Chapter 38
கார்த்திக் கொதித்துப் போயிருந்தான்.. திடிரென்று ஒர்நாளில் மாளவிகா யார் கண்ணுக்கும் தென்படாமல் மறைந்து போய் விடுவாள் என்று அவன் எதிர்பார்த்திருக்க வில்லை..
“அவ போனா போயிட்டுப் போறாடா.. உன் தகுதிக்கும்.. பதவிக்கும் உனக்கு ஆயிரம் பொண்ணுக கிடைப்பாங்க..”, கோதாவரி பொரிந்து தள்ளினாள்..
‘மாளவிகா கிடைப்பாளா..?’ கார்த்திக் வெறி பிடித்தவனைப் போல ஆனான்…
அதுநாள் வரை அவனை இகழ்ச்சிப் பார்வை பார்த்துக் கொண்டிருந்த மாளவிகாவின் திமிரை அடக்க.. அவன் தாலிக்கயிற்றைத்தான் ஆயுதமாக நினைத்துக் கொண்டிருந்தான்..
‘அவளைக் கதற வைக்கனும்.. என் காலடியில் போட்டு மிதிக்கனும்.. சாப்பிட வாயைத் திறக்கிறதுன்னாக் கூட அவபயந்து நடுங்கி என்கிட்ட பர்மிசன் வாங்கனும்.. என்னைப் பார்க்கிற பார்வையில திமிரிருக்கக் கூடாது.. பயம் தான் இருக்கனும்…’
இப்படியெல்லாம் மனக் கோட்டை கட்டியிருந்தவன்.. அந்த மனக்கோட்டை இடிந்து தவிடு.. பொடியானதில் நொந்து நூல்.. நூலாகிப் போயிருந்தான்…
அவனைத் துச்சமாக மதித்து அவள் தப்பியோடி விட்டதில் அவனின் ஆணவம் பலத்த பாதிப்பிற்கு உள்ளானது…
‘கடைசியில இதிலயும் அவ ஜெயிச்சிட்டாளா..?’
மாளவிகாவை ஜெயிக்க முடியாத தகிப்பு அவனுக்குள் கனன்றது.. திருமணப் பேச்சு ஆரம்பித்த பின்னாலாவது மாளவிகா மனம் மாறியிருப்பாள்.. அவனிடம் தன்மையாகப் பேசுவாள் என்ற நப்பாசையுடன் அவளின் வீடு தேடிப் போனபோது.. அவள் காதலனுடன் சென்று விட்ட செய்தி அவனுக்கு கிடைத்தது…
“இப்படின்னு ஒரு வார்த்தை அவ சொல்லலியே.. சொல்லியிருந்தா அவ காதலிச்சவனுக்கே அவளைக் கல்யாணம் பண்ணி வைச்சிருப்போமே.. தங்கமான பொண்ணாச்சே.. அவ வீட்டை விட்டு வெளியே போக நாங்களே காரணமாகிட்டோமே…”
மதுரா சொல்லிச் சொல்லி அழுதபோது அவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது.. ஓடினவளின் மீது தப்பில்லை யென்ற பாவனையில் பேசியவர்கள் அவனை வில்லனைப் பார்ப்பதைப் போலப் பார்த்தும் வைத்ததில் அவனின் கோபம் அதிகரித்தது.. அதிலும் அஸ்வின் வாய் விட்டே சொல்லி விட்டான்…
“அப்பவே தலைப்பாடாய் அடிச்சுக்கிட்டேன்.. என்ஜினியரிங் முடிச்சவளுக்கு அதே ஃபீல்டில இருக்கிற மாப்பிள்ளையைக் கண்டு பிடிங்கன்னு.. அதை விட்டுட்டு போலிஸீக்கு பொண்ணு கொடுக்கிறேன்னு போனா இப்படித்தான் நடந்து வைக்கும்…”
விரோதியைப் பார்ப்பதைப் போல கார்த்திக்கை அவன் பார்த்த பார்வையில் கொலைவெறி தாண்டவமாட…
‘ஏம்ப்பா.. நானா உன் அக்காவுக்கும்.. அவ காதலனுக்கும் டிக்கெட் எடுத்துக் கொடுத்து ஊரை விட்டு பற்றி விட்டேன்..?’ என்று கேட்கலாமா என்ற காண்டு கார்த்திக்கின் மனதில் எழுந்து வைத்தது…
