Chapter 09

0Shares

“நான் ஒரு போலிஸ் ஆபிசர்..” கார்த்திக் பெருமையாகச் சொன்னான்..

இப்போதாவது அவள் பிரமிப்பாள் என்று பார்த்தால் அவள் லேசாக தலையை மட்டும் ஆட்டி விட்டு காரின் பின் சீட்டின் கதவைத் திறந்து ஏறி உட்கார்ந்து விட்டாள்..

இரண்டு வகையான ஏமாற்றங்களுக்கு ஆளானான் கார்த்திக் முதலாவது அவன் எதிர்பார்த்தபடி அவள் பிரமிக்காதது.. இரண்டாவது.. அவன் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ளாமல் காரின் பின்சீட்டில் உட்கார்ந்து கொள்வது..

‘இவளுக்கு நானென்ன டிரைவரா..?’

கார் கதவை ஓங்கிச் சாத்தி தன் கோபத்தை வெளிப் படுத்தினான் கார்த்திக்.. அதைப் புரிந்தும் புரிந்து கொள்ளாதவளைப் போல முகத்தை வைத்துக் கொண்ட மாளவிகா ஜன்னல் பக்கமாக திரும்பி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்..

காரின் முன்பக்க கண்ணாடியை சரிசெய்த கார்த்திக் அதன் வழியாக அவளைப் பார்த்தபடி காரை ஓட்ட ஆரம்பித்தான்..

‘இம்சை..’ மனதுக்குள் திட்டித் தீர்த்தபடி மாளவிகா நீ எதன் வழியாக என்னைப் பார்த்தாலும் எனக்கென்ன வந்தது என்று வெளியே பதித்த பார்வையை திருப்பாமலிருந்தாள்..

“க்கும்..” தொண்டையைக் கனைத்தான் கார்த்திக்..

‘அப்படியே எருமை மாடு செருமறதைப் போலவே இருக்கு..’ என்று நினைத்துக் கொண்டாள் மாளவிகா..

அவள் திரும்பிப் பார்ப்பாள் என்று செருமிப் பார்த்த கார்த்திக்.. இது வேலைக்கு ஆகாது என்ற முடிவுடன்..

“ஆக்சுவலாய் மாளவிகா..” என்று ஆரம்பித்தான்..

‘ரம்பம் போட ஆரம்பிச்சுட்டியா.. கண்டுக்காம வெளியே பார்த்தாலும் விட மாட்டேங்கறியே..’ மாளவிகா நகம் கடித்தாள்..

“நான் ஐ.ஏ.எஸ் ஆகனும்னுதான் ஆசைப்பட்டேன்.. ஆனா டாடிதான் ஐ.பி.எஸ் ஆகனும்னு சொல்லிட்டார்..”

ஒருவழியாக அவன் ஐபிஎஸ் ஆபிசர் என்ற பெருமையை நிலை நாட்டிவிட்டு இப்போதாவது அவள் பிரமிப்பாளா என்ற ஏக்கத்துடன் அவன் கார்த்திருந்தான்..

மாளவிகா அவன் சொன்னதை விட்டுவிட்டு வேறு ஒன்றில் விளக்கம் கேட்டாள்..

“டாடியா..? நீங்க மாமாவை அப்பான்னுதானே கூப்பிடுவீங்க..?”

‘ஞாபகம் வைத்திருக்காளே..’ அவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது..

‘இப்ப அதுதான் ரொம்ப முக்கியம்.. நீ பெரிய உலக அழகி..! இவ்வளவு தூரத்துக்கு அலட்டிக்கற.. உங்க அப்பனுக்கு இருக்கிற வசதிக்கு உனக்கெல்லாம் இவ்வளவு ஆணவம் கூடாது..’

“இல்லையே.. நான் டாடின்னுதான் கூப்பிடுவேன்..”

“இல்லவே இல்லை.. நீங்க அப்பான்னுதான் கூப்பிடுவீங்க.. வேனும்னா உங்க அப்பாகிட்டயே இதைப் பத்திக் கேட்டுப் பார்க்கலாமா..?”

