Chapter 16
நந்தகுமாரன் வருடா வருடம் தன் ஊர் கோவில் திருவிழாவுக்கு தன் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பான்.. நாத்திகம் பேசும் அவன் திருவிழாவின் பத்து நாள்களும் வீட்டில் விருந்தாளிகள் குவிந்திருப்பர்.. விருந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.. பத்து நாள்களிலும் வீட்டில் அசைவ உணவு வகைகள் அணி வகுக்கும். அப்போது தன் அலுவலகத்தினரை ஓர் விடுமுறை தினத்தில் தன் இல்லத்திற்கு விருந்துக்கு அழைப்பான்.. அவனே வேன் ஏற்பாடு பண்ணி ஒவ்வொருவரையும் வீட்டில் சென்று அழைத்துக் கொண்டு மீண்டும் வீட்டு வாசலில் இறக்கி விட்டு விடுவதால் பெண்களும் அவன் அழைப்பை ஏற்றுக் கொள்வார்கள்..
மைதிலி போன வருடம் இந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை.. வீட்டில் விட மாட்டார்கள் என்று தயங்கினாள்.. இந்த வருடம் அவளே போராடி அனுமதி வாங்கி விட்டாள்.. காரணம் காதலின்றி வேறு ஏது..?
காதல் ஒரு வகையான உணர்வு.. அது காதலனை மட்டுமின்றி அவன் சார்ந்த அனைத்தையும் காதலிக்க வைக்கும்.. காதலினின் ஊர் என்பதாலேயே ‘பொட்டைக் காடு’ கூட பூங்காவனமாய் காட்சி தரும்.. அவன் பெயர் சொல்லும் வழிப் போக்கரைக் கூட இழுத்து வைத்துப் பேச வைக்கும்.. மைதிலியும் அது போல்தான் நந்தகுமாரனின் ஊரைப் பார்க்க விழைந்தாள்..
நந்தகுமாரனின் திட்டம் வேறு.. அவன் அம்மாவின் செல்லப் பிள்ளை.. தன் கலப்புத் திருமணத்தை தந்தை விரும்ப மாட்டார் என்பது அவனுக்குத் தெரியும்.. ஆனால் தாய், தான் எதைச் செய்தாலும் ஆதரிப்பாள் என்பதை அவன் நன்கு அறிவான்.. எனவே தாயின் அனுமதி வாங்க வெள்ளோட்டமாய் மைதிலியை அவளுக்கு அறிமுகப் படுத்த அந்த விருந்து நாளைப் பயன்படுத்திக் கொள்வதாக இருந்தான்..
காலையிலிருந்தே வீட்டில் வழக்கத்தை விட அதிக பரபரப்பு நிலவுவதைக் கவனித்த மேனகா காரணம் அறிய விரும்பி ராக்காயியை அழைத்தாள்..
சோலையம்மாளின் சேலைமேல் அவள் கீரை வீசிய சம்பவத்திற்குப் பிறகு அவள் பேச்சை வேலையாள்கள் எவரும் கேட்பதில்லை ராக்காயி ஒருத்தியைத் தவிர, அந்தக் கிராமத்து மண்ணின் விசுவாசமிக்க மைந்தர்களை அறியாத மேனகா வெகுண்டாள்.. ஆனால் அவளின் ஜம்பம் அவர்களிடம் சாயவில்லை.. ராக்காயியை மட்டுமே பணத்தால் விலைக்கு வாங்க முடிந்தது.. அவள் கூட சோலையம்மாளின் முன்னால் மேனகாவுடன் பேசப் பயந்தாள்.. எனவே காலைக் காபி கொண்டு வந்து தந்த ராக்காயிடம் மாடி வராண்டாவில் நின்று கொண்டு கீழே பார்த்துக் கொண்டிருந்த மேனகா வினவினாள்..
“இன்றைக்கு என்ன வீட்டில் பரபரப்பு அதிகமாய் தெரிகிறதே..? என்ன விசயம் ராக்காயி..?”
