Chapter 04

0Shares

மாளவிகாவைத் தொடர ஆரம்பித்தான் ரமணன்.. முதலில் மாளவிகா அதைக் கவனிக்கவில்லை.. அவள் பாட்டுக்கு ‘தேமே’ என்று கல்லூரிக்குச் சென்று வந்து கொண்டிருந்தாள்.. அவள் கூட வந்த ஹாசினிதான் ஒருநாள் அதைக் கண்டு பிடித்து கூறினாள்..

“மாளவிகா.. உன்னை ரமணா ஃபாலோ பண்றாண்டி..”

“என்னது..?!”

மாளவிகா திரும்பிப் பார்த்தாள்.. அவளது பார்வையில் அவளைப் பின் தொடர்ந்து நடந்து வந்து கொண்டிருந்த ரமணனின் கண்களில் மின்னல் வந்தது..

‘ஆள் பார்க்க ஜம்முன்னு ஹீரோ போலத்தான் இருக்கான்..’

அவனைக் கண்ட மாத்திரத்தில் இந்த எண்ணம் தான் மாளவிகாவின் மனதில் வந்தது.. அவனைப் போன்ற ஒருவன் பின்பற்றி வருவதாக இருந்தால்.. அவள் கொஞ்சமாவது பார்க்க நன்றாக இருக்கிறாளோ என்ற தன்னம்பிக்கை வித்து அவள் மனதில் விழுந்தது..

“இவனை நான் இதுக்கு முன்னாலே பார்த்த தில்லையே…”

“என்னடி இப்படிச் சொல்ற..? இந்த வாரம் முழுக்க நானும் நோட் பண்ணிட்டேன்.. இவன் உன்னைத்தான் ஃபாலோ பண்றான்..”

“கூட நீயும்தான் வர்ற.. ஒரு வேளை உன்னை அவன் ஃபாலோ பண்ணியிருக்கலாமில்ல..?”

“ஏண்டி வயித்திலே புளியைக் கரைச்சு ஊத்தற..? அவன் உன்னை ஃபாலோ பண்றதுக்கே நான் கதிகலங்கிப் போயிருக்கேன்.. இந்த லட்சணத்தில.. என்னை 

அவன் ஃபாலோ பண்ணியிருக்கலாமில்லன்னு நீ கேட்டு வைக்கிற..?”

பயந்து போய் பேசிய ஹாசினியை விசித்திரமாகப் பார்த்தாள் மாளவிகா.. ஒருவன் பின்னாடியே வந்தால் இந்த அளவுக்கு கலவரப் பட்டுப் போகிறவள் ஹாசினியில்லை.. அவள் ஒரு கலாரசிகை…

“அவனைப் பாரேன்.. கார்த்திக்கைப் போலவே இருக்கானில்ல.. ஆள் செம ஹேண்ட்சம்ய்யா..” என்பாள்..

“அடச்சீ.. பசங்களைப் போய் இப்படி ரசிக்கிறயே..” என்று மாளவிகாதான் அவனைத் திட்டுவாள்..

அந்த ஹாசினியா.. அவள் ரசித்த அந்த கார்த்திக்கைப் போல இருக்கிறவனை விட படு ஸ்மார்ட்டாக.. செம ஹேண்ட்சம்மா இருக்கும் இவனைப் பார்த்து பயப்படுகிறாள்..?

“ஏண்டி..? இவனென்ன சிங்கம்.. புலி.. கரடியா..?” மாளவிகா திரும்பிப் பார்த்தாள்.. ரமணன் கண்களில் மின்னலை வாங்கினான்…

“ஐயோ.. திரும்பிப் பார்க்காதேடி..” ஹாசினி நடுங்கினாள்..

“ஏண்டி..?”

“இவ ஒருத்தி.. ஏண்டி.. ஏண்டின்னு உயிரை வாங்குவா.. இவன் சிங்கம்.. புலி.. கரடியை விட பயங்கரமானவன்..”

“அப்படியா.. சொல்ற..?”

சந்தேகத்துடன் கேட்ட மாளவிகா.. ஹாசினி சொல்லச் சொல்லக் கேட்காமல் திரும்பிப் பார்த்து வைத்தாள்.. ரமணன் தேன் குடித்த நரியாக.. ஹாசினி.. தலையில் கை வைத்துக் கொண்டாள்..