எரிகிற கொள்ளியில் என்ணையை விட வேண்டாம் என்று வாயை அடக்கிக் கொண்டு வந்து விட்டான்…
அதற்குப் பின்னால் மாளவிகாவின் வீட்டிற்கு அவன் போன போது.. சிதம்பரம் தலையை மட்டும் ஆட்டி விட்டு வெளியே போய் விட்டார்.. அஸ்வின் அதையும் ஆட்டாமல் அவனை முறைத்துப் பார்த்தபடி.. அவனை உதைக்க முடியாத உதையை ஹீரோ ஹோண்டா வண்டியை உதைப்பதில் காட்டி.. வண்டியைக் கிளப்பிக் கொண்டு போய் விட்டான்.. அவர்கள் இருவரையும் போல வெளியே தப்பித்துப் போக முடியாமல் ‘இல்லத்தரசி’ என்ற பெயரில் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் சிறைபட்டிருந்த மதுரா மட்டும்.. வேண்டா வெறுப்பாக…
“வாப்பா..” என்று சொல்லி வைத்தாள்…
‘வாங்க..’ என்ற வரவேற்பு.. ‘வாப்பா..’ என்று மருவி விட்டதில் கார்த்திக்கின் தன்மானம் அடிவாங்கியது…
‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன்.. போனாலும் ஆயிரம் பொன்.. அப்படின்னு சொல்கிறதைப் போல.. அந்த மாளவிகா.. இருந்தப்பயும் என் மரியாதையைக் குறைச்சா.. ஓடிப் போன பின்னாலேயும் என் மரியாதையை குறைத்து வைக்கிறா..’ கடுப்பாகி போனான் கார்த்திக்…
“மாளவிகாவைப் பத்தி ஏதாச்சும் தகவல் கிடைச்சுச்சா அத்தை…”
“ஒரு தகவலும் இல்ல.. நாங்களும் அவ கூடப் படிச்ச சிநேகிதக கிட்டயெல்லாம் சொல்லிட்டோம்.. அவ புருசன்னு யாரைக் கை காட்டினாலும் கண்ணை மூடிக்கிட்டு அதை ஏத்துக்கறோம்.. அவளை வீட்டுக்கு மட்டும் திரும்பிரச் சொல்லுங்கன்னு.. ஒன்னும் நடந்த பாடில்லை.. யாருக்குமே அவ இருக்கிற இடம் எதுன்னு தெரிய மாட்டேங்குது..” மதுரா புலம்பியதில் அவனின் கடுப்பு மேலும் அதிகமாகி வைத்தது…
‘ஒரு வார்த்தையாவது.. அவ இப்படிச் செஞ்சிட்டுப் போயிட்டாளேன்னு இந்தப் பொம்பளை சொல்லுதா..? இது புருசன் என்னடான்னா நான்தான் அவரு மகளை வீட்டை விட்டு ஓட்டி விட்டதைப் போல முறைச்சுக் கிட்டுப் போறாரு.. இந்தம்மாவோட மகன் என்னடான்னா.. அவனோட அழகு ரதியான அக்காவை நான் பொண்ணு கேட்டுட்ட கொடுமையாலேதான் அவ ஊரை விட்டு ஓடிட்டாங்கிறதைப் போல வெட்டவா.. இல்ல.. குத்தவான்னு பார்த்து வைக்கிறான்.. இந்தப் பொம்பளை என்னடான்னா இப்படிப் புலம்புது. ஊஹீம்.. இதுகளுக் கெல்லாம் கங்காதரன்தான் லாயக்கு.. அவன் கொஞ்ச நாளா அந்த பூமிகா கழுதையை பத்தி விடாம இருக்கானில்ல.. அதான் இதுகளுக்கு குளிர் விட்டுப் போச்சு…’
கார்த்திக் கங்காதரனைத் தூண்டி விட வேண்டும் என்று மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டான்…