“அதுவாம்மா.. நம்ம சின்னய்யா டவுனில் ஆபிசரா இருக்காங்க இல்ல.. அந்த ஆபிசிலிருந்து வருசா வருசம் திருவிழாவுக்கு ஒரு நாள் விருந்து சாப்பிட வருவாங்க.. இன்னைக்கு அவங்க வர்றாங்களாம்மா.. கீழே கோழி பிரியாணி, வருவல்ன்னு தூள் பறக்குதில்ல.. முட்டை ஒரு பக்கம் அண்டாவில் வேகுது.. இன்னைக்கு விருந்து சாப்பிட நேத்து ராத்திரியில இருந்து நான் வெறும் வயிறாயில்ல இருக்கேன்..”
“அப்படியா..” என்ற மேனகாவுக்கு புத்தியில் மின்னலடித்தது.. ஆக, இன்று கட்டாயம் மைதிலி அவன் வீட்டுக்கு வருவாள்.. தன் காதலனின் வீடு, தன் எதிர்காலப் புகுந்த வீடு என்ற நினைவில் மனப்பால் குடித்துக் கொண்டு கனவில் மிதப்பாள்..
‘இருக்கட்டும், இருக்கட்டும்.. இன்று ஓர் நாள் தானே உல்லாசம் கொண்டாடப் போகிறார்கள்.. கொண்டாடட்டும்.. அடி மைதிலி.. நாளைக்கு மாலையிலிருந்து உனக்குப் போராட்டம் ஆரம்பமாகிறதடி.. அதற்கு முன் சிரித்து விடு..’
தனக்குள் கறுவிக் கொண்டவள் நந்தகுமாரன் செய்தித் தாளோடு வந்து ஊஞ்சலில் அமரவும் அவனை வம்புக்கு இழுத்தாள்..
“என்ன குமார்.. விருந்தெல்லாம் தடபுடலா ரெடியாகுதாமே.. யாருக்கு..”
“நிச்சயமாய் உனக்கில்லை..”
“என்ன குமார் இப்படிச் சொல்றீங்க..? நான் உங்கள் வீட்டு விருந்தாளி இல்லையா..?”
“விருந்தும் மருந்தும் மூன்று நாள்தான்.. உன்னைப் போல் மாதக் கணக்கில் டேரா போடுகிறவர்களுக்குப் பெயர் விருந்தாளியா..?”
“ஐய்யய்யோ.. குமார்.. நானே ஊருக்குப் போகிறதாக இருக்கிறேன்.. கிளம்பும் போது என்னைப் பரவசத்தில் மூழ்கடிக்கிறீர்களே.. தேங்க்ஸ் குமார்..”
“இப்போது என்ன சொல்லப் போகிறாய்..?” என்ற வினாவுடன் அவன் பார்க்க,
“நான் விருந்தாளி இல்லை வீட்டு ஆள் என்று சொல்லி விட்டீர்களே..”
“ஆரம்பித்து விட்டாயா..?”
“நாளைக்கு மாலை தானே ஆரம்பமாகப் போகுது..”
“என்ன சொல்கிறாய்..?”
“ம்ம்.. நான் ஏதோ நினைவில் சொல்லி விட்டேன்..”
“இல்லை.. நீ வேறு நினைவில் பேசும் ஆளல்ல..”
“அப்படி நீங்களாய் நினைத்தால் நான் என்ன சொல்ல..?”
“நீ ஒன்றுமே சொல்ல வேண்டாம்.. கத்தரிக்காய் முற்றினால் கடை வீதிக்கு வந்துதான் ஆக வேண்டும்.. நடக்கும்போது எனக்குத் தெரியாமலா இருக்கப் போகிறது..?”
“அதுதானே.. நீங்கள் யார்.. ஆண் பிள்ளைச் சிங்கமாயிற்றே..”
“நீ சொன்னாலும் சொல்லா விட்டாலும் நான் ஆண்பிள்ளைச் சிங்கம்தான்..” என்றவாறே அவன் எழுந்து சென்று விட்டான்.. அவன் முதுகைப் பார்த்தபடி தனக்குள் கூறிக் கொண்டாள் மேனகா..
‘போ.. நீ ஆண் பிள்ளைச் சிங்கமா..? நான் யார் என்று நீயே உன் வாயால் சொன்னது மறந்து விட்டதா..? நான் பெண் புலி.. பார்ப்போம்.. நடைபெறும் யுத்தத்தில் ஜெயிக்கப் போவது நீயா இல்லை நானா என்று..’
