Chapter 10
மேனகா நந்தகுமாரன் தன் விரல் பற்றியதும் ஆச்சர்யப்படவில்லை.. எப்படி மைதிலியின் வருகையை அவள் எதிர்பார்த்தாளோ அதே போல் அவள் வந்ததும் தன்னைத் தொட்டுப் பேச அவன் முயல்வான் என்பதையும் எதிர்பார்த்தாள்.. எனவே மனதிற்குள் நகைத்துக் கொண்டாள்.. ஒரு பெண்ணின் பொறாமையைத் தூண்டி விட இன்னொரு பெண்ணை பயன்படுத்திக் கொள்ளும் அவனது புத்திசாலித்தனத்தை எண்ணியபடி கிடைத்த சந்தர்ப்பத்தை விடாதவளாய் அவன் தோள் மேல் தலை சாய்த்து பின்னிப் பிணைந்து கொண்டாள்.. மைதிலியின் மேனி நடுங்கவே ஆரம்பித்து விட்டது.. பரபரப்பாய் தன் செல்போனை எடுத்து அவனின் நம்பர்களை அழுத்தினாள்..
“ஹலோ..” என்றான் முன்னே சென்று கொண்டிருந்த நந்தகுமாரன்,
“ஹலோவா.. ஏன் என் நம்பரைப் பார்க்க வில்லையா..? இல்லை இது யாருடைய நம்பர்ன்னு தெரியவில்லையா..?”
“நான் கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன்..”
“தெரியுமே.. நீங்கள் பிஸியாக இருக்கும் லட்சணத்தைப் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன்..”
“எங்கே.. நீ இங்கே வந்திருக்கிறாயா..?” என்று ஒன்றும் தெரியாததுபோல் நந்தகுமாரன் வினவ,
“முதலில் அவளை விட்டுவிட்டு இங்கே வாங்க.. உங்களிடம் பேச வேண்டும்..”
“எங்கே வர..?”
“ம்ம்.. திரும்பிப் பாருங்கள் தெரியும்..”
நந்தகுமாரன் செல்போனை அணைத்துவிட்டுச் சிரித்துக் கொண்டான்..
“மேனகா.. நீங்கள் கொஞ்சம் இங்கேயே உட்கார்ந்து வெயிட் பண்ணுங்கள்.. எனக்கு ஒரு வேலையிருக்கிறது.”
“எது உங்கள் காதலியைச் சமாதானப்படுத்தும் வேலையா..?”
“உங்களுக்குத்தான் உடம்பெல்லாம் மூளையாயிற்றே.. கண்டு பிடித்து விட்டீர்கள்..”
“ஓ.கே.. நான் காத்திருக்கிறேன்.. ஆனால் உடனே வந்து விட வேண்டும்..”
“முயற்சி பண்ணுகிறேன்..”
நந்தகுமாரன் திரும்பி மைதிலியிடம் செல்ல சுற்றுச் சுவரில் சாய்ந்தபடி மேனகா கவனித்துக் கொண்டிருந்தாள்.
“என்னடி..? இன்னைக்கு நான் கூப்பிடாமலே என்னைப் பார்க்க வந்திருக்கிற..? என்ன புதுக் கரிசனம்..?”
“எனக்குப் புதிதாய் எதுவும் வந்து விடவில்லை.. உங்களுக்குத்தான் புதிதாய் வந்திருக்கிறது..” மைதிலியின் விழிகளில் நீர் தளும்பியது..
“ஏன் வரப்போவதை சொன்னேனே.. நீ தடுத்து நிறுத்துவதுதானே..”
“நான் தடுக்காவிட்டால் என்னை விட்டுப் போய் விடுவீர்களா..?”
“வேறு என்ன செய்வது..?”
“என்னது.. என்ன சொன்னீர்கள்..?”
“ஏண்டி.. தமிழில்தானே சொன்னேன்.. சும்மா புலம்பிக்கிட்டு..”
“நந்து.. நந்து..” மைதிலி குரல் தழுதழுக்க அவன் கரத்தைப் பிடித்துக் கொண்டாள்.. அவளைத் தொட்டதும் போட்டுக் கொண்டிருக்கும் வேடம் மறந்துவிட அவள் கையை இறுக்கிக் கொண்டான் அவன்..
