Chapter 24
நந்தகுமாரனுக்கு புதிதாக இன்னோவா கார் வாங்கிக் கொடுத்திருந்தார் துரைசிங்கம்.. டாடாசுமோ முரட்டு வண்டியாம்.. அவருக்குப் போதுமாம்.. அவர் மகனுக்கு புதுக்காரை அவரது கல்யாணப் பரிசாகக் கொடுக்கிறாராம்.
தம்பதிகள் புதுக்காரில் ஹனிமூனுக்கு கிளம்பினார்கள்.. ஊட்டிக்கு போவதாக வீட்டில் சொல்லி விட்டு காரை சென்னை நோக்கிச் செலுத்தினான் நந்தகுமாரன்.. மைதிலி மெதுவாக,
“அத்தை, மாமாகிட்ட பொய் சொல்லி விட்டோமோ..?” என்றாள்..
“இல்லையே.. உண்மையைத்தானே சொன்னோம்..”
“ஊட்டிக்கா இப்போது போகிறோம்..?”
“சென்னைக்கு போய்விட்டு.. அங்கிருந்து ஊட்டிக் குத்தானே போகிறோம்..”
“திருச்சிக்கு வந்துதானே போக வேண்டும்..”
“உங்களைப் பேச்சிலும் ஜெயிக்க முடியாது..”
“பேச்சிலும்ன்னு ‘க்’கன்னா போடறியே வேற எதிலயும் என்னை ஜெயிக்க முடியாதுன்னு சொல்றாப்புல இருக்கே..”
“அப்படியெல்லாம் காலரைத் தூக்கி விட்டுக்க வேணாம்..”
சென்னையில் நட்சத்திர ஓட்டலில் ரூம் போட்டார்கள்.. குளித்து முடித்து மைதிலியின் சித்தப்பா வீடு குரோம் பேட்டையில் இருந்ததிற்கு போய் வந்தார்கள்.. அங்கே சித்தப்பாவும் சித்தியும் முதலில் மைதிலியைத் திட்டினாலும் நந்தகுமாரனை வீட்டு மாப்பிள்ளையாய் ஏற்றுக் கொண்டு நன்கு உபசரித்தனர்.. சித்தப்பா, சித்தியிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வினய்யை பார்க்கச் சென்றனர்..
பிரம்மாண்டமான ஈ.ஸி.ஆர் ரோட்டில் அமைந்த வினய்யின் பங்களாவில் ரங்கநாதன், ஜானகி, வினய் மூவரிடமும் அவர்கள் இருவரும் முதலில் மன்னிப்புக் கேட்டனர்.. ஜூஸ், சிற்றுண்டி கொடுத்து உபசரித்த ஜானகி,
“இதில் மன்னிப்பு கேட்க என்னம்மா இருக்கு..? நீ என்ன குற்றம் செய்தாய்..? எங்களுக்கு உன் காதல் விவகாரம் தெரியாது.. தெரிந்திருந்தால் பெண் கேட்டு வந்திருக்க மாட்டோம்..” என்றாள்..
“அம்மா.. நான் மைதிலியை முதலில் அவள் வீட்டிலிருந்து வெளியேற்றி மணம் செய்துகொள்ள வேண்டியிருந்தது, அதனால்தான் உங்களிடம் பேச எனக்கு அவகாசமில்லாமல் போய்விட்டது..” என்றான் நந்தகுமாரன்..
“டோன்ட் வொர்ரி மிஸ்டர் நந்தகுமாரன்.. என் வருத்தம் என்னவென்றால் மைதிலியின் வீட்டாருக்கு மைதிலியின் காதல் தெரிந்த உடனே கல்யாணத்தை நிறுத்தியிருக்க வேண்டாமா..? உண்மையை மறைத்து என் வாழ்க்கையிலும், மைதிலியின் வாழ்க்கையிலும் விளையாடப் பார்த்தார்களே..” என்றான் வினய்..
“வினய்.. எதனால் உங்களுக்கு மைதிலியைப் பிடித்தது..” என்று கேட்டான் நந்தகுமார்..
“அவளது குடும்பப்பாங்கான அழகால்..” என்றான் வினய்..
நந்தகுமாரன் ரங்கநாதனைப் பார்த்து,
“சார்.. எங்கள் காதல் கல்யாணத்தால் சம்பந்தமே யில்லாத நீங்கள் மனம் வருத்தப்பட வேண்டி ஆகிவிட்டது.. அது எங்கள் மனதை மிகவும் பாதித்து விட்டது..” என்று வருத்தப்படும் குரலில் கூறினான்..