அந்த ஞாயிறு விடுமுறை மிக உற்சாகமான விடுமுறை நாளாக மைதிலிக்கு அமைந்தது.. காலையில் கண்விழிக்கும்போதே மனம் இறக்கைக் கட்டிப் பறந்தது.. அதிகாலை நான்கு மணிக்கே கண் விழித்து விட்டாள்.. மகள் எழுந்து இங்கும் அங்கும் நடமாடுவதைக் கண்ட விசாலாட்சி கண்ணில் தூக்கம் சுழற்ற,
“என்னம்மா இந்நேரத்துக்கே எழுந்து விட்டே..?” என்று கேட்டாள்..
“இன்றைக்கு எங்க ஆபிசர் வீட்டு விருந்துக்குப் போகணும்மா..”
“காலை எட்டு மணிக்குத்தானே போகணுமின்னு சொன்னே..”
“இப்போதிருந்து கிளம்ப வேண்டாமா..?”
“நல்லாக் கிளம்பின போ.. பட்டிக்காட்டுத் திருவிழாவுக்குப் போக இவ்வளவு ஆசையா..? ஏழு மணிக்கு எழுந்தால் கூட ஒரு மணி நேரத்தில் கிளம்பி விடலாமே..” தூக்கம் கண்களில் வழிய விசாலாட்சி கேட்டாள்..
“நீங்க தூங்குங்கம்மா.. நான் காலை டிபனுக்கே அங்கே போய் விடுவேன்.. நீங்க மெதுவா எழுந்தால் போதும்..”
“அப்போ சரி” என்றபடி விசாலாட்சி தூங்கி விட்டாள்.
அவளது தூக்கத்தைக் கலைக்காமல் பூனை போல் அடிமேலடி எடுத்து வைத்து பீரோவைத் திறந்தாள் மைதிலி.
‘அங்கே நந்துவின் அம்மா, அப்பா இருப்பார்கள்.. பாந்தமாக ஆனால் அழகாக உடுத்திக் கொள்ள வேண்டம.. எந்தச் சேலை கட்டலாம்..?’ என்ற யோசனையோடு ஆராய்ந்தவளின் கண்களில் தாழம்பூ நிற உடலும், அரக்குச் சிவப்பு ஜரிகை பார்டரும் கொண்ட காஞ்சிபுரம் பட்டுப் புடவை பட்டது.. ஆசையாய் அதை எடுத்துக் கொண்டாள்.. நகைப் பெட்டியைத் திறந்து அரக்கு சிவப்பு கல் ஜிமிக்கியும், அதே சிவப்புக்கல் அட்டிகையையும் எடுத்து வெளியே வைத்தாள்.. சாதாரண தங்க வளையல்களுக்கு ஜோடியாக இரு ஓரங்களிலும் பார்டர் கட்டுவது போல் சிவப்புக் கல் பதித்த வளையல்களை எடுத்துக் கொண்டாள்.. அதே நிற கல் மோதிரம்.. இரண்டு ஆண்டு சம்பளத்தில் சேர்த்து மைதிலிருக்காக விசாலாட்சி செய்த புதிய நகைகள் அவை.
குளித்து உடை மாற்றி தலையைத் தளர்வாய் பின்னலிட்டவள் குளிர் சாதனப் பெட்டியைத் திறந்து முதல் நாள் கட்டி பாலிதீன் கவரில் சுற்றி உள்ளே வைத்திருந்த முல்லைப் பூச்சரத்தை எடுத்தாள்.. தோளின் இரு பக்கமும் சரிய தலை நிறைய பூவைச் சூடிக் கொண்டாள்.. காதுகளில் போட்டிருந்த பழைய தோடுகளை கழட்டி வைத்து விட்டுப் புதுக் கல் ஜிமிக்கியைப் போட்டுக் கொண்டாள்.. கழுத்திலிருந்த செயினுடன் உள்ளங் கழுத்தில் சிவப்புக்கல் அட்டிகையை பூட்டிக் கொண்டாள்.. வளையல்களையும் மோதிரத்தையும் அணிந்தவள் நெற்றியில் அரக்கு சிவப்பில் திலகமிட்டுக் கொண்டாள்.. பூஜை அறையில் கண்மூடி,
‘உன்னை நம்பித்தான் போகிறேன்.. காப்பாற்று பெருமாளே..’ என்று கண் மூடி வேண்டிக் கொண்டாள்..
