்துப் பார்க்கவே பயமாய் இருந்தது அவளுக்கு.. ‘செல்வம்தான் போதிய அளவு இருக்கிறதே..’ என்ற எண்ணம் அவளுக்கு.. பணத்திற்கு ஆசைப்பட்டு பொருந்தாத் திருமணம் பண்ணத் தன் கணவர் ஆசைப்படுவது அவளுக்குப் பிடிக்கவில்லை..
“மேனகா ஒன்னும் ஒருநாள், இரண்டு நாள் இருந்து விட்டுப் போக வரவில்லைன்னு சொல்லுடி.. நிதானமாய் ஆற அமர இரண்டு மூன்று மாதம் நம்ம வீட்டில் தங்கி நம்ம பக்கமெல்லாம் சுற்றிப் பார்த்து விட்டுத்தான் போகப் போகுதுன்னு சொல்லுடி..” என்றார் துரைசிங்கம் தன் முகத்தை மறைத்த மீசையை முறுக்கிக் கொண்டு..
“என்னது.. இரண்டு, மூன்று மாதமா..? ஏம்மா.. உங்களுக்கெல்லாம் அறிவுங்கிறது இருக்கா, இல்லையா..? வயதுப் பெண்ணை நம் வீட்டில் தங்க வைக்கிறதுதான் வைக்கிறீர்கள்.. கீழே உங்கள் ரூம் பக்கத்தில் தங்க வைக்காமல் மாடியில், என் ரூம் பக்கத்தில் தங்க வைத்துக்கிட்டு.. சே..! இதெல்லாம் நல்லா இல்லைம்மா.. கீழேதான் அட்டாச்டு பாத்ரூம் வசதியோடு இன்னொரு ரூம் இருக்குதே.. அதை விட்டுவிட்டு மாடி ரூமை இடிச்சு புதுசா பாத்ரூம் கட்டி.. என்ன திட்டம் நடக்குதும்மா..”
“எனக்கு என்னப்பா தெரியும்..? எல்லாம் என்னைக் கேட்டுக்கிட்டா நடக்குது..? நான் சொன்னால்தான் என் சொல் இந்த வீட்டில் எடுபடுமா..?”
“என்னடி.. மகன்கூட சேர்ந்துக்கிட்டு நாடகம் ஆடுகிறாயா..? புருசன்கிற பயம் பத்து இல்லாமல் என் எதிரேயே அவன்கூட சேர்ந்துக்கிட்டு ஜால்ராவா தட்டுறே..?” துரைசிங்கம் கண்களை உருட்டி விழிக்க,
“அம்மாவை விரட்டுகிற வேலையெல்லாம் வேண்டாம்.. என் கண் முன்னாலேயே இவ்வளவு பேசுகிறவர் இல்லாதபோது எப்படி அரட்டுவீங்க..” என்று தகப்பனாரிடம் நேரடியாய் மோதினான் நந்தகுமாரன்.
“டேய்.. உனக்கு அம்மாவாகிறதுக்கு முன்னாடியே அவள் என் பெண்டாட்டி ஆகிட்டா.. என் பெண்டாட்டியை நான் திட்டுவேன்.. அடிப்பேன்.. நீ என்னடா கேட்கிறது..”
“நான் கேட்காமல் வேறு யார் கேட்பார்கள்..? வழியில் போகிற வழிப்போக்கனா வந்து கேட்பான்..? உங்க பாணியிலேயே பதில் சொன்னால்தான் நீங்க அடங்குவீங்க.. நான் பிறக்கிற வரைக்கும் அவங்க உங்க மனைவி மட்டும்தான்.. நான் பிறந்த பின்னர் எனக்கு அம்மா.. அப்புறம்தான் உங்க மனைவி.. என் அம்மாவைத் திட்டுவது என் அப்பாவாக இருந்தாலும் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்..” என்ற நந்தகுமாரன் ‘உனக்கு மட்டும்தான் மீசையிருக்கா எனக்கு இல்லையா..?’ என்பது போல் தன் பெரிய மீசையைத் தடவிக் கொண்டான்..