“ஏண்டி என்னைப் படுத்துகிறாய்.. ஒரு வார்த்தை ‘இம்’மென்று சொன்னால் ஊர் அறிய என் பெண்டாட்டியாக்கிக் கொள்வேனே.. ஏன் இப்படி மறுகுகிறாய்.. உன் புருசனாக நானிருந்தால் மேனகா உறவு கொண்டாட வருவாளா..”
“கொஞ்ச நாள்.. கொஞ்ச நாள் பொறுங்கள் நந்து..”
“சட்..” அவளது கையை விட்டு விட்டு நகர்ந்து செல்ல அவன் யத்தனிக்க அவன் தோள் மேல் சாய்ந்து விசும்ப ஆரம்பித்து விட்டாள் மைதிலி..
“எனக்கு தைரியமில்லை என்பதற்காக நீங்கள் எனக்கு இல்லையென்று ஆவதா..? நான் தாங்க மாட்டேன் நந்து..”
நந்தகுமாரனின் கரங்கள் அவளைச் சுற்றி ஆதரவாய் அணைத்துக் கொண்டன.. சுற்றிலும் இருந்தவர்களை லட்சியம் செய்யாதவனாய்,
“இவ்வளவு காதலை மனசுக்குள் வைத்திருந்து என்னடி பிரயோசனம்.. அதை தக்க வைத்துக் கொள்ள மாட்டேன்கிறாயே..” என்றான்..
அவனது சட்டையில் முகம் துடைத்துக் கொண்ட மைதிலி..
“எனக்கு அந்த வித்தை தெரியவில்லை..” என்றாள்.
அவளது தலையில் “மண்டு” என்று குட்டிய நந்தகுமாரன்..
“குமார்” என்று மேனகா அழைக்கவும் திரும்பினான்.. அருகில் வந்து நின்று கொண்டு மைதிலியை அலட்சியமாகப் பார்த்தபடி,
“நேரமாகி விட்டது குமார்.. வாங்க போகலாம்..” என்றாள்..
“கொஞ்சம் பொறு மேனகா வருகிறேன்..”
“குமார்.. இங்கு என்னுடன் தான் வந்தீர்கள் என்பது நினைவிருக்கட்டும்…”
“அதனால் என்ன மேனகா.. இது மைதிலி.. மைதிலி.. இது மேனகா..”
அறிமுகப்படுத்தப்பட்ட இருவரும் ஒருவரிடம் ஒருவர் சம்பிரதாய “ஹலோ” கூடச் சொல்லிக் கொள்ள வில்லை..
“இப்போது இந்தப் பெண்ணும் நம்முடன் வருகிறதா குமார்.. இது உங்களுக்கும் எனக்குமான நேரம்..”
“நந்து.. நான் கிளம்புகிறேன்..”
“பொறு மைதிலி.. உன்னை வீட்டில் விட்டு விட்டுப் போகிறோம்..”
“என் காரிலா குமார்.. என்னிடம் கேட்க வேண்டாமா..? நான் உங்களிடம் தனியாகப் பேசிக் கொண்டே காரோட்ட நினைக்கிறேன்..”
“நந்து.. நான் உங்களுடன் வருவதாகக் கூறவில்லையே..”
“வெல்.. குமார்.. அந்தப் பெண்ணே சொல்லி விட்டது.. வாங்க போகலாம்..”
மேனகா நந்தகுமாரனை இழுத்துக் கொண்டு நடக்க மைதிலி பார்த்துக் கொண்டே நின்றாள்.. நந்தகுமாரன் அவளிடம் சிரித்துப் பேசிக் கொண்டு சென்றான்.. ஊடே ஓர் முறை கூட அவன் திரும்பிப் பார்க்கவில்லை.. தனியே படிகளில் இறங்கிய மைதிலிக்கு மனம் வலித்தது..
பின்னால் மைதிலி பார்த்துக் கொண்டு நிற்பதால் சிரித்துப் பேசினான் நந்தகுமாரன்.. ஆனால் சிரித்துக் கொண்டே மேனகாவிடம் என்ன பேசினான் என்பதை அறிந்திருந்தால் மைதிலி மனம் உடைந்திருக்க மாட்டாள்.. உற்சாகத்தில் துள்ளிக் குதித்திருப்பாள்.. நந்தகுமாரன் சிரித்தபடியே..