வாசலில் வேன் சத்தம் கேட்க தாயை எழுப்பினாள்.. “அம்மா நான் போய் விட்டு வரவா..?”
தூக்கி வாரிப் போட்டு எழுந்த விசாலாட்சி மகளின் அழகைக் கண்டதும் மலைத்து விட்டாள்.. ‘எவ்வளவு அழகாக இருக்கிறாள் என் மகள்..’ என்று பெருமைப் பட்டவள், “பத்திரமா போய்விட்டு வாம்மா” என்றவாறு வேன் வரை கூட வந்து உள்ளே நோட்டமிட்டாள்.. மைதிலியின் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் ஆறு பேர்.. உள்ளே அமர்ந்திருந்ததைக் கண்டதும் நிம்மதியுடன் மகளுக்கு கை ஆட்டி விடை கொடுத்தாள்..
வேனின் உள்ளே அமர்ந்திருந்த பாத்திமா,
“மைதிலி இங்கே வந்துவிடு..” என்று குரல் கொடுக்க, அவள் அருகே சென்று அமர்ந்தாள்.. அடுத்த சீட்டில் அமர்ந்திருந்த டேவிட்..
“பாத்திமா.. இன்றைக்கு யாரோ கல்யாணப் பெண் போலவே இருக்காங்க.. கவனிச்சிங்களா..” என்று கிண்டலடித்தான்..
தோழியைப் பார்த்து முறுவலித்த பாத்திமா,
“ஏன் டேவிட்.. இருக்கக் கூடாதா..?” என்றாள்..
“இருக்கட்டும்.. இருக்கட்டும்..” என்ற டேவிட் மற்ற தோழர்களுடன் அரட்டையில் இறங்கினான்.. ஊடே டிரைவரைப் பார்த்து,
“ஏன்ப்பா இது உன் சொந்த வேனா..?” என்று விசாரித்தான்..
“ஆமாம் சார்.. நம்ம பெரியம்மாதான் வாங்கிக் கொடுத்தாங்க..” என்றான் டிரைவர்..
“இது என்னப்பா.. உனக்கும், எனக்கும் பொதுவான பெரியம்மா யாரிருக்காங்க..?” என்று கிண்டலடித்தான் டேவிட்,
“நம்ம சின்னய்யாவோட அம்மாதாங்க..” என்றான் அவன்,
“நம்ம சின்னய்யான்னா.. ஓ..! நீ நந்தகுமாரன் சாரைச் சொல்கிறாயா..?”
“ஆமாங்க.. எங்க அம்மாவும், அப்பாவும் அவங்க பண்ணையில்தான் வேலை செய்கிறாங்க.. நான் பத்தாவது வரை படித்தேன்.. மேலே டிரைவிங் கத்துக்கிட்டேன்.. ஐயா வீட்டில் டிரைவரா இருந்தேன்.. சொந்தமா வேன் வாங்கி ஓட்டணும்னு ஒருநாள் எங்க அம்மாகிட்ட பேச்சுவாக்கில் சொன்னேன்.. அது பெரியம்மா காதுக்குப் போனதும் உடனே எனக்கு இந்த வேனை வாங்கிக் கொடுத்திட்டாங்க..”
“அப்படியா.. அவங்க மனசு தாராளமானவங்க போல..”
“மகராசிங்க.. அள்ளிக்கொடுப்பாங்க.. அப்படி ஒரு குணவதி..”
மைதிலியின் மனம் சிலிர்த்தது.. அவளின் நந்துவின் அம்மா.. தர்ம சீலி.. கேட்க இனித்தது..
“அவரோட அப்பா எப்படிப்பா..? மீசையும் கீசையுமா ஆள் பார்க்க பயில்வான் மாதிரி பயமுறுத்துவாரே..”
“அதெல்லாம் சும்மாங்க.. மனசு பச்சைப் பிள்ளை போல்.. கண்டிப்பாய் இருப்பார்.. தப்பு செஞ்சா சத்தம் போடுவார்.. அடுத்த நிமிசமே கூப்பிட்டு ஆறுதலாய் பேசுவார்..”
“ம்ம்.. அடிக்கிற கைதான் அணைக்கும்கிற..”
“ஆமாங்கய்யா..”
மைதிலியின் செவி கூர்மையாக இதைக் கிரகித்துக் கொண்டது.. அவளது நந்தகுமாரனின் அப்பா பெரிய மனிதத் தன்மை கொண்டவராமே..
