Chapter 07
‘இதுதான் காதலா..?’
மாளவிகாவிற்குப் புரியவில்லை.. ரமணனின் மனதிலும்.. அஸ்வினின் மனதிலும் பூத்ததாகச் சொல்லப் படும் பூ இதுதானா என்று தெரியாமல் அவள் தவித்தாள்.. அவள் பஸ்ஸில் ஏறும்போது அவன் பார்த்த பார்வையில் சிக்கித் தவித்தது அவளின் இளம் மனது..
அதுவும்.. அவளுக்காக அவன் தலையசைத்தபோது.. பதிலுக்கு தலையசைக்கச் சொல்லி.. அவளின் மனது அவளைக் கட்டாயப் படுத்தியது…
“என்ன சொல்கிறான் உன் கள்வன்..?”
மதிய உணவு நேரத்தின் போது ஹாசினி கேட்டாள்.. அவள் யாரைக் கேட்கிறாள் என்று புரியாமல் ‘ஙே..’ என்று விழித்தாள் மாளவிகா..
“அதாண்டி.. உன்னைக் காதலிக்கிற ரமணனைத் தான் சொல்றேன்..” அவளே விளக்கம் சொன்னாள்..
“அவன்.. கள்வனா..?”
ஏனோ மாளவிகாவினால் அவனை அப்படி நினைக்க முடியவில்லை.. சில தினங்களுக்கு முன்னால் சிதம்பரம் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த திரைப்படத்தின் பெயர் அவளுக்கு நினைவுக்கு வந்தது…
‘கள்வனின் காதலி..!’
அது தான்தானோ என்ற நினைவில் உதட்டைக் கடித்துக் கொண்டாள் மாளவிகா..
“அவன் கள்வனில்லைதான்.. ஊரறிஞ்ச தாதாவை உன்னைக் காதலிக்கிறவனாச்சேன்னு.. போனாப் போகுதுன்னு கள்வன்னு சொன்னேன்..”
“ஏய்ய்.. நீ உதைதான் வாங்கப்போற..”
“எதுக்கு உன் ஆளை கள்வன்னு சொன்னதுக்கா..?”
“அவன் என் ஆளில்ல..”
“தோடா.. இதை நம்ப நானொன்னும் பப்பா இல்லை..”
“உன்னை பப்பான்னு இந்த காலேஜில ஒரு குருவி கூடச் சொல்லாது..”
“அதை விடுடி… இப்ப குருவிக்கும்.. நமக்கும் என்ன பிரச்னை..? உன் கதைக்கு வா.. இன்னைக்கு நீ அவனைப் பார்த்திருக்கனுமே..”
எப்படி அவள் இதைக் கண்டு பிடித்தாள் என்ற நினைவில் விழி விரித்தாள் மாளவிகா.. அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ஹாசினியின் புருவங்கள் உயர்ந்து இறங்கின..
“எப்படி.. கண்டு பிடிச்சிட்டேனா..? அதான் உன் முகத்தில எரியற பல்பே சொல்லிருச்சே.. அம்மணி அவனைப் பார்த்துட்டுத்தான் வர்றான்னு.. அது எப்படிடீ.. அவனைப் பார்த்தா மட்டும் உன் முகம் வெளிச்சமா ஆகிருது..?”
“ஆமாமா.. அதுக்கு முன்னாலே இருண்டுதானே இருந்துச்சு..”
“என்னவோ போடி மாளவிகா.. ஒரு அவசர ஆத்திரத்துக்கு உன்கிட்ட உதவி கேட்டு வந்துக்கலாம்..”
இப்படிச் சொன்ன ஹாசினி காரில் வந்து போகும் அளவிற்கு வசதியானவள்..
“கிண்டல் பண்றியா..? உனக்குப் போய் நான் உதவி செய்யனுமா..?”
“என்னடி இப்படிச் சொல்லிட்ட..? பெரிய தலையே உன் கைக்குள்ள இருக்குது.. அந்த ரமணனால முடியாததுன்னு ஒன்னும் இல்ல.. அவன் செல்வாக்கு.. குமரி முனையில இருந்து.. இமயம் வரைக்கும் பாயுமாக்கும்..”
“விட்டா அவனுக்கு ரசிகர் மன்றமே கட்டிருவ போல இருக்கே.. நான் வேணும்னா ஒன்னு செய்யவா..?”
“என்ன செய்யப் போற..?” ஹாசினி ஒரு மார்க்கமாக பார்த்தாள்..
“ஏண்டி இப்படிச் சந்தேகப் பார்வை பார்க்கிற..?”
“சும்மாவே நீ ஒன்னு செய்யவான்னு கேட்டுட்டு ஓராயிரம் செய்யற ஆளு.. உன்னோட பேக்ரவுண்டு வேற இப்ப பலமா இருக்கு.. அதான் சந்தேகமா இருக்கு..”