ரமணனின் கம்பீரத் தோற்றத்தைக் கண்ட மாளவிகாவிற்கு ஹாசினி அபாண்டமாகப் பேசுகிறாள் என்று தோன்றியது..

“போடி.. நீயும்.. உன் ரசனையும்.. இவனா பயங்கர மானவன்.. செம ஹேண்ட்சம்மா.. ஹீரோக் கணக்கா இருக்கான்.. இவனைப் போயி பயங்கரமானவன்னு சொல்றியே..?”

“இவனா ஹீரோ..? இவன் வில்லண்டி…”

“வில்லனா..?”

“ஆமாம்.. இவன்தான் ரமணன்..!”

ஹாசினி சொல்லிய விதத்தில் மாளவிகாவிற்கு சிரிப்புத்தான் வந்தது.. ரமணன் என்ற பெயரை அவள் அதற்கு முன்னால் கேள்விப்பட்டது கூட இல்லை.. அந்தப் பெயரில் ஒரு திரைப்படம் வந்தது அவளுக்குத் தெரியும்.. ரமண மகரிஷி என்ற மகான் ஒருவர் இருந்ததைப் பற்றித் தெரியும்.. மற்றபடி பெயரைக் கேட்டவுடன் பயப்படுத்துகிற பூச்சாண்டியாய் ரமணன் என்ற பெயரை அவள் கேள்விப் பட்டதில்லை…

“இவன் பெயர் உனக்கெப்படித் தெரியும்..?”

“ஊருக்கே தெரியும்..”

“எனக்குத் தெரியாதே..”

“அந்த லட்சணத்திலே நீ இருக்கிற..”

ஹாசினி விமரிசித்த விதத்தில் மாளவிகாவிற்கு கோபம் வந்துவிட்டது.. ரமணன் என்ற பெயரைத் தெரியாமலிருக்கும் குற்றத்திற்காக.. அவளுடைய லட்சணத்தையே ஹாசினி விமரிசிப்பதா…?””

“சும்மா பூச்சாண்டி காட்டாதேடி..”

“அடி இவளே..! இவனே பூச்சாண்டிதாண்டி…”

“ஜோக்கடிக்காதே..”

“ஜோக்கில்லை மாளவிகா.. இவன் பெரிய தாதா.. இந்த ஊரே இவன் பெயரைக் கேட்டா அலறும்.. நீயென்னன்னா.. அப்படியான்னு சாதாரணமா கேட்டு வைக்கிற..”

அப்போதுதான் ‘சுரீர்’ என்று உறைத்தது மாளவிகாவிற்கு..

“என்ன சொல்ற..? இவன் தாதாவா..?”

“அப்படித்தான் சொல்லிக்கிறாங்க..”

“என் பின்னாலேயா வர்றான்..?”

“பின்னே..? என் பின்னாலேயா வர்றான்..? நான் வேணும்னா ஒதுங்கி நின்னுக்கறேன்.. நீ அதை முதலில் கன்பர்ம் பண்ணிக்க..”

அது தான் சாக்கென்று.. ரமணனின் பின் தொடர்தலில் பயந்து போயிருந்த ஹாசினி.. பின் தங்கிக் கொண்டாள்.. அவளைத் தடுத்து நிறுத்த முடியாத மாளவிகா.. வேறு வழியின்றி நடையைத் தொடர்ந்தபடி.. ஓரக்கண்ணால்… பின்னாலேயே அவன் வருகிறானா என்று ஆராய்ந்தாள்..

ஹாசினியின் கணிப்பு சரியானதாகத்தான் இருந்தது.. ரமணன் மாளவிகாவைத்தான் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்.. மாளவிகா நடையை எட்டிப் போட்டாள்.. பஸ் ஸ்டாப்பில் பஸ் நின்று கொண்டிருக்க ஓடிப் போய் ஏறிக் கொண்டாள்.. அவன் பஸ்ஸில் ஏறவில்லை..

‘அப்பாடி.. தப்பித்தேன்..’ நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்…

மறுநாள் ஹாசினியிடம் அதைப் பற்றிச் சொன்ன போது…

“அவன் பஸ்ஸிலெல்லாம் ஏற மாட்டான்..” என்றாள் அவள்..

“ஓ.. சாரோட ரேன்ஜீக்கு பிளேனிலதான் பறப்பாராக்கும்..” என்றாள் மாளவிகா..