இப்போது வண்டி வயலும், தோப்பும் சூழ்ந்த பாதைக்கு மாறியது.. மைதிலியின் மனம் உல்லாசம் கொண்டது.. எவ்வளவு அழகான பசுமையான ஊர்.. “இந்தப் பக்கம் கண்ணுக்கு எட்டின தூரம் வரை ஐயாவோட தோட்டம், வயல், தோப்புத்தாங்க..” என்று டிரைவர் கூற மைதிலி வெளியே பார்த்தாள்..
அந்தப் பச்சை பசும் வெளியில் பறக்கத் துடித்தாள்.
“யார் கண்ணுக்கெட்டின தூரம் வரைப்பா.. ஏன் கேட்கிறேன்னா இங்கே ஒன்றைக் கண், மாலைக்கண், கிட்டப்பார்வை, தூரப் பார்வை நிறைய கேஸ் உட்கார்ந்திருக்கிறோம்.. நீ விளக்கமாகச் சொன்னால் தேவலை..” என்று டேவிட், பாண்டியனைப் பார்க்க ஒன்றரைக் கண்ணான அவன் பல்லைக் கடித்தான்..
“ஐயா வீடு வந்திருச்சுங்கய்யா..”
அந்த பிரம்மாண்டமான பழைய கால வீட்டிற்குள் வேன் நுழைந்தது.. மைதிலியின் மனம் படபடத்தது.. பக்கத்திலிருந்த பாத்திமாவின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.. தோழியின் நிலை புரிந்த பாத்திமா அவள் கையை லேசாக அழுத்தி தைரியம் கொடுத்தாள்..
வேன் நின்றது.. வாசலிலேயே நின்றிருந்த நந்தகுமாரன் வேனின் அருகே விரைந்து வந்தான்.
“வா பாண்டி, வா டேவிட்..” என்று எல்லோரையும் வாய் வரவேற்றாலும் கண் மைதிலியைத் தேடி உள்ளே பாய்ந்தது..
“வாங்க பாத்திமா..” என்றவன் தோழியின் பின்னே இறங்கிய மைதிலியைக் கண்டதும் மயங்கி விட்டான்..
மைதிலி தினமும் நேர்த்தியாக உடுத்திக் கொண்டு அலுவலகம் வருகிறவள்தான்.. ஆனால் இன்று அவள் உடுத்தியிருந்த புதுப் பட்டுப் புடவையும் அணிந்திருந்த புதிய நகைகளும் அவளுக்கு பொழிவூட்ட எழிலோவியமாய் அவள் இறங்கினாள்.. பேச்சிழந்தவனாய் கிறங்கிய கண்களுடன் அவன் தலையசைத்து வரவேற்க அவனது பார்வை கண்டு அவள் வெட்கினாள்.. அதை மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த மேனகா கொதித்தாள்..
“வாங்க எல்லோரும் உள்ளே வாங்க..”
நந்தகுமாரன் அனைவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே செல்வது போல் பாவ்லா காட்டிக் கொண்டே தாமதித்து மைதிலி அருகில் வரவும் அவளுடன் இணைந்து உள்ளே நடந்தான்.. அதே நேரம் மகனின் அலுவலகத்தாரை வரவேற்க வீட்டின் உள்ளேயிருந்து வந்த சோலையம்மாளை மகனின் அருகே நடந்து வந்து கொண்டிருந்த மைதிலி கவர்ந்து விட்டாள்.. தழையத் தழையப் புடவை கட்டி தலை நிறையப் பூச்சூடி தன் மருமகளாக வரும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்று கனவு கண்டாளோ அப்படி இருந்த அந்தப் பெண்ணைக் கண்டதும் சோலையம்மாளுக்கு மிகவும் பிடித்து விட்டது.
‘யாரிந்த அழகான பொண்ணு.. மகாலட்சுமி மாதிரி இருக்காளே..’ என்று எண்ணியபடி அனைவரையும் வரவேற்றவள் மைதிலியைக் கண்டதும் பிரியமாகப் புன்னகைத்தாள்.. மைதிலி ஆனந்தப்பட்டுப் போனாள்.. நந்தகுமாரன் மகிழ்ந்தவனாய்..