“இங்கே பாருங்கள் மேனகா.. நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.. நீங்கள் எனக்குத் தோழியாக இருக்கலாம்.. ஆனால் அதற்காக என் அம்மாவையோ, என் மைதிலியையோ உதாசீனமாய் பேச நான் அனுமதிக்க மாட்டேன்..” என்று கூறினான்..
“நான் உங்கள் அம்மாவைப் பற்றியோ, மைதிலியைப் பற்றியோ விமரிசனமே பண்ணவில்லையே.. அப்புறம் எப்படி உதாசீனம் செய்வேன்..?”
“நேற்று இரவு என் அம்மாவைப் பிடிக்கவில்லை யென்று என்னிடமே கூறவில்லையா..?”
“ஆமாம்.. அதுதானே உண்மை.. அதனால் சொன்னேன்..”
“இப்போது மைதிலியை.. ‘அது இது’ என்று அஃறிணையில் குறிப்பிட்டு இன்சல்ட் பண்ணவில்லையா..?”
“யு, நோ குமார்.. என் ஸ்டேட்ஸ் வேறு.. என் தகுதிக்கு மாதம் ஒரு கோடி சம்பாதிக்கிறவர்களே கிட்ட நின்று பேச முடியாது.. மைதிலி.. ஆப்டர் ஆல் அந்தப் பெண்.. உங்கள் காதலி என்பதற்காக என் காரில் எனக்குச் சமமாக உட்கார வைத்து நான் கூட்டிப் போவதா..?”
“நல்லது.. உன் குணம் இதுதான் மேனகா, உனக்கும், எனக்கும் எப்படி நட்பு இருக்க முடியும்..? மைதிலியைச் சொல்கிறாயே.. நான் மாதம் முப்பதாயிரம் மட்டும்தான் சம்பாதிப்பேன் என் அருகே வந்து ஏன் நின்று பேசுகிறாய்..?”
“தேங்க் யூ குமார்.. மை டியர்..” என்று மேனகா பரவசமாக இவள் ஏன் சம்பந்தம் இல்லாமல் உளறுகிறாள்..? என்று அவன் திகைத்தான்..
“குமார் என்னை ‘வா போ’ன்னு ஒருமையில் கூப்பிட்டு விட்டீர்கள்..? என்னிடம் நெருங்கி விட்டீர்கள்..” என்றாள் அவள் மகிழ்ச்சியாக..
“உன் தலை..” என்றான் அவன் எரிச்சலுடன்..
“நெருக்கமும் இல்லை ஒரு மண்ணும் இல்லை.. உனக்கெல்லாம் மரியாதை கொடுத்தால் அதை பண்பாடாக நினைக்க மாட்டாய்.. உன் பணத்துக்காக மரியாதை கொடுப்பதாக நினைப்பாய்.. அவ்வளவு பணத்திமிர் உனக்கு..” என்றான் நந்தகுமாரன் மைதிலி போய் விட்டாளா என்று திரும்பிப் பார்த்தபடி.. அவள் போய் விட்டடிருந்தாள்.. இனி இவளிடம் இழைய வேண்டிய அவசியமில்லை என்ற நிம்மதியுடன் அவன் நான்கு அடி விலகி நடந்தான்..
“என்ன குமார் விலகி நடக்கிறீர்கள்.. அந்தப் பெண் போய் விட்டதா..?”
நந்தகுமாரன் அவளை உஷ்ணமாய் முறைத்தான்..
“ஈஸி குமார்.. என் பொஸிஷனே வேற.. பணத்திமிர் என்று சொல்கிறீர்களே.. உங்கள் வீட்டு வேலையாள்கள் என் கண்ணசைவில் என் கட்டளைகளை நிறைவேற்று கிறார்களே எதற்காக..? என்னிடமிருக்கும் பணத்திற்காக நீங்கள் அவளைக் காதலிக்கிறீர்கள் என்பதற்காக, நான் உங்களைக் காதலிக்கிறேன் என்பதற்காக அந்த மைதிலி எனக்கு ஈடாக மாட்டாள், ஸோ என்னால் அவளுக்கெல்லாம் தேவையில்லாத இம்பார்ட்டன்ஸ் கொடுக்க முடியாது..”
