Chapter 19
அவள் மனதில் ஏமாற்றம் கவிந்தது…
“என்னக்கா.. யாரைப் பார்க்கிற..?”
அவள் திரும்பியதைப் பார்த்த அஸ்வின் கேட்டான்..
“ஒன்னுமில்லைடா..” மாளவிகா வீட்டுக்குள் நடந்தாள்…
அஸ்வின் தோளில் மாட்டியிருந்த பையைத் தூக்கி சோபாவில் போட்டுவிட்டு சரிந்தான்.. பழைய சோபா அவனின் கனத்தை தாங்க முடியாமல் ஆடியது…
“ம்ஹீம்.. இதைத் தூக்கிக் கடாசிட்டு புதுசா ஒரு சோபா செட்டை வாங்கிப் போடலாம்ன்னு அப்பாகிட்டச் சொல்லித்தான் பாக்கறேன்.. என் பேச்சு எடுபட மாட்டேங்குது..” அவன் அலுத்துக் கொண்டான்..
“அவரால முடிஞ்சது இவ்வளவு தாண்டா.. நீதான் பெரிய மனுசனா ஆகிட்டேல்ல.. இனிமே குடும்பப் பொறுப்பை நீ எடுத்துக்கிட்டு எல்லாத்தையும் புதுசாவே வாங்கிப்போடு..” காபியுடன் வந்த மதுரா சொன்னாள்..
“உங்க புருசனை ஒரு வார்த்தை சொல்லிரக் கூடாதே..” காபியை உறிஞ்ச ஆரம்பித்தான் அஸ்வின்…
“எதுக்குச் சொல்ற..?” மதுரா முறைத்தபடி எதிரே உட்கார்ந்தாள்..
“அப்புறம்.. இன்னியோட படிப்புக்கு டாட்டா போல இருக்கு..?” மாளவிகாவைப் பார்த்துக் கேட்டான் அஸ்வின்..
“ஆமாண்டா…” சந்தோசமாகச் சொன்னாள் மாளவிகா…
“கொடுத்து வைச்சவ…” ஏக்கப் பெருமூச்சு விட்டான் அஸ்வின்…
“இன்னும் ரெண்டு வருசத்தில நீயும் கொடுத்து வைச்சிருப்ப..” என்றாள் மதுரா…
“உன் மார்க்குக்கும்.. திறமைக்கும் கேம்பஸ் இன்டர்வியூவில வேலை கிடைச்சு.. காத்திருக்கு.. இவனுக்கும் அப்படிக் கிடைக்கணுமே..”, மதுரா சொன்னாள்..
“அது சந்தேகம்தான்.. ஐயாவுக்கு மேல் மாடி காலியாச்சே…” தலையைத் தொட்டுக் காண்பித்தாள் மாளவிகா..
“வேலைக்குப் போகப் போகிற திமிரா..?” அஸ்வின் முறைத்தான்…
“ஆமாண்டா.. அதுக்கு இப்ப என்னாங்கிற..?” சண்டைக் கோழியாய் மாளவிகா சிலிர்த்தாள்..
அவர்கள் இருவரும் போர் முரசை கொட்டி விட்டதை அறிந்ததும்..
“எக்கேடோ கெட்டுப் போங்க..” என்ற ஆசிர்வாதத்துடன் இடத்தைக் காலி செய்து விட்டாள் மதுரா…
மாளவிகா கையிலிருந்த புத்தகத்தை அஸ்வினின் மீது வீசினாள்.. அவன் நகர்ந்து தப்பித்து விட்டு அவனுடைய பையைத் தூக்கி அவள் மீது வீசினான்.. இப்போது அவள் நகர்ந்து கொள்ள.. பை பறந்து மிகச்சரியாக.. வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்த சிதம்பரத்தின் முகத்தின் மீது தாக்கியது…
“அப்பா..” தலையில் கைவைத்தான் அஸ்வின்…
பை தாக்கியதால் நிலை குலைந்து நின்ற சிதம்பரம்.. முகத்திலிருந்து நழுவிய மூக்குக் கண்ணாடி எங்கே பறந்து போனது என்று தேடினார்..