“அம்மா இதுதான் மைதிலி..” என்றான் என்னவோ அவளை சோலையம்மாள் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த மாதிரி..
“வணக்கம்” என்று முத்துப்பல் தெரிய முறுவலித்து கைகுவித்தாள் மைதிலி.. சோலையம்மாளுக்கு நிறைவாய் இருந்தது.. இந்தக் காலத்தில் இவ்வளவு அடக்கமான சுபாவம் கொண்ட பெண்ணா..? என்று ஆச்சரியப்பட்டுப் போனவள்,
“வாம்மா.. நான்தான் நந்துவோட அம்மா..” என்றாள் அன்பாக..
கிராமத்துப் பாணியில் மிக விலை உயர்ந்த பட்டுச் சேலை கட்டி கை, கழுத்து, காது, மூக்கு அனைத்திலும் வைரங்கள் மின்ன தலைமுடியைக் கொண்டையிட்டு அதைச் சுற்றி வளைவாய் மல்லிகைப் பூச்சரம் வைத்து நெற்றியில் அகலமான பொட்டுடன் மங்கலகரமாய் காட்சி தந்தவளைப் பார்க்கும்போது கோவில் அம்மன் சிலை கருணையுடன் பார்ப்பது போலிருந்தது.. அவர்கள் குடும்பத்துக்கே உரிய கறுமை நிறத்துடன் இருந்தாலும் அதிலும் தனிக்களையுடன் ஜொலித்தாள் சோலையம்மாள்.. மைதிலி மாமியாராகப் போகிறவள் என்ற மரியாதையுடன் அவளைப் பார்க்க.. ‘இப்படியொரு பெண் நமக்கு மருமகளாக வரமாட்டாளா..’ என்ற வாஞ்சையுடன் சோலையம்மாள் மைதிலியைப் பார்க்க அங்கே ஒரு இனிமையான கண்ணாமூச்சி நடந்தது..
டேவிட் தொண்டையைக் கனைத்தான் விளையாட்டாய்.. அதன் பொருள் புரிந்த பாத்திமா சிரித்தாள்.. புரியாத மற்றவர்கள் விழித்தனர்.. மீசையை முறுக்கியபடி அங்கே பிரசன்னமான துரைசிங்கம்,
“வாங்கய்யா.. இப்பத்தான் வர்றீங்களா.. ஏண்டி சோலையம்மா பிள்ளைகள் வந்திட்டாங்க.. இன்னும் இலை போடாம என்ன செய்கிறே..” என்று மனைவியை அதட்டி விட்டு அவர்களைப் பார்த்து,
“காலைப் பலகாரம் இட்லியும் கோழி வறுவலும் தான்.. மதியம் கோழி பிரியாணி, வறுவல், முட்டைன்னு ரெடியாகுது.. நீங்க காலைப் பலகாரம் சாப்பிட்டு விட்டு கோவில் கடைகளைப் பார்த்து விட்டு வர்றதுக்குள்ள மதியம் பிரியாணி ரெடியாயிரும்.. சோலையம்மா.. இன்னும் அங்கே என்ன செய்கிறே..” என்று கூற டேவிட் அவரைப் பார்த்து..
“அப்பா.. நாங்க இன்னைக்கு நேத்தா இங்கே வர்றோம் எட்டு வருசமா தவறாம திருவிழா விருந்துக்கு வர்றோம்.. மூணு வேளையும் மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டுத்தான் போகப் போகிறோம்.. எங்க தலையைக் கண்டதும் அம்மா பந்தி ரெடி பண்ண உள்ளே போயிட்டாங்க.. நீங்க இந்தச் சத்தம் போட்டிங்கன்னா பயத்தில் வறுவல் சட்டியை கீழே போட்டுக் கொட்டி விட்டுறப் போறாங்க.. அப்புறம் எங்க சாப்பாடு அம்பேல்தான்.. நான் வேற இன்னைக்கு விருந்துக்காக ஒருவாரமா ஜொள்ளு விட்டுக்கிட்டு இருக்கேன்.. அதனால் இன்றைக்கு ஒருநாள் மட்டும் அடக்கி வாசிங்கப்பா.. உங்களுக்குப் புண்ணியமாப் போகும்..” என்றான்..
“ஹாஹா.. டேவிட்டு.. நீ வந்து வாயைத் திறந்தாலே சோக்குதாம்பா..” என்றார் துரைசிங்கம்..