“அந்த பேக்ரவுண்டைத் தூக்கி உன் பின்னாலே நிப்பாட்டிரவா..?”
“என்னடி சொல்ற..?”
“அந்த ரமணன்கிட்டச் சொல்லி உன்னைக் காதலிக்கச் சொல்லவான்னு கேட்டேன்..” அமைதியாக மாளவிகா சொல்ல..
“அடிப்பாவி..” அலறினாள் ஹாசினி…
“நீதானேடி அவனோட பேக்ரவுண்டைப் பார்த்துப் பெருமூச்சு விட்ட..?”
“அதுக்காக..? இப்படியா சொல்லி வைப்ப..?”
“அவன் உயரத்தைப் பத்தி உயர்த்திப் பேசினதினால உன் மனசுக்குள்ள அவன் மேலே ஒரு பீலிங்ஸ் இருக்குதோன்னு ஒரு சம்சயம்..”
“அப்படியெல்லாம் சம்சயப் பட்டுறாதேடி தாயே.. சூரியனைக்கூட உயரத்தில இருக்காருன்னு அண்ணாந்து பார்க்கிறோம்.. அதுக்காக அதைத் தொட்டுப் பாருன்னு பக்கத்திலே தள்ளி விடுவியா.. பொசுங்கிப் போயிடுவேண்டி..”
“நீ மட்டும் பொசுங்குவ.. நான் மட்டும் பூவாய் பூப்பேனாக்கும்..?”
“அவனுக்கு உன்னைப் பார்த்தாத்தானே மனசுக்குள்ள பூப்பூக்குது..? அவன் மத்தவனுக்குத்தான் சூரியன்.. உனக்கு நிலாடி.. அதுவும் பௌர்ணமி நிலா..
“சொல்லிக்கிட்டே இரு.. ஒருநாள் இல்லைன்னா.. ஒருநாள் உன்னை அவன்கிட்டக் கோர்த்து விட்டுட்டு நான் நிம்மதியா இருக்பேன்..”
“அதானே நடக்காது..” தலையை ஆட்டிச் சிரித்தாள் ஹாசினி..
“ஏன் நடக்காது..?” சண்டைக்கு வந்தாள் மாளவிகா..
“நீ எப்படியோ எனக்குத் தெரியாது.. ஆனா.. அவனைப் பொறுத்த வரைக்கும்.. ராமன்டி..” நிச்சயமாகச் சொன்னாள் ஹாசினி..
“ராமனா..?”
“ம்ம்ம்.. உன்னைத்தான் அவன் காதலிப்பான்.. என்னால நிச்சயமா இதைச் சொல்ல முடியும்..”
“நீ ரொம்பத்தான் கண்ட..”
“நான் கண்டதில்லைதான்.. ஆனா.. கண்டவங்க பேசினதைக் கேட்டிருக்கேன்.. ரமணன் பெண்களைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டானாம்.. அப்படிப் பட்டவன்.. உன்னை மட்டும் சுத்திவர்றான்னா அவன் ராமனாத்தானே இருக்க முடியும்..?”
ஹாசினியின் பேச்சில் மாளவிகாவின் மனம் சங்கடப் பட்டது.. அவன் ராமனாக இருந்தான்தான்.. ஆனால்.. அவள் அவனுடைய சீதையாக இருக்கிறாளா..?
அன்று இரவு.. அவள் தூங்க வெகு நேரமானது..
அதிகாலைக்கான அத்தனை அறிகுறிகளும் அந்த வீட்டில் ஆசம்பமாகியிருந்தன.. சிடியில் ‘கௌசல்யா.. சுப்ரபாதம்..’ ஒலித்துக் கொண்டிருந்தது.. பூஜையறையில் காமாட்சி விளக்கு ஒளிர்ந்து கொண்டிருக்க.. அகர்பத்தியின் மணம் வீட்டை நிரப்பியது.. சமையலறையில் மதுரா போட்ட காபியின் மணம் ஹாலைக் கடந்து அதை ஒட்டியிருந்த படுக்கையறைகளில் நுழைந்தது.. காபியின் மணத்தை நுகர்ந்தவளாய் கண் விழித்தாள் மாளவிகா..
எழுந்து அழகாக சோம்பல் முறித்தவள் குளியலறைக்குள் புகுந்து பல்துலக்கி முகம் கழுவி வெளிப்பட்டாள்..
“அம்மா.. காபி..”
சமையலறைக்குள் சென்றவளிடம் காபியை நீட்டிய மதுரா.. குளித்து முடித்து.. மங்களகரமாக இருந்தாள்..
“அழகா இருக்கீங்கம்மா..” மாளவிகா தாயின் கழுத்தைக் கட்டிக் கொள்ளப் போனாள்…
“ஐஸ் வைக்கறியா.. குளிக்காம தொடாதே..” கையிலிருந்த கரண்டியினால் மகளை ஒரு போடு போட்டாள் மதுரா..