சோலையைம்மாளுக்கு பெருமை பிடிபடவில்லை.. ஒரு வகையில் இது பெண்களின் அடிமை மனோபாவமாக இருக்கலாம்.. ஒரு பெண் ஆணைச் சார்ந்திருக்க விதிக் கப்பட்டவள் என்று காலம் காலமாய் வரும் மரபு சார்ந்த எண்ணங்களின் அறிவியல் பாதிப்பாக இருக்கலாம்.. மனுநீதியில் சொன்ன,
‘ஒரு பெண் இளமையில் தந்தை அல்லது சகோதரனைச் சார்ந்திருக்க வேண்டும்..
மணமான பின் கணவனைச் சார்ந்திருக்க வேண்டும்.
வயோதிக காலத்தில் மகனைச் சார்ந்திருக்க வேண்டும்..’ என்ற வார்த்தைகள் மனு சாஸ்திரம் அறியாத இந்தியக் கிராமப் பெண்களிடம் எப்படிப் போய்ச் சேர்ந்தது..? உடலாலோ, மனதாலோ பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல.. ஆயினும் மனுவின் கூற்றுப் படிதான் அவர்கள் இன்றளவும் வாழ்கிறார்கள் என்பதே உண்மை.. அது வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போகும் இல்லத்தரசியாக இருந்தாலும் பட்டம் படித்து வேலைக்குச் செல்லும் பெண்ணாக இருந்தாலும் மனதில் இந்த நியதிக்கு கட்டுப்பட்டே இந்தியப் பெண்கள் இருக்கிறார்கள்..
அதனால்தான் தன் கணவனிடமிருந்து தன்னைக் காப்பாற்றுவது மகன் என்பதில் சோலையம்மாளுக்கும் பெருமை.. சட்டப்படி திருமண வயது வந்தும் சுயமாய் தன் காலில் நின்று அரசாங்க வேலை பார்த்து சம்பாதித்தும் தன் தாய், தந்தை, தனயன் பேச்சை மீறி வீட்டுப் படி தாண்டி தான் காதலித்தவனை கரம் பிடிக்க மைதிலியாலும் முடியவில்லை.. அவர்களை பிணைத்திருக்கும் தளைகளை உதறச் சொன்னால் சொன்னவர்களை எரித்து விடும் தன்மை கொண்டவர்கள் நம் பெண்கள்.. கட்டுப்பாட்டில் அடங்குவதுதான் அவர்களுக்கு சந்தோசம்.. காவல் மீறாததில்தான் அவர்களுக்கு மகிழ்ச்சி.. இது பெண்ணடிமைத் தனமா..? அடிமைத்தனம் என்று நினைத்தால் அது அப்படித்தான்.. பாதுகாப்பு என்று நினைத்தால் அது பாதுகாப்புத்தான்.. எதுவும் நம் நினைவில்தான்..
கீழே சப்தம் கேட்டதும் சிந்தனை கலைந்த நந்தகுமாரன் எட்டிப் பார்த்தான்.. பகட்டான வெளிநாட்டுக் கார் ஒன்று வந்து நின்றது.. வெள்ளைச் சீருடை அணிந்த டிரைவர் வந்து கதவைத் திறந்துவிட மேனகா இறங்கினாள்.. பிங்க் கலர் டாப்ஸும், பிரௌன் கலர் ஜீன்ஸும் அணிந்திருந்தாள்.. கழுத்தில், காதுகளில், கைகளில் வைரம் ஒளிர்ந்தது.. விரிந்த கூந்தல் காற்றில் அலைபாய்ந்தது.. அவளது ஒவ்வொரு அசைவிலும் அழகு தெறித்தது..
உள்ளே அவள் நுழையும் போது பண்ணை வேலை செய்யும் பெண் ஒருத்தி வந்து ஆரத்தி எடுத்தாள்.. அலட்சியமாய் அந்தத் தட்டில் ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றைப் போட்டு விட்டு அவள் உள்ளே நுழைய அதிர்ச்சியில் கண்விரிய அந்தப் பெண் மயக்கம் போடும் நிலைக்கே போய் விட்டாள்.. மற்ற பெண்கள் எல்லோரும் பொறாமையில் வெந்து போய் விட்டனர்..
“ராக்காயிக்கு வந்த அதிர்ஷ்டத்தைப் பார்த்தியாடி.. ஆயிரம் ரூபாய் நோட்டை கண்ணிலயாவது பார்த்திருப் பாளா..?”