“இதோ.. இங்கே இருக்குப்பா…” மாளவிகா டிவிப் பெட்டியின் பின்னாலிருந்து அதைக் கண்டு பிடித்துக் கொடுத்தாள்..
அஸ்வின் சமர்த்துப் பிள்ளையாக அவனின் பையை எடுத்துக் கொள்ள.. மகனைப் பார்த்தார் தந்தை…
“அஸ்வின்..”
அவரின் குரலில் உபதேசம் ஆரம்பிக்கப் போவதின் அறிகுறி இருந்ததில் நொந்து போன அஸ்வின்..
“அப்பா..” என்றான்..
“வள்ளுவர் என்ன சொல்லியிருக்காருன்னு தெரியுமா..?”
“எந்த வள்ளுவர்ப்பா..? நம்ம தெருக்கோடியில பலசரக்குக் கடை வைத்திருக்காரே.. அந்த வள்ளுவரா..?”
மாளவிகாவுக்கு சிரிப்பு வந்து விட்டது.. அவள் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்ததில் அஸ்வின் கடுப்பாகிப் போனான்…
“ம்ஹீம்.. மாளவிகாவைப் பத்திக் கவலையில்லை.. அவள் படிப்பை முடிக்கும் போதே வேலையை தயாரா வைச்சுக்கிட்டா.. உன் கவலைதான்.. பூமிகாவோட கவலைய விட பெரிசா இருக்கப் போகுது…”
சிதம்பரம் இப்படிச் சொல்லியதில் அஸ்வினின் ஆண்மை சிலிர்த்துக் கொண்டது.. மீசை முளைத்த ஆண் பிள்ளையான அவன்.. கணவனை எதிர்த்து நின்று ஒரு கேள்வி கேட்கக் கூடாத துப்பில்லாத பூமிகாவை விட குறைவாகப் போய் விட்டானா..?
“அப்பா இது அநியாயம்..”
“எதுடா..?”
“வள்ளுவர் யார்ன்னு நீங்க கேட்டிங்க.. நான் பதில் சொன்னேன்.. அதுக்கு என் மரியாதையை தேவையில்லா நீங்க டேமேஜ் பண்ணக் கூடாது…”
“நான் வள்ளுவர் யாருன்னு உன்கிட்டக் கேட்கலியேப்பா…”
“வள்ளுவரோட பெயரை இழுத்தீங்களா.. இல்லையா..?”
“இழுத்தேன்தான்.. எதுக்காக இழுத்தேன்னு முழுசா என்னை நீ சொல்ல விடலியேப்பா..”
“நீங்க சொல்லிட்டாலும்..” வாய்க்குள் முணுமுணுத்தான் அஸ்வின்..
“பாருடா அஸ்வின்..” சிதம்பரம் ஆரம்பிக்க..
“இவர் கேளுடா அஸ்வின்னுன்ல்ல சொல்லி யிருக்கனும்..?” என்று தம்பிக்கு மட்டும கேட்கும்படி வினாவை எழுப்பினாள் மாளவிகா..
“கொழுப்பு..?” அஸ்வின் அடிக்குரலில் சீறினான்…
“வள்ளுவர் என்ன சொல்லியிருக்கார்னா..” சிதம்பரம் இழுக்க…
“இவர் இன்னைக்கு முழுவதும் சொல்லிக்கிட்டே இருக்கப் போறார்..” என்று அபாயச் சங்கை மெதுவான குரலில் அஸ்வினின் காதுக்கு மட்டும் கேட்கும்படியாக ஊதினாள் மாளவிகா..
“‘மகன் தந்தைக்காற்றும் உதவி – இவன்தந்தை
எந்நோற்றான் கொள் எனும்சொல்..’ ன்னு
சொல்லியிருக்கார்..”
“ஆஹா.. ஆஹாஹா..” மாளவிகா திருக்குறளில் புல்லரித்துப் போனவளாக குரல் கொடுக்க..
“ஏய்ய்..” என்று அடிக்குரலில் சீறினான் அஸ்வின்..