“வேணாம்.. வேணாம்..” கார்த்திக் மறுத்தான்..

அவனுடைய அப்பாவான ஜெகநாதனுக்கு பொய் சொல்ல வராது..

“ஏன்..?” அறியாதவளைப் போல நமட்டுச் சிரிப்புடன் கேட்டாள் மாளவிகா..

“பூமிகா எப்படியிருக்கு..?” கார்த்திக் பேச்சை மாற்றினான்..

“ஃபைன்..”

“அப்படியா..? அதை நினைச்சு மாமா ரொம்ப புலம்பினார்.. நீ என்னன்னா ‘ஃபைன்’ அப்படின்னு ஒத்தைச் சொல்லில் முடிச்சுக்கறியே..”

கார்த்திக்கின் நோக்கம் எதுவென்று மாளவிகாவிற்கு தெளிவாக புரிந்தது.. பூமிகாவை அவனுக்குக் கொடுக்க வேண்டுமென்று மதுரா ஆசைப்பட்டாள்.. அதற்காக ஜெகநாதனிடம் இடைபட்ட உறவினர்களின் மூலம் தூதுவிட்டாள்.. பதிலுக்கு ஜெகநாதன் கேட்ட சீர்வரிசை பட்டியலைக் கேட்டவளுக்கு மூச்சடைத்துப் போனது.. பூமிகாவை வேறு இடத்தில் திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள்.. இப்போது அந்த மாப்பிள்ளை பூமிகாவை சரியாக வைத்துக் கொள்ளவில்லை.. அந்தப் பெருமையைத் தான் அவன் கொண்டாட நினைக்கிறான்..

“ஒவ்வொருத்தரின் பெர்ஸனல் ஃலைபிலும் ஆயிரம் இருக்கும் கார்த்திக்.. அது நமக்கு எதுக்கு..?”

கார்த்திக்கின் முகத்தில் ஈயாட வில்லை.. ‘ஆமாம் கார்த்திக்.. உனக்கு கல்யாணம் செய்து கொடுத்திருந்தால் பூமிகா நல்லபடியாக வாழ்ந்திருப்பாள்.. இப்போது பார்.. அவளைக் கட்டிக் கொண்டவன் கெடுமை பண்ணுகிறான்..’

இப்படியெல்லாம் மாளவிகா சொல்லிப் புலம்பியிருந்தால் அவனுக்கு சந்தோசமாக இருந்திருக்கும்.. சிதம்பரமும்.. மதுராவும் அதைத்தான் செய்திருந்தார்கள்.. ஏன்.. அஸ்வின்கூட அதைச்சொல்லிப் புலம்பியிருந்தான்.. மாளவிகா மட்டும்தான்.. எதற்கும் அசைந்து கொடுக்காத கல்லூளி மங்கியாக அசையாமல் பேசினாள்..

“அப்படிச் சொல்லிற முடியுமா மாளவிகா..? அதைக் கல்யாணம் பண்ணிக்கிட்டவன் பணம் கேட்டு கொடுமை பண்ணுகிறானாமே.. செய்த சீர்வரிசைகளைப் போல 

நூறு மடங்கு வாங்கிட்டானாம்.. இன்னும் அவனுக்கு திருப்தியாகலையாமே..?”

‘ஜெகந்நாதன் அண்ணனுக்கு சொந்தத்தை விட சீர்வரிசைதான் பெரிசாயிருக்கு’ என்று இடைபட்ட உறவினர்களிடம் சொல்லி அனுப்பியிருந்தாள் மதுரா.. அதை இப்போது இவன் சொல்லிக் காட்டுகிறான் என்பது மாளவிகாவுக்குப் புரிந்தது…

“இதைப் பத்தியெல்லாம் எனக்கு பெரிசா எதையும் யோசிக்கவும் வராது.. பேசவும் வராது.. நீங்க அம்மா.. அப்பாகிட்டப் பேசுங்களேன்.. அவங்க நிறைய சொல்லுவாங்க..” எரிச்சலுடன் சொல்லி விட்டாள் மாளவிகா..