“நானும் பணக்காரன்தான் மேனகா..”
“என்னளவு இல்லை குமார்..”
“அப்படியா..? நீ சொல்லும் அளவுக்கு அதிகமான பணத்திற்காக உன்னை மற்றவர்கள் உச்சியில் வைத்துப் பார்க்கலாம்..”
“மற்றவர்களிடம் ஏன் போகிறீர்கள் குமார்.. உங்கள் அப்பாவே என்னை உயர வைத்து அண்ணாந்து பார்த்துத் தான் பேசுகிறார்..”
“உன் பணத்திற்காக அல்ல.. உன் ஜமீன் பரம்பரை என்ற மோகத்திற்காக.. என் அப்பாவை பழம் பெருமை மோகப்பேய் பிடித்து ஆட்டுகிறது.. உனக்கு ஒரு சவால் விடுகிறேன் மேனகா.. உன் பணப் பெருமையையும் பரம்பரைப் பெருமையையும் என் அம்மாவை மதிக்க வைத்து விடு பார்ப்போம்..”
“அதனால்தான் அவர்களை எனக்குப் பிடிக்க வில்லை..”
“நானும்தான் உன் பணத்திமிரை வெறுக்கிறேன்.. என்னை நீ வெறுக்கக்கூடாதா..?” கலகலவென்று நகைத்தாள் மேனகா..
“என்னைப் போன்ற ஓர் பெண்ணிடம் நீ என்னை விரும்பக் கூடாதான்னு தான் கெஞ்சுவார்கள்.. நீங்கள் இதிலும் வித்தியாசமானவர்தான்..”
பேசிக் கொண்டே கீழே இறங்கி வந்து விட்டிருந்தார்கள்.. மேனகா அவனுக்காக கார் கதவைத் திறந்துவிட அதை மூடியவன்..
“நீ போ மேனகா.. நான் வந்து கொள்கிறேன்..” என்றான்..
“இதற்கு என்ன அர்த்தம் குமார்.. நீங்கள் என்னுடன் இந்த மாலை நேரத்தை செலவழிப்பதாக வாக்குக் கொடுத்திருந்தீர்கள்..”
“என் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன்.. உனக்கு உச்சிப் பிள்ளையார் கோவிலைச் சுற்றிக் காண்பித்து விட்டேன்.. மாலை முடிந்து இரவும் வந்து விட்டது..”
“இரவு நேரத்தில் தனியாக என்னைப் போகச் சொல்கிறீர்களா..?”
“நீ ஆயிரம் பேருக்குச் சமம் மேனகா.. உனக்கு யாரும் சமம் இல்லை.. நீ தனியாக மாண்புமிகு சென்னை மாநகரிலேயே நள்ளிரவு வரை சுற்றுவாயாமே.. இது சாதாரண வேம்பூர் கிராமம் திருச்சியிலிருந்து அரை மணி நேரப் பயணம்தான்.. அத்தோடு.. நாங்கள் ஜமீன் பரம்பரை இல்லையே தவிர எங்களுக்கென்று வேம்பூரில் ஒரு மதிப்பு மரியாதை இருக்கிறது.. எங்கள் வீட்டு விருந்தாளிக்கு எந்தத் தொந்தரவும் வராது..”
“அந்தப் பெண்ணை என் காரில் ஏற்றிக் கொள்ளாததால் நீங்கள் என்னுடன் வர மறுக்கிறீர்கள்.. இது நியாயமில்லை குமார்..”
“நியாய அநியாயத்தைப் பற்றி நீ பேசக்கூடாது மேனகா.. நான் உன்னைக் காதலிக்கவில்லை என்று தெரிந்திருந்தும் மைதிலியைத்தான் காதலிக்கிறேன் என்று தெரிந்திருந்தும் என் வீட்டில் முற்றுகையிட்டது போல் முகாமிட்டு விட்டு நீ பேசுகிறாய்..? என் மைதிலியை என் முன்னாடியே டீஸ் பண்ண உனக்கு என்ன தைரியம்..?”
“… ஹா.. அவளை வெறுப்பேற்ற என்னோடு கொஞ்சிக் குழாவுவது போல் நடித்தது யார்..? நீங்கள் தானே..?”