“என்னடா..”
“இவ்வளவு தூரத்துக்கு மகிழ்ந்து போறியே.. அந்தக் குறளில் என்ன சொல்லியிருக்குன்னு உனக்குத் தெரியுமா..?”
“அதை அப்பா சொல்லுவார்…”
“அப்ப.. தெரியாது..?”
“அதைச் சொன்னா கேம்பஸ் இன்டர்வியுவில வேலை கொடுக்க மாட்டாங்கடா அஸ்வின்.. அங்கே வேற சொல்லனும்..”
அவர்கள் அடித்துக் கொண்டிருக்க.. அதைக் கவனிக்காதவராக சிதம்பரம் தன் பணியை செவ்வனே ஆற்றிக் கொண்டிருந்தார்.. ‘இப்படியாகத்தானே…’ என்று தான் அவர் சொல்லவில்லை.. மற்றபடி அவருடைய பேச்சு.. அச்சு அசல் கதா காலட் சேபத்தைப் போலத்தான் இருந்து வைத்தது…
“மகனாகப் பட்டவன்.. பெற்ற தகப்பனுக்கு.. ஆஹா.. இவன் தகப்பன் இவனைப் பெற என்ன தவம் செய்தானோ என்ற சொல்லை வாங்கித் தரனும்…”
“கேட்டுக்கிட்டியா..” பக்க வாத்தியம் வாசித்தாள் மாளவிகா…
“ஏன்ப்பா..?”
“சொல்லுடா மகனே..”
“இந்த வள்ளுவர் அப்பாவைப் பத்தின குறள் எதையும் சொல்லலையா..?”
“ஏன் சொல்லாம..?” சமையலறையிலிருந்து கையில் காபிக் கோப்பை யோடு வெளிப்பட்டாள் மதுரா…
‘இந்த அம்மாவையும்.. காபிக் கப்பையும் பிரிக்கவே முடியாது..’ என்று நினைத்துக் கொண்டாள் மாளவிகா..
பெண்களுக்கான இருப்பிடம் சமையலறை என்று நிர்ணயித்து விட்ட கெட்டிக்கார ஆண்குலத்தை நினைத்துப் பார்த்தபோது அவர்கள் காலத்தை கணிப்பதில் வல்லவர்கள் என்ற நிதரிசனமான உண்மையை மாளவிகாவினால் புரிந்து கொள்ள முடிந்தது..
அவர்கள் ஒரு காபியைப் போட்டால் கூட அது உதவி.. அதையே பெண்கள் முழுநேரத் தொழிலாகச் செய்தால் அது கடமை என்று மாறிப் போன நிலைமையை நினைத்து நொந்து கொண்டாள் அவள்..
வேலைக்குப் போகும் ஆண்களுக்கு வேலைக்கான கால நிர்ணயம் உண்டு.. வீட்டிலிருக்கும் இல்லத்தரசிக்கு அது உண்டா..? இருபத்தி நான்கு மணி நேர வேலையாளாக அவள் ஆகிப் போனாளா..? இல்லை ஆக்கி வைக்கப் பட்டாளா..?
கண்ணுக்குத் தெரியாத மாய வலைக்குள் சிக்கிவிட்ட இந்தியப் பெண்களின் நிலையை எண்ணி பரிதாபப் பட்ட மாளவிகாவிற்கு தானும் அதில் ஒர் அங்கம் என்ற உணர்வும் கூடவே வந்தது…
இன்று அவள் பிறந்த வீட்டில் மதுரா சமைத்துப் போட்டதை சாப்பிட்டுக் கொண்டு இருக்கலாம்.. எதிர் காலத்தில் அவளுக்கு திருமணம் என்ற ஒன்று ஆகும் போது அப்படியிருக்க முடியுமா என்று நினைத்துக் கொண்டவளுக்கு..
‘சீச்சி.. ரமணன் அப்படியெல்லாம் வேலை வாங்க மாட்டான்..’ என்ற நினைவும்.. கூடவே எழுந்து வைத்தது…
Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.