“எங்களுக்கு உங்கள் மேல் எந்த வருத்தமும் இல்லைப்பா,” என்றார் அவர்..
“அப்படி நீங்கள் மூவரும் நினைத்தால் எங்களுடன் ஒரு கப் காப்பி சாப்பிட வெளியே வர வேண்டும்.. இது எங்கள் கோரிக்கை,” என்றான் நந்தகுமாரன்.
“ஏன் அந்தக் காபியை இங்கே சாப்பிடக் கூடாதா..?” என்று வினய் கேட்டாலும் மைதிலியின் மை விழிகளில் இருந்த கெஞ்சும் தொனியைக் கண்டதும்,
“டாட், மாம்.. ஒரு டிரைவ் போய் விட்டு வரலாமே..” என்று எழுந்து கொண்டான்..
முன்னால் சென்ற நந்தகுமாரனின் காரை வினய்யின் கார் பின் தொடர்ந்தது.. எந்த ஹோட்டலுக்கோ, ரெஸ்ட்டாரண்ட்டுக்கோ போகாமல் குரோம்போட்டையில் ஒரு வீட்டினுள் நந்தகுமாரனது கார் நுழைய வேறு வழியின்றி வினய்யின் காரும் உள்ளே சென்று நின்றது.. காரை விட்டு இறங்கிய நந்தகுமாரனும், மைதிலியும் அவசரமாய் வினய்யின் கார் அருகே வந்து அவர்களை இறங்கச் சொன்னார்கள்..
‘இது யார் வீடு’ என்ற குழப்பத்துடன் அவர்கள் இறங்க மைதிலியின் சித்தப்பா லோகேஸ்வரன் “வாங்க வாங்க..” என்று வரவேற்றார்.. உள்ளே சென்று அவர்கள் அமர மைதிலி,
“இது என் சித்தப்பாவின் வீடு.. இவர் என் சித்தப்பா.. அவங்க என் சித்தி..” என்று அறிமுகம் செய்து வைக்க சித்தி ராஜேஸ்வரி கரம் குவித்து வணக்கம் சொன்னாள்.. பின்னர் உள்ளே சென்ற மைதிலி ஓர் அழகிய இளம் பெண்ணுடன் திரும்பி வந்தாள்.. எங்கோ பார்த்துக் கொண்டிருந்த வினய்யின் அருகே வந்து,
“வினய் சார்.. இதுதான் என் தங்கை வைதேஹி..” என்றாள்… வினய் அந்தப் பெண்ணை ஏறிட்டுப் பார்த்தான்.. அவன் கண்களில் மின்னல் அடித்தது.. மைதிலியின் ஜாடையில் அழகாக அவன்
எதிர்பார்த்த தமிழ்நாட்டு குத்துவிளக்காக அவள் இருந்தாள்.. அவள் கண்களில் வினய்யைக் கண்டதும் ஒரு சுடர் தோன்றியது. அவள் கன்னங்களில் வெட்கத்தின் செம்மை படர்ந்தது.. இவையாவும் மைதிலியிடம் வினய்யைக் கண்டதும் தோன்றாதவை.. அச்சம், மடம், நாணம் இதைத்தானே வினய் எதிர்பார்த்தான்.. தன்னை ஒரு பெண் விரும்புகிறாள், ரசிக்கிறாள் என்பது ஆண்மைக்கு கௌரவமல்லவா..? வினய், வைதேஹியின் பார்வையில் தடுக்கி விழுந்தான்.
லோகேஸ்வரன் சென்னையில் பணக்காரப் புள்ளிகளில் ஒருவராக இருந்தார்.. அவருக்கு வைதேஹி ஒரே பெண்.. ரங்கநாதன், ஜானகி தம்பதியினருக்கு தங்கள் இனத்திலேயே தங்கள் அந்தஸ்திற்கும் பொருத்தமானதாக சம்பந்தம் அடைந்து விட்டதில் பரம திருப்தி.. வினய்க்கோ தான் விரும்பிய குணங்களுடன் உள்ள பெண்ணையே மணந்து கொள்ளப் போவதில் கொள்ளை மகிழ்ச்சி..
குறிப்பிட்ட அதே முகூர்த்தத்தில் வினய் – வைதேஹி கல்யாணம் நடக்கப் போவதாக நாள் நிச்சயிக்கப்பட்டது.. தங்கள் மனமார்ந்த நன்றிகளை வினய் குடும்பத்தார் கூற, தங்கள் வாழ்த்துக்களை நந்தகுமாரனும் மைதிலியும் கூறிவிட்டு லேசான மனத்துடன் விடை பெற்றனர்.