“ஏன் நீ தினமும் அந்த நோட்டில்தான் புரள்கிறயா..? ஏண்டி என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறே..”
“ஹூம்.. நான்தான் ஆலத்தி கரைச்சேன்.. அம்மா உள்ளே கூப்பிட்டாங்கன்னு ஒரு நிமிசம் உள்ளே போனேன் அவ முந்திக்கிட்டா..”
பேச்சுக் குரல்கள் கலவையாய் ஒலிக்க மேனகாவின் பெட்டிகளைத் தூக்க போட்டா போட்டி நடந்தது.. சோலையம்மாள் தலையில் அடித்துக் கொண்டு அவர்களை அதட்ட ஆளுக்கு ஒரு பெட்டியைத் தூக்கினார்கள்.. அரச குமாரியின் தோரணையுடன் உள்ளே வந்த மேனகாவைக் கண்டதும்,
“வாம்மா, பிரயாணம் சௌகர்யமா இருந்துச்சா..” என்று பண்பாட்டின் நிமித்தம் சோலையம்மாள் வினவினாள்..
“ம்ம்..” என்று முகத்தைப் பார்க்காமல் கூறியவள் துரைசிங்கத்தைப் பார்த்து.. “அங்கிள்.. என் ரூம் எங்கே..?” என்று கேட்க சோலையம்மாளின் முகம் சுருங்கி விட்டது.. துரைசிங்கம் வாயெல்லாம் பல்லாக,
“மாடியில் நம்ம நந்துவின் ரூமிற்குப் பக்கத்து ரூம் தாம்மா..” என்று கூற மேனகாவின் முகம் மலர்ந்தது..
“வெல்டன் அங்கிள்.. என் மனம் புரிந்து ஏற்பாடு பண்ணியிருக்கிறீர்கள்..” என்று அவள் கூற,
“முதலில் எல்லாம் மரியாதையாகத்தான் இருந்தார்.. இப்போது கொஞ்ச நாளாகத்தான் இந்த ஏற்பாடு செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறார்..” என்ற பதில் கேட்க நிமிர்ந்து பார்த்தாள்.. நந்தகுமாரன் மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தான்.. மேனகா சொக்கிப் போனாள்.. அவளது பார்வையைக் கவனிக்காதவன் போல் தாயின் பக்கம் திரும்பி,
“அம்மா ஆபிஸ் போய்விட்டு வருகிறேன்..” என்று கூறினான்..
“சாப்பிடாமலா..?” என்று சேலையம்மாள் பதற..
“வேண்டாம்.. பசியில்லை..” என்றவாறு அவன் வெளியே விரைந்தான்..
“ஐயா.. மதியச் சாப்பாட்டுக் கேரியரை எடுத்திட்டுப் போ ராசா..” என்ற அவளது குரல் காற்றில் கரைய அவன் தன் வண்டியை எடுத்துக் கொண்டு போய் விட்டான்..
மேனகாவின் முகத்தில் ஏமாற்றம் அப்பிக் கொண்டது.. அதைக் கவனித்த துரைசிங்கம் மனைவியிடம் கூறுவது போல்,
“ஏன்டி.. ஆபிசுக்குப் போனால் சாயந்திரம் வந்துவிட மாட்டானா..? ஒரு எட்டு மணி நேரம்.. குளிச்சு சாப்பிட்டு விட்டு ஒரு தூக்கம் போட்டு எழுந்தால் சாயந்திரக் காபிக்கு வந்து நிற்கப் போகிறான்.. இதுக்குப் போய் வருத்தப்படலாமா..?” என்றார்..
கணவனின் கணக்குப் புரிந்த சோலையம்மாள் முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டு உள்ளே போக மேனகா முகத்தில் வெளிச்சம் பரவ மாடியேறினாள்..
அலுவலகம் வந்த நந்தகுமாரன் கோபம் தணியாத வனாய் விறுவிறுவென நடந்து அறைக்குள் சென்று மறைய அவன் வரவுக்காக காத்திருந்து ஓர் பார்வைக்காக ஏங்கிக் கிடந்த மைதிலி உடைந்து போனாள்.. திரும்பி அவன் ஏன் அவளை ஒரு முறை கூடப் பார்க்கவில்லை.. மனம் துடித்தவளுக்கு அந்த நினைவு வந்தது.. போனில் கேட்டால் என்ன..? செல்போனில் அவன் எண்களை அழுத்தினாள்.. மறுமுனையில், “சொல்லு..” என்றான் நந்தகுமாரன்..