ஹாசினி ஆமாமென்று சொன்னாள்.. அத்தோடு நிறுத்தாமல் ரமணனைப் பற்றிய புள்ளி விவரங்களை அள்ளித் தெளித்தாள்..

“அவனுக்குச் சொந்தமா ஹெலிஹாப்டர் இருக்கு மாளவிகா.. வெளிநாட்டுக்குப் போகனும்னா தனிப் பிளேனா புக் பண்ணித்தான் போவானாம்.. அவனைப் போயி பஸ்ஸில் ஏறலைன்னு சொல்ற..” என்றாள்..

அந்த ரமணன் மாளவிகாவிற்காக பஸ்ஸிலேயும் ஏறினான்… பஸ்ஸிலிருந்த கூட்டமெல்லாம் பாதி வழியிலேயே இறங்கி ஓடிப்போய் விட.. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு.. பஸ்ஸை ஓட்டிய டிரைவரும்.. கண்டக்டரும்தான் மாளவிகாவிற்கு துணையாக பஸ்ஸில் இருந்தார்கள்…

எந்த ஸ்டாப்பிலும் நிற்காமல் பஸ் ஓடிக் கொண்டிருக்க.. மாளவிகாவையே மௌனப் பார்வை பார்த்த ரமணன் அவளைப் பார்க்கத் தோதாக நின்றபடி பயணித்தான்..

மாளவிகா இதை ஹாசினியிடம் சொன்ன போது அவள் விழிவிரித்தாள்..

“உனக்குப் பயமா இல்லையாடி..?”

“ஊஹீம்.. பஸ்ஸில் இருக்கிறவங்கதான் பயந்து போய் இறங்கி ஓடிட்டாங்க.. டிரைவரும்.. கண்டக்டரும் தான் பாவம்.. ஓட முடியல..”

கலகலத்துச் சிரித்த மாளவிகாவை இரக்கத்துடன் பார்த்தாள் ஹாசினி.. அவளின் இரக்கப் பார்வையில் மாளவிகாவின் சிரிப்பு நின்று விட்டது..

“ஏண்டி அப்படிப் பார்க்கிற..?”

“உன்னாலேயும் ஓட முடியாது மாளவிகா..”

“ஏன் முடியாது..?”

“அது அப்படித்தான்..”

அவள் சொன்னதைப் பரிசோதித்துப் பார்க்க மாளவிகா நினைக்கவில்லை… யார் பின்னால் வந்தால் எனக்கென்ன என்று அவள் தன்போக்கில் கல்லூரிக்குப் போய் வந்து கொண்டிருந்தாள்.. ஒருநாள் மாலையில்.. கல்லூரிக்கு வெளியேயிருந்த சாலையின் ஓரத்தில் அவளை வழிமறித்த ரமணன் தன் காதலைச் சொல்லி விட்டான்..

அதுவரை அவன் பேசாமல் பின் தொடர்ந்து வந்ததில் தைரியம் கொண்டிருந்தவளாக மாளவிகா நடந்து கொண்டிருக்க.. வேக எட்டுடன் அவளை நெருங்கிய ரமணன் அவளை வழிமறித்தான்…

“மாளவிகா.. கொஞ்சம் நில்லு..”

என்னதான் அவன் அவளைத் தினமும் தொடர்ந்து வந்தாலும்.. என்னவோ காலம்.. காலமாய் பழகியதைப் போல பெயரைச் சொல்லி உரிமையுடன் ஒருமையில் அழைத்ததில் மாளவிகாவுக்கு கோபம் வந்தது…

“ஹலோ.. யார் சார் நீங்க..? என் வழியை ஏன் மறிக்கறிங்க..?”

“நான் ரமணன்..”

“இருந்துட்டுப் போங்க..”

“உன்னைக் காதலிக்கிறேன்..”

அவள் விழிகளுக்குள் ஊடுறிவிப் பார்த்தபடி நிதானமாக ரமணன் சொல்ல “என்னது..” என்று அதிர்ச்சியை உள்வாங்கினாள் மாளவிகா..

அவன் அதைத்தான் சொல்லுவான் என்பதை நன்கு அறிந்திருந்த போதும்.. அவன் அதைச் சொல்லி விட்டதில் அவளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது..

‘இருந்திருந்து ஒரு ‘தாதா’தான் என்னைக் காதலிக்கனுமா..?’

0Shares

Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link