‘அவன் போடற ஆட்டத்தில இதுக உதவி கேட்டு ஐயோ.. அப்பான்னு என்காலில வந்து விழனும்.. அப்பப் பார்த்து மாளவிகாவப் பத்தின விவரத்த இதுக வாயில இருந்து நான் கறக்கனும்…’
திட்டப்படி கங்காதரனைத் தேடிப் போனான் கார்த்திக்.. வீட்டுக்குப் போனால் பூமிகாவிற்கு மூக்கு வியர்த்துவிடும் என்பதினால் கங்காதரனின் அலுவலகத்திற்கே போனான்.. அவனை வரவேற்று கேண்டினுக்கு அழைத்துப் போய்.. காபி டிபனை வரவழைத்துக் கொடுத்த கங்காதரனின் முகத்தில் கார்த்திக்கின் வருகையை எதிர்பார்க்காத வியப்பு.. அப்பட்டமாகத் தெரிந்தது…
“பாருங்க சகலை..” கார்த்திக் ஆரம்பித்தபோதே…
“சகலையா..? யாரைச் சொல்றிங்க..?” என்று கங்காதரன் சுற்று முற்றும் பார்த்து வைத்தான்…
இவனை என்ன செய்தால் தேவலாம் என்ற கொலைவெறி கொண்ட கார்த்திக்..
“உங்களைத்தான் சொல்றேன் சகலை..” என்று பல்லைக்கடித்தான்…
“நான் உங்களுக்கு சகலையா..? அதான் மாளவிகா ஓடிப் போய் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டாளே..” என்று கங்காதரன் விளக்கம் கேட்டுவைத்தான்..
‘அவ கல்யாணம் பண்ணிக்கிட்டதை நீ பக்கத்தில இருந்து பார்த்தியா..’ என்று கோபம் கார்த்திக் மனதில் எழுந்தது..
மாளவிகாவின் குடும்பமே அவனை கொலைகாரனாக்கித் தீரும் முடிவுடன் இருக்கிறது என்று கண்டு கொண்ட கார்த்திக்.. கோபத்தை அடக்கியபடி பொறுமையாக பேச முயன்றான்…
“அதை விடுங்க சகலை.. நான் கேள்விப்பட்டது உண்மையா..?”
“என்ன கேள்விப் பட்டிங்க..?”
“நீங்க என்னவோ சிதம்பரம் மாமாவுக்கு பயந்துட்டிங்களாம்.. அந்த அஸ்வின் பய உங்க கையைக் காலை முறிச்சிருவேன்னு எச்சரிக்கை பண்ணியிருக்- கானாம்.. மதுரா அத்தைவேற அவங்க பங்குக்கு போடற சாப்பாட்டில விசத்தைக் கலந்து வைச்சிருவேன்னு உங்களை மிரட்டி வைச்சிருக்காங்களாம்.. நீங்க அதனால உங்க பெண்டாட்டி காலிலே விழுந்து அவளை தாஜா பண்ணிக் குடும்பம் நடத்தறீங்களாமே..?”
நீளமாகச் சொன்ன கார்த்திக்கை நிதானமாகப் பார்த்த கங்காதரன்…
“இந்த உண்மைகளையெல்லாம் உங்களுக்கு யார் சொன்னது தம்பி..?” என்று கேட்டு வைத்து கார்த்திக்கை மயக்கத்துக்குள் தள்ளினான்…
“வாட்…?”
“ஆமாம் தம்பி.. எதுக்கும் நீங்க மாமா வீட்டுப் பக்கம் போனா நான் அடங்கி.. ஒடுங்கி.. பூமிகா காலிலே விழுந்து குடித்தனம் பண்ணிக்கிட்டு இருக்கேன்னு நல்லவிதமா நாலுவார்த்தைய அவங்க காதில போட்டு வையுங்க..”
என்ற கங்காதரனின் விழிகளில் அப்பட்டமான பயம் தெரிந்தது..
Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.