Chapter 29

0Shares

அந்த வார இறுதியில் அவளைச் சந்தித்த ரமணனின் முகம் இறுகியிருந்தது.. கடலோரமாக அமைந்திருந்த அந்த ரெஸ்ட்டாரெண்டின் மேல் மாடியில்.. திறந்த வெளியில்.. கடலைப் பார்த்தபடி போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து மாளவிகாவை அவன் வெறித்துக் கொண்டிருந்தான்…

ஒரு பெருமூச்சுடன் பார்வையைத் திருப்பிய மாளவிகா அப்போதுதான் அவனுடைய கூர்மையான பார்வையை சந்தித்தாள்.. அதில் வழக்கமான சிரிப்பில்லை.. மாறாக.. ஒர் கடினம் தெரிந்தது..

“என்னாச்சு ரமணன்..?”

“ஏன் சொல்லலை..?”

“எதை..”

“உனக்கு அந்த கார்த்திக்கோட கல்யாணம் நிச்சயமாகியிருக்கிற விவரத்தை…”

அழுத்தமாக அவனின் வார்த்தைகள் வெளி வந்து விழுந்தன..

‘இவனுக்கு எப்படித் தெரியும்..?’ அபத்தமாக நினைத்துவிட்டு மானசீகமாக தலையில் குட்டிக் கொண்டாள் மாளவிகா..

‘இவனுக்கு தெரியாம இருந்தாத்தான் ஆச்சரியம்..’ குற்ற உணர்வுடன் தலை குனிந்து கொண்டாள்..

“நான் எதிர்பார்க்கல…”

“அவன் உன் சொந்தக்காரன்தானே.. இந்த எண்ணத் தோட அவன் இருக்கிறான்ங்கிறதை ஏன் நீ முன்னாடியே என்னிடம் சொல்லலை…”

“அவன் மனசில இப்படியொரு எண்ணம் இருக்கும்ன்னு நான் நினைச்சே பார்க்கலை.. ஆரம்பத்தில அவன் ஒரு பிரைவேட் கம்பெனியிலதான் வேலை பார்த்தான்…”

“சென்னையிலயா..?”

“ஊஹீம்.. சேலத்தில இருந்தான்.. பூமிகாவை அவனுக்கு கொடுக்கனும்னு எங்க வீட்டிலே கேட்டாங்க.. அவங்க வீட்டிலே எக்கச்சக்கமா சீர்வரிசை கேட்டாங்க.. எங்க அப்பாவாலே அதைச் செய்ய முடியலை.. பூமிகாவை வேற இடத்திலே கல்யாணம் பண்ணிக் கொடுத்திட்டாரு.. இவன் அப்பவே கோச்சிங் கிளாஸீக்கு எல்லாம் போவான்.. விடாம பரிட்சை எழுதி ஐ பி எஸ் ஆகிட்டான்.. இப்பத்தான் சென்னைக்கு வந்திருக்கான்..”

“ம்ம்ம்…”

“வீட்டுக்கு வரப் போக இருப்பான்.. மத்தபடி என்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு அவன் சொன்னதும் இல்லை.. நான் அதைப் பத்தி நினைச்சே பார்த்ததில்லை.. அவனோட வீட்டில பெரிய இடமாத்தான் தேடிக்கிட்டு இருந்தாங்க..”

“அப்புறம் எப்படி இது நடந்துச்சு..? காதலா..?” ரமணன் ஒரு மாதிரியான குரலில் வினவினான்..

“காதலுக்கும்.. அவனுக்கும் காத தூரம்..” வெறுப்புடன் சொன்னாள் மாளவிகா…

“வேற என்ன…?”

“என் வேலை..” பெருமூச்சுடன் சொன்னாள் மாளவிகா…

“ஓ…” ரமணனின் புருவங்கள் முடிச்சிட்டன..

“அதிகமான சம்பளம்.. என்னதான் பெரிய இடத்தில பெண் எடுத்தாலும்.. வாழ்நாளில் நான் சம்பாதித்துக் கொடுக்கப் போகிற பணத்தை விடக் குறைவாத்தான் கொடுக்கப் போகிறான்னு அவங்க மனக் கணக்கு போட்டுட்டாங்க…”

“ம்ம்ம்..” யோசித்தான் ரமணன்…

“நான் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்கலை.. அவங்க திடிர்ன்னு வந்து உட்கார்ந்து பேசிட்டுப் போயிட்டாங்க.. என்னால அவனைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிறோம்ன்னு நினைச்சுக் கூடப் பார்க்க முடியல.. நானே பித்துப் பிடிச்சுப் போய் உட்கார்ந்திருக்கேன்..”

“எதுக்காக..?” கூர்மையாக கேட்டான் ரமணன்..

“இந்தக் கல்யாணத்தில இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னுதான்..”

“ஓ.. உனக்கு அவனைப் பிடிக்காதில்ல..?”

“இதென்ன கேள்வி ரமணன்.. அது உங்களுக்குத் தெரியுமே…”

“ஒருவேளை.. இவனை உனக்குப் பிடிச்சிருந்தா நீ என்ன செய்திருப்ப..?” கத்தி முனையின் கூர்மையோடு ரமணனின் வார்த்தைகள் வந்து விழுந்தன…

“ரமணன்..” திகைத்துப் போய் விட்டாள் மாளவிகா..

