Chapter 26
மனிதராக பிறந்தவர்களுக்கு ஆயிரத்துக்கும் மேலே பிரச்னைகள் இருக்கும்.. அதையெல்லாம் உணராமல் மாளவிகா பேசினால் எப்படியென்ற கோபம் அவனுக்குள் எழுந்தது.. அப்படி உணராமல் இருக்க அவள் கார்த்திக்கைப் போல கொடுத்து வைத்த பிறப்பையா பிறந்திருக்கிறாள் என்ற கேள்வியும் அவனுக்குள் முளைத்தது.. சிதம்பரத்திற்கும் – மதுராவிற்கும் மகளாகப் பிறந்தவளுக்கு ரோசம் என்ன வேண்டிக்கிடக்கிறது என்ற எண்ணமும் அவனுக்குள் உதித்தது…
“அம்மாவுக்கு அன்னைக்கு தலைவலியாம்..?”
“என்னைக்கு..?”
“உன்னைக் கோவிலில் பாத்த அன்னைக்குத்தான்..”
“அவங்களைக் கோவிலில் நான் பாத்ததை நான் சொல்லித்தான் நீங்களே தெரிஞ்சுக்கிட்டிங்க.. அப்புறம் எப்படி அவங்களுக்கு அன்னைக்குன்னு பார்த்து தலைவலின்னு சொல்றிங்க..?”
இவளை யார் இந்த அளவுக்கு யோசிக்கச் சொன்னது என்று ஆத்திரப்பட்டான் கார்த்திக்.. அவனைப் பொறுத்த வரையில் பெண்கள யாருமே ஓர் அளவுக்கு மேல் பேசக்கூடாது.. யோசனை என்பது கூடவே கூடாது.. அவனுடைய அம்மா கோதாவரிக்கு மட்டும் இந்த விதிமுறைகள் பொருந்தாது என்பது வேறு விசயம்..
“இந்தப் பேச்சுக்கு முடிவே கிடையாது மாளவிகா.. விட்டா நீ பேசிக்கிட்டே இருப்ப.. முடிக்க மாட்ட..”
“ஆரம்பிச்சது நானில்லை…”
“அதைவிட.. வேற ஒன்னைக் கேளு…”
“கேட்டுட்டா போச்சு.. நல்லா ஞாபகத்தில் வைச்சுக்கங்க.. இந்தப் பேச்சையும் நீங்கதான் ஆரம்பிக்கிறிங்க.. நானில்லை…”
“ஸ்ஸ்.. கூடக் கூடப் பேசாம சொல்கிறதைக் கேள் மாளவிகா..”
கார்த்திக் அதட்டும் தொனியில் பேசிவைக்கவும் மாளவிகாவிற்கு கோபம் வந்துவிட்டது.. ‘போடா நீயுமாச்சு.. உன் பேச்சுமாச்சு..’ என்று தூக்கிப் போட்டு விட்டுப் போய் விடலாமா என்று அவள் யோசித்தாள்.. ஆனால்.. அவன் என்னதான் சொல்கிறான் என்பதைக் கேட்டு வைத்துக் கொள்ளலாமே என்ற எண்ணத்துடன் மௌனமாக அவன் பேச்சைக் கவனித்தாள்…
அவள் நினைத்ததுதான் சரியாக இருந்தது.. கார்த்திக் கண்களை முகத்தை படுதீவிரமாக வைத்துக் கொண்டு…
“அந்த ரமணன் பெரிய ரௌடி..” என்றான்..
“அதைத்தான் ஏற்கனெவே சொல்லிட்டிங்களே..” பல்லைக் கடித்தாள் மாளவிகா..
“அதனாலே.. அவனிடம் நீ உதவி கேட்டதை வீட்டில் சொல்றது அவ்வளவு நல்லதில்லை..”
“நான் அவரிடம் உதவி கேட்கலையே.. என்பிரண்டு கிட்டத்தான் கேட்டேன்.. அவ அவங்க அண்ணன் காதில்..”
“மறுபடியும் ஆரம்பிச்சிராதே.. தாங்காது.. அதை விட்டு வெளியே வா.. எப்படின்னாலும் இந்த விவகாரத்தை ஒரு ரௌடி தலையிட்டிருக்கான்கிற விவரம் வெளியே தெரியறது சரியா வராது..”