“என்னவோ போ மாளவிகா.. நான் கூட அப்பாகிட்டச் சொல்லிப் பார்த்தேன்.. அந்தஸ்து என்னப்பா அந்தஸ்து.. அத்தை பாவம் வசதியில்லாத குடும்பத்திலே வாழ்க்கைப் பட்டுச் சிரமப் படறாங்க.. அவங்க பெத்த பொண்ணுகள்ல ஒருத்திக்காவது வாழ்க்கை கொடுக்கலாமேன்னு.. அப்ப அவர் அதை காதில போட்டுக்கலை..”

‘ஒருத்தியா..?’ அவனின் ஆணவமான பேச்சில் கொதித்துப் போனாள் மாளவிகா..

‘இவன் வாழ்க்கை கொடுக்கிற அளவுக்கு நாங்க ஆகிட்டோமா..’

“என்ன மாளவிகா பேசாமல் வர்ற..”

“எத்தனை வருசமானாலும் சில பேர் மாறவே மாட்டாங்கிறாங்களேன்னு யோசிச்சுக்கிட்டு வர்றேன்..”

கார்த்திக்கின் முகம் கருப்பதை திருப்தியுடன் ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டாள் மாளவிகா.. அவளின் கல்லூரி வாசல் தெரிந்ததில் அவளுக்குள் எல்லையில்லாத நிம்மதி ஏற்பட்டது..

“என் காலேஜ் வந்துருச்சு கார்த்திக்..”

இறங்கியவள் ஒரு நன்றியைக் கூடச் சொல்லாமல்.. யாரோ ஒரு தோழியைப் பார்த்து ‘ஹாய்..’ என்று கையாட்டிய படி சென்று விட்டதில் கடுப்பாகிப் போனான் கார்த்திக்..

‘இவ மாறாம இருந்துக்கிட்டு என்னை மாறலைன்னு குத்திக் காட்டிட்டு போறாளே..’

அன்று முழுவதும் எரிச்சலுடனே இருந்தாள் மாளவிகா.. எதைக் கேட்டாலும் சுள்ளென்று விழுந்தவளை.. 

“காலையில யார் முகத்தில முழிச்சடி.. இந்தப் பாடு படுத்தற..” என்று கடிந்து கொண்டாள் ஹாசினி..

“முழிச்சதெல்லாம் நல்ல மூஞ்சிதான்.. ஆனா.. அதுக்கப்புறமா வந்து சேர்ந்ததுதான் நல்ல மூஞ்சியில்லை..” என்றாள் மாளவிகா.. 

“யாரைடி பார்த்த..?” ஹாசினி கேட்டாள்..

“எங்க சொந்தக்காரன் ஒருத்தன்டி.. கடுப்படிச் சுட்டான்..” தலையைப் பிடித்துக் கொண்டாள் மாளவிகா.. 

“தலைவலியையே வர வைச்சிட்டானா.. ஐயோ பாவம்..” பரிதாபப் பட்டாள் ஹாசினி..

மாலையில் கல்லூரி முடிந்ததும் பஸ் ஸ்டாப்பிற்கு சென்றவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.. கண்கள் சிவக்க அங்கே வந்து இறங்கினான் ரமணன்…

“என்கூட காரில் வரமாட்ட.. ஆனா வேறொருத்தன் கூட காரில் வருவியா..?”

இவனுக்கு எப்படித் தெரிந்தது என்று யோசித்த போதே அதிலிருந்த அபத்தத்தை தெளிவாக உணர்ந்தாள் மாளவிகா..

என்று ரமணன் அவளிடம் காதலைச் சொன்னானோ.. அன்றிலிருந்தே அவனின் கண்காணிப்பு வட்டத்திற்குள் மாளவிகா வந்து விட்டாள்…

0Shares

Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link