ஏரியின் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு படகு சென்று கொண்டிருந்தது.. கால் தன்னிச்சையாய் பெடல் போட்டுக் கொண்டிருக்க கைகள் மைதிலியின் தோளை வளைக்க நந்தகுமாரன் அமர்ந்திருக்க மைதிலி அவன் கைகளில் கிள்ளினாள், “ஸ்.. பப்ளிக் பிளேஸ்..”
“எது.. இதுவா.. மக்கு.. இது காதலர் ஏரி.. பக்கத்து படகுகளில் பார்..” பார்த்தாள். உடனே விழிகளைத் திருப்பிக் கொண்டாள்.. கன்னம் சிவந்தது.. மயங்கிப் போனவனாய் நந்தகுமாரன்.
“அங்கே மாலை மயக்கம் யாருக்காக..
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக..”
என்று பாடினான்..
“ஆமாம்.. மாலையில் மட்டும்தான் மயங்குகிறீர்கள்.. காலையில் விட்டு வைக்கிறீர்கள்.. என்ன பொய் பாரப்பா..”
“யாரைப் பார்க்கச் சொல்கிறாய்.. அந்திச் சூரியனையா..”
“வாயே திறக்கவில்லை சாமி.. ஆளை விடுகிறீர்களா..?”
“விடுவதா.. உன்னையா.. துப்பாக்கி முனையில் தூக்கி வந்து விடமாட்டேன்..”
“மயக்க மருந்தை விட்டு விட்டீர்களே..”
“அது எதுக்குடி.. சும்மா ஓர் பார்வை பார்த்தால் போதுமே.. மயங்கி விடுகிறாயே.. அப்படித்தானே நேற்று நைட்..”
“ஐயோ போதுமே.. நான் தண்ணிக்குள் குதிச்சிருவேன்..”
“ஹா.. ஹா..” வென்று சிரித்தபடி நந்தகுமாரன் படகை கரைக்குத் திருப்பினான்.
கரையில் ஏறியவர்கள் பூக்கள் அடர்ந்திருந்த பூங்காவினுள் கை கோர்த்தபடி இணைந்து நடந்தார்கள்.. இருபக்கமும் பூச்செடிகள் ஆட நடுவில் அவர்களைப் போல் நிறைய ஜோடிகள் நடக்க நந்தகுமாரன்,
“இது காதலின் சாலை போல் இருக்கிறது..” என்று கூறினான்..
மைதிலி உடனே அவனை ஓர் மயக்கும் பார்வை பார்க்க,
“இப்ப உன் முறையா.. எதுக்கு இப்படிப் பார்க்கிறாய்.. கிட்ட வந்தால் அடிக்க வருகிறாய்.. அநியாயம்டி நீ செய்கிறது..” என்றான் நந்தகுமாரன்.
“ஐயோ.. வழிகிறது.. நான் என் மனதிற்குள் இந்த சூழ்நிலையைப் பார்த்து ஓர் பாடலை ‘ஹம்’ பண்ணிக் கொண்டிருந்தேன்.. அதையே நீங்களும் சொன்னீர்களா.. அதனால் பார்த்தேன்.. நீங்கள் உடனே..” என்று சிணுங்க ஆரம்பித்தாள் மைதிலி..
“நான் அசைவம் சாப்பிடுகிறவன்டி.. உன்னை மாதிரி சுத்தச் சைவமில்லை.. அதுசரி.. அது என்ன பாட்டு..” என்று வினவினான் அவன்.. மைதிலி மெல்லிய குரலில் அந்தப் பாடலைப் பாடினாள்..
“காதலின் பொன் வீதியில்
காதலன் பண் பாடினான்..”
“அழகான பாடல்.. மைதிலி நம் காதலின் வீதியில் எவ்வளவு இடர்கள்..”
“துப்பாக்கி தூக்க உங்களுக்கு தைரியம் இருந்ததோ நம் காதல் பிழைத்ததோ..”
“இல்லாதவர்களின் காதல் என்ன ஆகும்..?”
“அது எதற்கு நமக்கு..? நாம்தான் ஜெயித்து விட்டோமே..”
மைதிலி நந்தகுமாரனின் இடுப்பைச் சுற்றிக் கரங்களை வளைத்து போட்டு அவன் தோளில் தலைசாய்த்துக் கொள்ள அவன் அவள் தோளைச் சுற்றி அணைத்துக் கொள்ள அவர்கள் அந்தக் காதலின் பொன் வீதியில் வெற்றி பெற்றவர்களாய் நடந்தார்கள்.
– முற்றும் –
Reviews — Kadalin Pon Vethiyle / காதலின் பொன் வீதியிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.