“ஜோக்கா.. எங்க வயிற்றோடு விளையாடிரா தீங்கப்பான்னு பயந்து போய் கெஞ்சிக் கேட்கிறேன்ப்பா..”
“ஹாஹா..” என்று துரைசிங்கம் மீண்டும் சிரிக்க ஆரம்பிக்க,
“என்ன சத்தம் இங்கே.. ஏங்க இன்னைக்கு ஒரு நாள் அடங்கி இருங்க.. விருந்துக்கு வந்த புள்ளைகள் பயந்திரப் போகுதுங்க.. புரியுதா..” என்று அதட்டல் போட்டாள் அங்கு வந்த சோலையம்மாள்..
துரைசிங்கம் உடனே அடங்கிவிட,
“பாருங்க சார்.. உங்கப்பாவும் ‘வீட்டில் எலி, வெளியில் புலி’ தானா..” என்று டேவிட் நந்தகுமாரன் காதோரம் கிசுகிசுக்க நந்தகுமார் சிரித்தான்..
உள்ளே சாப்பாட்டு மேஜையில் வரிசையாய் இலை போடப்பட்டு இருக்க எல்லோரும் அமர்ந்து கொள்ள மைதிலி மட்டும் தனித்து நின்றாள்..
“என்னம்மா..?” என்று சோலையம்மாள் வினவ..
“அம்மா.. அவங்க சுத்த சைவம்.. அசைவம் சாப்பிட மாட்டாங்க..” என்று டேவிட் கூறினான்..
“அப்படியாம்மா.. அதனால் என்ன.. இட்லிக்கு தொட்டுக் கொள்ள சட்டினியும் சாம்பாரும் வேற தனியா செஞ்சிருக்கோம்.. நீ சும்மா உட்கார்ந்து சாப்பிடு.. நான் பரிமாறுகிறேன்..” என்றாள் சோலையம்மாள்..
“இல்லைங்க.. நீங்க பரிமாறி நான் சாப்பிட எனக்கு கஷ்டமா இருக்கும்.. நானும் பரிமாற உங்களுக்கு உதவி பண்ணுகிறேனே.. அப்புறம் உங்களுடன் சாப்பிட்டுக் கொள்கிறேன்..” என்றாள் மைதிலி தயங்கியவாறு..
சோலையம்மாள் நெகிழ்ந்து போனாள்.. அந்தக் குடும்பத்தின் மூத்த மருமகள் அவள்.. பெண் குழந்தையைப் பெறாதவள்.. ஆண் குழந்தையைப் பெற்றவள்.. நாத்தனார், கொழுந்தன் இவர்களின் திருமணம் முதற்கொண்டு குடும்பத்தின் அத்தனை சுபநிகழ்ச்சிகளையும் முன்னே நின்று நடத்தியவள், ஊருக்குப் பெரிய வீடு.. பண்ணை வீடு.. ஊரின் திருவிழாக் காலங்களில் அவர்கள் வீட்டில் தான் அதிகம்
பேர் விருந்துண்ணுவார்கள்.. விருந்து தயார் பண்ணுவதை மேற்பார்வையிட்டாலும் பரிமாறுவதற்கு வீட்டுப் பெண்மணிதான் செய்ய வேண்டும்.. வேலை செய்து களைத்துப் போய் விடும்போது அவள் சாப்பிடாமலே கண் அயர்ந்த நாள்கள்தான் அதிகம்.. அது ஏனோ நந்தகுமாரன் தாயின் மேல் பாசம் கொண்டவனாக இருந்தாலும் துரைசிங்கம் மனைவி மீது காதல் கொண்டவராக இருந்தாலும் இருவருக்குமே இதுவரை அவளது நிலைமை புரிந்ததில்லை.. அவர்கள் ஆண்கள் என்பதால் தெரியாமலிருக்கலாம் என்று தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொண்டாலும் சோலையம்மாளுக்கும் ஒரு ஏக்கம் இருக்கத்தான் செய்தது.. இன்று ஆதுரமாய் கை கொடுக்கும் அந்த அழகிய பெண்ணை அவள் பாசத்துடன் நோக்கினாள்..
Reviews — Kadalin Pon Vethiyle / காதலின் பொன் வீதியிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.