“என்ன ஆச்சு..? உங்கள் குரலே சரியில்லையே..”
“என்ன ஆகணும்..? அந்த மேனகா வீட்டிற்கு வந்து விட்டாள்.. என் ரூமிற்குப் பக்கத்து ரூமிலேயே இன்னும் நான்கு மாதங்கள் தங்கப் போகிறாள்.. போதுமா..? இதைக் கேட்டதும் உனக்கு நிம்மதியாய் இருக்குமே..”
“நந்து.. நான்..”
“பேசாதே.. நான் என்ன கேட்டேன்.. ரெஜிஸ்ட்ரர் ஆபிசில் ஒரு கையெழுத்து.. தனிக்குடித்தனம் போய் விடலாம்.. நிம்மதியாய் இருக்கலாம்ன்னு தானே கேட்டேன்.. செய்தாயா..? இப்போப் பார்… உன் பயந்தாங்குளித் தனத்தால் நான் ஒரு பெண்ணுக்கு பயந்து சாப்பிடாமல் ஓடி வர வேண்டியிருக்கு..”
“சாப்பிடவில்லையா..?”
“ஆமாம்.. ரொம்பக் கரிசனம் காட்டுவது போல் நடிக்காதே..”
அவன் போனை துண்டித்துவிட மைதிலி அப்படியே அசைவின்றி அமர்ந்து விட்டாள்.. அவளையே பார்த்துக் கொண்டிருந்த டேவிட்,
“என்ன மைதிலி.. உங்களுக்கும் நந்தகுமாரன் சாருக்கும் மனஸ்தாபமா..?” என்று கேட்டான்..
மைதிலியின் கண்கள் கலங்கின..
“என்னத்தைச் சொல்ல டேவிட் சார்.. என்னைப் போன்ற கோழையை அவர் காதலித்திருக்கக் கூடாது.. அவரைப் போன்ற ஆண் மகனை என் காதலால் நான் கட்டிப் போட்டிருக்கக் கூடாது..”
“காதலில் தடைகள் வருவது சகஜம் மைதிலி.. தடைகளைக் கடப்பதுதான் காதலுக்குப் பெருமை.. இப்ப என்ன ஆச்சு..? நீங்கள் உங்கள் வீட்டில் சொல்லி விட்டீர்களா..? அவர்கள் சம்மதிக்கவில்லையா..?”
“சொன்னால்தானே..? அவர்கள் மனம் தெரிந்தபின் எப்படிச் சொல்வது..? நிச்சயம் சம்மதிக்க மாட்டார்கள் என்று தெரிந்த பின்னால் பேசிப் பயனென்ன..?”
“சம்மதிக்க மாட்டார்கள் என்று தெரிந்த பின்னாலும் காதலிக்கலாமா..?”
மைதிலி டேவிட்டை நிமிர்ந்து பார்த்தாள்.. அவள் விழிகளில் நீர் துளிர்த்தது..
“ம்ம்.. நல்ல கேள்விதான்.. ஆனால் டேவிட் சார்.. காதல் திட்டமிட்டு உருவாகிறது அல்ல.. அப்படித் திட்டமிட்டு உருவாகினால் அது காதல் அல்ல.. ஒரு வகையில் அது ஆக்ஸிடெண்ட்.. எதிர்பாராத விபத்து.. அது நிகழ்வது தானாகத்தான்.. திட்டமிட்டு நடந்தால் அது இன்ஸிடெண்ட்.. என் வீட்டில் காதலை விரும்ப மாட்டார்கள் என்பதை அறிந்தவள் நான்.. விலகித்தான் போனேன்.. ஆனால் காதல் என்னைத் தேடி வந்து விட்டது.. நான் என்ன செய்ய..?”
“இப்படிச் சொன்னால் எப்படி மைதிலி.. ஏதாவது செய்துதானே ஆக வேண்டும்..” இயல்பாய் கூறிய டேவிட் வேலையைப் பார்க்க மைதிலி ஓர் முடிவிற்கு வந்தாள்..
Reviews — Kadalin Pon Vethiyle / காதலின் பொன் வீதியிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.