“ஏய்ய்.. காதலைப் பற்றி உனக்கு என்ன தெரியும்..? அவளைக் கடுப்பேற்ற நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்.. ஆனால் காதலிப்பது அவளை மட்டும் தான்.. நடிப்பு உண்மையாகி விடாது மேனகா..”
“நானும் உங்களைக் காதலிக்கிறேன் குமார்..”
“ஆனால் நான் உன்னைக் காதலிக்கவில்லை.. மனதளவில் மைதிலியை என் மனைவியாகவே நினைக்கிறேன்.. ஆகையால்.. நீ அவளை இன்சல்ட் பண்ணுவதை நான் அனுமதிக்க முடியாது.. இந்தக் காரில் அவளை ஏற்றிச் செல்ல நீ மறுத்ததற்காக நான் உன்னுடைன் வர மறுக்கவில்லை மேனகா, இதில் போகும் போது என்னுடன் தனியாகப் பேசிக் கொண்டே காரோட்டப் போவதாக நீ சொன்னபோது அவள் நெஞ்சம் எப்படித் துடித்திருக்கும் என்பதை நான் அறிவேன்.. அவள் இரவெல்லாம் அதை நினைத்து மறுகப் போகிறாள்.. என்னால் உன்னோடு தனியாக காரில் வர முடியாது.”
நந்தகுமாரன் அங்கே நின்ற ஆட்டோ ஒன்றில் ஏறிச் சென்றுவிட மேனகா அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்..
‘காலையில் ஒருத்தி.. மதியம் ஒருத்தி.. மாலையில் ஒருத்தி.. இரவில் ஒருத்தி.. என்று சட்டையை மாற்றுவது போல் காதலிகளை மாற்றும் ஆண்களைத் தான் நான் சென்னையில் பார்த்திருக்கிறேன்.. காதலில் கூட கற்போடு இருக்க நினைக்கும் நீ தான் உண்மையான காதலன்.. நீ மட்டும் என்னைக் காதலித்தால்..?’
ஒரு பெருமூச்சுடன் காரைச் செலுத்த ஆரம்பித்தாள் அவள்..
பஸ் ஸ்டாப்பில் இறங்கிக் கொண்ட நந்தகுமாரன் தன் ஊருக்குச் செல்லும் பஸ்ஸில் ஏறிக் கொண்டான்.. ஜன்னலோரம் அமர்ந்தான்.. இரவு நேரக் காற்று இதமாக உடலைத் தொட்டு விளையாடிச் சென்றது.. செல்போனை எடுத்து மைதிலியின் போன் நம்பர்களை அழுத்தினான்.. பின்னர் அணைத்து விட்டான்.. இரவு நேரத்தில் அவளுக்கு போன் பண்ணுவது தவறு.. அவள் குடும்பத்தினர் முன் அவளுக்கு சங்கடத்தை உண்டு பண்ணக்கூடாது என்று நினைத்தவனாய் கண்களை மூடிக் கொண்டான்.. ஊர் வர இறங்கி வீட்டிற்கு வந்தான்.
“ஏண்டா என் மானத்தை வாங்கணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு அலையறயா..?” என்று பாய்ந்தார் துரைசிங்கம்.. அன்னையை கேள்வியாய் நோக்கினான்.
“நீ காரில் வராமல் பஸ்ஸில் வருகிறாயாம்டா.. அதைத்தான் சொல்கிறார்..”
“பஸ்ஸில் வருகிறவர்களுக்கெல்லாம் மரியாதை நிறைய இருக்கிறது..” என்று கூறியவாறு அன்னையின் பக்கம் திரும்பி,
“என் சாப்பாட்டை நேற்றுப்போல் நீங்களே கொண்டு வாங்கம்மா..” என்று கூறிவிட்டு மாடியேறியவன் அங்கே நின்று கொண்டிருந்த மேனகாவைக் கவனிக்காதது போல் கதவை அடைத்துக் கொண்டான்.
அன்று இரவு மூன்று வேறுபட்ட குணங்களை உடைய நெஞ்சங்கள் உறக்கம் கொள்ளவில்லை..
Reviews — Kadalin Pon Vethiyle / காதலின் பொன் வீதியிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.