“எப்படிம்மா அப்பாவைக் கல்யாணம் பண்ணிக் கிட்டிங்க..?” காபியை உறிஞ்சியபடி கேட்டாள் மாளவிகா..
“நானெங்கே அவரைக் கல்யாணம் பண்ணிக் கிட்டேன்..? அவர்கூட எனக்கு கல்யாணம் ஆகிருச்சு..” இயல்பாக பதில் சொல்லியபடி சமையல் வேலைகளில் ஆழ்ந்தாள் மதுரா…
பெரும்பாலான இந்தியப் பெண்கள் இந்தப் பதிலைத்தான் சொல்வார்கள் என்ற நினைவுடன் காபித் தம்ளரை சின்க்கில் போட்டு கழுவி வைத்தாள் மாளவிகா..
மகளின் பொறுப்புணர்ச்சியில் மதுராவின் முகத்தில் கனிவு வந்தது..
“நான் ஹெல்ப் பண்ணவாம்மா..?”
மாளவிகா கேட்டதும் இதமாக உணர்ந்தாள் மதுரா.. இந்த ஒரு சொல்லுக்காகத்தானே.. இந்திய குடும்பத் தலைவிகள் ஏங்குகிறார்கள்..?
‘ஹவுஸ் வொய்ப்..’ எனப்படும் இல்லத்தரசிகளுக்குத் தான் எத்தனை வேலைகள்..! காலையில் வீட்டிலிருக்கும் மற்றவர்கள் எழுந்து கொள்வதற்கு முன்னாலேயே எழுந்திருக்க வேண்டும்.. பம்பரமாய் சுழன்று காலை உணவைத் தயாரிக்கும் வேலையை முடிக்க வேண்டும்.. கணவரையும்.. குழந்தைகளையும் வெளியே அனுப்பி வைத்துவிட்டு வீட்டைப் பார்த்தால் அது பானிபட் போர்க்களம் போல காட்சி தரும்.. படுக்கையறைகளில் சுருட்டி வீசப்பட்டிருக்கும் ஈரத்துண்டுகளை சேகரித்து வாஷிங் மெஷினில் போடவேண்டும்.. சில நேரங்களில் அவை சோபாவின் அடியிலேயும்.. டிவியின் பின்புறத்திலும் கிடக்கும்.. அதைத் தேடிக் கண்டுபிடித்து துவைத்து உலர்த்தாவிட்டால் தேவையில்லாத வாசனைகள் அந்தத் துண்டில் வருவதோடு மட்டுமில்லாமல் வீட்டையும் அவை இட்டு நிரப்பக் கூடும்…
அழுக்குத் துணிகளை சேகரித்து வாஷிங் மெஷினில் போட்டுவிட்டு.. வீட்டை சுத்தம் பண்ணி.. சமையலறையில் குவிந்திருக்கும் பாத்திரங்களை கழுவித் துடைத்து அடுக்கி வைத்து விட்டு நிமிரும் போது நேரம் நண்பகலைத் தொட்டிருக்கும்.. துவைத்த துணிகளை காயப் போட்டு விட்டு.. பசிக்கும் வயிற்றுக்கு கொஞ்சம் சாப்பாட்டை போட்டு விட்டு நிமிர்ந்தால்.. பிற்பகல் வேளை வந்திருக்கும்..
பால் வாங்கித் திரும்பும் போது.. குழந்தைகள் வந்திருப்பார்கள்.. அவர்களுக்கு உடைமாற்றி.. அழுக்குத் துணிகளை காலி வாஷிங்மெஷினில் திணித்து.. அவர்களுக்கான பாலையும்.. பலகாரத்தையும் கொடுத்து முடிக்கும் போது இரவு வந்து சேர்ந்திருக்கும்.. கணவரும் வந்து சேர்ந்திருப்பார்.. அடுத்த காபி கலப்பு.. பலகார பரிமாற்ற வேலைகள் ஆரம்பிக்கும்.. அது முடியும் போது இரவுச் சமையல் வேலை ஆரம்பிக்கும்..
எல்லோருக்கும் இரவு உணவைக் கொடுத்து விட்டு.. மற்றவர்கள் சூடாக சாப்பிடுவதை.. இவள் ஆறி.. அவலான பின்பு சாப்பிட்டு.. சமையலறை விளக்கை அணைக்கும் போது.. வீட்டில் உள்ளவர்கள் நிம்மதியாக உறங்கியிருப்பார்கள்.. இதற்கு இடையில் வந்து போகிறவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும்.. துவைத்து உலர்ந்த துணிகளை மடித்து வைக்க வேண்டும்.. காய்கறி வாங்க வேண்டும்.. கரண்ட் பில்
கட்ட வேண்டும்..
அப்பப்பா..! சொல்லும் போதே கண்னைக் கட்டுகிறது.. இல்லையா..?
Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.