“அதுக்கு என்னதான் செய்யனும்கறிங்க..?”
“ரமணன் விசயத்தை மனசிலயே போட்டுக்க.. வெளியே விடாதே.. இப்போதைக்கு அத்தையும்.. மாமாவும்.. அஸ்வினும் என்ன நினைச்சுக்கிட்டு இருக்காங்களோ அப்படியே இருக்கட்டும்..”
“அதாவது.. நீங்கதான் பூமிகாவோட ஹஸ்பெண்டைக் கூப்பிட்டு லெப்ட் அன்ட் ரைட் வாங்கி வெளுத்துக் கட்டியிருக்கீங்கன்னு நினைச்சுக்கிட்டு இருக்கட்டும்ன்னு சொல்றீங்க..?”
மாளவிகாவின் கிண்டலைப் புரிந்து கொண்ட கார்த்திக்கின் முகம் சுண்டிப் போனது…
‘கொழுப்பு..! இவ கொழுப்பை அடக்கியாகனும்..’
அவனின் முகமாற்றத்தைப் பற்றி அலட்டிக் கொள்ளாத மாளவிகா..
“கார்த்திக்.. எப்பவுமே நம்ம செஞ்ச செயலுக்குத்தான் நாம பெருமைப் பட்டுக்கனும்.. மத்தவங்க செஞ்சதை நாம செஞ்சதா சொல்லிக்கிட்டு ஹீரோ போல பிலிம் காட்டக் கூடாது..” என்று அவன் முகத்துக்கு நேரேயே சொல்லி விட்டாள்…
‘என்ன திமிர்..!’ கார்த்திக் அவளிடம் சூடாக பேசிவிடத் துடித்தான்.. அதற்குள் மற்றவர்கள் வந்து விட்டார்கள்…
“என்ன மாளவிகா.. கார்த்திக்கிட்ட அப்படியென்ன பேசிக்கிட்டு இருக்க..? ரெண்டு பேரும் ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருக்கீங்க போல இருக்கே..” சிதம்பரம் கேட்டார்…
“அதுவாப்பா.. சார் செஞ்ச வீரதீரமான செயலை பாராட்டிக்கிட்டு இருக்கேன்.. இல்லையா கார்த்திக்..?” மாளவிகா இகழ்ச்சியாக கேட்டாள்…
கார்த்திக்கிற்கு அந்தச் சூழலில் மூச்சு முட்டியது.. அவன் அங்கிருந்து கிளம்பி விடவேண்டுமென்ற வேகம் காட்டினான்…
“நான் கிளம்பறேன் மாமா…”
“அதுக்குள்ளேயா..? உங்களுக்காக மதுரா விருந்து சமைச்சுக்கிட்டு இருக்கா.. அதைச் சாப்பிடாம கிளம்புவீங்களா..?”
“எதுக்காக விருந்தாம்ப்பா..?”
“என்ன மாளவிகா இப்படிக் கேட்டுட்ட.. கார்த்திக் பண்ணியிருக்கிற காரியத்துக்கு அவருக்கு விருந்து கொடுக்கலைன்னா எப்படி..?”
“ஆமாமாம்.. கொடுக்கனும்தான்..”
மாளவிகாவின் கண்கள் ஏளனத்துடன் பளபளத்தன.. சமையலறையின் உள்ளேயிருந்து வந்த விதம் விதமான வாசனைகள் கார்த்திக்கின் பசியைக் கிளறி விட்டன.. மதுராவின் கை மணத்தைப் பற்றி அவன் நன்கு அறிவான்..
‘ம்ஹீம்.. பிரியாணியும்.. கோழி வறுவலும் அத்தை கைப்பக்குவத்திலே தயாராகிக்கிட்டு இருக்கு.. சாப்பிடத்தான் எனக்கு கொடுத்து வைக்கலே..’
மாளவிகாவிற்கு உண்மை தெரியாமல் இருந்திருந்தால் அவன் சாப்பாட்டை ஒரு கை பார்த்திருப்பான்.. அப்படியில்லாமல் அவளுக்கு உண்மை தெரிந்திருந்தது.. அதைச் சொல்லிச் சொல்லி வேறு காண்பித்துக் கொண்டிருந்தாள்.. அவளின் ஏளனப் பார்வையின் முன்னால் அவன் தொண்டையில் ஒரு பிடி பிரியாணி இறங்குமா..?