“சொல்லு..” நிதானமாக கேட்டான் ரமணன்…

அவள் என்ன சொல்லுவாள்..? எதைத்தான் சொல்ல முடியும்…? இவனைப் பிடிக்காது என்பதினால் இந்தத் திருமணத்தை தவிர்க்க நினைக்கிறாய்… அப்படியில்லாமல் இருந்திருந்தால் நீ என்ன செய்திருப்பாய் என்ற கேள்விக்கு பதில் அவளிடம் இல்லையே…

‘கேள்வியின் நாயகனே…

இந்தக் கேள்விக்குப்

பதில் ஏதய்யா..?’

மனதுக்குள் பாடல் ஒலித்து.. மாளவிகா மௌனப் போராட்டத்துடன் தலைகுனிந்தாள்.. அவள் எதிர் கொள்ள வேண்டிய இந்தத் தருணத்தில் எப்படிப் பேசுவது என்பதை அவள் யோசித்து வைத்திராததால் வார்த்தைகள் வலுவழிந்து வெளிவராமல் வாய்க்குள்ளேயே புதைந்து போயின…

“அப்ப கல்யாணத்துக்கு சம்மதிச்சிருப்ப.. இல்லையா..?” ரமணன் அழுத்தமாக கேட்டான்..

“ரமணன்..” மாளவிகாவின் விழிகள் கண்ணீரில் பளபளத்தன..

“ஒரு வாரம்..! ஒரு வாரமா.. இதைப் பத்தி என்னிடம் பேசாம நீ இருந்திருக்க.. வேலை செய்கிற இடத்தில உன் பிரண்ட்ஸ் கிட்ட புலம்பியிருக்க.. உன் கூடப் படிச்ச ஹாசினியைத் தேடிப் போய் அழுதிருக்க.. ஆனா.. என் கிட்ட.. ஒரு வார்த்தை. ஒரேயொரு வார்த்தை கூட இதைப் பத்திச் சொல்லனுமுன்னு உனக்குத் தோணலை ஏன்..?”

அனைத்தையும் அறிந்தவனாக அவன் கேட்டான்.. அவள் திகைத்தாள்.. ரமணன் அவளைக் கண்காணிப்பதை அவள் அறிவாள்.. இந்த அளவுக்கு கண்காணிப்பான் என்று அவள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை…

“ஏன்னா.. உன்னைப் பொருத்தவரை நான் இதில் சம்பந்தப்படாதவன்.. இல்லையா…?”

“ரமணன்..”

“உனக்கும்.. எனக்கும் சம்பந்தமிருக்குன்னு நீ நினைச்சிருந்தா முதலில் என்னிடமில்ல இதை நீ சொல்லியிருக்கனும்..?”

“ரமணன்..”

“அப்படி நீ சொல்லாதப்பவே உன் மனநிலை என்னவா இருக்கும்ன்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு மாளவிகா…”

‘மாலு’ என்று அவன் அழைக்கவில்லை என்பதை துக்கத்துடன் உணர்ந்தாள் மாளவிகா.. அவன் முகத்தில் ரௌத்திரம் வந்திருந்தது…

“உன் அக்கா புருசன் உன் குடும்பத்தை ஆட்டி வைக்கிறான்.. உன் அக்காவை கொடுமை பண்றான்னு என்கிட்ட ஓடி வந்தியே.. அது என்மேல உனக்கிருக்கிற உரிமையாலேன்னு நான் தப்புக்கணக்கு போட்டுட்டேண்டி.. அப்படியில்லடா மடையா.. நீ ரௌடி.. அடி உதைக்கு உன்னைத்தாண்டா தேடிவரனும்னு நீ அடியாளா என்னை நினைச்சிருந்தேன்னு எனக்கு அப்ப தெரியாமப் போச்சுடி..” கண்கள் சிவந்தான் ரமணன்..

அதுவரை அவளை அவன் ‘வாடி.. போடி..’ என்று அழைத்ததில்லை.. முதன் முறையாக அதை உணர்ந்தவளின் முகம் பயத்தில் வெளுத்தது.. அதுவரை அவள் காணாத அவனின் முரட்டுத்தனமான மறுபக்கத்தில் அவள் அதிர்ந்து விட்டாள்..

“உனக்கு ஒரு துன்பம்ன்னா உதவிக்கு நான் ஓடிவரனும்.. அப்ப நான் ரௌடிங்கிறது உனக்குத் தெரியாது.. ஆனா.. கல்யாணம்ன்னு வந்தா மட்டும் இந்த ரௌடி உனக்கு வேணாம்.. சொஸைட்டியில மதிப்பான வொயிட் காலர் அயோக்கியன்தான் உனக்கு வேணும்.. என்ன நியாயம்டி இது..?”

“வேணாம் ரமணன்…”

“வேணாம்ன்னு நீ சொன்னா உன்னை விட்டிருவேனா..? நீ யூஸ் பண்ணிக்கிட்டு கருவேப் பிலையாய் தூக்கி எறிய நான் ஏமாந்த சோணகிரி இல்லைடி.. ரமணன்..!”

“இப்ப நீங்க கோபமாய் இருக்கீங்க.. அப்புறமாய் இதைப் பத்தி நாம பேசலாம்…”

மாளவிகா எழுந்து கொள்ள முயன்றபோது.. ரமணன் முரட்டுத்தனமாக அவளின் கையைப் பற்றி இழுத்து உட்கார வைத்தான்..

“ஏய்ய்.. அடங்கி உட்காருடி…”

0Shares

Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link