எங்கே போய் விடப் போகிறது பிரியாணி..? இன்றில்லா விட்டால் இன்னொரு நாள் ஒரு பிடிபிடிக்காமலா போய் விடப் போகிறோம் என்று தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டு அவன் கிளம்பி விட்டான்..
அவன் போன பின்னால் விழுந்து விழுந்து சிரித்தாள் மாளவிகா.. அவள் சிரிப்பு அடங்க வெகு நேரமானது.. வீட்டிலிருந்த மற்றவர்களும் சிரிக்கும் மனநிலையில் இருந்ததினால் மாளவிகாவுடன் சேர்ந்து சிரித்து முடித்து விட்டு.. சிரிப்பு அடங்கிய பின்பு காரணத்தை வினவினார்கள்..
“சிரிப்பு வந்தது சிரிச்சேன்..” காரணம் சொன்னாள் மாளவிகா…
அவர்கள் அதற்கும் சிரித்தார்கள்.. அன்றைக்கு அவள் ஒரு மார்க்கமாக இருப்பதாக அஸ்வின் கூறினான்.. ஒரு மார்க்கமான ஆளைப் பார்த்ததினால் வந்த வினை அதுவென்று மாளவிகா சொன்னாள்.. எல்லோரும் கங்காதரனைத்தான் அவள் சொல்கிறாள் என்ற நினைவில் மீண்டும் சிரித்தார்கள்..
வீட்டுக்கே வந்து பூமிகாவின் கையில்.. காலில் விழுந்து கங்காதரன் அவளை அழைத்துக் கொண்டு போன பின்பு.. அவள் தாய் வீட்டிற்கு பிரச்னைகளைச் சுமந்து கொண்டு வரவேயில்லை.. சிறிது நாள்வரை மதுரா பெரிய மகள் எந்த நேரத்தில் கண்ணீரும் கம்பலையுமாக வந்து நிற்பாளோ என்ற பயத்துடன் நாள்களை ஓட்டினாள்.. அப்படி ஏதும் நிகழாததை உணர்ந்தவள் ஆச்சரியப் பட்டுப் போனாள்..
“நிஜமாவே மாப்பிள்ளை திருந்திட்டாராடி..?” மாளவிகாவிடம் கேட்டாள்..
“அப்படித்தான் தோணுது..” என்றாள் மாளவிகா..
கங்காதரன் பூமிகாவை அடித்து அனுப்பி வைக்காத தோடு.. சிதம்பரத்திடம் மிரட்டி வாங்கிய பணத்தையும் கொண்டு வந்து கொடுத்தபோது.. சிதம்பரத்தினால்
அதை நம்பவே முடியவில்லை..
“வேணாம் மாப்பிள்ளை.. இதை என் மகளுக்காகத் தானே கொடுத்தேன்..” அவர் வாங்க மறுத்தார்…
“இருக்கட்டும் மாமா.. நீங்க செய்து போட்ட நகைகளையும்.. அனுப்பி வைச்ச சீர்வரிசையையுமா திருப்பித் தர்றேன்..? இதையெல்லாம் அடாவடியாத்தானே உங்ககிட்டயிருந்து பிடுங்கினேன்..? இதை நான் வைச்சிருக்கக் கூடாது.. உங்க கிட்டத் திருப்பித் தர்றதுதான் நியாயம்..” கங்காதரன் பிடிவாதமாக அதை அவர் கையில் திணித்து விட்டுத்தான் போனான்..
இவன் எப்போதிருந்து இவ்வளவு நியாயவாதியாக மாறினான் என்று அஸ்வின் ஆச்சரியப்பட்டுப் போனான்.. மருமகன் தங்கம்தான்.. ஊடே கிரகக் கோளாறுகள் நேர்ந்து விட்டதால் ஏதேதோ நடந்துவிட்டது என்று மதுரா சொன்னாள்.. தெய்வங்கள் கண் திறந்து விட்டன என்று சிதம்பரம் உணர்ச்சி வசப்பட்டார்..
மாளவிகாவோ.. இவை அனைத்தையும் சாதித்த தெய்வதூதனான ரமணனை நினைத்து மனதிற்குள் நன்றி சொல்லிக் கொண்டாள்…
Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.